By 3 February 2019 0 Comments

ஆரோக்கியம் என்பது நல்லொழுக்கம்!! (மருத்துவம்)

‘மது, மாது, புகை, பாக்கு போன்ற பழக்கங்களுக்கு ஒருவன் அடிமையாகி இருந்தால் அவன் ஒழுக்கமற்றவன் என்றும், இந்தப் பழக்கங்கள் இல்லாவிட்டால் ஒருவன் ஒழுக்கமானவன் என்றும் கருதுகிறோம். ஆனால், ஒழுக்கம் என்பது இதையும் தாண்டி பல விஷயங்களை உள்ளடக்கியது’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன், நல்லொழுக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

இன்று மருத்துவமனையை நாடிவரும் பல்வேறு நோயாளிகளில், எனக்கு எந்த தீய பழக்கமும் இல்லையே… ஆனால், எனக்கு இந்த நோய் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்று புலம்புவோர் பலர். நல்லொழுக்கம் என்பது ஒருவன் பழகியிருக்கும் பழக்கத்தைப் பொறுத்து அமைவதில்லை. அதையும் கடந்து பலவிஷயங்களைப் பொறுத்தே அது அமைகிறது. அந்த நல்லொழுக்கம் என்னென்ன? அவற்றால் எப்படி ஆரோக்கியம் மேம்படும் என்பதை, உங்களை அறியச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

நல்லொழுக்கங்களை குறித்து பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஆசாரக் கோவை, திருக்குறள் மற்றும் ஒளவையார் அருளிய ஆத்திச்சூடி போன்ற நூல்களில் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நமது பழம்பெரும் மருத்துவத்துறை மற்றும் நவீன மருத்துவத்துறையில் இல்லாத பல்வேறு விஷயங்களையும் மருந்துகளையும் உள்ளடக்கிய ஆயுர்வேத மருத்துவத்துறை நல்லொழுக்கம் குறித்து என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு, உறக்கம், பிரம்மச்சரியம் ஆகிய மூன்று விஷயங்கள் மிகவும் அவசியம். இந்த மூன்றும்தான் மனிதனின் ஆரோக்கியத்தை தாங்கிப் பிடிக்கக்கூடிய மூன்று தூண்கள். இதில் மூன்றாவதாக உள்ள பிரம்மச்சரியம் என்பதே நல்லொழுக்கமான வாழ்க்கையைக் குறிக்கிறது. பிரம்மச்சரியம் என்றவுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது என்றுதான் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால், இதற்குரிய முழுமையான பொருள் இறை சிந்தனையோடு, தர்ம நெறி தவறாமல் வாழ்வதே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் மறுப்பாளர்களுக்கு புலனடக்கம் என்பதே பிரம்மச்சரியம் என்று பொருள் என்று சொல்லலாம்.

‘ஸத் விருத்தம்’ என்ற நன்னடத்தையை மேற்கொண்டாலும், புலன்களை அடக்கினாலும் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கிறது ஆயுர்வேதம். அவை என்னவென்று விரிவாகப் பார்க்கலாம்.

*மலம், சிறுநீர், வாயு, ஏப்பம், இருமல், தண்ணீர் தாகம், பசி, தூக்கம், கண்ணீர், வாந்தி, விந்து, விக்கல் சிரமத்தால் ஏற்படும் மூச்சிளைப்பு, கொட்டாவி போன்ற உடல் செயல் இயக்கத்தால் ஏற்படும் இயற்கை வேகங்களை தடுத்து நிறுத்தக்கூடாது.

*மலத்துவாரங்கள், கால்கள், கைகள், இவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 5 நாட்களுக்கு ஒருமுறை நகத்தை வெட்டுவதோடு, முடிகளையும் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

*நாள்தோறும் தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். பருவ நிலைக்கு ஏற்ப ஆடைகளை அணிய வேண்டும்.

*தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

*மது, மாது, புகை பழக்கம் கூடாது.

*உழைப்புக்கு ஏற்ற உணவை அறு சுவையுடன் உண்ண வேண்டும்.

*விலங்கு, பறவைகளுக்கு தன்னால் முடிந்த அளவு உணவும் நீரும் வழங்க வேண்டும்.

*பயந்தவர்களுக்கு ஆறுதல் அளிப்பதோடு, ஏழை எளியவருக்கு உதவி செய்ய வேண்டும்.

*பெரியோர்களை உதாசீனப்படுத்தக் கூடாது.

*பிறருடைய கடுஞ்சொல்லை பொறுக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சினமடக்கி அமைதியைக் கடைபிடிப்பது சாலச்சிறந்தது.

*கோபம், பொறாமை, அதிக சிந்தனை போன்றவைகளை கட்டாயம் தடுத்து நிறுத்த வேண்டும்.

இம்சை, களவு, தகாத இடத்திற்குச் செல்லுதல், கோள் சொல்லுதல், கடுமையான பேச்சு, பொய், முன்பின் முரணாகப் பேசுதல், மனதால் பிறரைப் பகைத்தல், பிறர் செல்வத்தை களவாடும் எண்ணம், சாஸ்திரத்தை தவறாக அறிதல் ஆகிய இந்த 10 தீய செயல்களையும் உடலாலும், சொல்லாலும், எண்ணத்தாலும்செய்யக்கூடாது.

நம் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவும். இது போன்ற இன்னும் பல நல்லொழுக்கங்கள் குறித்து ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. நல்லொழுக்கத்தால் எப்படி ஆரோக்கியம் மேம்படும், நல்லொழுக்கம் இல்லை என்றால் ஆரோக்கியம் எப்படி சீர்கெடும் என்பதற்கு ஆயுர்வேதம் மிகத் தெளிவாக விளக்கம் அளிக்கிறது.

மனிதனின் மன குணங்களை ஸத்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவற்றில் ஸத்வம் என்ற குணத்தைத் தவிர மீதமுள்ள ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் இரண்டும் மன தோஷங்கள் என்று கருதப்படுகிறது. இங்கு தோஷம் என்றால் கேடு விளைவிக்கக்கூடியது என்று பொருள்.

இதில் ஸ்தவ குணம் என்பது அமைதி, அகிம்சை, துன்பத்தைப் பொறுத்து அதை இன்பமாக மாற்றும் மனோபாவம் போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். ரஜஸ் குணம் என்பது ஆசை, கோபம், பொறாமை, அதீத விழிப்புணர்வு போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். தமஸ் குணம் அஞ்ஞானம், எப்போதும் உறக்க நிலை, எந்த வேலையிலும் விருப்பமின்மை போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருக்கும்.

மேற்சொன்ன நன்னடத்தையால் ஸத்வம் என்ற குணம் மேம்படும். இந்த குணம் மேம்பட்டால் ஆரோக்கியம் மேம்படும். நல்லொழுக்கம் இல்லை என்றால் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் மேம்பட்டு, அவை சிறுகச் சிறுக உடல் செயல் இயக்கங்களை பாதிப்படையச் செய்து ஆரோக்கியத்தை கெடுத்து நோய்க்கு வழிகோலும்.

நமது உடலில் ஜீரண சக்தி பாதித்தால் உடல் உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கும். உறுப்புகளின் செயல்பாடு பாதித்தால் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படும். மேற்கண்ட மூன்றும் பாதிக்கப்பட்டால் மலம் வெளியேற்றும் செயல்பாடு பாதிக்கும். இவற்றால் ஐம்புலன்களின் செயல்பாடும் மனநிம்மதியும் கெடும். எனவே உடல்நலமும், மனநலமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை. எனவே இதில் ஒன்று பாதிக்கப்பட்டால் மற்றொன்றும் பாதிப்படையும்.

இவற்றில் நல்லொழுக்கம் என்பது மனதைச் சார்ந்தது. மேற்கண்டவற்றில் சற்று பின்னோக்கி சிந்தித்தால் நாம் ஏதேனும் ஒரு வகையில் அதாவது உடல்நலம், மனநலம் சார்ந்து ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருப்போம். அதன் காரணமாக நோய்க்கான காரணிகள் சிறிது சிறிதாக உருவாகி உடல் உறுப்புகளையும் ரத்த ஓட்டங்களையும் பாதித்து நோய்களை உண்டாக்கும்.

எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் எப்படி இந்த நோய் வந்தது என்று புலம்புவோருக்கு மேற்கண்ட கருத்துரைகளே பதில் என்றாலும் அதிக ஆசை, ஆத்திரம், கோபம் போன்றவற்றை அடக்கி அமைதி மார்க்கத்தை பின்பற்றினாலே ஆரோக்கியம் கிடைக்கும்என்பதில் எந்த ஐயமும் இல்லை.Post a Comment

Protected by WP Anti Spam