By 21 January 2019 0 Comments

சிறுநீரகம் செயல் இழந்தால்..? (மருத்துவம்)

கும்பகோணத்திலிருந்து வாசகர் ஒருவர் அலைபேசினார். அவருடைய மனைவிக்கு வாந்தி, பேதி ஆகியிருக்கிறது. தெருவில் சுற்றும் கம்பவுண்டர் சிகிச்சை கொடுத்திருக்கிறார். நிலைமை சீரியஸானதும் அவரை கார்ப்பரேட் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கே அவருக்கு ‘இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன; உடனடியாக ‘டயாலிஸிஸ்’ செய்ய வேண்டும்’ என்று சொல்லியிருக்கின்றனர். ‘செகண்ட் ஒப்பீனியனுக்காக’ என்னிடம் பேசினார். ‘சாதாரண வாந்தி, பேதியால்கூட சிறுநீரகம் செயல் இழக்குமா?’ ‘ஆமாம்’ என்றேன். ‘எப்படி?’ எனக் கேட்டார்.‘கடுமையான வாந்தி, பேதியின்போது உடலில் தண்ணீர் சத்து இல்லாமல் போகும். அப்போது சிறுநீரகம் ரத்தக் கசடுகளை வடிகட்ட வழி தெரியாமல் திணறும். தண்ணீரே தராமல் சோப்பை மட்டும் கொடுத்து துணியில் இருக்கிற அழுக்கை போக்கச் சொன்னால் உங்களால் முடியுமா? அப்படித் தேய்த்தால், தேய்க்கிற தேய்ப்பில் துணி நைந்து போகுமல்லவா? அப்படித்தான் சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்கள் அழிந்து சிறுநீரகம் செயலிழக்கும். அப்போது மருத்துவ சிகிச்சை பலன் தரவில்லை என்றால் ‘டயாலிஸிஸ்’தான் கைகொடுக்கும்’ என்றேன்.
சிறுநீரகத்துக்கு ஏற்படும் சிக்கல்களில் ‘சிறுநீரகச் செயலிழப்பு’ ஆபத்தானது. இதில் உடனடி செயலிழப்பு, நாட்பட்ட செயலிழப்பு என இரண்டு விதம் உண்டு. முதல் ரகமானது கமாண்டோக்கள் போல் திடீரெனத் தாக்கி சிறுநீரகத்தை நிலைகுலையச் செய்யும்.

இரண்டாவது ரகம் தரைப்படைபோல் கொஞ்சம் கொஞ்சமாகத் தாக்கி சிறுநீரகத்துக்குச் சிக்கலை உண்டாக்கும். முதல் ரகத்தை ஆரம்பத்திலேயே கவனித்தால், 100% குணப்படுத்திவிடலாம். இரண்டாவது ரகம் வேறு மாதிரி. துப்பிய எச்சிலை விழுங்க முடியாத மாதிரி, பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை சரிசெய்ய முடியாது; அடுத்தடுத்து சிக்கல்கள் வராமல் தடுக்கவே முடியும். உடனடி சிறுநீரகச் செயலிழப்பு (Acute renal failure) பல வழிகளில் வருகிறது. அவற்றை மூன்று விதமாகப் பிரிக்கிறது மருத்துவம். முதல் வழியானது ஓர் உள்நாட்டை அண்டை நாடுகள் படை எடுப்பதற்கு ஒப்பானது. சிறுநீரகத்துக்கு வருகிற ரத்தம் குறைவதுதான் இதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. விபத்தின்போது, ஆபரேஷன் நடக்கும்போது, பிரசவத்தின்போது, கருக்கலைப்பு செய்கிறபோது ரத்த இழப்பு ஏற்படலாம். அதை உடனடியாக கவனித்து சரிசெய்யாவிட்டால், சிறுநீரகம் செயலிழக்கும். ரத்த வாந்தி / ரத்தப்போக்கு ஏற்பட்டாலும் இதே நிலைமைதான். அடுத்து, சிறுநீரகத்துக்கு ஒவ்வாத வலி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், மூலிகைகள், பஸ்பங்கள், தூக்க மாத்திரைகள், போதை மாத்திரைகள் போன்றவற்றை டாக்டர் சொல்லாமல் சுயமாகச் சாப்பிடும்போது சிறுநீரகம் செயலிழக்கிறது. உடலில் எங்காவது கடுமையான நோய்த்தொற்று இருந்து, அதைக் கவனிக்காமல் இருந்தால், அது ரத்தத்தில் கலந்து ‘செப்டிசீமியா’வை உருவாக்கும். அப்போதும் சிறுநீரகம் செயலிழக்கும்.

இவை தவிர விஷக்கடிகளின்போது, துத்தம் போன்ற விஷங்களைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கும்போது, தீ விபத்தின்போது என சிறுநீரகச் செயலிழப்புக்குப் பெரிய காரணப் பட்டியல் இருக்கிறது. இரண்டாவது வழி, உள்நாட்டுக் கலகம் போன்றது. இதில் சிறுநீரகத்திலேயே கோளாறு இருக்கும். முக்கியமாக, ‘நெப்ரைடிஸ்’ (Nephritis) எனும் சிறுநீரக அழற்சி நோய், காசநோய், நெப்ராடிக் சிண்ட்ரோம், குறைரத்த அழுத்தம், எலிக் காய்ச்சல் போன்றவை சிறுநீரகத்துக்குள் புகுந்து கலாட்டா செய்யும்போது சிறுநீரகம் செயலிழந்துவிடும். மூன்றாவது வழி, பக்கத்து மாநிலம் அருகிலுள்ள மாநிலத்துக்குத் தண்ணீரோ, மின்சாரமோ தராமல் கஷ்டப்பட வைப்பதற்கு சமமானது. சிறுநீர்ப் பாதையில் உருவாகிற கல், புராஸ்டேட் வீக்கம் அல்லது புற்றுநோய், சிறுநீர்த் துவாரம் அடைப்பு, பிறவிக்கோளாறு போன்றவை இதற்கு சில உதாரணங்கள். இந்த நோயை எப்படித் தெரிந்துகொள்வது?
வழக்கத்தைவிட சிறுநீர் குறைவாகப் போவது, திடீரென சிறுநீர் கொஞ்சம்கூட போகாமல் ‘ஸ்டிரைக்’ செய்வது, சிறுநீரில் ரத்தம் போவது, விக்கல் ஏற்படுவது, மூச்சுத் திணறுவது, திடீரென உடல் வீங்குவது என பல தொல்லைகள் தோன்றி உடனடி சிறுநீரகச் செயலிழப்பை அடையாளம் காட்டும்.

உடனடியாக டாக்டரை அணுகி ரத்த அணுக்கள் பரிசோதனை, யூரியா, கிரியேட்டினின், ஜிஎஃப்ஆர் உள்ளிட்ட சிறுநீர் மற்றும் பொதுவான ரத்தப் பரிசோதனைகளைச் செய்தும், வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி / எம்ஆர்ஐ, டாப்ளர் ஸ்கேன் எடுத்தும் சிறுநீரகப் பாதிப்பை அறிந்து, மருத்துவ சிகிச்சையில் இதைக் குணப்படுத்திவிடலாம். காலம் தாழ்த்தினால் மட்டுமே ‘டயாலிஸிஸ்’ சிகிச்சை தேவைப்படும். சரி, இப்போது ‘சிகேடி’ (Chronic kidney disease – CKD) எனப்படும் நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்புக்கு வருவோம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களை கட்டுப்படுத்தத் தவறினால், இவ்வகை சிறுநீரகச் செயலிழப்பைச் சந்திக்க வேண்டிவரும். இது எப்போது வரும் என்று சொல்ல முடியாது. ஆனால், வரவேண்டிய நேரத்தில் வந்தே தீரும். நோய் ஆரம்பித்து பல மாதங்கள் ஆன பின்னரும் அறிகுறி எதுவும் தெரியாமல் உடலுக்குள் உலா வருவது இதன் மோசமான குணம்.
என்னிடம் சிகிச்சைக்கு வந்த ராமசாமி என்ற நீரிழிவு நோயாளிக்கு வழக்கமான பரிசோதனைகளில் சிறுநீரகம் பழுதுபட்டிருப்பது தெரிந்தது. அதை உறுதி செய்வதற்கு ஸ்கேன் உள்ளிட்ட சில ஸ்பெஷல் டெஸ்ட்டுகளை எடுக்கச் சொன்னேன். அவர் மறுத்துவிட்டார். ‘எனக்குத்தான் சிறுநீர் போவதில் எவ்வித சிக்கலும் இல்லையே!’ என்று அவநம்பிக்கையுடன் என்னைப் பார்த்தார். அவரைப் போல் ஆயிரம்
ராமசாமிகளை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

‘சிகேடி’யின் தொடக்க நிலையில் இருக்கிற இவர்களுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்தாலும், மற்றொரு சிறுநீரகம் வேலை செய்வதால், சிறுநீர் பிரிவதில் குறை இருக்காது. ஆகவே, தங்களுக்கு நோய் இருப்பதை நம்ப மறுத்து, சிகிச்சைக்கு வராமல், நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை வரவழைத்துக் கொள்கின்றனர். ‘சிகேடி’யின் அறிகுறிகள் என்ன? இரவில் அடிக்கடி சிறுநீர் போவது இதன் ஆரம்ப அறிகுறி. அப்போதே விழித்துக்கொண்டால், பிரச்னை பெரிதாகாது. இல்லாவிட்டால், சோர்வு தலைகாட்டும். நடந்தால் மூச்சு வாங்கும். இதயம் படபடக்கும். பசி குறையும். சாப்பிட பிடிக்காது. குமட்டலும் வாந்தியும் தொல்லை செய்யும். எடை குறையும். அடிக்கடி விக்கல் வரும். சருமத்தில் அரிப்பு ஏற்படுவதும் ரத்தம் கசிந்து சிவப்புத் திட்டுகள் தோன்றுவதும் உண்டு. ரத்தசோகை ஏற்பட்டு முகம் வெளுக்கும்; பாதம் வீங்கும். மனக்குழப்பமும் மலட்டுத்தன்மையும்கூட ஏற்படலாம். சுருக்கமாகச் சொன்னால், தலை முதல் பாதம் வரை எல்லா உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, அந்தந்த உறுப்பின் வெளிப்பாடாக ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அறிகுறிகள் தோன்றும். இவற்றை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே ‘சிகேடி’யை ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிறுநீரகத்தைக் காக்க முடியும். இந்த விஷயத்தில் இப்போது சொல்லப்போகிறவர்கள் ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், குடும்பத்தில் யாருக்காவது ‘சிகேடி’ பிரச்னை இருக்கிறவர்கள், சிறு வயதில் சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிட்டு வருபவர்கள், வருஷக்கணக்கில் வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடுபவர்கள்… இப்படி இந்த லிஸ்ட் பலசரக்கு லிஸ்ட்டைவிட பெரியது.

இவர்கள் வருடத்துக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்யவேண்டியது கட்டாயம். அத்தோடு மாதம் ஒருமுறை ரெகுலர் மருத்துவ செக்-அப் செய்துகொள்ள வேண்டியதும் அவசியம். ‘சிகேடி’ ஏற்பட்டுவிட்டாலே டயாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்று பலரும் அவசர முடிவுக்கு வருகிறார்கள். அப்படியில்லை. இந்த நோயில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என மொத்தம் 5 கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் மூன்று கட்டங்களுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமே போதுமானது. வேளாவேளைக்கு மறக்காமல் மருந்து சாப்பிடுவது, புரதமும் பொட்டாசியமும் குறைந்த உணவைச் சாப்பிடுவது, நீரிழிவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவது, கொழுப்பைக் குறைப்பது, உப்பைக் குறைப்பது, தண்ணீரை ‘அளந்து’ குடிப்பது போன்ற பரிந்துரைகளைச் சரியாகப் பின்பற்றினால், சுமார் பத்து வருஷங்களுக்குப் பெரிதாக சிக்கல் எதுவும் ஏற்படாமல் சிறுநீரகத்தைப் பாதுகாக்க முடியும். இவற்றையெல்லாம் தாண்டி நோய் அடுத்த கட்டத்துக்குத் தாவுகிறது என்றால், அப்போது ‘டயாலிஸிஸ்’ அவசியப்படும். அதேநேரம், நோய் கடைசி கட்டத்துக்குச் சென்றுவிட்டால், ‘டயாலிஸிஸ்’ சிகிச்சையும் கைவிரித்துவிடும்; அந்த நிலைமையில், பழுதான சிறுநீரகத்தை மாற்றியாக வேண்டும்.
(இன்னும் பேசுவோம்)

பொட்டாசியம் மிகுந்த உணவுகள் – கவனம்!
பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், கிழங்குகள், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, ஓட்ஸ், இளநீர், இறைச்சி, மீன், முட்டை மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் அனைத்திலும் பொட்டாசியம் அதிகம். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

சிறுநீரகம் காக்க 10 கட்டளைகள்
* நீரிழிவையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருங்கள்.
* ரத்தக் கொழுப்பை சரி செய்யுங்கள்.
* உணவில் உப்பைக் குறையுங்கள்.
* சமச்சீரான உணவு சாப்பிடுங்கள்.
* தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
* வலி மாத்திரைகளை டாக்டர் சொல்லாமல் சாப்பிடாதீர்கள்.
* மூலிகை மருந்துகளை முறையான மருத்துவர்களிடம் வாங்கிச் சாப்பிடுங்கள்.
* 40 வயதுக்கு மேல் வருஷத்துக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் தேவை.
* புகையும் மதுவும் ஆகாது.
* தேவைக்கு ஏற்ப தண்ணீர் அருந்துங்கள்.

என் மகளுக்கு ஆறு வயது. டான்சில் பெரிதாக வீங்கி இருக்கிறது. இதற்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமா?
– கே.சுமதி, விழுப்புரம்.
டான்சில் வீக்கம் ஆரம்பக்கட்டத்தில் இருந்தால், ஆன்டிபயாடிக் மூலம் குணப்படுத்திவிடலாம். குளிர்ச்சியான பானங்கள் அருந்துவதைத் தவிர்ப்பது, சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவதை நிறுத்துவது போன்ற தடுப்புமுறைகளைப் பின்பற்றினால், டான்சில் மறுபடியும் வீங்காது. அதேசமயம், வருஷத்துக்கு மூன்று முறைக்கு மேல் டான்சில் பிரச்னை செய்கிறது என்றால் ஆபரேஷன் அவசியப்படும். தவிரவும், குழந்தைக்கு அடிக்கடி ஆரோக்கியம் கெடுகிறது, அளவில்லாத வாந்தி, சாப்பிட முடியாத நிலைமை, உடல் எடை குறைவது, டான்சில் வீக்கத்தில் சீழ்பிடிப்பது, அடிக்கடி காதுவலி, காதில் சீழ், காது கேட்பது குறைவது, வாய்வழியாக மூச்சுவிடுவது, குறட்டை விடுவது போன்ற பிரச்னைகள் தொடரும்போதும் ஆபரேஷன் அவசியம்.நான் அதிகமாக பீட்சா, பர்கர் சாப்பிடுகிறேன்.

இதனால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதா?
– ப.கவிமலர், மதுரை – 20.
பீட்சாவிலும் பர்கரிலும் கலக்கப்படும் பலதரப்பட்ட வேதிப்பொருட்கள் இரைப்பை, உணவுக்குழாய், பெருங்குடல் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவதை ஊக்கு விப்பவை. எனவே, இவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.Post a Comment

Protected by WP Anti Spam