By 15 February 2019 0 Comments

‘சிங்கள – பௌத்த’ தேசம்!! (கட்டுரை)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 178)

‘சிங்கள-பௌத்த’ தேசத்தின் பிறப்பு

இது ‘சிங்கள-பௌத்த’ நாடு (அல்லது தேசம்) என்ற பேரினவாதக் கருத்தை, இலங்கையில் கேட்பது புதுமையானதொரு விடயமல்ல.

ஆனால் அந்தக் கருத்தை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் நியாயங்கள்தான் கேள்விக்குரியவை ஆகின்றன. இது, ‘சிங்கள-பௌத்த’ நாடு என்ற கற்பிதத்துக்கான நியாயம், புனைகதை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப்படுகிறது.

ஏறத்தாழ 2,000 வருடங்களுக்கு மேற்பட்ட, ‘சிங்கள-பௌத்த’ நாடு இது என்ற கற்பிதம், இந்தப் புனைகதை வரலாற்றிலிருந்தே பிறக்கிறது. ஆனால், இந்த இணைந்த ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்துக்கு, 2000 வருடத்துக்கு மேற்பட்ட கால வரலாறு கிடையாது என்பதுதான், கே.எம். டி சில்வா போன்ற வரலாற்றாய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

புரட்டஸ்தாந்து பௌத்தம்

இன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ அடையாளம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அநகாரிக தர்மபாலவுடன் எழுந்த ‘புரட்டஸ்தாந்து – பௌத்த’ எழுச்சியோடு உருவாக்கப்பட்ட அடையாளம் என்பதுதான், கணநாத் ஒபேசேகர, ரிச்சட் கொம்ப்றிச், ஸ்ரான்லி ஜே தம்பையா உள்ளிட்ட மானுடவியலாளர்களின் கருத்து.

ஆகவே, வரலாற்றுக் காலத்தில் இருந்த மக்கள் கூட்டங்களின் அடையாளங்களுக்கும் இன்றிருக்கும் ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்துக்கும் நேரடித் தொடர்புகள் இல்லை. மேலும், அநகாரிக தர்மபாலவின் காலத்துக்கு முன்பிருந்த மக்கள் கூட்ட அடையாளங்கள், ஐரோப்பியப் பாணியிலான இனம், தேசம் ஆகிய அடையாளங்களுக்கொப்பான அடையாளங்களாக அமையவில்லை என்று, ஆய்வுக்கட்டுரையொன்றில் ஜோன் டி றொஜேர்ஸ், தௌிவாகக் குறிப்பிடுகிறார்.

ஆகவே, இன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ தேசிய அடையாளமானது, அநகாரிக தர்மபாலவின் காலத்துக்குப் பின்னர் உருவான, ஐரோப்பிய பாணியிலான ‘இன-மத தேசிய’ அடையாளமாகும். ஒருபுறத்தில், பிரித்தானிய கொலனித்துவ இலங்கையின் சுதேசிய உயர் குழாம் தலைவர்கள், பிரெஞ்சுப் புரட்சியில் பிறந்த ‘தேசிய-அரசு’ என்ற மேற்கத்தையே கட்டமைப்பையொத்த, ‘சிலோனிஸ்’ என்ற தேசத்தையும் தேசிய-அரசையும் கட்டமைக்க எத்தனித்துக்கொண்டிருந்த வேளை, மறுபுறத்தில் அநகாரிக தர்மபாலவும் அவரது வழி ஒழுகியவர்களும் ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசக் கட்டமைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

வித்யாலங்கார பிரிவேன

இதில், அநகாரிக தர்மபாலவைத் தொடர்ந்து, அவர் பற்றவைத்த தீப்பந்தம், வித்யாலங்கார பிரிவேனவைச் சேர்ந்த பௌத்த துறவிகளால் முன்கொண்டு செல்லப்பட்டது. வித்யாலங்கார பிரிவேனவைப் பொறுத்தவரை, அது பௌத்த சித்தாந்தங்களைப் பின்பற்றுவதைவிட, பௌத்த மதத்தைப் பாதுகாப்பதிலும் பரப்புரை செய்வதிலும் அக்கறைகொண்டதாக இருந்தது என, இலங்கையில் பௌத்தம் பற்றிய தனது ஆய்வு நூலொன்றில், எச்.எல்.செனவிரட்ன குறிப்பிடுகிறார்.

அநகாரிக தர்மபாலவின் ‘புரட்டஸ்தாந்து-பௌத்தத்தை’ அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றவர்களுள் முக்கியமானவர் வித்யாலங்கார பிரிவேனவைச் சேர்ந்த பௌத்த பிக்குவான வல்பொல ராஹூல தேரர். 19ஆம் நூற்றாண்டில் அநகாரிக தர்மபால ஆரம்பித்த வைத்த ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசியத்தை, 20ஆம் நூற்றாண்டில் வளர்த்தெடுத்தவர்களுள் வல்பொல ராஹூல மிக முக்கியமானவராவார்.

அவரோடு, சிவில் சமூகத்தைச் சேர்ந்த எல்.எச்.மெத்தானந்த, ஜி.பி.மலலசேகர ஆகிய இலங்கை பௌத்த கொங்கிரஸைச் சார்ந்தவர்களின் செயற்பாடுகளும் “சிங்கள-பௌத்த” “இன-மத” தேசத்தைக் கட்டியெழுப்பியதில் மிகவும் முக்கியமானவை.

அநகாரிக தர்மபால முதல் வள்பொல ராஹூல, எல்.எச்.மெத்தானந்த, ஜி.பி.மலலசேகர என, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி ஆகிய காலகட்டங்களில் ‘சிங்கள-பௌத்த’ தேசியம் பொதுமக்களிடையே விதைக்கப்படத் தொடங்கியிருந்தாலும், அதற்கான அரசியல் முக்கியத்துவம் பெரிதும் கிடைக்கவில்லை.

சாதிவாரியாகவே கட்டமைக்கப்பட்டிருந்த இலங்கைச் சமூகங்கள்

இதற்கு, அன்றைய மக்கள் முழுமையாக இந்த ஐரோப்பிய பாணியிலான ‘இன-மத’ தேசிய அடையாளத்துக்கு உட்பட்டவர்களாக இருக்கவில்லை என்பதும், இந்த ‘இன-மத’ தேசிய அடையாளங்களின் அடிப்படையில், சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருக்கவில்லை என்பதும், மாறாக இலங்கைச் சமூகங்களானவை, பெருமளவில் சாதிவாரியாகவே கட்டமைக்கப்பட்டிருந்தன என்பதும் மிக முக்கியமான காரணங்களாகும்.

இதனால்தான், இலங்கை மக்கள் பற்றிய தனது அவதானத்தைப் பதிவு செய்த, சேர் ஐவர் ஜென்னிங்ஸ், ‘சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான்’ என்று, தனது நூலில் குறிப்பிடுகிறார். மேலும், அன்றைய அரசியல் தலைமைகள் பலரும், மதத்தை அரசியலிலிருந்து விலத்தி வைக்கும் திண்ணத்திலிருந்தமையும் ‘இன-மத’ தேசியம் உடனடியாகத் தலையெடுக்காமைக்கு, இன்னொரு குறிப்பிடத்தக்க காரணமாக இருக்கலாம்.

அரசையும் மதத்தையும் வேறுபடுத்தும் புரட்சியில், உலகம் இரத்த வௌ்ளத்தில் ஆழ்ந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியின் முக்கிய அடைவாக, பொதுவாக நாம் ஜனநாயகத்தைப் பார்க்கிறோம். ஆனால், பிரெஞ்சுப் புரட்சியின் மிக முக்கியமான அடைவுகளில் ஒன்று, அரசையும் மதத்தையும் வேறுபடுத்தியமையாகும். வரலாற்றில் இருண்ட கண்டமாக அறியப்பட்ட ஐரோப்பாவின் எழுச்சியானது, ஐரோப்பிய அறிவொளிக்காலத்துடன் ஆரம்பமாகிறது.

ஐரோப்பிய அறிவொளிக்காலத்தின் முக்கிய அடைவுகளில் ஒன்றுதான், பிரெஞ்சுப் புரட்சியும் அதன் வாயிலாக, மதத்தை அரசு என்ற கட்டமைப்பிலிருந்து பிரித்ததுமாகும். கொலனித்துவ இலங்கையில், ஐரோப்பியக் கல்வி பெற்றிருந்த உயர்குழாம் தலைவர்களிடையே, இந்த ஐரோப்பியத் தாக்கத்தின் விளைவாக, மதச்சார்பற்ற சிவில் கட்டமைப்பிலான ‘தேசிய-அரசை’ ஸ்தாபிக்கும் எண்ணமே, முக்கியத்துவம் வாய்ந்திருக்கலாம்.

இதற்கு உதாரணமாக, இலங்கையின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்ற சேர் ஜோன் கொத்தலாவல சொன்னதாக, பிரட்மன் வீரக்கோன், தனது நூலொன்றில் பதிவுசெய்யும் விடயத்தைக் கருதலாம். பௌத்த துறவிகள் அரசியலில், குறிப்பாக வீதிக்கிறங்கி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதைச் சினத்துடன் கண்டித்த சேர் ஜோன் கொத்தலாவல, “பௌத்த ஒழுக்கங்களை மீறி, எந்தத் துறவியாவது அரசியலில் ஈடுபட்டால், அவர்களது தலையில் தார் அடிப்பேன்” என்று கூறியிருந்ததாக பிரட்மன் வீரக்கோன் பதிவுசெய்கிறார்.

மதத்தை அரசியலிலிருந்து தள்ளிவைத்த அன்றைய தலைவர்கள்
இது அன்றைய தலைவர்களின் பெரும்பாலானவர்கள், மதத்தை அரசியலிலிருந்து தள்ளிவைக்கவே விரும்பியருந்ததை எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், மதமும் அரசியலும் கலக்கும் போது, அதில் பிறக்கக்கூடிய ஆபத்தை அவர்கள் உணர்ந்திருக்கலாம்.

மறுபுறத்தில், முக்கியத்துவம் பெற்றிருந்த இடதுசாரித் தலைவர்களும் மதச்சார்பற்றவர்களாகவே இருந்தார்கள். 1920களில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றுத் திரும்பியிருந்த பண்டாரநாயக்க கூட, சமஷ்டி அடிப்படையிலான ‘தேசிய-அரசை’ ஸ்தாபிக்கும் முன்மொழிவுகளை முன்வைத்திருந்தார்.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் கொலனித்துவ இலங்கையின் சுதேசிய உயர்குழாம், அரசியலில் மதத்தின் பங்கு, குறிப்பாக, ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசியவாதத்தின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி முதல், அரசியல் ரீதியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த பௌத்த துறவிகள் இருந்தாலும், அவர்களால் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தைப் பெறமுடியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், பொது மக்களிடையே அவர்களது செல்வாக்கு மெதுவாக அதிகரித்து வந்தது.

தேசங்கள் என்பது, கட்டமைக்கப்படுவதுதான். ஒற்றைத் தேசமாக பிரான்ஸ் தேசம் கட்டியெழுப்பப்படக் கூடியதாக இருந்ததால், நிச்சயமாக அதுபோலவே, ‘இன-மத’ தேசங்களும் கட்டியெழுப்பப்பட முடியும். குறிப்பாக, அதற்கான அரசியல் தேவை ஏற்படும் போது, அது இன்னும் வீரியமாகக் கட்டியெழுப்பப்படும்.

1928இல் பிரித்தானியாவில் சகலருக்குமான வாக்குரிமை (universal franchise) அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை, மக்கள் தொகையில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே அனுபவித்து வந்த வரப்பிரசாதமாக இருந்த வாக்குரிமை, 1928இல் அனைத்து பிரித்தானியர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதைத் தொடந்து, இலங்கையில் 1931இல் டொனமூர் அரசமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது, சகலருக்குமான வாக்குரிமை முதன்முறையாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சகலருக்குமான வாக்குரிமை அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பில், இடதுசாரித் தலைவர்கள் தவிர்ந்த இலங்கையின் உயர்குழாம் தலைவர்கள் பலரும், தமது அதிருப்தியை, டொனமூர் குழுவிடம் பதிவு செய்திருந்தார்கள் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

அனைவருக்குமான வாக்குரிமை, பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வெறும் மூன்று ஆண்டுகளிலேயே, இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டமையானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயமாகும். சகலருக்குமான வாக்குரிமை என்பது இலங்கையின் ஜனநாயக வளர்ச்சிப்பாதையின் முக்கிய மைல்கல் என்பதுடன், இலங்கை அரசியல் போக்கை மாற்றிப்போட்டதொரு நடவடிக்கை என்று சொன்னால் அது மிகையல்ல.

அனைவருக்கும் வாக்குரிமை

அனைவருக்கும் வாக்குரிமை என்பது, தேர்தல் ஜனநாயக அரசியலையும் அதன் அமைப்பையும் போக்கையும் மாற்றியது. வாக்காளர்களின் எண்ணிக்கை பல மடங்குகள் அதிகரித்தது; அதன்படி வாக்குவங்கி அரசியலும் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. இந்த மாற்றம்தான, இலங்கையின் ‘இன-மத’ தேசியம் அரசியல் மய்யவோட்டத்தில் இடம்பிடிக்க அடிப்படையாக அமைந்தது என்பதை மறுக்கமுடியாது.

‘சிலோனிஸ்’ என்ற சிவில் தேசிய அடையாளமென்பது, சுதேசிய உயர்குழாம் தலைவர்களின் நிகழ்ச்சி நிரலாகவே இருந்ததேயன்றி, அது இந்தத் தீவின் அடித்தட்டு மக்களிடையே, பலமாகக் கொண்டு போய்ச் சேர்க்கப்படவில்லை.

அதாவது, இது சமூகம், அதிகார மட்டத்தில், மேலிருந்து கீழான போக்கைக் கொண்டிருந்தது. மறுபுறத்தில், அரசியல் ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த பௌத்த துறவிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசியவாதமானது சமூக மட்டத்தின் அடித்தளத்திலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

அனைத்து மக்களுக்குமான வாக்குரிமை வழங்கப்பட்டபோது, அது இந்தத் தீவின் அதிகாரச் சமநிலையை மாற்றியமைத்தது. பிரித்தானியர்களின் இந்தச் செயற்பாடுகளுக்குள், அவர்களது பிரித்தாளும் தந்திரம் இருந்தது என்பது, பொதுவாக முன்வைக்கப்படும் கருத்தாகும்.

எது எவ்வாறாயினும், இந்த அதிகாரப் பல சமநிலை மாற்றத்தில், தங்களைத் தக்கவைத்துக் கொள்ள உயர் குழாம் தலைவர்கள், தங்களது உயர் பீடங்களிலிருந்து இறங்கி வர நிர்ப்பந்திக்கப்பட்டனர். அது அவர்களது அரசியல் போக்கையும் மாற்றியமைப்பதாகவே அமைந்தது.

இதைத் தொடர்ந்துதான் சுதேசிய மொழிக்கு முன்னுரிமை (டொனமூர் அரசுச் சபையில், சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கும் முன்மொழிவை, ஜே.ஆர்.ஜெயவர்தன முன்வைத்தமை), இலவசக் கல்வி, சமூக நலத்திட்டங்கள் என்ற பாணியிலான அரசியல் முன்னிலை பெறத் தொடங்கியது. ஐரோப்பிய ஆடைகளில் இருந்த தலைவர்கள் சிலர், சுதேசிய ஆடைகளுக்கு மாறினார்கள்.

பண்டாரநாயக்கவின் ஆட்சியைப் பிடிக்கும் கனவு

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் சுதந்திர (டொமினியன்) இலங்கையின் பிரதான கட்சியான ஐ.தே.கட்சியிலிருந்து பிரிந்து, மாற்றுக்கட்சியை ஆரம்பித்து, ஆட்சியைப் பிடிக்கும் கனவுடன் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, தனது புதிய பயணத்தைத் தொடங்கினார்.

இது 1920களில் சமஷ்டி கோரிய பண்டாரநாயக்கவிலிருந்து பெரிதும் வேறுபட்ட பண்டாரநாயக்க தோற்றம்பெற்றார். ஆட்சிபீடமேறப் பெரும்பான்மையினரின் வாக்குகள் தேவை. இலங்கையில் எண்ணிக்கை ரீதியான பெரும்பான்மையினர் பௌத்த மதத்தைச் சார்ந்த சிங்களவர்களாக இருந்தார்கள்.

அநகாரிக தர்மபாலவில் தொடங்கிய ‘சிங்கள-பௌத்த’ தேசிய எழுச்சிக்கு அதுவரை கிடைக்காத அரசியல் முக்கியத்துவத்தை, முதன்முறையாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க வழங்கினார். “பஞ்சமாபலவேகய” (ஐம்பெருஞ்சக்திகள்) ஊடாக பௌத்த பிக்குகளை நேரடியாக அரசியல் களத்துக்குள் நுழைத்தார்.

‘சிங்கள-பௌத்த’ தேசியம், இலங்கையின் அரசியலின் முன்னரங்குக்குக் கொண்டுவரப்பட்டது. பண்டாரநாயக்கவின் வெற்றி, ‘சிங்கள-பௌத்த’ தேசியத்தின் வெற்றியானது. அத்தோடு, ‘சிலோனிஸ்’ என்ற சிவில் தேசத்தைக் கட்டியெழுப்பும் கனவு கரைந்துபோனது.Post a Comment

Protected by WP Anti Spam