By 1 February 2019 0 Comments

கிச்சன் டைரீஸ்!!(மகளிர் பக்கம்)

டாக்டர் பேரி சியர்ஸ் ஜோன் டயட் (Zone diet) என்ற புதிய டயட் வடிவத்தை உருவாக்கியபோது, ‘செல்களில் உருவாகும் சிதைவுகளைத் தடுப்பதன் வழியாக மனித உடலில் பரிணாமம் எப்படி நிகழ்கிறதோ அதற்கு ஏற்ப இந்த டயட் வடிவமைக் கப்பட்டுள்ளது’ என்றார். கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தைக் குறைத்து ஒமேகா -3 நிறைந்த கொழுப்பு அமிலங்களை உணவில் அதிகமாகச் சேர்ப்பதன் மூலம் உடலின் இன்சுலின் சுரப்பை சீராக வைத்திருப்பதுதான் ஜோன் டயட்டின் ரகசியம். சரி இப்படி செய்யும் போது என்னாகும்?

உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்காது என்பதால் ரத்தக் குழாய்கள் ஆரோக்கியமாக இருக்கும். ரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெற்றால் முதுமை அடைவது வேகமாக நிகழாது. செல்கள் முறையாக முதிர்ச்சி அடையும். புதிதாக உருவாகும். உடல் பருமன் நீங்கும், தொப்பை குறையும், உயர் ரத்த அழுத்தம் சீராகும், சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு வரும், இதய நோய்கள் நெருங்காது.

இத்தனை நன்மைகளை இந்த ஜோன் டயட் கொண்டுவரும் என்கிறார்கள். வழக்கமாக எடுக்கும் கார்போஹைட்ரேட்டைக் குறைத்து நாற்பது சதவீதம் கார்போ, முப்பது சதவீதம் கொழுப்பு, முப்பது சதவீதம் புரதச்சத்து இதுதான் ஜோன் டயட்டின் சக்சஸ் ஃபார்முலா. காலை எழுந்த பிறகு ஒரு மணி நேரத்துக்குள்ளாக காலை உணவை உண்ண வேண்டும். ஒரு உணவுக்கும் அடுத்த உணவுக்குமான இடைவெளி நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை இருக்கலாம்.

ஸ்நாக்ஸ் அல்லது நொறுக்குத் தீனிகள் ஏதும் உண்ட பின் இரண்டு மணி நேரம் கழித்தே அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். தினசரி இரண்டு லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும். இவைதான் ஜோன் டயட்டின் அடிப்படை விதிகள். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஜோன் டயட்டைப் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், கவனம் போதிய மருத்துவப் பரிந்துரைகளின்றி இதை மேற்கொள்ள வேண்டாம். அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கும் ஏற்ற டயட் இது.

தலைவாழை இலையில் பரிமாறும் முறை

தலைவாழை இலை போட்டு பரிமாறுவதுதான் தமிழரின் விருந்தோம்பல் பண்பு. தலைவாழை என்பது வாழை இலையின் நுனிப்பகுதி முதல் சுமார் ஒன்றரை அடி வரை நீளமுள்ளது. பரிமாறும்போது வாழை இலையின் பருமனான பகுதி சாப்பிடுவர் முன் வரும்படியாகவும் இலை நுனி சாப்பிடுபவருக்கு இடது பக்கம் இருப்பதாகவும் விரித்திருக்க வேண்டும். மரத்தில் சுருண்டிருக்கும் இலை மெல்ல மெல்ல விரிவதால் ஏற்கெனவே விரிந்த இலையின் பகுதி ஸ்டார்ச்சால் பருமனாகவும் அடர் பச்சை நிறத்திலும் இருக்கும். ஸ்டார்ச்சு கிடைக்காத இலை மென்மையாக சுருண்டிருக்கும். பருமனான பகுதியில் சாதம் இட்டு சாப்பிடும்போது அந்த ஸ்டார்ச்சு சத்தும் உணவில் சேரும்.

இலையும் சீக்கிரம் கிழிந்துபோகாது. சரி தலை வாழை இலையில் என்னென்ன உணவை எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்பதைப் பார்த்துவிடுவோம். உப்பு, ஊறுகாய், சட்னிப் பொடி, கோசும்பரி, தேங்காய் சட்னி, பீன்.. பல்யா, பலாப்பழ உண்டி, சித்ரண்ணம், அப்பளம் (பப்படம்), கொரிப்பு, இட்லி, சாதம், பருப்பு, தயிர் வெங்காயம், ரசம், பச்சடி, கத்தரிக்காய் பக்கோடா, கூட்டு, பொரியல், அவியல், கத்தரிக்காய் சாம்பார், இனிப்பு, வடை, இனிப்பு தேங்காய் சட்னி, கிச்சடி, காரப்பொரியல், பாயசம், தயிர், மோர். இந்த ஒவ்வொன்றையும் வாழை இலையின் இடது மூலையிலிருந்து வலது பக்கமாக வைத்துக்கொண்டு வர வேண்டும்

செல்ஃப் லைஃப்

செல்ஃப் லைஃப் என்பது ஒரு பொருளைப் பயன்படுத்தத் தகுதியான காலம் எவ்வளவு என்பதைக் குறிப்பதாகும். இந்தக் காலம் என்பது சில பொருட்களுக்கு நுகர்வதற்கான கால எல்லையாக இருக்கலாம். சில பொருட்களுக்கு விற்பனை செய்வதற்கான கால எல்லையாகவும் இருக்கலாம். பொதுவாக, ஒரு பொருளை மார்க்கெட்டின் செல்ஃப்பில் அடுக்கிக் வைக்கத் தகுதியான கால எல்லையை இது குறிப்பதால், செல்ஃப் லைஃப் எனப்படுகிறது.

எனவே, விற்பனை செய்வதற்கான காலம் முடிவடைந்த ஒரு பொருள் நுகர்வதற்கான காலம் முடிவடைந்தது என்று பொருல் அல்ல. உணவுப்பொருட்கள், பலவகைப்பட்ட பானங்கள், காஸ்மெட்டிக்ஸ், மருந்துகள், ஊசிகள், மருத்துவப் பொருட்கள், வேதிப்பொருட்கள், ரப்பர்கள், பாட்டில்கள் போன்ற பலவகையான பொருட்களுக்கும் இப்படி செல்ஃப் லைப் உள்ளது. சிலவகைப் பொருட்களின் செல்ஃப் லைஃப் முடிந்தது என்றால் அவை பயன்படுத்தத் தகுதி இல்லாதவை என்று பொருள் இல்லை. அவற்றின் வீரியம் அல்லது பலன் சற்று குறைவாகக்கூடும்.

ஆனால், சிலவகை பொருட்களின் செல்ஃப் லைஃப் முடிந்தபிறகு அவற்றைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். எனவே, செல்ஃப் லைஃப் என்று சொன்னாலும் அதைப் பொதுவான கலைச்சொல்லாகப் பாவிக்க முடியாது. ஒவ்வொரு பொருளுக்கும் அதன் மூலக்கூறுப் பண்புக்கு ஏற்ப அழுகிப்போகும், மட்கிப்போகும், சிதைந்துபோகும் காலம் ஒன்று உண்டு. வெயில், சூடு, ஈரப்பதம், வாயுக்களின் மாறுபாடு, நுண்ணியிர்களின் பெருக்கம் மற்றும் அழிவு ஆகிய பல காரணங்களைக்கொண்டே ஒரு பொருளின் செல்ஃப் லைஃப் உருவாகிறது. என்னென்ன பொருளுக்கு எவ்வளவு செல்ஃப் லைஃப் என்று கவனியுங்கள்.

செல்ஃப் லைஃப் டேபிள்

பொருள் காலம்

அரிசி, பருப்பு, தானியங்கள் சில மாதங்கள்
எண்ணெய்கள் மூன்று மாதங்கள்
உப்பு, புளி, மிளகாய் இரண்டு வருடங்கள்
மசாலா பொருட்கள், வாசனைப் பொருட்கள் ஒரு வருடம்
காய்கறிகள், பழங்கள் (பதப்படுத்தினால்) ஒரு வாரம்
கீரை 3 நாட்கள்
முட்டை 7 நாட்கள்
பால் 1 நாள்
தயிர், மோர் 2 நாள்

உணவு விதி 14

உறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் இரவுணவை முடித்துவிடுங்கள். இரவில் யோகியைப் போல மிகக் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பார்கள். இரவு என்பது நம் உள்ளுறுப்புகள் அனைத்தும் ஓய்வில் இருக்க வேண்டிய நேரம். வயிறுமுட்ட உண்டுவிட்டு; உண்டதும் படுத்தால் நம் மூளை தன் மொத்த ஆற்றலையும் அதைச் செரிப்பதற்கே செலவிடும். இதனால், உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்காமல் செல்கள் தளர்வடையும். செரிமானப் பிரச்சனைகள் வந்து சேரும். எனவே, உறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பேயே இரவு உணவை முடித்துவிடுவது நல்லது. குறைந்தபட்சம் அரை மணி நேரத்துக்கு முன்பாவது முடித்துவிடுங்கள்.

எக்ஸ்பர்ட் விசிட்

இந்தியாவின் புகழ்பெற்ற டயட்டீஷியன் ஸ்ரேயாவிடம் எடை குறைப்புக்கு ஏற்ற டயட் டிப்ஸ் பற்றி கேட்டோம். ‘சிறிய அளவில் உணவில் மாற்றத்தை ஏற்படுத்தினாலே அதிகப் பலன் கொடுக்கக்கூடிய வழிமுறைகள் சில உள்ளன. உண்மையில் அளவுக்கு அதிகமாக டயட் முறையை மாற்றும்போது அது நாம் நினைத்ததற்கு எதிரான பலன்களைக் கொடுத்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஓட்ஸ் சாப்பிடுவது வெயிட் லாஸுக்கு மிக்க நல்ல பலன் கொடுக்கும்.

ஏனெனில் இது ஆரோக்கியமான தானியங்களில் முதன்மையானது. முழுமையான ஒரு தானியத்தில் அனைத்துவிதமான முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கும். குறிப்பாக, வைட்டமின்கள், மினரல்கள், நார்சத்துகள் அதிகம் இருக்கும் ஓட்ஸில் இவை சிறப்பாக உள்ளன. தயிர் உடலில் உள்ள மைக்ரோ ஆர்கானிசம்களை தூண்டும். செரிமானத்துக்கு அந்த நுண்ணியிர்கள் மிக அவசியமானவை. இலவங்கப்பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுவதால் அவற்றை தாராளமாக உணவில் சேர்க்கலாம்.

ஃபிளாக்ஸ் விதைகளை நன்றாக வறுத்து அரைத்து வைத்துக்கொண்டு பயன்படுத்துவது நல்லது. நாள்தோறும் ஆப்பிள் ஒன்றைச் சேர்ப்பது நல்ல கார்போஹைட்ரேட்டையும் முக்கியமான ஊட்டச்சத்துகளையும் உடலில் சேர்க்கும். இரண்டு மேசைக்கரண்டி ஓட்ஸை ஒரு பவுலில் கொட்டி, அதனுடன் தயிர் சேர்த்துப் பிசைந்து, அதனுடன் லவங்கப் பொடி சேர்த்து, உலர்ந்த ஃபிளாக்ஸ் விதைகள் ஒரு ஸ்பூன் சேர்த்து இரவு முழுதும் ஃபிரிட்ஜில் வைத்திருந்து நறுக்கப்பட்ட ஆப்பிள் துண்டுடன் இதனைச் சாப்பிட்டால் எடைக் குறைப்புக்கான பெஸ்ட் உணவாக இது இருக்கும்.

மஞ்சள் தூள் கலப்படம்

மஞ்சள் தூளில் நிறத்தை மேம்படுத்துவதற்காக ஸ்டார்ச் பவுடர் மற்றும் மெட்டானில் எல்லோ எனும் ரசாயனம் கலக்கப்படுகின்றன. இது செரிமானத்தை பாதிக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப் பொருளின் பலன் உடலுக்குக் கிடைக்காமல் செய்யும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை, 20 மி.லி இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் இரண்டு துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்தில் நீர் மாறினால், அதில் மெட்டானில் எல்லோ கலந்திருப்பதை உறுதி செய்யலாம்.Post a Comment

Protected by WP Anti Spam