இலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை!!(கட்டுரை)

Read Time:18 Minute, 25 Second

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா? அல்லது இருபெரும் கட்சிகளுக்கிடையிலான மோதலா? அல்லது ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான சட்டரீதியான குழப்பமா? நான் இந்த நெருக்கடியை ஒரு வரலாற்று ரீதியிலான அரசியல், பொருளாதார காரணிகளின் விளைவாகப் பார்க்கின்றேன்.

சோகக்கதையும் கேலிக்கூத்தும்

மாக்ஸினுடைய பலவிதமான எழுத்துகள் மத்தியில், அரசியல் சம்பந்தமான மிகவும் முக்கியமான படைப்பாக The Eighteenth Brumaire of Louis Bonaparte (லூயி போனபார்ட்டினுடைய பதினெட்டாவது புறூமியர்) அமையும். அது 1848ஆம் ஆண்டு பிரான்ஸ் தொடக்கம், ஐரோப்பா முழுவதும் இருந்த புரட்சிகரமான சூழல் பற்றிய மார்க்ஸின் பதிவுகளாகும்.

பிரான்ஸில் நடந்த அந்தப் புரட்சி மற்றும் அதன் தோல்வி சம்பந்தமாக, அப்புத்தகத்தின் தொடக்கத்தில் இருந்து சில வசனங்களை இங்கு முன்வைக்கலாம். புத்தகத்தின் முதலாவது வரியிலேயே மார்க்ஸ் இவ்வாறு கூறுகின்றார்.

“ஹேகல் (ஜேர்மனியை சேர்ந்த முக்கியமான தத்துவவாதி) எங்கோ கூறுகின்றார், எல்லா மாபெரும் உலக வரலாற்று நிகழ்வுகளும் பிரமுகர்களும் இரு தடவை தோன்றலாம். அவர் கூற மறந்துவிட்டார், முதலாவது தடவை ஒரு சோகக்கதையாகவும் இரண்டாவது தடவையாக ஒரு கேலிக்கூத்தாகவும்.”

ஒருசிலவேளை நாம் தற்போது பார்க்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் அந்தக்கேலிக்கூத்தாக காணப்படலாம். ஆனால், அவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக இருக்கும். தொடர்ந்து அடுத்த பந்தியில் மார்க்ஸ் கூறுகின்றார்.

“மனிதர்கள் தங்களுடைய வரலாற்றைத் தாமே உருவாக்குகின்றார்கள், அவர்களுக்குப் பிடித்தமாதிரியோ அல்லது தாம் தெரிவு செய்த சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கீழோ அவர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை. ஆனால், தாம் நேரடியாகக் காண்கின்ற, தமக்கு வழங்கப்படுகின்ற, கடந்த காலத்தில் இருந்து தமக்குக் கடத்தப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தே வரலாற்றை உருவாக்குகின்றார்கள். பாரம்பரியமாக இறந்துபோன, எல்லாத் தலைமுறையினரதும் ஒரு பயங்கரக் கனவு போல, அனைவரது மனம்களையும் அழுத்தியவாறு உள்ளது”

எங்கள் மத்தியில், வரலாற்று ரீதியாக இருக்கும் சிந்தனைகளில், அது தேசியவாதமாக இருக்கலாம், முதலாளித்துவ கருத்தியலாக இருக்கலாம், இவைகள் எங்கள் மேல், ஒரு பயங்கரக் கனவாக, எங்கள் மனதைத்தாக்குகின்றன. அவ்வாறான சிந்தனைகளுக்கு மத்தியில் தான், நாங்கள் வரலாற்று ரீதியாக உருவாக்கப்பட்டிருக்கும் எம் எதிர்காலத்துக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கின்றோம். அந்தவகையில் மாக்ஸின் வார்த்தைகளுடன் தற்போது எங்கள் முன்னிருக்கும் நெருக்கடியை, எவ்வாறு வரலாற்று ரீதியாகவும் அரசியல், பொருளாதார ரீதியாகவும் நாங்கள் பகுப்பாய்வு செய்வது?

நவதாராளவாதமும் ஜனாதிபதி முறையும்

வரலாற்று ரீதியாகத் தற்போதைய நெருக்கடிக்கான காரணிகளை எடுத்துப் பார்க்கும் பொழுது, காலணித்துவத்துக்குப் பின்னிருந்த சுதந்திர காலத்திலிருந்து தொடங்கலாம்.

தற்போது மோதிக்கொண்டிருக்கும் இருபெரும் அரசியல்கட்சிகளும் நமது சுதந்திர காலத்தினுடைய முதலாவது தசாப்த காலத்தில் இருந்தே உருவாக்கப்பட்டுப் போட்டியிடும் முதலாளித்துவ கட்சிகளாக இருக்கின்றன. இந்த எழுபது வருட சுதந்திர காலகட்டம், ஒரு பகுப்பாய்வுக்குத் தொடக்கமாக இருக்கலாம். ஆனால் இங்கு நான் வேறு இரு காலகட்டங்களின் பகுப்பாய்விலிருந்து தற்போதைய நெருக்கடியை அணுகிறேன்.

1978ஆம் ஆண்டில் ஜே.ஆர் ஜெயவர்தன அரசாங்கம், இரு முக்கியமான நிகழ்ச்சித் திட்டங்களை முன்வைத்தது. ஒன்று, திறந்த பொருளாதாரக் கொள்கைகள்; இரண்டாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை.

அவற்றை முன்வைத்த சூழல் என்பது, 1970ஆம் ஆண்டுகளில் இருந்த உலகப்பொருளாதார வீழ்ச்சியும் அதற்கு எதிரான முதலாளித்துவத்தின் அசைவும் ஆகும். ஜெயவர்தனவினுடைய திறந்த பொருளாதாரமும் ஜனாதிபதி முறையின் அதிகாரமும் ஒன்றுக்கொன்று துணையாகவும் மக்களை ஒடுக்கும் சக்திகளாகவும் இன்றுவரை இயங்கி வருகின்றன.

இலங்கையின் திறந்த பொருளாதார கொள்கைகள் என்பது, உலகெங்கும் நவதாராளவாதக் கொள்கைகள் என்று கூறப்படுகின்றது. இந்த நவதாராளவாதக் கொள்கைகள் பற்றி, ஒரு சிறிய விளக்கம் தருவது பொருத்தமாகும்.

முதலாளித்துவம் என்பது, 250 வருடகால வரலாற்றைக் கொண்டது. அது ஒரு புதிய உற்பத்தி முறையின் அடிப்படையில், தொழிலாளர்களைச் சுரண்டும் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பு. தொழிலாளர்கள் சுயமாக ஒரு தொழிற்சாலையில் வேலைசெய்யும் பொழுது, அத்தொழிலாளர்களுடைய உழைப்பைச் சுரண்டி, இலாபம் சம்பாதித்து, மூலதனத்தைத் திரட்டுவது, முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சமாகும்.

இங்கு, நவதாராளவாதம் என்பது, கடந்த 40 வருட காலத்தில் தோன்றிய முதலாளித்துவத்தினுடைய ஒரு உச்சகட்ட நிலையாகும். இது தொடர்ந்தும், தொழிலாளர்களைத் தொழிற்சாலைகளில் சுரண்டுவதற்கு மேலாக, மக்களின் சொத்துகளையும் வளங்களையும் நேரடியாக அதிகாரத்துடனும் வன்முறையுடனும் பறித்து, மூலதனத்தைச் சேகரிக்கும் கட்டமைப்பாகும்.

உதாரணமாக, நகரப்புறத்தில் இருக்கும் சேரிகளில் வாழும் வறிய மக்களை வெளியேற்றி, அங்கு பெரிய கட்டடங்களை உருவாக்கி, சொத்தை அதிகரித்தல் மற்றும் நுண்கடன்களை வழங்கி, மக்களிடமிருந்து அதிக வட்டியையும் இலாபத்தையும் திரட்டுதல் போன்ற செயற்பாடுகள் உள்ளடங்கும்.

இவ்வாறு நவதாராளவாதம் என்பது, உலகமயமாக்கலைத் தூண்டி, திறந்த வர்த்தகம், திறந்த நிதி மூலதனத்தினுடைய பாய்ச்சல், மக்கள் எதிர்ப்பை ஒடுக்கக்கூடிய அரச கட்டமைப்பு போன்ற அம்சங்களைக் கொண்டது.

இலங்கையில் திறந்த பொருளாதாரத்தை முன்கொண்டு போவதற்கு, ஜனாதிபதி முறையின் கீழ் இருக்கும் அதிகாரம் பல தடவை அரச வன்முறையாக மக்களைப் பாதித்தது.

1980ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிற்சங்கங்களது பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிராக, அவ்வாறான அதிகாரமும் வன்முறையும் பாவிக்கப்பட்டுத்தான் அந்தப் போராட்டம் நொருக்கப்பட்டது. அந்த வரலாற்று ரீதியான, தீவிர பாதிப்புக்குப் பின்பு, இன்றுவரை கூட, தொழிற்சங்கங்களின் பலம், செயற்பாடு மீட்கப்படவில்லை.

பொருளாதார நெருக்கடியும் யுத்தத்தின் முடிவும்

இரண்டாவதாக, முக்கியமான அரசியல் பொருளாதார காலகட்டம் என்று கூறுவது, 2008ஆம், 2009ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலக மற்றும் தேசிய ரீதியான மாற்றங்கள் ஆகும்.

2008ஆம் ஆண்டுவந்த உலக பொருளாதார நெருக்கடி, இந்த நவதாராளவாதப் பொருளாதாரத்துக்கும் உலகமயமாக்கலுக்கும் ஒரு பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.

நவதாராளவாதப் பொருளாதாரம் என்பது, மீண்டும் மீண்டும் அதுவும் ஆழமான நெருக்கடியைக் கொண்டுவரும் பொருளாதார கட்டமைப்பாகவே இயங்கி வந்தது. அதன் ஒரு பாரிய உச்சக்கட்டமான நெருக்கடியானது, 2008ஆம் ஆண்டில் மேற்கு நாடுகளில் தொடங்கி, உலகமெங்கும் பரவியது.

இன்றுவரைகூட, 2008ஆம் ஆண்டு வந்த நெருக்கடியின் தாக்கத்தைக் காண்கிறோம். அண்மைக்காலத்தில் உலகெங்கும் தோன்றியிருக்கும் எதேச்சாதிகார ஜனரஞ்சக ஆட்சிகள், அமெரிக்காவில் ட்ரொம்ப், இந்தியாவில் மோடி, ரஷ்யாவில் புடின், துருக்கியில் எருகோடன் போன்ற ஆட்சிகள், இந்த நெருக்கடியின் பின்னீடுளேயாகும்.

அந்த உலக நெருக்கடிச் சூழ்நிலையில் தான், இலங்கையிலும் 2009ஆம் ஆண்டு நீண்டகாலப் போர், இராணுவரீதியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அந்தப் போர் முடிவடைந்த நிலைமை, எங்களுடைய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று கூறலாம்.

அதன்பின், இலங்கை இரண்டு திசைகளில் சென்றிருக்கலாம். ஒன்று எமது தேசியப் பிரச்சினைக்கு யாப்பு ரீதியான ஓர் அரசியல்தீர்வை முன்வைத்து, சமாதானத்தை மேம்படுத்தி இருக்கலாம். அத்துடன், மக்கள் நலன் கருதிய சமத்துவத்தைப் பேணும் சமூகநல, பொருளாதாரக் கொள்கைகளை முன்கொண்டு போயிருக்கலாம்.

ஆனால், போரை வென்ற ராஜபக்‌ஷ அரசாங்கம், பேரினவாதத்தின் அடிப்படையில் தேசியப் பிரச்சினை இல்லை என்று கூறி, வெறுமனே நவதாராளவாத அபிவிருத்தியைதான் முன்கொண்டுபோனது. ராஜபக்‌ஷ அரசாங்கம் தங்கள் குடும்பத்தின் மீதும் தங்கள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் அதிகாரத்தை குவிப்பதற்கே, இவ்வாறான கொள்கைகளை முன்னெடுத்தது.

எங்கும் அரசியல் ஒடுக்குமுறைக்கும், எதேச்சாதிகார நடைமுறைக்கும் மக்களின் எதிர்ப்புவரும். அந்தவகையில், பலவிதமான எதிர்ப்பின் மத்தியில் தான், 2015ஆம் ஆண்டு ராஜபக்‌ஷ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது.

அந்த தோல்வியுடன் ஓரளவுக்குத் தாராள மயமாக்கப்பட்ட ஒரு ஜனநாயக இடைவெளியும் தோன்றியிருந்தது. அதற்காக, அவர்களது பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் தோற்கடிக்கப்படவில்லை. அந்தப் பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் முன்கொண்டு போகப்பட்டது.

ஜனநாயக வெளியும் இன ஒற்றுமையும்

தற்போது எங்கள் முன்னிருக்கும் நெருக்கடியென்பது, ஒரு தசாப்தத்துக்கு முன்னர் உலகிலும்சரி இலங்கையிலும்சரி வந்த, அரசியல், பொருளாதார மாற்றங்களின் விளைவுகளே ஆகும்.

அதாவது, தற்போது இருக்கும் நெருக்கடியென்பது, இலங்கையில் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு வந்த ஒரு மேலாதிக்க அதிகாரம், அவிழ்ந்து போகும் நிலைமையை எடுத்துக்காட்டுகின்றது. இங்கு, இந்த வரலாற்று ரீதியான மேலாதிக்கத்தின் அவிழ்ந்துபோகும் நிலையில், எவ்வாறான அதிகாரம் குவிக்கப்பட்டு ஒன்றுசேரும் என்பதுதான் பாரியதோர் அரசியல், பொருளாதார கேள்வியாக எங்கள்முன் அமைகின்றது.

1848ஆம் ஆண்டில் இருந்து 1851ஆம் ஆண்டுவரை பிரான்ஸில் வந்த மாற்றங்களின் அடிப்படையில், லூயி போனபார்ட்டினுடைய மேலாதிக்கம் அந்த அதிகாரத்தினுடைய குவிப்பு, அதன்பின் இருபது ஆண்டுகளாக, ஒரு ஜனநாயகமற்ற ஆட்சியை பிரான்ஸுக்குக் கொண்டுவந்தது. அந்தப் பின்னடைவு, தொழிலாளர்களிடத்திலும்சரி ஜனநாயகத்திலும்சரி 1870ஆம் ஆண்டு வந்த, பரிஸ்கொம்யூன் என்ற புரட்சிமட்டும் நீடித்தது.

இந்த வகையில், தற்போதைய இலங்கை அரசியலில் மீண்டும் ராஜபக்‌ஷ ஆட்சி அதிகாரத்தைக் குவித்து ஒன்று சேர்க்குமானால், எங்களுடைய ஜனநாயக எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுகின்றது.

கடந்த நான்கு வருடங்களாக, முன்னெடுக்கப்பட்ட பலவிதமான மக்கள் போராட்டங்களை எடுத்துப் பார்ப்போமானால், மாணவர்களின் இலவச கல்விக்கான போராட்டம், பெண்களின் நுண்கடனுக்கு எதிரான போராட்டம், காணாமற்போனோரின் உறவினர்களின் போராட்டம் போன்ற பல போராட்டங்களுக்குத் தீர்வுகள் காணப்படாத நிலைமையிலும் அந்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஜனநாயக இடைவெளி இருந்தது.

தற்போது நிலவும் அபாய நிலைமை என்னவென்றால், இந்த வரலாற்று ரீதியான திருப்புமுனையில் அதிகாரம் குவிக்கப்பட்டு ஒன்றுசேர்க்கப்பட்டால், ஓர் எதேச்சாதிகார ஜனரஞ்சகம் அல்லது ஒரு பாசிச ஆட்சி கூட ஏற்படலாம்.

இவ்வாறு, தென்பகுதியில் பௌத்த பேரினவாத தேசியவாத சக்திகள், மீண்டும் போரின் வெற்றி பற்றியும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் பிரசாரங்களை முன்கொண்டு, இனங்களைப் பிரித்துவைப்பதன் ஊடாக, அதிகாரத்தையும் குவித்து, மேலாதிக்கத்தையும் இறுக்க முயற்சிக்கின்றனர்.

இந்த நிலையில், வடக்கிலும் இந்தப் போருக்குப் பின்பான காலகட்டத்தில், அரசியல் மேலாதிக்கத்துக்கான குறும் தமிழ் தேசியவாத சக்திகளுடைய நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

விடுதலைப் புலிகளுடைய போர் முயற்சிகளும் தற்கொலை அரசியலும் ஒரு சோகக்கதையாக அமையும் பொழுது, அந்தக் கருத்தியலுடன் செயற்படும் சமகால குறும் தமிழ்த் தேசிய வாதிகளுடைய நடவடிக்கைகள் ஒரு கேலிக்கூத்தாகக் காணப்படலாம்.

ஆனால், சிங்களப் பௌத்த பேரினவாத தேசியவாதமும் அதை எதிர்த்து நிற்கும் குறும் தமிழ்த் தேசிய வாதமும் நெருங்கிய சக்திகளே. அவை இரண்டும், ஒன்றை ஒன்று பலப்படுத்தி, மக்களைப் பிரித்து வைப்பதன் ஊடாக, நீண்டகாலத்துக்கு நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.

இந்த அபாய அரசியல் சூழ்நிலையில், எங்கள் முன்னிருக்கும் சவாலென்பது எவ்வாறு மக்கள் செயற்பாட்டுக்கும், மக்கள் போராட்டத்துக்கும் உதவும் ஜனநாயக இடைவெளியை நிலைநாட்டுவதாகும்.

இங்கு இனங்கள் மத்தியிலான உறவுகளைக் கட்டியெழுப்புவதும் மற்றும் வர்க்கம், பால், சாதி, இனம் சார்ந்த சமத்துவத்தைப் பேணக்கூடிய உரிமைகளை மேம்படுத்துதலும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் முக்கிய நோக்கமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அன்று அஜித்தை அவமான படுத்தியவர் இன்று நிலைமை!!(வீடியோ)
Next post அவசியமா ஆண்மை பரிசோதனை?(அவ்வப்போது கிளாமர்)