முல்லைத்தீவு எனும் போராட்ட பூமி!! ( கட்டுரை)

Read Time:21 Minute, 40 Second

இலங்கையின் வடக்குப் பகுதி, பல்வேறு விடயங்களுக்காகப் பெயர்போனது. ஒரு காலத்தில், அறிவியலாளர்களைத் தோற்றுவித்த பகுதியாகவும், தமிழர் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னின்ற பகுதியாகவும், வடக்குக் காணப்பட்டது. ஆனால், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த அவலங்கள், அதன் பின்னரான பொருளாதாரப் பிரச்சினைகள், நுண்கடன் பிரச்சினைகள், கடும் வரட்சி என, அவல பூமியாக வடக்கு மாறியிருப்பதாகவே தெரிகிறது. இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவில்லை என்பதைப் போலத் தான், வடக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் அமைந்திருக்கிறது.

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைப் பிரதானமாகவும், யாழ்ப்பாணத்தின் மருதங்கேணியையும், மன்னாரில் சில பகுதிகளையும் பாதித்த வெள்ளப்பெருக்கு, மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கடந்த டிசெம்பர் 21ஆம் திகதி ஆரம்பித்த திடீர் வெள்ளம் காரணமாக, கிட்டத்தட்ட 40,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 125,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் தமிழ் மிரர், டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், விமானப்படை ஆகியவற்றுடன் இணைந்து, உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன், மருத்துவ முகாம்களை, கடந்த வாரத்தில் நடத்தியிருந்தன. மக்களின் அவசர தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாம்கள், முல்லைத்தீவின் சில பகுதிகளில், மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியிருந்தன. அதன்போது கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் மூலமாகவும் அப்பகுதி மக்களுடனான உரையாடல்களின் மூலமாகவும் கிடைக்கப்பெற்ற தகவல்கள், வடக்கின் அவல நிலையை வெளிக்காட்டுவனவாக அமைந்திருந்தன.

ஒழுங்குசெய்யப்பட்ட மருத்துவ முகாமும் ஏனைய உதவி வழங்கலும், முல்லைத்தீவு மாவட்டத்தையே மய்யப்படுத்தியிருந்த நிலையில், இக்கட்டுரை, முல்லைத்தீவை மாத்திரம் பிரதானமாகக் கொள்கிறது. ஆனால், கிளிநொச்சி மாவட்டத்திலும், இதே மாதிரியான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்த வெள்ளப்பெருக்கு மோசமாக அமைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக (இல்லாவிடின், சிறந்த முன்னாயத்தங்களின் காரணமாக அல்லது மக்களின் தயார்நிலை காரணமாக), பெருமளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால், உயிரிழப்புகள் பெரிதளவில் ஏற்படவில்லை என்பது மாத்திரம், மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டியதா என்பது, இன்னொரு கேள்வியாக இருக்கிறது. பல இடங்களில், மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன; பயிர்ச்செய்கை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து, பயிர்ச்செய்கைகள் முற்றிலும் அழிந்த பகுதிகள் உள்ளன; கால்நடைகளுக்கும் ஏராளமான அழிவுகள் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் ஏற்பட்ட அழிவுகள், எதிர்பார்க்கப்பட முடியாத அளவில் உள்ளன. அவற்றிலிருந்து மீள்வது, எப்படிச் சாத்தியமென்ற கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளன.

இருபத்து ஓராம் (21) திகதி இரவிலிருந்து, சுமார் 4 தொடக்கம் 5 மணித்தியாலங்களில் பெய்த மழை, யாருமே எதிர்பார்க்கப்படாத அளவில் காணப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தரவுகளின்படி, முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஆண்டுக்கான சராசரி மழைவீழ்ச்சி, சுமார் 1,500 மில்லிமீற்றர் ஆகும். ஆனால், டிசெம்பர் 21ஆம் திகதி பின்னிரவு ஆரம்பித்து, வெறுமனே 4 அல்லது 5 மணித்தியாலங்களில், சுமார் 301 மில்லிமீற்றர் மழை பெய்திருந்தது என, முல்லைத்தீவின் நீர்ப்பாசனத் திணைக்களத்தைச் சேர்ந்த உயரதிகாரியொருவர் தெரிவித்தார். அதாவது, அம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெறப்படும் சராசரி மழைவீழ்ச்சியில் 20 சதவீதத்துக்கும் (கால்வாசி) அதிகமான மழைவீழ்ச்சி, வெறுமனே 4, 5 மணித்தியாலங்களில் கிடைத்திருந்தது. இதனால் தான், தங்களால் எதையும் செய்ய முடிந்திருக்கவில்லை என, அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

சில பிரதேசங்களில், 6 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் ஏற்பட்டது என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஓரளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காணப்பட்டதால், பாரிய அழிவுகளைச் சந்திக்காத போதிலும், இரவு நேரத்தில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது பெய்த கடும் மழை காரணமாக, பலரின் சொத்துகளுக்கு, ஏற்கெனவே சேதம் ஏற்பட்டிருந்தது.

முல்லைத்தீவின் முத்துஐயன்கட்டுப் பகுதியில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக ஆராயச் சென்றபோது, அப்பகுதியின் விவசாயிகள் சங்கத் தலைவர் மார்க்கண்டு யோகராசா தெரிவித்த கருத்துகள், அம்மாவட்டத்திலும் வடக்கின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்ட அழிவின் வீரியத்தைக் காட்டுகின்றன. “இரவு தான் தண்ணி வந்தது. ஒரு குறிப்பிட்ட 4, 5 மணித்தியாலத்துக்குள்ள தான் அந்தத் தண்ணி வந்தது. அது பெரிய அழிவக் கொண்டு வந்திட்டு. ஏனென்டால், எல்லா இடத்திலயும் தேக்கமான நிலைமை வந்திற்று” என்கிறார் அவர்.

முத்துஐயன்கட்டுப் பகுதி, மிகச்சிறிய பகுதி தான். ஆனால், அப்பகுதியில் வாழுகின்ற சுமார் 2,000 விவசாயிகளுக்கு, இந்த மண்ணும் இந்த விவசாயமும் தான் உயிர். நெல், நிலக்கடலை, உழுந்து என்பன, இப்பகுதியில் அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுப் பயிரிடப்படும் பயிர்களாக உள்ளன.

யோகராசாவின் கருத்தின்படி, முத்துஐயன்கட்டுப் பகுதியின் 75 சதவீதமான பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளன. ஒரு பகுதியின் 75 சதவீதமான நெற்பயிர்ச்செய்கைகள் அழிவடைவதென்பது, சாதாரணமானது கிடையாது. அதிலும், விவசாயிகள் சங்கத் தலைவராக இருக்கும் போது, இதன் அழுத்தங்கள் அதிகமாகவே இருக்கும். ஆனால், பயிர்ச்செய்கைகளின் அழிவுகள் பற்றிய கவலைகளை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவது தொடர்பில் ஏற்பாடு செய்பவராக, யோகராசா முன்னின்று செயற்படுகிறார். கிட்டத்தட்ட, அப்பகுதியின் கிராமத் தலைவர் போலச் செயற்படும் அவர், பொறுப்புடனே கருத்துகளை வெளியிடுகிறார்.

குறிப்பாக, ஒட்டுசுட்டான் பகுதி மக்களைச் சந்தித்தபோது, அப்பகுதி மக்களின் குறிப்பிட்ட ஒரு பிரிவினர், “மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட, குளங்களிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வந்த பாதிப்புகளே அதிகம்” என்ற கருத்தைத் திரும்பத் திரும்ப முன்வைத்திருந்தனர். ஆனால் யோகராசாவோ, அக்குற்றச்சாட்டை முன்வைக்கத் தயங்குகிறார். விவசாயிகளாக இருக்கும் போது, குளமென்பது தங்களுக்கு அவசியமானது எனத் தெரிவிக்கும் அவர், குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுத் தண்ணீர் வெளியேற்றப்பட்டதை மிகப்பெரிய பிரச்சினையாக முன்வைக்க மறுக்கிறார். மாறாக, குளங்களை ஆழப்படுத்தவும் அவற்றின் அணைகளை மேலும் பலப்படுத்தவும் வேண்டுமென, அவர் கோருகிறார். அவருடைய பிரதான கோரிக்கையாகவும் கவனமாகவும், தட்டையன்மலைக் குளம் தான் காணப்படுகிறது.

“தட்டையன்மலைக் குளம், ஒரு சிறு குளம். அதுக்கு, பாதுகாப்பான அணைக்கட்டில்ல. சிறிய அணைக்கட்டு [தான் உள்ளது]. 14 அடி கொள்ளளவு. அந்தக் கட்டைப் பலப்படுத்திறதோட, குளத்தை ஆழப்படுத்திறது முக்கியம். இரண்டையும் செய்தா, அனர்த்தம் கொஞ்சம் குறைவா இருக்கும்” என்று அவர் தெரிவிக்கிறார்.

குளங்களின் பராமரிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகள், சமூக ஊடக வலையமைப்புகளிலும் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தன. முன்வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளாக, வான்கதவுகள் எதற்காகத் திடீரெனத் திறந்துவைக்கப்பட்டன, கடைசி நேரம் வரை எதற்காகக் காத்திருந்தார்கள், பொதுமக்களுக்குப் போதிய எச்சரிக்கைகள் வழங்கப்படவில்லை, வானிலையைக் கணிக்கத் தவறிவிட்டார்கள் ஆகியன காணப்படுகின்றன. ஆனால், நீர்ப்பாசனத் திணைக்களத்தோடு சம்பந்தப்பட்ட தரப்புகளும் ஏனைய செயற்பாட்டாளர்களும், இக்குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள். களத்திலுள்ள வேறு சிலரோடு உரையாடிய சந்தர்ப்பங்களிலும், குளப் பராமரிப்புத் தொடர்பில் ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை.

டிசெம்பர் மாதமென்பது, வடக்கின் பெரும்பாலான பகுதிகளுக்கு, மாரி காலமாகும். எனவே, இரணைமடு, முத்துஐயன்கட்டு உள்ளிட்ட ஏராளமான குளங்களின் நீரை, மழைக்காலத்துக்கு ஏற்றவாறு முகாமை செய்திருக்க வேண்டுமென்பது, இவ்விமர்சனங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட ஒரு விமர்சனமாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, வரட்சி நிலையே அப்பகுதிகளில் காணப்பட்ட நிலையில், இவ்வளவு அதிகமான மழையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுவும், மழை பெய்யாத காலங்களில், குளங்களில் இருக்கும் தண்ணீரைப் பயனின்றி வெளியேற்றினால், பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீர் போதாமல் போகுமென்பதும், நியாயமான கருத்துகளாகும். முல்லைத்தீவில் கலந்துரையாடிய விவசாயப் பிரதிநிதிகளும், இக்கருத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

மக்கள் சந்தித்த பிரச்சினைகள் தொடர்பாக, முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழாசிரியரும் இந்த வெள்ள அனர்த்தங்களில் மீட்புப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவருமான வே.முல்லைத்தீபனைச் சந்தித்து உரையாடக் கிடைத்தது. மக்களோடு இணைந்து பணியாற்றும் அவர், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விவரித்தபோது, “இரவிரவா மழை பெய்தது. ஒரு மணி, 2 மணிக்குப் பிறகு பெய்ய வெளிக்கிட்டது. சனம் விடிய எழும்பிப் பார்த்தால், வீடு முழுக்கத் தண்ணி. வீட்டச் சுத்தியெல்லாம் தண்ணி” என்றார்.

காலையில் எழுந்த மக்களை, இராணுவத்தினரின் துணையோடு, படகுகளிலேயே மீட்கக்கூடியதாக அமைந்தது எனத் தெரிவித்த அவர், நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் காணப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு அவர்களை மீட்டிருக்காவிட்டால், மாபெரும் அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் என, நிம்மதியுடன் கூறுகிறார்.

இந்த அனர்த்தங்களுக்கான தீர்வு, இதைப் போன்ற அனர்த்தங்களைத் தடுப்பது எவ்வாறென்று கேட்டால், யாரிடமும் தெளிவான பதிலில்லை. இயற்கை, தனது கோரத்தைக் காட்டியதன் விளைவாக ஏற்பட்ட அனர்த்தம் என்பதை, மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்; அதிகாரிகளும் அக்காரணத்தையே முன்வைக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதையும் பாதித்துவரும் காலநிலை மாற்றம், இலங்கையில் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், இதே நிலையைத் தொடர்ந்து நீடிக்க விடுவதும் சரியானதல்ல. எனவே, இப்பிரச்சினைக்கான தீர்வுகளையும் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இது தொடர்பாக, யோகராசா முன்வைத்த கோரிக்கைகள் முக்கியமானவை. குளங்களின் அணைக்கட்டுகளைப் பலப்படுத்துவது, குளங்களை ஆழப்படுத்துவது என்பதோடு, எச்சரிக்கைக்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டுமென அவர் கோருகிறார். கடும் மழை, கடும் காற்று என, மோசமான வானிலை ஏற்படும் போது, அப்பகுதி மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு, எச்சரிக்கை வழங்குவதற்காக, அப்படியான கட்டமைப்பு அவசியமென அவர் கோருகிறார். அதேபோல், இடி, மின்னல் போன்றவற்றின் தாக்கங்கள், தங்கள் பகுதிகளில் அடிக்கடி ஏற்படுவதாகத் தெரிவிக்கும் அவர், அதற்கான தீர்வொன்றையும் கோருகிறார். அவருடைய கோரிக்கைகள், அவரால் மாத்திரமன்றி, உரையாட வாய்ப்புக் கிடைத்த ஏனைய விவசாயிகளில் பலரின் கருத்தாகவும் இருக்கிறது.

இப்பத்திரிகையோடு உரையாடிய நீர்வழங்கல் திணைக்கள உயரதிகாரி தெரிவித்த கருத்தோடு, இவ்விவசாயிகளின் கருத்தும் ஒத்துப் போகிறது. நள்ளிரவுக்குப் பின்னர் பெய்த கடும் மழை காரணமாக, குளங்களில் நீர் நிரம்பிய போதிலும், வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன என்பதை மக்களுக்கு அறிவித்து, அதன் பின்னர் வான் கதவுகள், படிப்படியாக கிட்டத்தட்ட நண்பகல் வேளை முதலே திறக்கப்பட்டன என அவர் கூறியிருந்தார். எனவே, எச்சரிக்கைக் கட்டமைப்பொன்று காணப்படுமாயின், இந்தத் தாமதத்தைக் குறைக்க முடியுமாக இருக்கும். தாமதத்தைக் குறைப்பதால், அனர்த்தங்களை முழுமையாக இல்லாது செய்ய முடியாது போகிலும், பாதிப்பின் அளவைக் குறைக்க முடியுமென்பது தெளிவு. எனவே, இவ்விடயத்தில் கவனஞ்செலுத்துவது பொருத்தமாக இருக்கும்.

அதேபோல், திட்டமிட்ட அபிவிருத்திகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென, அப்பகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளரொருவர், தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாமல் கருத்துத் தெரிவித்தார். குறிப்பாக, முல்லைத்தீவின் பல பகுதிகளில், அண்மைக்காலத்தின் வீதி, தண்டவாளம் ஆகியவற்றின் புனரமைப்பின் போது, வீதிகளும் தண்டவாளங்களும் மிகவும் உயரமான முறையில் நிர்மாணிக்கப்பட்டமை, நீரின் போக்குவரத்துப் பாதையைப் பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை, அவர் முன்வைத்திருந்தார்.

இவையெல்லாம் இவ்வாறிருக்க, அண்மைய ஆண்டுகளாக, போராட்டமே வாழ்வாகிப் போன முல்லைத்தீவு மக்களுக்கு, இந்த அனர்த்தமும் மிகப்பெரிய போராட்டமாகிப் போனது.

ஆனால், இறுதிக்கட்டப் போர் எனும் மாபெரும் அனர்த்தம், அம்மக்களில் குறிப்பிட்ட சதவீதமானோரைக் கொன்று, அவர்களில் அநேகமானோரின் சொத்துகள் அனைத்தையும் அழித்து, அவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரைப் போரின் வடுக்களைச் சுமக்க வைத்தமைக்கு மத்தியிலும், வெளியிலிருந்து பார்க்கும் போது, போரின் பாதிப்பை அங்கு காண முடியாது. மக்களின் மனங்களுக்குள் இருக்கும் வலிகள், அவர்களைப் புரிந்துகொள்வோரால் மாத்திரமே கண்டுகொள்ளப்படக் கூடியன. இதற்குக் காரணம், வன்னி மக்களின் போராட்டக் குணமும் மீள்திறனும் தான். இத்தனை பாதிப்புகளுக்கு மத்தியில் அம்மக்கள், நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்வதற்கு, அவர்கள் மாத்திரமே காரணமானவர்கள்.

எனவே தான், வெள்ளத்தின் பாதிப்பு ஏற்பட்டவுடன், வடக்கைச் சேர்ந்த இளைஞர்கள் பலரின் உதவிகள், ஏனைய பகுதிகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க உதவிகள், பாதுகாப்புப் படைகளின் ஆரம்பகட்ட உதவிகள் என்று கிடைக்கப்பெற்றாலும், இந்த அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு, வன்னிக்குள் இருந்த மக்கள் தான், பிரதான பங்களிப்பை ஆற்றியிருந்தனர். போரின் அழிவுகள், அவர்களை மேலும் ஒன்றுபடுத்தியிருக்கின்றன; அவர்களை மேலும் உறுதியாக்கியிருக்கின்றன; போராட்டத்தின் பலத்தை உலகுக்கே காட்டிய மண்ணில், போராட்டத் திறனை அதிகரித்திருக்கின்றன. எனவே, அழிவுகள் ஒரு பக்கமாகவிருக்க, மக்களின் போராட்டத் திறன் மாத்திரம் இன்னமும் மங்கிவிடவில்லை என்பதை, இந்த அனர்த்தம் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.

(இவ்விஜயத்தின் போது, மருத்துவ முகாமில் பெறப்பட்ட தகவல்கள், அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் மருத்துவச் சிக்கல்கள், வெள்ளத்தைத் தாண்டி அவர்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகள், இன்னும் பல விடயங்கள், அடுத்த வாரம் (09) வெளியாகும் கட்டுரையில் இடம்பெறும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அறிமுகமாகிறது மருந்து பெறும் இயந்திரம்!! (மருத்துவம்)
Next post திருமணத்துக்கு முன்பே…!!(அவ்வப்போது கிளாமர்)