கர்ப்ப கால காச நோய்!!(மருத்துவம்)

Read Time:12 Minute, 50 Second

இந்தியாவில் காச நோய் பாதிப்பு மிக அதிகம். இங்கு வருடத்துக்கு 22 லட்சம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் வயது மரணங்களுக்கும்
முக்கியக் காரணமாக காச நோய் உள்ளது. கர்ப்ப காலத்தில் உள்ள பெண்களையும் விட்டுவைப்பதில்லை என்பது கவனத்தில் கொள்ள
வேண்டிய ஒன்று.

மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்படும் கர்ப்பிணிகளில் 100 பேரில் இருவருக்கு காச நோய் பாதிப்பு இருக்கிறது என்கிறது ஒரு புள்ளி விபரம். உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கலாம். மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்(Mycobacterium tuberculosis) எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பதால் காச நோய் வருகிறது. வழக்கத்தில், காற்றோட்டம் சரியில்லாத வீடுகளிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களிலும், பஞ்சாலை, நூற்பாலை, சிமெண்ட் ஆலை, பீடித் தொழில் இடங்கள், சுரங்கங்கள், ரப்பர் தோட்டம் போன்றவற்றில் இந்தக் கிருமிகள் அதிக அளவில் வசிக்கும். அப்போது அங்கு வாழும் மக்களைத் தாக்கி காச நோயை ஏற்படுத்தும்.

யாருக்கு வாய்ப்பு அதிகம்? ஊட்டச் சத்து குறைவு உள்ளவர்கள், வறுமையில் வாடும் ஏழைகள், அறியாமையில் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா, மூட்டுவலி போன்றவற்றுக்கு ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், காச நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகுபவர்கள் ஆகியோரை இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது. எய்ட்ஸ் நோயும் காச நோயும் காச நோய்க்கும் எய்ட்ஸ் நோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் காச நோய்க் கிருமிகள் இவர்களை எளிதில் தாக்கிவிடும். அதே நேரத்தில் காச நோய்க்கான மருந்துகளும் இவர்களுக்கு வேலை செய்யாது. இதனால் எய்ட்ஸ் நோயுடன் காச நோயும் சேர்ந்து கொண்டால், மரணம் சீக்கிரத்தில் வந்து சேரும்.

எப்படி பரவுகிறது? காச நோய்க் கிருமிகள் நோயாளியின் நுரையீரலில் வசிக்கும். நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் இந்தக் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவி
விடும். நோயாளி பேசும்போது கூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

பாதிக்கிற உடல் உறுப்புகள்
காச நோய்க் கிருமிகள் நுரையீரல், நுரையீரல் உறை, குடல், குரல்வளை, எலும்பு, முதுகுத் தண்டுவடம், சிறுநீரகம், கண், தோல், மூளை, மூளை உறை, விந்துக் குழல், கருப்பை இணைப்புக் குழல் நிணநீர்ச் சுரப்பிகள் என்று பல உறுப்புகளைப் பாதிக்கின்றன.
பெண்களுக்குக் கருப்பை இணைப்புக் குழலைக் காச நோய் பாதித்தால், குழந்தைப்பேறு இல்லாமல் போகும். மற்ற உடல் உறுப்புகளை இது பாதிக்கும் போது, குழந்தைப்பேறு எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

அறிகுறிகள்
காச நோய்க் கிருமிகள் உடலில் எந்த உறுப்பைப் பாதிக்கிறதோ அதைப் பொறுத்து அறிகுறிகள் அமையும். பொதுவாக, இந்த நோய் நுரையீரல்களையே அதிக அளவில் பாதிப்பதால் நுரையீரல் காச நோய்க்குரிய(Pulmonary tuberculosis) அறிகுறிகளை மட்டும்
இப்போது பார்ப்போம். மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கிற இருமல், சளி, சளியில் ரத்தம், மாலை நேரத்தில் ஏற்படுகிற காய்ச்சல், பசி குறைவது, உடல் எடை குறைவது, களைப்பு, சுவாசிக்க சிரமம் ஆகியவை இதன் பிரதான அறிகுறிகள் என்றாலும் ஒரு சிலருக்கு இந்த அறிகுறிகள் தெரியாமலும் காச நோய் இருக்கக் கூடும். கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை பசி குறைவதும் களைப்பு ஏற்படுவதும் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் அனைவரிடத்திலும் காணப்படும் என்பதால், அவர்களுக்குக் காச நோய் இருப்பதை அறிய தாமதம் ஆகும். எனவே, இவர்களுக்கு இருமலும் சளியும் தொடர்ந்து இருந்தாலே, காச நோய்க்குரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். எய்ட்ஸ் நோயுள்ள கர்ப்பிணிகளுக்கு காச நோய்க்கான பரிசோதனைகளை கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனை என்னென்ன?ஒருவருக்குக் காச நோய் உள்ளதா என்பதை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை, மேண்டோ பரிசோதனை, சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் போன்றவை உதவும். இவற்றில் சளிப் பரிசோதனை முக்கியமானது. மூன்று முறை சளியைப் பரிசோதிக்க வேண்டும். அப்போது இரண்டு முறை சளியில் காச நோய்க் கிருமிகள் இருக்குமானால், அது காச நோயை 100 சதவீதம் உறுதி செய்யும்.

கர்ப்பிணிக்கு எக்ஸ்-ரே எடுக்கலாமா?
பொதுவாக, கர்ப்பிணிகளுக்கு முதல் 12 வாரங்கள் வரை எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கக் கூடாது. என்றாலும், மிகவும் அவசியம் என்று கருதப்பட்டால், கர்ப்பிணியின் வயிற்றை ஈயம் கலந்த உலோகப் பாதுகாப்பு கொண்ட உறையால்(Lead apron) மூடிக்கொண்டு, நெஞ்சை மட்டும் எக்ஸ்-ரே எடுக்கலாம். கர்ப்பிணியின் சளியில் காச நோய்க் கிருமிகள் காணப்படவில்லை என்றாலும், நெஞ்சு எக்ஸ்-ரேயில் காச நோய்க்கான தடயங்கள் காணப்படுமானால், அதற்குரிய சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும். சிகிச்சை என்ன? நவீன மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியால் இன்றைக்கு காச நோயைக் குணப்படுத்த பல தரப்பட்ட மருந்துகள் உள்ளன. ரிஃபாம்பிசின், ஐசோநியசிட், எத்தாம்பூட்டால், பைரசினமைடு, ஸ்ட்ரெப்டோமைசின் ஊசிமருந்து ஆகியவை முதல் நிலை காச நோயைக் குணப்படுத்துகின்றன. இவற்றை நோயின் ஆரம்ப நிலையிலேயே முறைப்படி பயன்படுத்த வேண்டியது முக்கியம். பொதுவாக 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை காச நோய்க்கு சிகிச்சை எடுக்க வேண்டிவரும்.

கர்ப்பிணிக்கு என்ன சிகிச்சை?
கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெப்டோமைசின் ஊசிமருந்தைப் பயன்படுத்தக் கூடாது. முதல் இரண்டு மாதங்களுக்கு ரிஃபாம்பிசின், ஐசோநியசிட், எத்தாம்பூட்டால், பைரசினமைடு ஆகிய நான்கு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். அடுத்த 4 மாதங்களுக்கு ரிஃபாம்பிசின், ஐசோநியசிட் ஆகிய இரண்டு மருந்துகளை மட்டும் பயன்படுத்தினால் போதும். இத்துடன் பைரிடாக்சின் மாத்திரையும் தேவைப்படும். இலவச சிகிச்சைகாச நோய்க்கு ‘டாட்ஸ்’ எனும் கூட்டு மருந்துச் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதை மொத்தம் ஆறு மாதங்களுக்கு எடுத்துக் கொண்டால், காச நோய் முற்றிலும் குணமாகிவிடும்.

விபரீத விளைவுகள்
காச நோய்க்குச் சிகிச்சை பெறத் தவறினால் உடல்நலம் பெரிதும் நலிவடையும். உணவு சாப்பிட முடியாமல், சுவாசிக்க முடியாமல், ரத்த வாந்தி வந்து மரணம் நெருங்கும். அதுமட்டுமில்லாமல் ஒரு காச நோயாளியிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவும் ஆபத்தும் உண்டு.
கர்ப்பிணிக்கு என்ன பாதிப்பு?காச நோய் இருக்கும் கர்ப்பிணிகள் முறைப்படி சிகிச்சை எடுக்கத் தவறினால், அது கருப்பையில் வளரும் குழந்தையைப் பாதிக்கும். முக்கியமாக, கரு கலைந்து விடக்கூடும். குறைப் பிரசவம் ஏற்படலாம். குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருக்கலாம். பிறக்கும் போதே அதற்கு காச நோய் ஏற்பட்டிருக்கலாம். தாயின் உயிருக்கும் ஆபத்து நேரலாம்.

கர்ப்ப கால பராமரிப்பு
காச நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் கர்ப்பிணிகள் மாதம் ஒரு முறை அவசியம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக, காச நோய் மருந்துகள் கர்ப்பிணியின் கல்லீரலைப் பாதிக்க வாய்ப்புள்ளதால். அதைத் தடுக்கும் விதமாக, பரிசோதனைகள் அமையும். இதுபோல், குழந்தையின் வளர்ச்சியை அவை பாதிக்காமல் தடுக்கவும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் தேவைப்படும். இவ்வாறு காச நோய்க்கு முறையாக பரிசோதனைகளும் சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டால், கருவைக் கலைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. சுகப் பிரசவம் ஆகவும் வழி ஏற்படும். ஏற்கனவே காச நோய் உள்ள பெண்கள் சிகிச்சை முடிந்த பிறகு கர்ப்பத்துக்குத் தயாராகலாம்; அதே நேரம், கர்ப்பமான பிறகு காச நோய் ஏற்படுமானால், பயப்படத் தேவையில்லை. முறையான சிகிச்சையைப் பெற்றுக் கொண்டு கர்ப்பத்தையும் சுகப் பிரசவத்தையும் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறை சொன்னால் குஷி இருக்காது!!(அவ்வப்போது கிளாமர்)
Next post மோகத்திற்கு எதிரி முதுகுவலி!(அவ்வப்போது கிளாமர்)