By 10 February 2019 0 Comments

மறதியின் உச்சகட்டம்!! (மருத்துவம்)

‘மனித இனத்தை அச்சுறுத்தும் நோய்களில் ஞாபக மறதியும் முதன்மையானதாகிவிட்டது. குழந்தைகளுக்குப் படிப்பதில் தடுமாற்றம் என்றால் வயோதிகர்களுக்கு வேறுவிதமான பிரச்னை. தொழில்ரீதியாகவும், உறவுகள் சார்ந்தும், அடையாளங்களை மறப்பது என முதியவர்களின் பிரச்னை தீவிரமாக இருக்கிறது.

ஆனால், இந்த பிரச்னையின் ஆழத்தினைப் புரிந்துகொள்ளாமல் நாம் அதனை வேடிக்கையாகவும், கிண்டலாகவுமே எடுத்துக் கொள்கிறோம். திரைப்படங்கள் தொடங்கி, அனைத்துவகை ஊடகங்களிலும் நகைச்சுவைக்குரிய விஷயமாகவே ஞாபக மறதி தொடர்ந்து சித்தரிக்கப்படுகிறது. இது தவறான அணுகுமுறை’’ என்கிறார் பொது நலம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவமனை சங்கர் மோகன்.

இதில் வாஸ்குலர் டிமென்ஷியா பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்கிறவர் தொடர்ந்து அது குறித்து விவரிக்கிறார்…
வாஸ்குலர் டிமென்ஷியா என்பது என்ன?

‘‘பேசும்போது என்னென்ன வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் என்பது மறந்துவிடும் நிலை, சாதாரணமாகப் படிப்பதிலேயே தடுமாற்றம், யோசனை செய்வதில் தடுமாற்றம், நினைவாற்றல் திறன் பாதிப்பினால் அன்றாட வேலைகளைச் செய்ய திண்டாடுதல், இவையெல்லாம் மூளை சம்பந்தமான செயல்பாடுகளைப் படிப் படியாக இழக்கும் நிலையைக் குறிக்கிறது. இதைத்தான் வாஸ்குலர் டிமென்ஷியா (Vascular dementia) என்று மருத்துவ உலகில் குறிப்பிடுவார்கள். இந்நிலையை, ஒருவகையான மனசோர்வு என்றே குறிப்பிடலாம்.’’
எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது?

‘‘பொதுவாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும்போது, இது மாதிரியான ஞாபகமறதி பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றன. மேலும், இதுபோன்ற பாதிப்புகளால் அவதிப்படுபவர்களின் மனத்திறன் படிப்படியாக குறைவதுடன், இவர்களுக்கு மூளையில் பாதிப்பும் வெகு விரைவில் ஏற்படும். இந்த அசாதாரண ரத்த ஓட்டம் காரணமாக, நமது உடலில் பலவிதமான பிரச்னைகள் உருவாகின்றன. உடல் பாகங்களில் காணப்படுகிற செல்கள் வெகுவாக பாதிப்பு அடைகின்றன.

குறிப்பாக, நமது மூளை அதிகம் பாதிப்பு அடைகிறது. சீரான ரத்த ஓட்டம் இல்லாதபோது சிந்தனை செய்யும் திறனில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்கிறது. அதுமட்டுமின்றி மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படவும் அதிக
வாய்ப்புள்ளது.’’அறிகுறிகள் பற்றி சொல்லுங்கள்…

‘‘மறதியின் உச்சக்கட்டமாக சொல்லப்படுகிற வாஸ்குலர் டிமென்ஷியா(Vascular dementia) ரத்த நாளங்களில் ஏற்படும் சிதைவு மற்றும் மூளையில் பிரச்னை ஏற்பட்டுள்ள பகுதியின் அடிப்படையில் இதன் அறிகுறிகளைக் கண்டறியலாம். எனினும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் குறைவதுடன் நினைவு இழப்பு என்பதே இந்நோய்க்கான முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் யோசனை திறன் குறைதல், புரிதல் திறனில் பிரச்னை, கவனக்குறைவு, மன குழப்பம், நடப்பதில் பிரச்னை, நினைவுத் திறன் குறைபாட்டால் ஏற்படும் பேசும் திறனில் காணப்படுகிற பிரச்னை போன்றவையும் இந்நோய்க்கான சில அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருவரின் அன்றாட செயல்பாடுகளை வெகுவாக பாதிக்கும்.’’

வாஸ்குலர் டிமென்ஷியாவை எப்படி கண்டுகொள்வது?

‘‘டிமென்ஷியாவைக் கண்டறிய பல எளிமையான வழிமுறைகள் உள்ளன. முதலில், ஒரு தகுதிவாய்ந்த மருத்துவரிடம் செல்வது பாதுகாப்பானது. அதன் பின்னர் ஆர்டீரியல் டெஸ்டிங் (Arterial Testing) எனும் தமனி (Arteries) பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனையை தமனிகளின் தடிப்பு- விறைப்பு தன்மையினை ஆய்வு செய்து தகவல்களை அளிக்கிறது. இந்தப் பரிசோதனையைச் செய்வதன் மூலமாக தமனியில் உள்ள ரத்த அளவு மற்றும் ரத்த நாளங்களின் எதிர் தடுப்பாற்றல் குறித்த தகவல்கள் கண்டறியப்படுகிறது.

இச்சோதனையானது நமது உடலில் எவ்வித துளையிடுதலும் இல்லாமல், இன்ப்ஃரா ரெட் ஒளி கொண்டு கண்டறியப்படுகிறது. இச்சோதனை, சிகிச்சையின் நிலை கண்டறியவும், வாஸ்குலர் டிமென்ஷியா மேலும், மோசமடைய விடாமல் இருக்கவும் பெரிதும் உதவுகிறது. மனதின் திறமைகளை மதிப்பீடு செய்ய மூளையை ஸ்கேன் செய்வது அவசியம்.

இது மூளை செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை எளிதாக கண்டறியவும் உதவுகிறது. வாஸ்குலர் டிமென்ஷியாவால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து, நம்மை எளிதாகத் தற்காத்துக் கொள்ள முடியும். தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக தமனி ரத்த நாளங்களின் விறைப்புத்தன்மை குறையும். நடைபயிற்சி, ஓட்டபயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி மேற்கொள்வது மென்மேலும் பயன் தரும்.

உயர் ரத்த அழுத்த மருத்துவம்: தமனி ரத்த நாளங்கள் விறைப்பு அடைவதால் ரத்த அழுத்தம் படிப்படியாக உயர்வடைகிறது. இதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவத்தின் அடிப்படையில், ரத்த அழுத்தத்தைக் கட்டுபாட்டுக்குள் வைக்க முடியும். வைட்டமின்-டி, மெக்னீசியம், ஒமேகா, கொழுப்பு அமிலம் (Fatty acids) மற்றும் வைட்டமின்-கே நிரவல்கள் (supplements) ஆகியவற்றை உட்கொள்வதன் மூலமாக ரத்த நாளங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடிகிறது.

தொடர்ந்து தமனி ரத்த நாணங்களை பரிசோதனை மேற்கொள்வதன் மூலமாக பகுதி மற்றும் ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தை கண்காணிக்க பெரிதும் உதவுகிறது. புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பதும் பயன் தரும்’’ என் கிறார்

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மறதியின் உச்சகட்டமான வாஸ்குலர் டிமென்ஷியாவைத் தடுக்க சில எளிதான நடவடிக்கைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். SELECTION – இந்த மேம்பட்ட சிகிச்சை கொண்டு ரத்தத்தில் உள்ள பல தேவையற்ற உலோகங்களை நீக்கி விட முடியும். பொதுவாக மாசடைந்த நீர் மற்றும் காற்று மூலமாக தேவையற்ற உலோகங்கள் ரத்தத்தில் கலப்பதால் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

The Enhanced External Counter-Pulsation (EECP) என்ற சிகிச்சைமுறை இதயத்திற்கான சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தித் தருகிறது. இது ரத்தத்தை குறுகிய மற்றும் அடைப்பு உள்ள ரத்த நாளங்கள் வழியைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் இதயத்திற்கு ரத்தத்தை அனுப்புவதன் மூலமாக சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்த உதவுகிறது.

ஓசோன் சிகிச்சை (Ozone therapy)
சீரான ரத்த ஓட்ட சிகிச்சையில் சிறப்பானதாக கருதப்படுவது ஓசோன் சிகிச்சை முறையாகும். இது இதய திசுக்களின் ஆக்ஸிஜன் சுழற்சி மற்றும் பயன்பாட்டினை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும் தமனி ரத்த நாளங்களில் உள்ள படலங்களை நீக்குவதுடன், தமனி ரத்த நாளங்களை வலுவடையச் செய்து, ரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை நீக்குகிறது. இதனால் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பதுடன் உயர் ரத்த கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.Post a Comment

Protected by WP Anti Spam