By 13 December 2018 0 Comments

டிசம்பராவது… ஜனவரியாவது…# Winter Special Tips!!(மருத்துவம்)

சரும நலனுக்கு சவால் விடும் பல்வேறு விஷயங்களில் பருவநிலை மாற்றமும் ஒன்று. அந்த வகையில் வெயில், மழை, காற்று காலங்களைப் போலவே பனி காலத்திலும் சருமத்தைக் காக்க போதுமான அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். வடகிழக்குப் பருவ மழை காலம் முடிந்து டிசம்பரிலும், அடுத்து வரும் ஜனவரியிலும் பனி நம்மை ஆட்கொள்ளப் போகிறது. இந்த பனி கால பருவ மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பார்ப்போம்…

சருமம் மிருதுவாகவும், வெடிப்பு ஏற்படாமலும் இருப்பதற்கு சருமத்தில் 10-15% நீர்ச்சத்து இருக்க வேண்டும். உலர்ந்த குளிர்காற்று இருக்கும் பருவ காலத்திலும், குளிர்சாதனம் உள்ள அறையிலேயே வேலை பார்ப்பவர்களுக்கும் சருமம் மிகவும் உலர்ந்து போகும் அபாயம் உள்ளது.

இப்படி சருமம் உலர்ந்துபோனால், வியர்வை சுரப்பியிலிருந்தும் எண்ணெய் சுரப்பியிலிருந்தும் உருவாகும் நம் சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய Hydrolipid Film காய்ந்துவிடும். இந்த Hydrolipid Film-தான் நம் தோலை ‘அரண்’ போல் பாதுகாப்பதற்கு மிக முக்கியம்.

சரி… சருமம் உலராமல் எப்படி பார்த்துக் கொள்வது?

* மிக சூடான நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

* குளிப்பதற்கு முன்பு உடலில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தடவி விட்டு, பின்பு குளிக்கலாம்.

* நீங்கள் உபயோகிக்கும் சோப் உங்கள் சருமத்தை மிகவும் வறண்டுவிடச் செய்யக் கூடாது. அதனால் Syndet சோப்புகள் அல்லது Liquid சோப்புகள் உபயோகிக்கலாம். நார் போன்ற பொருட்களைக் கொண்டு சருமத்தைத் தேய்ப்பதை தவிர்க்கவும்.

* குளித்து முடித்தவுடன் நம் சருமத்தின் துவாரங்கள் திறந்து இருப்பதால் மாய்சரைசர்ஸ் க்ரீம்கள் கொஞ்சம் தடவினால்கூட ஈரபதம் நன்கு கிடைக்கும். ஆகையால், குளித்து முடித்து துண்டால் துடைத்தவுடன் கொஞ்சம் ஈரம் சருமத்தில் உள்ளபோதே மாய்ஸ்ரைசர்ஸ் க்ரீம்களை தடவ வேண்டும்.

* நம் ஊரில் குளிர்காலத்தில்தான் பருத்தி அல்லாத உடையை அணிவதற்கு உகந்த காலம் என்பதால், டைட்ஸ் போன்ற உடைகளையும், உல்லன் ஆடைகளையும் அணியலாம். ஆனால், உங்களுக்கு சருமத்தில் எந்த ஒரு பிரச்னையும் இல்லாதிருந்தால் மட்டுமே அவற்றை அணிவது நலம். சரும நோய்கள் ஏதேனும் இருப்பின் இவ்வகை ஆடைகளைத் தவிர்த்து விடுங்கள்.

இதைத்தவிர குளிர்காலத்தில் வேறு என்னென்ன சருமப் பிரச்னைகள் எழலாம். அவைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியும் பார்ப்போம்…

உடலின் மேல்பகுதியில் உள்ள சருமம் காய்ந்து விடுவதுபோல், உச்சந்தலையில் உள்ள தோலும் வறண்டு, பொடுகுத் தொல்லை ஏற்படும். இது குளிர்காலத்தில் அனைவரையுமே பாதிக்கக்கூடிய பிரச்னை.

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலும் அதைத்தவிர, வாரம் குறைந்தபட்சம் மூன்று முறையாவது தலை குளிப்பதும் பொடுகுப் பிரச்னையைக் குறைக்கும். அப்படி செய்தும் பொடுகு குறையவில்லை என்றால் மருத்துவரின் பரிந்துரையின்படி பொடுகைக் குறைக்கும் ஷாம்பூக்களை உபயோகிக்கலாம்.

சொரியாசிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மாய்சரைசர்ஸ் க்ரீம்களை உபயோகப்படுத்தவில்லை என்றால் குளிர்காலத்தில் உண்டாகும் வறட்சி அவர்களுடைய சருமத்தை மிகவும் வறண்டுபோகச் செய்து நோயையும் மேலும் அதிகப்படுத்தி விடக்கூடும்.

இவர்கள் குளித்து முடித்தவுடன் ஒரு அரை வாளித் தண்ணீரில் கொஞ்சம்போல் எண்ணெயை கலந்து அந்த தண்ணீரை கடைசியில் மேலே ஊற்றிக் கொள்ளலாம். வயதானவர்கள் இதைச் செய்யும்போது குளியலறையில் வழுக்கி விழுந்துவிடாமல் கவனமாகச் செய்ய வேண்டும்.

வயதானவர்களுக்குத் சருமம் ஏற்கனவே வறண்டு இருக்கும். ஏனென்றால் எண்ணெய் சுரக்கும் செபயேசியஸ் சுரப்பிகள் வயதாக வயதாக சுருங்கிவிடும். அவர்களுக்கு பனிக்காலத்தில் Asteatotic Eczema என்ற பிரச்னை வரலாம். இது பொதுவாக கால்களில் ஏற்படும். மேல் தோலில் வறட்சி ஏற்பட்டு, அங்குள்ள செல்கள் சுருங்கி தோலில் வெடிப்பு ஏற்படும். கீழ் தோலில் வீக்கம் ஏற்பட்டு மேல் தோலை இன்னும் வெடிக்கச் செய்யும். அதுமட்டுமில்லாமல் கீழ் தோலில் உள்ள சிறு ரத்தக்குழாய்கள் வெடித்து, ரத்தமும் வரும்.

இது மிக எளிதாக பாக்டீரியா கிருமித்தொற்று ஏற்பட வைக்கும் எந்த வறண்ட சருமமும் அரிப்பை ஏற்படுத்தும். அதுவும் இந்த Asteatotic Eczema-வை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால் பாதிக்கப்பட்ட நபர் அவ்விடத்தை சொரியும்போது கிருமி தொற்று ஏற்பட்டு அவர்களுக்கு Cellulitis ஏற்படலாம். இந்த Cellulitis வந்தால் மொத்த காலும் சிவந்து, வீங்கிவிடும். கடுமையான வலி ஏற்படும்.

இதனை சரி செய்ய ஆன்டிபயாடிக் ஊசிகளை நரம்பில் 5 முதல் 7 நாட்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும். இதனை தவிர்க்க, தோலின் மீது நல்ல மாய்சரைசர்களைத் தடவினாலே போதும்.எவ்வகை Eczema (கரப்பான்) நோயாக இருந்தாலும் குளிர்காலத்தில் மோசமாகக்கூடிய வாய்ப்புள்ளது.

Varicose Veins நோயால் பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டம் காலில் சரியாக இல்லாதவர்களுக்கு ஏற்படும் Stasis Eczema, ஏதோ ஒரு கொசு கடியோ அல்லது பூச்சி கடியோ காலில் ஏற்பட்டு, அது சரியாகாமல் போனாலும் சொரிவதைவிட மாட்டேன் என சொல்லும் ஆசாமிகளுக்கு ஏற்படும் Lichen Simplex Chronicus அல்லது Atopic Eczema என அனைத்துமே குளிர்காலத்தில் மேலும் மோசமாகும். இவை அனைத்துமே ஒரு சின்ன சரியான பழக்கத்தை கடை பிடிப்பதால், நாம் எளிதில் எதிர்கொள்ள முடியும்.

பெரிய கதவும் சிறிய சாவியால் திறந்து கொள்வதைப் போல மேலே சொன்ன பல தோல் நோய்களையும், நாம் ஒழுங்காக மாய்சரைசர்களைத் தடவி வந்தாலே மிக எளிதாக எதிர்கொள்ளலாம். ஆனால், நீங்கள் வாழ்வது கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர்பிரதேசம் என்றால் மாய்சரைசர் க்ரீம் மட்டும் போதாது. நீங்கள் அணியும் ஆடையும் ஒழுங்காக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

உல்லன் ஆடைகளை நேராக அப்படியே அணியாமல், தோலை உறுத்தாத காட்டன் உள்ளாடைகளை அணிந்து அதன்மீது குளிர் தாங்கும் உடைகளை அணியலாம். அது மட்டுமில்லாமல் 2-3 ஆடைகளை ஒன்றின்மீது ஒன்றாக அணியலாம். இதை Layered Dressing என்று சொல்வோம். இப்படி செய்யும்போது உடலின் வெப்பத்தை எளிதில் குறையாமல் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

தலையை தொப்பி போட்டுக் கொண்டு பாதுகாக்க வேண்டும். அந்த தொப்பி காதையும் சேர்த்து மூடுவதாக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் கைகளுக்கு க்ளவுஸும், கால்களுக்கு ஷூ, சாக்ஸும் அணிந்தால் குளிரால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

சிலருக்கு குளிர்காலத்தில் தண்ணீரை தொட்டாலே கைகள் வலிக்கும். மிக வெளுத்து பின்பு நீலமாகி பின்பு சிவந்தும் போகும். இதை Raynaud’s Phenomenon என்றழைப்போம். இவர்களுக்கு ரத்தக்குழாய்கள் மிகவும் சுருங்கிக் கொள்வதால் இவ்வகை பிரச்னை வரலாம். ஆகையால் கை, கால்களை நன்கு மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.

குளிர்காலம்தானே என்று சன் ஸ்கிரீன் க்ரீம்களை தடவாமல் விட்டு விடாதீர்கள். குளிர்காலத்திலும், சன் ஸ்கிரீன் க்ரீம்கள் புற ஊதா கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன. எந்த பருவ காலத்திலும் புற ஊதாக் கதிர்கள் வெளிப்படும் என்பதால், வானம் மூடி இருந்தால்கூட சன் ஸ்கிரீன் க்ரீம்கள் தடவுவதை நிறுத்தக் கூடாது. குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பும் உண்டாகலாம். அதற்கும் நல்ல மாய்சரைசர் உபயோகிக்க வேண்டும்!Post a Comment

Protected by WP Anti Spam