By 13 December 2018 0 Comments

குழப்பங்களைத் தீர்ப்பாரா ஜனாதிபதி?(கட்டுரை)

ஐக்கிய தேசியக் கட்சி, பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும் கூட, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிடிவாதம், அவர் நாட்டின் தலைவராகச் செய்யப்படுகிறாரா அல்லது, தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட ஒருவராகச் செயற்படுகின்றாரா என்ற ஐயத்தை எழுப்பி இருக்கிறது.

இதன்மூலம், தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் எல்லா வழிகளையும் அடைக்கின்ற ஒருவராகவே அவர் மாறியிருக்கிறார் .

நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை பலமில்லாத ஒருவரைப் பிரதமராக நியமித்து, குழப்பத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, பெரும்பான்மை பலமில்லாத ஒருவரை, பிரதமராகப் பதவியில் அமர்த்தலாம் என்ற நிலையை, உருவாக்கி இருக்கிறார்.

நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, தேசியச் சொத்துகளை வெளிநாட்டவர்களுக்கு விட்டவர் என்பதால், ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்பதே, அவரது வாதமாக இருக்கிறது.

பிரதமர் பதவியில் இருந்து, ரணில் விக்கிரமசிங்கவை நீக்கும் ஒரே இலக்குடன் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டிருக்கிறார் என்பதைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உறுதி செய்திருக்கிறார் . அதேவேளை, சில குழப்பமான கருத்துகளையும் அவர் வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

மஹிந்த ராஜபக்‌ஷவை, முற்போக்காளர் என்றும் எதிர்காலம் பற்றிய கரிசனை உள்ளவர் என்றும் பாராட்டியிருப்பது முரண்பாடானதாக உள்ளது. 2014ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகப் போட்டியிடுவதற்காக, அவரிடம் இருந்து விலகியபோது, எத்தகைய காரணங்களைக் கூறியிருந்தாரோ, இப்போது அதே காரணங்களை, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மீது முன்வைத்திருக்கிறார்.

அத்துடன், முன்னர் யார் மீது ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் , சர்வாதிகாரம் என்ற குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தாரோ, அவருடனேயே இணைந்து செயற்படும் முடிவையும் எடுத்திருக்கிறார்

மைத்திரிபால சிறிசேன ஒரு தவறை மறைக்க, இன்னொன்றைச் செய்யும் நிலை ஏற்படுவதால், அவர் மாறி மாறி எடுத்து வைக்கும் காலடிகள் எல்லாமே, தவறான பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றன.

ராஜபக்‌ஷவுடன் முரண்பட்டுக் கொண்டு, நல்லாட்சி தருவதாக வெளியேறிய சிறிசேன, இப்போது, தான் உருவாக்கிய ஆட்சியும் நல்லாட்சி அல்ல என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதைவிட, கடந்த மூன்று ஆண்டுகளில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நடத்திய – நல்லாட்சியில், தனக்கு எந்தப் பங்கும் இல்லாதது போன்று அவர் கூறுவது ஆச்சரியமானது.

மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில், இதுபோன்று பேசுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அவர், இவ்வாறான குற்றச்சாட்டுகளை மஹிந்த தரப்பின் மீது கூறி வந்தார். இப்போது அதனை, ரணிலின் பக்கம் திருப்பி விட்டிருக்கிறார். எனவே, இதை, அவரது இயல்பான குணம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மஹிந்தவை சர்வாதிகாரியாக, மோசடியாளராக அடையாளப்படுத்திய அவரே, இன்று முற்போக்காளர் என்று கூறும் அளவுக்கு, மாறி இருக்கிறார். அப்போது அவருக்குக் கெட்டவராகத் தெரிந்தவர், இப்போது நல்லவராகத் தோன்றுகிறார். நல்லாட்சி பற்றி ஜனாதிபதி கடந்த காலங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தார். ஆனால், இப்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாதபோது, ஊழல் மோசடி அரசியல்வாதிகளுடன் இணைந்து பயணிப்பது, தவிர்க்கமுடியாத ஒன்று என்பது போலக் கூறியிருப்பது தான் ஆச்சரியம்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு, நாடாளுமன்ற பெரும்பான்மை மாத்திரம் தேவைப்படுகிறதே தவிர, அவர் நல்லவரா கெட்டவரா என்பது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அதனால்தான் அவர், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் தொடர்புபடாத ஓர் அரசியல்வாதியைக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று ஊடகவியலாளர்களிடம் கேட்டிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்‌ஷ, அவரது குடும்பத்தினர், அவரது சகாக்கள் மீது, கடந்த காலங்களில் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அதனால்தான் இப்போது, தொங்கு நாடாளுமன்றம் ஒன்றில், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் உள்ள அரசியல்வாதிகளைத் தவிர்த்து விடுவது, கடினமானது என்று நியாயப்படுத்தி இருக்கிறார். அவரது இந்தக் கருத்து தனியே, மஹிந்தவுக்கு மாத்திரம் பொருத்தமுடையதா? ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கூட பொருத்தமானதுதானே?

ரணில் விக்கிரமசிங்க ஊழல் மோசடிகளுக்குத் துணை போனதாகக் குற்றம்சாட்டி, அவரைப் பதவியிலிருந்து நீக்கியதாகக் கூறும் ஜனாதிபதி, அதே காரணத்துக்காகவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்தமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். மஹிந்தவையும் இதேபோன்று, பிரதமராக நியமிக்காமல், இதனைக் கூறியிருந்திருப்பாரேயானால், அவர் மக்கள் முன் ‘ஹீரோ’வாக நின்றிருப்பார்.

ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, விசாரணைகளை எதிர்நோக்கி இருக்கும் மஹிந்தவுடன் கூட்டு வைத்துக் கொண்டே, ஊழல் மோசடியாளர்களுக்கு இடமளிக்கமாட்டேன் என்று கூறுவது மக்களிடம் எப்படி எடுபடும்?

கடந்த மூன்றரை ஆண்டுகளாக, மைத்திரிபால சிறிசேனவே, நாட்டின் தலைவராக, அரசாங்கத்தின் தலைவராக, அமைச்சரவையின் தலைவராக இருந்தவர். ஆனாலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிலுமே தனக்குத் தொடர்பு இல்லை என்று கூறுவது அபத்தமானது.

ஐ.தே.க அமைச்சர்களிடம் இருந்த, சட்டம் ஒழுங்கு, நிதி, சட்டமா அதிபர் திணைக்களம், மத்திய வங்கி போன்ற துறைகளில், தான் ஒருபோதும் தலையீடு செய்ததில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்

இந்தநிலையில், அவர் என்னென்ன விதங்களில், எப்படியெல்லாம் தலையீடுகளைச் செய்தார் என்பதை, தான் அம்பலப்படுத்த நேரிடும் என, சாகல ரத்நாயக்க விடுத்திருக்கின்ற எச்சரிக்கையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ரணில் அரசாங்கம் எடுத்த முடிவுகளுடன், ஜனாதிபதி முரண்டு பிடித்தார். சில விடயங்களை நிறைவேற்றத் தடை விதித்தார். சில முடிவுகளை மாற்றி அமைத்தார். சிலவற்றைப் பகிரங்கமாக மேடைகளில் போட்டுடைத்தார்.

கடந்த ஆட்சிக் காலங்களில் நடந்த குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்த படையினர் கைது செய்யப்பட்ட போது, மைத்திரிபால சிறிசேன மோசமான தலையீடுகளைச் செய்ய முனைந்தார். படை அதிகாரிகளை முன் அனுமதியின்றி கைது செய்யக் கூடாது என்று கட்டளையிட்டார்.

குறிப்பாக, ‘நேவி சம்பத்’ என்ற முக்கிய சந்தேக நபரைத் தப்பிக்க விட்ட, குற்றச்சாட்டுக்கு உள்ளான, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, கைது செய்ய விடாமல், குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து பாதுகாப்பதில், ஜனாதிபதி முக்கிய பங்கு வகித்திருந்தார். ஆனாலும், தாம் ஒருபோதும், ரணில் அரசாங்கத்தின் விவகாரங்களில் தலையீடு செய்ததில்லை என்று அவர் கூறியிருப்பது வியப்பானது.

ரணில் விக்கிரமசிங்கவுடனான, கூட்டு அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஒவ்வொரு சம்பவத்துக்கும் செயலுக்கும் மைத்திரிபால சிறிசேனாவுக்கும் சமமான பொறுப்பு இருக்கிறது. மஹிந்த அரசாங்கத்தின் காலத்திலும் கூட, அவர் இதையே தான் செய்தார். மஹிந்த அரசியல் மௌனமாக இருந்து விட்டு, வெளியே வந்ததும் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சாதித்துக் கொண்டார்.

அதேவகையில், இப்போது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பாவங்களில், தனக்குப் பங்கு இல்லை என்று ஒதுங்கிக் கொள்ளப் பார்க்கிறார். ஆனால், அவர் கூறுவதை, முன்னரைப் போன்று நம்புகின்ற நிலையில் மக்கள் இல்லை. அதுமாத்திரமன்றி, மஹிந்தவுடன் தான் அமைத்துள்ள புதிய கூட்டுக்குக் கூட, அவர் கொடுத்துள்ள வியாக்கியானம் உற்றுக் கவனிக்கப்பட வேண்டியது.

“நீங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்தால், அரசியல் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை. அது நமக்குப் பின்னால் உள்ளது. எதிர்காலமே முக்கியமானது. அதுவே முன்னால் இருக்கிறது” என்று அவர் கூறியிருக்கிறார். இதன் அர்த்தம், மஹிந்தவின் கடந்தகாலத்தை, மறந்து விட்டுச் செல்ல, ஜனாதிபதி தயாராக இருக்கிறார் என்பதாகும். ஆனால் அதேவிதமாக, விக்கிரமசிங்கவுடன் செயற்படுவதற்கு அவர் தயாராக இல்லை. அவர், மஹிந்தவையும் ரணிலையும் வெவ்வேறு அளவுகோல்களால் கணிக்கிறார்.

இந்தநிலையில், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இப்போது உள்ள பிரச்சினை நல்லாட்சியோ, ஜனநாயகமோ, அரசமைப்போ கிடையாது. அவருக்கு முன்பாக இருப்பதெல்லாம், ரணிலுடன் இருக்கும் தனிப்பட்ட கசப்புணர்வுகள் தான். அதைக் கடந்து வர முடியாதவராக இருக்கும் வரையில், தற்போதைய அரசமைப்பு நெருக்கடிகளுக்கு அவரால் தீர்வைத் தரமுடியாது.Post a Comment

Protected by WP Anti Spam