By 13 December 2018 0 Comments

காற்று மாசு சிறுநீரகத்தையும் பாதிக்கும்!! (மருத்துவம்)

‘‘சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும், சுவாசம் தொடர்பாக பல பிரச்னைகள் ஏற்படும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், காற்று மாசு சிறுநீரகக் கோளாறை உண்டாக்கி, அதன் எதிரொலியாக உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம் என்கிற அபாய எச்சரிக்கையை எல்லோரும் அறிந்துகொள்வது அவசியம். இன்று சுற்றுச்சூழல் சீர்கேடு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அத்தியாவசியமான தகவலும் கூட’’ என்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவர் சௌந்தர்ராஜன்.

இது எப்படி சாத்தியம்? நுரையீரலுக்கும் சிறுநீரகத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்டோம்…
‘‘என்ன இது புதிராக இருக்கிறதே என்ற உங்களுடைய நினைப்பில் தவறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஒரேயொரு விஷயத்தை மட்டும் நீங்கள் உற்று
கவனித்தால் போதுமானது.

இன்று அதிகரித்துவிட்ட வாகனங்களில் இருந்து, அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேற்றப்படுகிறது. இந்தப் புகையின் மூலமாக காற்று சிறிதுசிறிதாக மாசுபடத் தொடங்குகிறது. புகையில் வெளிப்படுகிற நச்சுத்தன்மை கொண்ட உலோகப் பொருட்கள், லெட், காட்மியம் போன்ற தாதுக்கள் நமது உடலுக்குள் செல்வதால், நுரையீரல் உட்பட எல்லா உறுப்புகளும் செயல் இழக்கத் தொடங்குகின்றன.

அதாவது, மாசடைந்த காற்றினைச் சுவாசிப்பதால், மூச்சுத்திணறல் போன்ற சுவாசக்கோளாறுகள் ஏற்படுவதோடு, குறைப்பிரசவம், சர்க்கரை நோய் போன்றவையும் நேரிடலாம்.நுரையீரலுக்குள் செல்கிற விஷத்தன்மை உடைய உலோகப் பொருட்கள், தாதுக்கள் ரத்தத்தில் கலந்து, சிறுநீரகங்களுக்குள் செல்கின்றன. இதன் காரணமாக, நச்சுத்தன்மை கொண்ட சிறுநீரக நோய்(Toxic Nephropathy) ஏற்படுகிறது. சிறுநீரை வடிகட்டி, வெளியேற்றுகிற நெப்ரான்கள் பாதிப்பு அடையும்.

எனவே, சிறுநீர் கழிக்கும்போது, ரத்தமும் கலந்து வெளியேறும். மேலும், சிறுநீர்ப்பையில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உடலில் உள்ள புரதச்சத்து குறையத் தொடங்கும். அழற்சி வரும். இதனைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை வரும். நுரையீரலில் சளி சேர்ந்து, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, தொடர் இருமல் ஏற்படும் அபாயம் உண்டு.

அது மட்டுமின்றி நுரையீரலில் டிபி(Tuber Culosis) ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நாளடைவில், இந்த உறுப்பில், COPD எனக் குறிப்பிடப்படுகிற Chronic Obstructive Pulmonary Disease உண்டாகும். மாசு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால், சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது கட்டமாக, காற்று மாசுபட்டால் இதயம் செயல் இழக்க நேரிடும். மறைமுகமாக இதயம் பாதிப்பு அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயமும் உருவாகும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடல்ரீதியாக, என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ அவை அனைத்தும் காற்று மாசுபடுவதாலும் உண்டாகும். மரங்களில் இருந்து வெளிப்படுகிற கார்பன் டை ஆக்சைடு, காற்றில் மிதக்கும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள்(Particulate Matter) போன்றவற்றை சுவாசிப்பதால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதுமைப் பருவத்தினர் போன்றோர்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

ஏனென்றால், இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். தாய்மை அடைந்த பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படவும், குறைப்பிரசவத்தில் சிசுக்கள் பிறப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பிறக்கிற சிசுக்களின் உடல் எடை மிகவும் குறைவாகக் காணப்படும்.

அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால், ஏற்படுகிற பாதிப்புகளைக் குறுகிய கால மற்றும் நீண்ட கால பிரச்னைகள் என வகைப்படுத்தலாம். முதல் வகையான குறுகிய கால பிரச்னையில், இருமல், சளி, மூச்சுத்திணறல் உண்டாகும்.

நீண்ட கால பிரச்னை என பார்க்கும்போது 75 வயதில் நேரிடுகிற இறப்பு முன்கூட்டியே 55 வயதிலேயே வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காற்று மாசினால் ஏற்படுகிற உடல்நலக் குறைபாட்டினைத் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன. ஒருவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு வந்துள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார மையம் தருகிற புள்ளி விபரத்தின் அடிப்படையில், ஓர் ஆண்டில் 4.2 மில்லியன் பேர் காற்று மாசுபாட்டினால் பாதிப்பு அடைவதாக தெரிய வருகிறது. எனவே, இது பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருப்பது அவசியம். உடலில் பிரச்னைகள் வந்த பின்னர், அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரமான இடத்தில் வசிக்க முற்படலாம்!’’Post a Comment

Protected by WP Anti Spam