By 11 February 2019 0 Comments

லிக்விட் எம்பிராய்டரி இது புதுசு!! (மகளிர் பக்கம்)

மனிதன் இலைகளையும், தழைகளையும் கோர்த்து ஆடையாக தயாரித்த போது முதல் தையலை கலைஞன் உருவாக்கி இருக்கலாம். நாகரிக உடையணிய ஆரம்பித்தபோது தையல் கலைத் தோன்றியிருக்கக்கூடும் என்று சொல்லலாம். இப்படி மிக மிக பழமையான தையல் கலையில் இன்றைக்கு எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இயந்திரங்களால் தையல் தைக்கப்பட்டாலும், கையால் தைக்கப்படும் தையலுக்கு எப்போதுமே தனி மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது.

எம்பிராய்டரி என்று அழைக்கப்படும் தையல் கலை கைக்கொண்டு தைக்கப்படுவதாகும். இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே அல்லது அதையே முழுநேர தொழிலாக செய்தால் ஒரு நிரந்தர வருமானத்தைப் பார்க்கலாம். இன்றைக்கு இதற்கும் தையல் இயந்திரம் வந்துவிட்டது என்றாலும், அதன் விலை அதிகம். அதனை சாமான்ய மக்களால் வாங்க முடியாது. அவர்களுக்கு இப்போது லேட்டஸ்ட் அறிமுகம் லிக்விட் எம்பிராய்டரி.

‘‘எம்பிராய்டரியில் ஏராளமான வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையுமே ஒவ்வொரு விதத்தில் அழகுதான்’’ என்கிறார் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தையல் பயிற்சியாளர் வனிதா. எம்பிராய்டரி மேல் ஏற்பட்ட விருப்பத்தினால், தையல் கலையை முழுமையாக கற்றுக் கொண்டு, நேரம் கிடைக்கும் போது, வீட்டில் இருந்தபடியே செய்து வருகிறார். ‘‘தையலை பொறுத்தவரை ஒரு முறை தைத்து பார்த்துவிட்டால் போதும், அது நம்முடைய மனதில் ஆழமாக பதிந்துவிடும். எப்போதும் தைக்க பழகும் போது முதலில் காட்டன் துணிகளில் தான் தைத்து பழகணும். நன்கு பழக்கத்துக்கு வந்தபிறகு, ஆடையில் விருப்பமான பூவேலையைச் செய்ய ஆரம்பிக்கலாம்.

எம்பிராய்டரி செய்ய தேவையான பொருட்கள்

1 எம்பிராய்டரி சட்டம்,
2 ஊசி, சுருக்கம் இல்லாத காட்டன் துணி,
3 காட்டன் எம்பிராய்டரி நூல்.

செய்முறை

காட்டன் துணியில் முதலில் பூ டிசைனை டிரேஸ் செய்து வரைந்து கொள்ளுங்கள். ஊசியில் விரும்பிய நிற நூலைக் கோர்க்கவும். நீளமான நுனியை முடிச்சிடுங்கள். டிசைன் ஆரம்பிக்கும் இடத்தில் கீழிருந்து குத்தி ஊசியை மேலே இழுத்துக் கொள்ளுங்கள். சிறிய இடைவெளி விட்டு, பக்கத்திலேயே குத்தி, ஊசியை கீழ்ப்புறமாக எடுங்கள். அதற்குச் சிறிது தள்ளி, ஊசியைக் குத்தி, முன்பு சொன்னது போலவே மேலிழுக்க வேண்டும். இப்படியே இடைவெளி விட்டுத் தைத்துக்கொண்டே போக வேண்டும். தையல்களும் இடைவெளிகளும் ஒரே அளவில் இருந்தால்தான் தையல் முடிந்ததும் பூ வேலைப்பாடு சிறப்பாகத் தெரியும்.

பின்னர் மற்றொரு கலர் நூலைக் கோர்த்து வர வேண்டிய இடத்தில் முதலில் அவுட் லைன் தையல் போட்டு முடித்துவிட்டு பிறகு, அதே நிற நூலில் அவுட் லைனை நிரப்புங்கள். பொதுவாக கைக்குட்டை, தலையணை உறை, குழந்தையின் ஆடைகள் போன்றவற்றில் இந்தத் தையல் போடலாம். ஆனால் எந்த கலைக்கும் எல்லை என்று எதுவும் இல்லை. எதிலும் எல்லாவற்றிலும் இந்தத் தையலைப் பயன்படுத்திப் பார்க்கலாம். உதாரணத்துக்கு சுடிதாரிலும் புடவையிலும் உள்ள டிசைன்களின் தையல் போட்டால் கூட அதை டிசைனர் உடை போல மாற்றிவிடலாம்.

இது ஒரு வகை ஆகும். இந்த வகையான நூல் எம்பிராய்டரி செய்ய நேரம் அதிகமாகும். ஒரு பிளவுஸில் ஆரி எம்ப்ராய்டரி செய்ய 2,000 ரூபாயும், ஒரு வாரமும் தேவைப்படும். ஆனால், லிக்விட் எம்ப்ராய்டரியில் 200 ரூபாய் செலவில் ஒரு மணி நேரத்தில் இரண்டு பிளவுஸ்களின் வேலையை முடித்துவிடலாம், அதே நேரத்தில் 200 ரூபாயில் ஒரு சேலைக்கு நல்ல டிசைன் செய்து 2000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். தரத்துக்கும் கியாரன்டி’’ என்கிறார் வனிதா.

‘‘ஆரி, ஜர்தோஷி போன்ற எம்பிராய்டரி டிசைன்களை சேலை, சுடிதாரில் வரைவதற்கு ஒரு மணி நேரம் முதல் ஒரு வாரம் வரை ஆகும். அதிக உழைப்பும் தேவைப்படும். லிக்விட் எம்பிராய்டரியில் ஒரு டிசைனை அரை மணி நேரத்தில் முடித்து விடலாம். ஒரு சேலை முழுவதையும் 3 மணி நேரங்களில் டிசைன் செய்யலாம். முன்பு வந்த 3டி அவுட் லைனரை டிசைன் செய்தபின் துணியை மடித்து வைத்தால் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும்.

தற்போது நான் ஸ்டிக்கி அவுட்லைனர் வந்துள்ளது. இதில் டிசைன் வரைந்த பின் 24 மணி நேரம் கழித்து, துணியின் பின்புறம் அயர்ன் செய்தால் போதும். துணி ஒன்றோடொன்று ஒட்டாது. துணியிலிருந்தும் பிரிந்து வராது. மீன் முள், பட்டன் ஹோல், சங்கிலித் தையல் என, கைத்தையலில் செய்யும் எல்லா டிசைன்களையும் லிக்விட் எம்பிராய்டரி மூலம் எளிதாக வரையலாம்.

இதில் கற்கள், கண்ணாடி வைத்தும், கிளிட்டரிங் பெயின்ட் மூலம் கூடுதலாக அலங்கரிக்கலாம். சேலை, சுடிதார், கவுன், ஜீன்ஸ், டீ-சர்ட் மட்டுமின்றி ஹேண்ட்பேக், காலணி, மொபைல் போன் பவுச் அனைத்திலும் டிசைன்கள் உருவாக்கலாம். பூ டிசைன்களுக்கு அவுட்லைன் கொடுத்து 3 டி எம்பிராய்டரி போல இதிலும் அழகுபடுத்தலாம். கலர் கேன்வாஸ் துணியில் டிசைன் வரைந்து எம்பிராய்டரி பெயின்ட் செய்து அதை தனியாக வெட்டி சேலையில், சுடிதாரில், குழந்தைகள் கவுனில் ஒட்டலாம். வீட்டில் தோரணமாக அலங்கரிக்கலாம்.

சந்தை வாய்ப்பு

இன்றைக்கு கடைகளுக்குச் சென்று விதவிதமான ஆடைகள் எடுத்துவந்தாலும், நாம் விரும்பிய டிசைன் அதில் இல்லையே என்ற கவலை இருக்கும். அதற்கு இந்த லிக்விட் எம்பிராய்டரி டிசைன் மூலம் நாம் விரும்பும் டிசைனை உருவாக்கிக் கொள்ள முடியும். கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், பகுதி நேரமாக ஏதாவது தொழில் செய்ய விரும்புபவர்கள் இதனை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். மாதம் ஒரு நிரந்தரமான வருமானத்தை ஈட்டலாம். நம்முடைய உழைப்புக்கு ஏற்ப மாதத்திற்கு குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். குறிப்பு: லிக்விட் எம்பிராய்டரி செய்த துணிகளை தண்ணீரில் வெகுநேரம் ஊறவிடக்கூடாது. பிரஷ் போட்டு அதன் மேல் தேய்க்கக்கூடாது.Post a Comment

Protected by WP Anti Spam