By 2 February 2019 0 Comments

உயிரியல் ஆயுத பரிசோதனைகள்!! (கட்டுரை)

ரஷ்ய எல்லைகளில், உயிரியல் ஆயுத பரிசோதனைகள் நடத்த அமெரிக்கர்களுக்கு அனுமதிக்கமுடியாது என்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சின் ஆயுதக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளரான விளாடிமிர் யெர்மகோவ், அண்மையில் (25), ஊடகங்களுக்கு வெளிப்படையாகவே தெரிவித்தார்.

குறித்த அறிவிப்பானது, ஜோர்ஜிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் இகோர் ஜியோர்காடால், அமெரிக்கரால் நடத்தப்பட்ட உயிரியல் ஆயுதச் சோதனைகள் குறித்து வெளியிட்டிருந்த அறிக்கைக்குப் பின்னராக ரஷ்யாவால் எச்சரிக்கை வழங்கும் வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மொஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் இகோர் உரையாற்றியபோதே, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால், மறைமுகமாக ரஷ்ய எல்லைப்பகுதியில் குறித்த உயிரியல் ஆயுத ஆய்வு தொடர்பில், ரிச்சர்ட் லுகர் ஆய்வகத்தின் அனுசரணையுடன் சோதனைகள் நடத்தப்படுவதாகவும், குறித்த ஆய்வுகள் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தும் ஆவணங்களைத் தான் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். குறித்த ஆய்வானது, உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கவும், அதன் மூலமாக யுத்த காலங்களில் மிகப்பெரிய அழிவுகளை எந்தவிதமானத் தடயங்களும் இன்றி மேற்கொள்ளவுமே, குறித்த ஆய்வுகளை ஐ.அமெரிக்கா மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்த்திருந்தார்.

ரிச்சர்ட் லுகார் ஆய்வகமானது, ஐ.அமெரிக்க அரச திட்டத்தின் ஒரு பகுதியாக, 2011இல் திறக்கப்பட்டது. குறித்த இவ்வாய்வகம், ஐ.அமெரிக்க இராணுவ மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு, ஜோர்ஜியாவுடன் இணைந்து (USAMRU-G), உயிரியலாளர்களால் செயற்படுத்தப்படும் இராணுவ வேலைத்திட்டத்தின் உதவியுடன், இந்த மய்யம் வெளிப்படையாகவே உயிரியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்கின்றது என்ற போதிலும், குறித்த ஆய்வுகள், உயிரியல் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான ஆய்வுகளாகவே உள்ளன என, ரஷ்யா ஊடகங்களும் அரச சார்பான ஸ்தாபனங்களும், தொடர்ச்சியாகவே குற்றஞ்சாட்டி வருகின்றன.

குறித்த ஆய்வகமானது, ஐ.அமெரிக்க காங்கிரஸுக்கு எவ்விதமாகவும் பொறுப்புக் கூறத் தேவையில்லாதது என்பதுடன், குறித்த ஆய்வகத்துக்கு ஐ.அமெரிக்க பாதுகாப்பு அமைச்சால், அதியுச்சப் பாதுகாப்புச் சான்றிதழ்களை பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது, மேலதிகமாக குறித்த ஆய்வகம் தொடர்பில் சந்தேகங்களை ஏற்படுத்தியதுடன், லுகெர் ஆய்வகம் பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்த ஓர் அறிக்கையில் “பக்டீரியா, மனித குலத்தை வேரோடு தாக்கக்கூடிய வைரஸ் அபிவிருத்தி” என்பன குறித்த ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படுவதுடன், இந்நிகழ்வானது, இராசயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தல், உற்பத்தி செய்தல், கையகப்படுத்தல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை ஐ.அமெரிக்கா மீறும் செயல் என, நேரடியாகவே குற்றஞ்சாட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த அறிக்கை, குறித்த நிறுவனமானது, ஐ.அமெரிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட்டின் பெயரில் உள்ளது என்பதுடன், குறித்த ஆய்வகம் பரிசோதனை, முயற்சியில் டிசெம்பர் 2015இல், சுமார் 49 ஜோர்ஜிய மக்களை உயிரிழக்கச் செய்ததெனவும், 2015க்குப் பின்னரான காலப்பகுதியில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் ஜோர்ஜியப் பிரஜைகள், குறித்த பரிசோதனைகள் காரணமாக உயிரிழந்தனர் எனவும் தெரிவித்தமை, சர்வதேச ஊடகங்களில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

அதேவேளை, குறித்த விடயத்தை முற்றாக நிராகரித்த அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் (பென்டகன்), இது ரஷ்யாவின் கட்டுக்கதையொன்று என்று கூறியுள்ளது. எது எவ்வாறாயினும், குறித்த உயிரியல் ஆயுத உற்பத்தி தொடர்பான அரசியல் யாதெனில், யுரேசியா (Eurasia) பிராந்தியச் செல்வாக்கில், ஐ. அமெரிக்கா, ரஷ்யா ஆகியன, தொடர்ச்சியான போட்டியைக் கொண்டிருத்தலே ஆகும்.

ஆர்மேனியா, அஜர்பைஜான், கஸக்ஸ்தான், மால்டோவா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள், குறித்த பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் நாடுகளாக இருப்பதுடன், இவற்றைத் தவிர ஜோர்ஜியா, ஐ.அமெரிக்காவுடன் இணங்கிய, ரஷ்யாவுக்கு எதிரான ஒரு நாடாக இருப்பது, ஐ.அமெரிக்கா குறித்த பிராந்தியத்தில் தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நாட்டைச் செல்வாக்குச் செலுத்துவது, ரஷ்யாவின் வெளிவிவகார நிலைமைக்கு பொருத்தமான ஒன்றல்ல.

மறுபுறத்தில், குறித்த பிராந்தியத்தில், பனிக்காலப் போருக்குப் பிந்திய காலப்பகுதியில், எவ்வாறாகவேனும் ரஷ்யா குறித்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்தத் தலைப்படும் என்பதிலும், அவ்வாறான ஒரு செயற்பாட்டின் போது தம்மால் நேரடியாக இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என்பதையும், ஐ.அமெரிக்கா உணர்ந்துள்ளது. இந்நிலையில், உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், எந்த ஒரு பகுதிமீதும் சான்றுகளுடன் குற்றஞ்சாட்ட முனைதல் என்பது இயலாமல் போகும் என்பதை முன்வைத்தே, குறித்த உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான அண்மைக்கால வாத – பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இரு பகுதியும் பயப்படுவது போல, ஒரு யுத்தத்தில் உயிரியல் ஆயுதப் பாவனை நடைபெறுமாயின், அதன் விளைவுகள் பல உயிர்களைக் காவுகொள்வதுடன் அது பரம்பரை பரம்பரையாக மக்களைத் தொற்றுக்குள்ளாக்குவது, சர்வதேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலான ஒரு விடயமாக அமையும் என்பதும், அதற்குத் தீர்வாக எதுவுமே அமையாது என்பதுமே, சராசரி மக்களின் அச்சமாகும்.Post a Comment

Protected by WP Anti Spam