By 11 February 2019 0 Comments

வனிதா மதில் சபரிமலையின் 19ம் படி!! (மகளிர் பக்கம்)

வரலாற்றைப் புரட்டிப்போட்டிருக்கிறது ‘வனிதா மதில்’ போராட்டம். கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட ‘மகளிர் சுவர்’ பேரணியில் 35 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். இது உலகிலேயே மிகப் பெரிய மகளிர் மனிதச் சங்கிலி என கூறப்படுகிறது. கேரள வரலாற்றில் முதன் முறையாக இவ்வளவுப் பெண்கள் ஒன்று திரண்டது இதுவே முதல்முறை. மதவாத மற்றும் சாதிய சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து அணிவகுத்து 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதில் அமைத்து புத்தாண்டின் முதல் நாளில் வரலாறு படைத்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு முயற்சி செய்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாகவே சபரிமலை போராட்டக்களமாக காட்சியளித்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதிலிருந்தே சரணகோஷப் போராட்டம், ரத யாத்திரை, தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் எனத் தொடர் போராட்டங்களை பி.ஜே.பி நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியும், பக்தர்களுடன் நாங்களும் நிற்கிறோம் எனப் பெண்களைத் திரட்டி கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இடது சாரிகள் மற்றும் பெண்கள் அமைப்பினர் இணைந்து பெண்கள் பங்கேற்கும் வனிதா மதில் என்ற மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர். அதாவது, கேரளத்தில் சாதிப் பாகுபாடு மற்றும் பெண்கள் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்த நாராயணகுரு, அய்யங்காளி, மன்னத்து பத்மநாபன் ஆகியோர் நடத்திய போராட்டங்களின் தொடர்ச்சியாக, ‘நவோதான’ (மறுமலர்ச்சி) கேரளத்தை உருவாக்க வாருங்கள்’ என்று பெண்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது. அதையடுத்து, காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை ‘வனிதா மதில்’ என்கிற பிரமாண்டமான சுவர் இயக்கத்தை நடத்தியுள்ளனர் கேரளத்துப் பெண்கள்.

கேரளாவை ஊடுருவிச் செல்லும் கன்னியாகுமரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அணி திரண்ட பெண்கள் கேரளத்தின் மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்போம் என்று உறுதிமொழியையும் ஏற்றனர். ஒற்றை வரிசையிலும் பல வரிசையிலுமாக பெண்கள் தோளோடு தோள் சேர்த்து பெண் சுவரை பெரும்மதிலாக மாற்றினர். குறிப்பிட்ட இடங்களில் பெண்கள் அணி அணியாக வந்து ஒருவரை ஒருவர் தொட்டு இடைவெளி இல்லாமல் நிரம்பி நின்றனர்.

மகாத்மா அய்யன்காளி சிலைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மாலை அணிவித்து வனிதா மதில் சுவரை துவங்கி வைத்த நிலையில், காசர்கோடில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா பெண் சுவரின் முதல் நபராகவும், திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தாகாரத் கடைசி நபராகவும் தோள் சேர்க்க, பெண்சுவர் நிறைவு பெற்றது.

பொது வெளியில் பெண்கள் வரிசையாக நிற்பது மதக் கோட்பாட்டுக்கு எதிரானது என்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், இஸ்லாமியப் பெண்களும் இதில் கணிசமான அளவு பங்கேற்றனர். திருநங்கைகளும் பங்கேற்றனர். தங்களின் கைகளை முன்னோக்கி நீட்டி பெண்களின் சமவாய்ப்பு, மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த உறுதிமொழியை அனைவரும் உரக்க ஒலித்தனர். தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத், ஆனிராஜா உள்ளிட்ட மகளிர் அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.

இதில் பங்கேற்ற ஜனநாயகப் பெண்கள் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் ஷீமா, ‘‘பெண்களில் 99 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே. இது கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குமான போராட்டம் அல்ல. பெண்களைப் பின்னோக்கி நகர்த்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டம்” என்றார். இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தலைவர் ஆனி ராஜா, ‘ஆச்சாரம்’ என்ற பெயரில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுப்பதற்கு எதிரான போராட்டம் இது என்றார்.

இந்நிகழ்வில் பல்வேறு கலைஞர்கள், கேரள நடிகைகள், அரசியல் கட்சித் தலைவிகள், சட்டமன்ற பெண் உறுப்பினர்கள், பெண் எழுத்தாளர்கள், மாணவிகள், அரசு பெண் ஊழியர்கள், பேராசிரியைகள், குடும்பத்தலைவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று மிகப் பெரிய மனித சங்கிலியை அமைத்தனர். பெண்சுவரை வாழ்த்தும் விதமாக அனைத்து இடங்களிலும் ஆண்கள் பெருஞ்சுவர் போல் சாலையின் மறுபக்கத்தில் நின்றனர்.
பெண்களின் வலிமையை உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்வாக இது அமைந்ததோடு சனாதனச் சுவரை பத்தொன்பதாவது படியாக்கி ஏறி மிதித்துச் செல்ல உயர்ந்து நின்ற பெண்கள் சுவர் என்றே சொல்லலாம்.Post a Comment

Protected by WP Anti Spam