சிரியாவில் இஸ்‌ரேலின் மூலோபாயத் தூரநோக்கு!! (கட்டுரை)

Read Time:11 Minute, 4 Second

இஸ்‌ரேலின் அண்மைய சர்வதேச அரசியல், மூலோபாயக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பல நாடுகளின் அரசியல் நகர்வுகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனினும், சீனாவின் பொருளாதாரப் போட்டிக்கு அப்பால், இன்றைய இஸ்‌ரேலின் மூலோபாய கொள்கையில் செல்வாக்குச் செலுத்துகின்ற மிகப்பெரிய விடயம், சிரியாவின் அரசியல்களம் என்பது வெளிப்படையான ஒன்றாகும். குறிப்பாக, சிரியாவில் இஸ்‌ரேலுக்கான பிரச்சினை ரஷ்யா என்ற போதிலும், அதைத் தாண்டி, உண்மையில் சிரியாவின் அரசியல் நிரலில் இஸ்‌ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவல்ல நாடு ஈரான் என்பதை, இஸ்‌ரேல் வெகுவாகவே புரிந்துகொண்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டுப் போரின் பிற்பட்ட காலத்தில், குறிப்பாக இஸ்‌ரேல், கோலான் ஹைட்ஸ் பிராந்தியத்தில் ஈரான், ஹிஸ்புல்லா ஆகியவை இணைந்து, ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பின் கீழ், இயங்கமுடியும். இது, சிரியாவின் உள்நாட்டுக் கட்டமைப்பில் ஈரான் நிலையடைவதற்குக் காரணமாக அமையும் என்பதே, இஸ்‌ரேலின் அச்சமாகும்.

இதன் காரணமாகவே, ரஷ்யா தலைமையிலான கூட்டணி, சிரியாவில் ஈரானுக்கு ஆதரவாகச் செயற்படுவதை, இஸ்‌ரேலிய அரசாங்கம் விரும்பவில்லை. மாறாக, இஸ்‌ரேலின் கணக்குப்படி, ஈரானிய, ஷியா படைகள் சிரியாவை விட்டு வெளியேறுதலே, சிரியாவின் பிராந்தியத்தில் இஸ்‌ரேல் தனக்கு வேண்டிய அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்த முடியும் எனவும், சிரியா ஒட்டுமொத்தமாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது, சிரியாவைப் பலவீனமடையச் செய்யும் என கருத்துவதாலேயே, சிரியப் பிராந்தியத்தில் ஐ.அமெரிக்காவுடன் இணைந்த வரையறுக்கப்பட்ட இராணுவ தாக்குதலொன்றை ஈரான் தலைமையிலான படையணியின் மீது மேற்கொள்ளுதல், அதன்போது ரஷ்யா அவ்விராணுவ நடவடிக்கையில் தலையிடாது இருத்தல், இஸ்‌ரேல், ரஷ்யா இரண்டுக்குமே சிரியாவில் மூலோபாய வெற்றியொன்றைப் பெற்றுக்கொள்ளலாம் என இஸ்‌ரேல் கருதுகின்றது. இதன் அடிப்படையிலேயே, அண்மையில் இஸ்‌ரேல் அரசாங்கம், ரஷ்ய பாதுகாப்புத் துறையுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தமை கவனிக்கத்தக்கது.

எவ்வாறாயினும், குறித்த இராணுவ நடவடிக்கைக்கு, இப்போதுள்ள நிலைமைகளில் ஐ.அமெரிக்கா ஒத்துக்கொள்ளும் என முற்றாகவே கருதமுடியாது. ஒரு பக்கத்தில், இந்நிலைமைக்கு வித்திடுவதாகவே சிரிய பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தனது துருப்புகளை திருப்பிப்பெற முயல்வது – நேரடியாக குறித்த இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கவில்லை என்பதைக் காட்டுமுகமாக அமையும். அத்துடன் அந்நிலை, ரஷ்யாவுக்குத் தனது இராணுவத்தை ஈரானுக்கு சார்பாக, சிரியாவின் பிராந்தியத்தில் இறக்கும் நிலையிலிருந்து ரஷ்யாவை பின்னோக்கிக் கொண்டுவரும். மேலும், ஐ.அமெரிக்கா தனது துருப்புகளைச் சிரியாவில் இருந்து திரும்பப்பெறுவது, ரஷ்யாவுக்கு மூலோபாய நன்மையொன்றை ஐ.அமெரிக்கா விட்டுக்கொடுப்பதற்குச் சமமாகும் என்ற நிலையில், ரஷ்யா, இஸ்‌ரேலின் நகர்வுக்கு இராணுவ மட்டத்தில் எதிர்ப்பை வெளியிடாது என, இஸ்‌ரேல் கருதுகின்றது. எது எவ்வாறாயினும், இராணுவ நடவடிக்கையொன்றை இஸ்‌ரேல் மேற்கொள்ளுமாயின், குறிப்பாக, சிரியா போன்ற ஒரு சர்வதேச மூலோபாய சிக்கலான நகர்வில், ஐ.அமெரிக்கா நிச்சயமாகத் தனது பங்கைத் தொடர்ச்சியாக (மறைமுகவாகவேனும்) வைத்திருக்கும் என்பதும் வெளிப்படையானதாகும்.

மறுபுறத்தில், ஐ.அமெரிக்காவும் இஸ்‌ரேலும், சிரியாவின் அசாட் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து, சிரியாவில் ஒரு போதும் முன்னிருந்ததைப் போன்று கலவரமான ஒரு நிலையைத் தோற்றுவிக்க முற்படப்போவதில்லை என்பது, ரஷ்யாவுக்கு மிகவுமே தெரிந்த ஒரு விடயமாகும். குறிப்பாக, அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாயின், அது தேவையில்லாமல் மத்திய கிழக்கை மீண்டுமொருமுறை மூலோபாய யுத்தகளமாக்கும் என்பதைத் தாண்டி, அது ரஷ்யா, ஈரான் ஆகியன இணைந்து செயற்படவே வழிவகுக்கும் என்பதும், இரு நாடுகளுக்கும் மிகவும் தெரிந்த விடயமாகும். ஆயினும், ரஷ்யாவின் பிரதான நோக்கு, ஈரானுடன் இணங்கிச்செல்வது அல்ல. மாறாக, சிரியாவில் நிலையான தன்மையைப் பேணுதலூடாக, மத்திய கிழக்கில் பிராந்திய வல்லரசரொன்றாக உருப்பெறல் ஆகும். இது, ஐ.அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்குப் போட்டியாக அமையும். எனினும், ரஷ்யா, ஐ.அமெரிக்கா இரு நாடுகளும், தம்மை வெறுமனே மத்திய கிழக்கில் ஒன்றுக்கொன்று பணயக் கைதிகளாக வைக்க முயலாது. மாறாக, பிராந்தியத்தில் நிழல் யுத்தமொன்றை நடாத்தவே அதிகபட்சம் தலைப்படும். நிழல் யுத்தம் என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறான ஒரு போட்டிநிலை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்காது என்பதுடன், அது வெறுமனே பிராந்திய சமநிலையைக் குலைக்கும் செயற்பாடாக அமையும் என்பதும், இரு நாடுகளும் அறிந்த ஒன்றாகும். இந்நிலையில், ஈரானுக்குத் தொடர்ச்சியாக சிரியாவில் நிலைகொண்டிருப்பதற்கு ரஷ்யா உதவேண்டிய அவசியம், ரஷ்யாவுக்கு இல்லை. மாறாக, தேவையில்லாமல் இஸ்‌ரேலைப் பகைக்கவும் தேவை இல்லை. ஐ.அமெரிக்கத் துருப்புகள் சிரியாவில் இருந்து வெளியேறுதல், இஸ்‌ரேலுக்கே முதல் இழப்பு, எனினும், அக்கணக்கிடப்பட்ட இழப்பு, ரஷ்யாவின் நம்பிக்கைக்கான பரிசே என்பதை ரஷ்யா, அமெரிக்கா, இஸ்‌ரேல் ஆகியன உணர்ந்துள்ளது.

இச்சமன்பாட்டின் மறுபக்கமே, ஆப்கானிஸ்தானில் ஐ.அமெரிக்கா இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு பகுதியைத் தன்னகத்தே வைத்துள்ளமை பார்க்கப்படவேண்டியதாகும். இது, ஆப்கானில் ஐ.அமெரிக்காவின் நிலைக்குச் சமனாக சிரியாவில் ரஷ்யா நிலைகொள்ளுதலை ஐ.அமெரிக்கா, இஸ்‌ரேல் ஏற்றுக்கொள்ளல், அதன் பிரகாரம் ஈரானைப் பிராந்திய வல்லரசாக மாறுவதில் இருந்து இஸ்‌ரேல் தடுத்தலை, ரஷ்யா கண்டுகொள்ளாமை என்பன அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஏற்பாடாகின்றன.

ஐ.அமெரிக்காவுக்கு, குறித்த பிராந்தியத்தில் ஏற்பட்ட அண்மைய மிகப்பெரிய வெற்றி, குர்திஷ் அரசாங்கம் ஒன்றை ஈராக்கில் நிறுவியமை ஆகும். ஈராக்கிலிருந்து ஐ.அமெரிக்கா பின்வாங்கியதும், குர்திஷ் அரசாங்கம், சிரிய அரசாங்கத்துக்குச் சார்பாக மாறியமை, குறித்த பிராந்தியத்தில் ஐ.அமெரிக்காவுக்கு நெருக்கடியைக் கொடுத்தாலும், குர்தக்‌ஷ் அரசாங்கம் ஒரு போதும் ஐ.அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் செல்லாது என்பது, ஐ.அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும். மறுபுறத்தில், குர்திஷ் அரசாங்கத்தைத் துருக்கியின் நேரடியான எதிர்ப்புக்கு மத்தியிலும் அமெரிக்கா ஆதரிப்பது (ரஷ்யாவும் ஆதரிக்கிறது), குறித்த பிராந்தியத்தில் ஈரானை செல்வாக்குச் செலுத்துவதிலிருந்து செயலிழக்கச்செய்யவே ஆகும். மறுபுறத்தில், ஐ.அமெரிக்கா, இஸ்‌ரேல் ஆகியவை, தமது பிராந்தியக் கட்டமைப்பை வலிமைபெறச் செய்ய, பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாட்டுக்கு மூலோபாய உதவியைச் செய்யவேண்டிய தேவைக்கு தள்ளப்படுகின்றன: அதாவது, சவூதிக்குச் சார்பான நிலையை மேற்கொள்ளல்; ஈரானைப் பிராந்தியத்திலிருந்து தனிமைப்படுத்தல்.

எது எவ்வாறாயினும், இஸ்‌ரேலின் குறித்த தூரநோக்கு, அத்துணைதூரம் செயல்படுத்தக்கூடிய ஒன்றா, அல்லது அதற்கு மாற்றீடாக ஈரானின் நடவடிக்கை எவ்வாறாக அமையும் என்பதே, இப்போது கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலியோ சொட்டு மருந்து தினம் எப்போது?! (மருத்துவம்)
Next post காமம் என்பது என்ன?(அவ்வப்போது கிளாமர்)