By 2 February 2019 0 Comments

அவசரம்… அபாயம்…கலவரப்படுத்தும் காற்று மாசு!! (மருத்துவம்)

‘‘நாம் உண்ணும் உணவின் அளவைவிட நாம் தினமும் சுவாசிக்கும் காற்றின் அளவு மிகவும் அதிகம். ஆனால், காற்று மாசு இன்று கலவரப்படுத்தும் விதத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தலைநகரான டெல்லியில் இதற்கான அறிகுறிகள் வெட்டவெளிச்சமாகத் தெரிந்துகொண்டிருக்கிறது.

வீட்டுக்குத் தொலைக்காட்சி அவசியம் என்பதைப் போல Air Purifier அங்கு அவசியமான பொருளாக மாறிவிட்டது. ‘கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குக் கூட வெளியில் செல்ல முடியவில்லை’ என்று கவலை கொள்ளும் அளவு அங்கு நிலைமை உருவாகியுள்ளது. தமிழகத்தில் அதற்கான வாய்ப்புகள் நேரடியாக இன்னும் நமக்குத் தெரியாவிட்டாலும் முகத்தில் அறையும் அளவே நிதர்சனம் உள்ளது’’ என்கிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஹரிஷ்.

காற்று மாசு, அதனால் ஏற்படும் பிரச்னைகள், அதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ‘‘காற்று மாசினை Indoor Air pollution (உட்புற காற்று மாசு), Outdoor Air pollution (வெளிப்புற காற்று மாசு) என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். நாம் பெரும்பாலும் வெளிப்புற காற்று மாசு குறித்து அக்கறை செலுத்தும் அளவிற்கு உட்புற காற்று மாசு குறித்து அக்கறை செலுத்துவதில்லை.

சில நகரங்களில் காற்று மாசின் அளவு மிக மோசமாக உள்ளது என்பதை Air Quality Index (AQI) என்கிற அளவீடு மூலம் கண்டறிந்து அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு அமைப்புகள் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

வெளிப்புற காற்று மாசுபாடுகளுக்கு தொழிற்சாலை மற்றும் மோட்டார் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக இருக்கிறது. இதுபோன்ற புகையானது அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் உண்டாகும் பனிமூட்டங்களில் கலந்து நம் பார்வைத்திறனை தடுப்பதோடு, அக்காற்றை சுவாசிக்கும் நபர்களுக்கு சுவாசம் சார்ந்த உடல்நல பிரச்னைகளையும் உண்டாக்குகின்றன.

இந்த வகை காற்றானது நம் மூச்சுக் குழாய்களை சுருங்கச் செய்து, இருமல் மற்றும் சுவாசத் தொற்றுகளை உண்டாக்குகின்றன. அதுமட்டுமல்ல பல்வேறு வகையான கழிவுப் பொருட்களை எரிக்கும்போது வெளிவரும் புகையும் வெளிப்புற காற்று மாசுக்கு காரணமாக இருக்கிறது. இந்த வகை காற்று மாசினால் பெருமளவிலான மக்கள் சுவாசம் சம்பந்தமான உடல்நல பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள்.

சிகரெட் பழக்கத்தால் காற்று மாசுபட்டு அதை அருகில் சுவாசிக்கும் நபர்களுக்கும் சுவாசம் சம்பந்தமான உடல் உபாதைகள் உண்டாகிறது. வெளிப்புற காற்று மாசைக்காட்டிலும் உட்புற காற்று மாசானது மிக அதிக அளவிலான சுவாசப் பிரச்னைகளுக்கு காரணமாக அமைகின்றன. இந்த வகை மாசு குறித்த விழிப்புணர்வு நம்மிடையே மிகவும் குறைவாகவே இருக்கிறது.

நகர்ப்புறங்களில் சரியான காற்றோட்டம் (Ventilation) மற்றும் வெளிச்சம் இல்லாத வகையில் அமைந்துள்ள பல வீடுகளை நாம் பார்த்திருப்போம். அங்கே மரம், செடிகளுடன் கூடிய நல்ல காற்றோட்டம் மற்றும் அதிகாலை சூரிய ஒளி வருகிற வகையில் இயற்கை சூழல் மிகுந்த வீடுகளை பார்ப்பது மிகவும் அரிதான நிலையாகி வருகிறது.

ஒருபுறமிருந்து வரும் காற்றானது மறுபுறம் வழியாக செல்வதற்கேற்ப ஜன்னல், கதவுகள் இல்லாத அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சிறுசிறு வீடுகளை அதிகளவில் கொண்டுள்ள குடியிருப்புகள் தற்போது நகர்ப்புறங்களில் பெருகி வருகிறது. இதனால் வீடுகளுக்கு உள்ளே செல்கிற மாசு மற்றும் நச்சு கலந்த காற்றானது வெளியே செல்ல முடியாமல் உள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் நிலை உண்டாகிறது. இது கடுமையான சுவாசம் சார்ந்த உடல்நல பிரச்னைகளுக்கு காரணமாக அமைகிறது.

வீடு, மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களின் மேற்புறத்தில் அசுத்த காற்றை வெளியேற்றுவதற்கு Exhaust Fan உதவுகிறது. அதற்காக இந்த மின் விசிறியின் பட்டைகள் வெளிப்புறத்தை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அறைக்குள் இருக்கும் காற்றின் தரத்தை ஒரு குறிப்பிட்ட அளவில் பராமரிக்க Heating Ventilation and Air Conditioning (HVAC) என்கிற அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவமனைகள், அங்குள்ள அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகளில் Cross Ventilation நடைபெற்று, காற்றின் தரத்தை பராமரிப்பதற்கு இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. அதாவது அறைக்குள் உள்ள காற்றை வெளியே தள்ளி அறைக்குள் புதிய காற்றை செலுத்துவதற்கும், வெளியிலுள்ள காற்றை இழுத்து போதுமான அளவிற்கு வெப்பமாக்கி அறைக்குள் செலுத்துவதற்கும் உதவுகிறது.

இதேபோன்று வீடுகளில் சிறிய அளவில் காற்றை சுத்தப்படுத்த பயன்படுத்துகிற ஒரு எந்திரமே Air Purifier என்று சொல்லலாம். ஏர் பியூரிஃபையர்கள் அறைக்குள் இருக்கும் காற்றை சுத்தப்படுத்தி அதன் தரத்தை மேம்படுத்திக் கொடுப்பதற்கு உதவுகிறது. வீடுகளில் காற்றை சுத்தப்படுத்த பயன்படுத்தும் இந்த தூய்மைப்படுத்திகள் (Air Purifier) அறைக்குள் இருக்குள் காற்றை இழுத்து ஃபில்டர்கள் மூலம் சுத்தம் செய்கிறது.

கடைகளில் விற்கப்படும் தூய்மைப்படுத்திகளின் விலைகளுக்கு ஏற்ப அதில் 4 முதல் 5 நிலைகளில் வடிகட்டிகள் (Filter) இருக்கும். இந்த வகை காற்று தூய்மைப்படுத்திகளில் Normal Filter, Fine Filter, Activated Carbon Filter, High Efficiency Particulate Air Filter (HEPA) என்று பல நிலைகளில் வடிகட்டிகள் உள்ளது. இந்த வடிகட்டிகளில் முதல் வடிகட்டி பெரிய அளவிலான தூசிகளையும், அடுத்தடுத்த வடிகட்டிகள் அதை விட சிறிய அளவிலான தூசிகளையும் உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இறுதியில் உள்ள HEPA Filter-ல் இறுதியாக வடிகட்டப்பட்டு அறைக்குள் சுத்தமான காற்று செலுத்தப்படுகிறது.

எனவே, இதுபோன்ற ஏர் பியூரிஃபையர்களால் கிடைக்கும் பலன்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. எனவே இதன் பயன்பாடுகளையும் நாம் பொதுமைப்படுத்தி கூற இயலாது. எனவே, சுவாசம் சார்ந்த உடல்நல பிரச்னைகளை உடையவர்கள் அதற்குரிய மருத்துவரை அணுகி அவர் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்வதே சரியானது.

சுத்தமான காற்றை சுவாசிக்கவும், சுவாசம் சம்பந்தமான நோய்களை வருமுன் காக்கவும் மட்டுமே இதுபோன்ற ஏர் பியூரிஃபையர்கள் உதவும் என்றாலும், பிரச்னையைத் தவிர்க்கும் நீண்ட கால முயற்சியாக ஆக்சிஜன் வழங்கும் மரங்களை வளர்க்க அதிக முயற்சி செய்ய வேண்டும். வீட்டுக்குள் நல்ல காற்றை தரும் Indoor Plants வளர்ப்பதும் பலன் தரும்!’’

காற்று மாசினை கட்டுப்படுத்த…

*தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை சரியான முறையில் சுத்திகரித்து, உயரமான புகைப்போக்கிகள் மூலம் வெளியேற்ற வேண்டும்.

* வீடுகளில் பயன்படுத்தும் விறகு மற்றும் எண்ணெய்க்குப் பதிலாக இயற்கை வாயு, மின்சாரம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

* வாகனப் புகைகளைக் குறைப்பதற்கு சரியான என்ஜின்களைப் பயன்படுத்த வேண்டும்.

* தொழிற்சாலை மற்றும் வாகனப் புகைகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அனைவரும் சட்ட விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

* நல்ல காற்றோட்டம் இருக்கும் வகையில் வீடுகளைக் கட்டுவதோடு முடிந்தவரையில் மரம், செடிகளை அதிகளவில் வளர்த்து, அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.

* அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் நெருக்கமான குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போர் மாடித் தோட்டம் அமைப்பது அல்லது வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய சிறிய சிறிய செடிகளை வளர்க்கலாம்.

* புகைப்பழக்கம் மற்றும் பல வகை காற்று மாசுகளால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள், அவற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வினை மக்களிடம் அதிகப்படுத்த வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam