By 2 March 2019 0 Comments

சீனாவின் பொருளாதாரத் தூரநோக்கு!! (கட்டுரை)

தற்போதைய உலகளாவிய மட்டத்தில் பொருளாதாரக் கட்டமைப்புகள், உறவு நிலைகள் ஆகியன, பிராந்திய ஒத்துழைப்பும் அபிவிருத்திக்குமான முக்கிய விடயங்களாக மாறிவிட்டன. அவ்வாறாக, பல்வேறு வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளுடன் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை ஒருங்கிணைப்பதையே, குறித்த பொருளாதாரக் கட்டமைப்புகள் எதிர்பார்க்கின்றன. மேலும் இக்கட்டமைப்புக்கள் சமூக, அரசியல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தவும் அது தொடர்பாக ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளவும் உதவும் என, சர்வதேச அரசாங்கங்கள் நம்புகின்றன.

உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா ஆகும். ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை, குறிப்பாக தென்கிழக்கு ஆசியப் பொருளாதாரங்கள், சீனாவைச் சார்ந்தே இருக்கின்றன. இந்த நாடுகளுடன் முக்கிய வர்த்தகப் பங்காளியாக சீனா உள்ளது. பழைய பட்டுப் பாதையில் அமைந்துள்ள மத்திய ஆசிய நாடுகள், நன்கு கட்டமைக்கப்பட்ட போக்குவரத்து உட்கட்டமைப்பிலிருந்து நன்மைகளைப் பெற முடியும் என்ற யோசனையிலிருந்து, பட்டையும் பாதையும் முன்னெடுப்பு (BRI) என்ற கருத்தை சீனா முன்வைக்கின்றது.

மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை, முதலீட்டுக்கான குறைந்த சாத்தியமான சிறிய பொருளாதாரங்களைக் கொண்டிருக்கின்றன என்பதால், கடல் சார்ந்த போக்குவரத்துடன் ஒப்பிடும் போது, சாலையூடாக வியாபாரங்களை மேற்கொள்ளுதல் இலாபகரமாக இருக்கும் என்பதே, இம்முயற்சியில் அடிப்படை ஆகும். சீனக் கடலோரப் பகுதியிலிருந்து தென்கிழக்கு ஆசியா வழியாக இந்தியப் பெருங்கடலையும், பின்னர் ஐரோப்பாவையும் கடந்து செல்லும் சீனாவின் புதிய யோசனையை, சீனா அண்மையில் அறிமுகப்படுத்தியது. இது, சீனாவின் பொருளாதார வரலாற்றின் அடிப்படையில் – குறிப்பாக பழைய பட்டுப் பாதை சீனாவை நாகரிகத்தின் மேற்குப் பகுதியில் பட்டு, தேயிலை, பீங்கான்களின் பண்டைய வர்த்தகம் மூலம் இணைத்தது என்பதை அடிப்படையாக கொண்டும், இதன் விளைவாக சீனா, உலகின் பிற பகுதிகளுடன் நெருக்கமாகியது என்பதைக் கருத்தில் எடுத்ததுமே, குறித்த BRI முயற்சி சீனாவால் முன்வைக்கப்படுகின்றது.

1970களில் சர்வதேச பொருளாதாரச் சந்தை சீர்திருத்தங்களின் போது, சீனாவின் மக்கள் குடியரசானது, எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டையும் தொழில்நுட்பத்தையும் பெறாமல், அதன் நீடித்த நலனுக்காக மிகவும் சுதந்திரமான பொருளாதாரக் கட்டமைப்பை வைத்திருந்தது. எது எவ்வாறாயினும், தொடர்ச்சியாக ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மெதுவான தொழில்நுட்ப வளர்ச்சி, சிறிய மூலதனத் தயாரிப்பு, குறைந்த வீட்டு நுகர்வு ஆகியவை உட்பட, பல நவீன பொருளாதாரச் சிக்கல்களை சீனா எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கவே, சீனா, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி AIIB, BRI திட்டத்துடன் சேர்த்து, அதன் மூலம், எண்ணெய், பிற இயற்கை வளங்கள் தொடர்பான முதலீடு, மத்திய ஆசிய நாடுகளுடன் ஏற்றுமதி இறக்குமதி, தொழில்நுட்ப அணுகல் மூலம் சீனா, வர்த்தக இணைப்புகளைக் கட்டமைக்க விரும்புகிறது. BRI பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த, துறைமுகங்களின் வழியாக மற்ற நாடுகளுக்கு சாலை, ரயில் அணுகலை வழங்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது.

2013ஆம் ஆண்டில், சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங், மத்திய, தென்கிழக்கு ஆசியாவுக்கான தனது பயணத்தின் போது, “பட்டுப் பாதைப் பொருளாதாரப் பாதை” என்ற புதிய கட்டமைப்பு அபிவிருத்தியை முன்மொழிந்திருந்தார். பின்னர் அதன் முன்முயற்சியாக அது “ஒரு பாதை மற்றும் ஒரு பாதை” என வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பாக அமையும் எனவும், இது மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியாவுடன் சீனா, பொருளாதார ஒத்துழைப்பு, கலாசாரம், பரிமாற்றம் ஆகியவற்றில் பங்குகொள்ளல், குறித்த நாடுகளின் பொருளாதாரத்தில் சீன ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் இந்தக் கட்டமைப்பு உதவும் என்று அவர் வாதிட்டார்.

நவம்பர் 8, 2014இல், ஜனாதிபதி ஸி ஜின்பிங் அரசாங்கம், பட்டுப் பாதைக் கட்டமைப்புக்காக 40 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் வழங்கியது. இது ஒரு தாராளவாத அரசை நோக்கிய பயணத்தில் சீனா அண்மையில் மேற்கொண்ட படிமுறைச் சீர்திருத்தங்களில் ஒன்றாகும். உலகளாவிய தேசிய உற்பத்தியில் 55%, உலகளாவிய மக்கள் தொகையில் 70%, அறியப்பட்ட எரிசக்தி இருப்புகளில் 75% ஆகியவை BRI ஊடாகவே செயற்படுத்தப்படுகின்ற இந்நிலையில், குறித்த இச்செயற்றிட்டம், ஜனாதிபதி ஸி ஜின்பிங், வெளியுறவுக் கொள்கையில் முன்னிலைப்படுத்தப்படுகின்ற, அத்துடன் சீனாவின் பிராந்திய பொருளாதார மூலோபாயத்தின் முக்கிய கூறுபாடாகவே இது பார்க்கப்படவேண்டியதாகும்.

எது எவ்வாறாக இருப்பினும், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட சில ஆசிய நாடுகள் இம்முன்னெடுப்புகளுக்கு எதிராகவும், ஆசியா, ஆசிய பசிபிக்கில் பூகோள அரசியல் முக்கியத்துவம் பெற, சீனாவின் நீண்டகால மார்ஷல் திட்டத்தின் மூலோபாயமாக குறித்த BRI அமைவதாகவும் தெரிவிக்கின்றன.

மேற்குலகும், சீனாவுக்கான மிகவும் பொருத்தமான அரசியல், பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக சீனப் பொருளாதாரம் மாற்று பாதைகளை உருவாக்கி, “யுவானின் சர்வதேசமயமாக்கல்” ஏற்பட முற்படுகின்றது என கருதுகின்றது. ஐ.அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் தங்கள் கவலையை நேரடியாகவே வெளிப்படுத்தியுள்ளன என்பதுடன், குறித்த செயற்பாட்டை சீனா கைவிடவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், எவ்வாறாக சீனாவின் சர்வதேசத்துக்கான மாற்றுப் பொருளாதாரக் கொள்கை அல்லது கொள்கைக்கான BRI கட்டமைப்பு விரிவாக்கம் அடையப்போகின்றது, அல்லது குறித்த கட்டமைப்பு பிற நாடுகளின் எதிர்ப்புகளால் எதிர்பார்த்தளவுக்கு சீனாவுக்கு பொருளாதார, அரசியல் ரீதியாக நன்மை பயக்காமல் போகும் என்ற அடிப்படையில் குறித்த கட்டமைப்பு இடைநடுவே கைவிடப்படுமா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam