நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 15 Second

புற்றுநோய் என்ற வார்த்தை மரணத்துக்கான முன் அறிவிப்பாகவே இங்கு பார்க்கப்படுகிறது. புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி இறப்பவர்கள் படும் துன்பமும் மற்றவர் மனதில் கலக்கத்தை உண்டாக்குகிறது. புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளும் வலி மிகுந்தவை. இதில் முக்கியமானது கீமோதெரபி.

உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிப்பதற்காகக் கொடுக்கப்படும் இந்த மருத்துவ முறையின் பக்க விளைவுகள் குறித்து நிறைய அச்சங்கள் நிலவி வருகிறது. ஆனால், ‘கீமோதெரபி சிகிச்சை இன்று மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அத்தகைய அச்சம் தேவையில்லை’ என்று நம்பிக்கை தருகிறார் புற்றுநோய் மருத்துவவியல் முதுநிலை நிபுணர் ராம்பிரபு.

‘‘கீமோதெரபி(Chemotherapy) என்ற சொல்லானது புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும் பல மருந்துப் பொருட்களின் ஒரு தொகுப்பினைக் குறிக்கிறது. புற்றுநோயை குணப்படுத்த உதவும் பல முறைகளில் கீமோதெரபி மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறை இது. ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான முக்கிய மருத்துவ சிகிச்சையாக கீமோதெரபி மட்டுமே உள்ளது.

கீமோதெரபி மருந்துகள் புற்றுநோய்க்கான செல்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், இயற்கையான நல்ல செல்களை விரைவாக பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. அதே நேரத்தில் இவை புற்றுநோய் செல்களை அழித்துவிடுகின்றன.

செல்களைக் கொல்லும் தன்மை கீமோதெரபி சிகிச்சைமுறையில் இருப்பதால் எலும்பு மஜ்ஜை, சருமம், தலைமுடி, குடல் மற்றும் குடலில் உட்பூச்சு செல்கள் போன்ற மனித உடலில் வழக்கமாகப் பகுத்துப் பெருகும் செல்கள் அவை. கீமோதெரபி சிகிச்சையில் அவை பாதிக்கப்படுவதால் உடலில் பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் இத்தகைய செல்கள் மறு உருவாக்கத்துக்கான நல்ல திறனையும் கொண்டிருக்கின்றன. காலப்போக்கில் அவைகளைச் சரி செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றன.

வளர்ச்சியடைந்த புற்றுநோயில் மட்டுமில்லாமல் ஆரம்ப நிலைப் புற்றுநோயிலும் கீமோதெரபி பயன்படுத்தப்படுகிறது. உடலில் பிற பகுதிகளில் இருக்கும் மிக நுண்ணிய நோய்த்துகள்களை அகற்ற இது பயன்படுத்தப்படுகிறது. கீமோதெரபி சிகிச்சை அளிக்காமல் விடும்போது இவை வளர்ச்சியடைந்து உடலின் பல உறுப்புக்களையும் பாதிக்கும் நோயாகத் தீவிரம் அடையும். கீமோதெரபி சிகிச்சையால் ஏற்படும் பாதிப்புகள் என்று மக்கள் மத்தியில் நிலவும் சில தவறான நம்பிக்கைகள் உண்டு.

கீமோதெரபி மருந்துகள் கொடுக்கும்போது வாந்தி வரும் வாய்ப்புகள் நிறைய இருப்பதாகப் பரவலான கருத்துகள் உள்ளன. ஆனால், இவை சில மருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் கீமோதெரபிக்குப் பின்னர் வாந்தி வராமல் தடுக்க மாற்று மருந்துகள் முன்பாகவே கொடுக்கப்படுவதால் வாந்தி பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

கீமோதெரபியில் பயன்படுத்தப்படும் அனைத்து வகை மருந்துகளாலும் ரத்த அணுக்கள் குறைவதில்லை. சில மருந்துகளில் மட்டுமே குறைவதுண்டு. ஆனால், இதனை சீரமைக்கும் வகையில் வளர்ச்சிக் காரணிகள் எனும் மருந்து கொடுக்கப்படுவதால் இந்தப் பக்க விளைவினை எளிதாக சமாளித்துவிட முடியும்.

கீமோதெரபி மருந்துகளை ரத்த நாளங்களின் வழியாக உடலில் செலுத்தும்போது வலியும் வீக்கமும் வருவது பற்றி தேவையற்ற பயம் மக்கள் மனதில் உள்ளது. ஒரு தேர்ந்த புற்று நோய் மருந்து மையங்களில் இதற்கென்றே தனியாக கைதேர்ந்த செவிலியர்கள் உள்ளார்கள். அவர்கள் செலுத்தும் போது இவ்வகை பிரச்னைகள் வருவதில்லை. மேலும் இப்பொழுது கீமோ போர்ட் என்ற சிறப்பு வகை முறை மூலம் செலுத்தும் போது வலி, வீக்கம் எதுவும் ஏற்படுவதில்லை.

கீமோதெரபி எடுத்துக் கொள்பவர்களின் உணவில் முடிந்த வரை காரம், மசாலா இல்லாத, எரிச்சலூட்டாததாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ருசித்து உண்ணும் படியாகவும் இருக்க வேண்டும். அதிகமாக மசாலாக்கள், நறுமணப் பொருட்கள், மிளகாய், எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

இட்லி, தயிர்சாதம், பருப்பு சாதம், ஓட்ஸ், கார்ன் ஃபிளேக்ஸ், அனைத்து வகையான கஞ்சிகள், ரொட்டி, சான்ட்விச் போன்ற எளிய உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். அவை எளிதில் செரிமானம் ஆகிவிடும். மூன்று வேளை உண்ணுவது சிரமமாக இருந்தால் அந்த உணவைப் பிரித்து 6 முறை அல்லது எட்டு முறையாக உண்ணலாம்.

பால், வேகவைத்த முட்டை, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவை புரதம் செறிவாக உள்ள உணவுப் பொருட்களாகும். வேகவைத்த காய்கறிகள், நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்ட பழங்களைத் தயக்கம் இன்றி எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் அதிகபட்ச வைட்டமின் மற்றும் தாதுச்சத்துக்களை அளிக்கிறது. மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கான நார்ச்சத்தும் இவற்றில் இருந்து கிடைக்கிறது.

பசலைக் கீரை, லெட்யூஸ் கீரை, பீட்ரூட், கேரட் ஆகியவை தனிச்சிறப்பானவையும் கூட. பேரீச்சம்பழம், மாதுளை, கொய்யா, பப்பாளி, பருப்பு வகைகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். இழந்த ஹீமோகுளோபின், மற்றும் ரத்த எண்ணிக்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் அவசியமான இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் ஆகியவை இவற்றில் அதிகமாக உள்ளன.

சுகாதாரமான முறையில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி தண்ணீர் மற்றும் இளநீர், பழச்சாறு போன்ற பானங்களை அருந்தி உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

கீமோ தெரபி சிகிச்சைக்குப் பின்னர் உடலில் நோயெதிர்ப்புத் திறன் குறைந்து உடல் பலவீனமடைந்திருக்கும். இதனால் நோய்த்தொற்று எளிதில் ஏற்பட வாய்ப்புள்ள நெருக்கடி மிக்க இடங்கள், சுத்தமற்ற, தூசியான சூழல்களை தவிர்க்கவும், அதிகளவில் பார்வையாளர்கள் வருவதைக் குறிப்பாக காய்ச்சல், இருமல் மற்றும் சளி பாதிப்புள்ள நபர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கலாம்.

அதிகளவு உடலுழைப்புள்ள செயல்பாடுகளை மேற்கொள்வது தொடை வலி மற்றும் மூட்டுவலியை உண்டாக்கும். சின்னச் சின்ன வேலைகளை மட்டும் இவர்கள் செய்யலாம். நடைப்பயிற்சி அவசியம். அதையும் உடல் அனுமதிக்கும் நேரம் வரை மட்டுமே செய்யலாம். எந்த வேலையும் செய்யாமல் முழு ஓய்வில் இருப்பது நல்லதல்ல. அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

சிலர் தூக்கம் வராமல் அவதிப்படலாம். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் பகலில் தூங்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இரவில் நன்றாக தூங்குவதற்காக பகலில் புத்தகம் படிப்பதும், செய்தித்தாள் வாசிப்பதும் நல்லது.

ஒரு சில கீமோதெரபி மருந்துகள், தலைமுடி மெலியும்படியும், முடி கொட்டுவதற்கும் காரணமாகிறது. ஆனால், அனைத்து கீமோதெரபி மருந்துகளும் முடி கொட்டச் செய்வதில்லை. முடி கொட்டுவதை எதிர்கொள்ளும் நபர்களுக்கு கீமோ சிகிச்சை முழுமையடைந்த பின்னர் அது விரைவில் வளர்ந்து விட வாய்ப்புள்ளது. இதற்கான நம்பிக்கையும், உறுதிமொழியும் அளிக்க வேண்டும்.

மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் மூலம் கீமோதெரபியின் விளைவுகளை எளிதில் கடக்க முடியும், உணவு, வாழ்க்கை முறை என மேலும் சில விஷயங்களில் கவனம் செலுத்தி கீமோ தெரபிக்குப் பின்னர் விரைவாக இயல்புநிலைக்குத் திரும்பலாம். தன்னம்பிக்கையே கீமோ தெரபி சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும், புற்றுநோயில் இருந்து நலம் பெறவும் வாய்ப்பளிக்கிறது.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோகாவில் 200 ஆசனங்கள் அத்துப்படி. அசத்தும் மாணவ ஆசான்.!!(மகளிர் பக்கம்)
Next post இந்தியாவை தாக்க உத்தரவு – இம்ரான்கான் அதிரடி!! (வீடியோ)