By 8 March 2019 0 Comments

என் காதலே… என் காதலே… என்னை என்ன செய்யப் போகிறாய்..? (மகளிர் பக்கம்)

‘‘என் காதலை முதலில் அவர் ஏற்கவில்லை. நிறம், அழகு இதையெல்லாம் பார்த்து சிலருக்கு காதல் வரும். ஆனால் எங்கள் காதலில் தன் கொள்கைக்காக அவர் ரொம்பவே அழுத்தமாக இருந்தார். நானும் அவரை விடவில்லை. ஆறு மாதம் இடைவெளிவிட்டு ஒரு தெளிவான முடிவெடுத்தேன். அவரிடம் என் விருப்பத்தை விடாமல் மீண்டும் தெரிவித்தேன்’’ எனத் தன் காதலை ரீவைண்ட் செய்து நம்மிடம் பேசத் தொடங்கினார் ஷீலா ராஜ்குமார். தேசிய விருது பெற்ற டூலெட் படத்தின் நாயகி.

‘‘தம்பிச் சோழன், கூத்துப்பட்டறை யில் முத்துசாமி அய்யா அவர்களிடம் நடிப்பு பயிற்சி, புத்தகம் வாசிப்பு, துணை இயக்குநர், தற்போது ஆக்டிங் டிரெயினர் என பயணப்பட்டுக் கொண்டிருப்பவர். அவரின் உண்மையான பெயர் ராஜ்குமார். சினிமாவிற்குள் வந்ததும் பெயரை தம்பிச் சோழன் என மாற்றிக் கொண்டார். நடிகர்கள் விமல், விதார்த், விஜய் சேதுபதி எல்லாம் இவரோடு கூத்துப்பட்டறையில் உடன் பயணித்தவர்கள். ஆரம்பத்தில் நடிப்புத் தொடர்பாக அவரோடு நான் நிறைய பயணம் செய்ய நேர்ந்தது. துவக்கத்தில் நல்ல நண்பராகவும் வெல்விஸ்ஸராகவும் இருந்தார். அவரை எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நான் என் வாழ்க்கையை சோழனோடு தேர்வு செய்தேன். என் விருப்பத்தை அவரிடம் நான்தான் முதலில் தெரிவித்தேன்.

முதலில் ரொம்ப யோசித்தார். சரியாக வராது என விலகிச் சென்றார். ஆறு மாதம் கடந்தது. அவர் மனதில் நம்பிக்கையை விதைத்தேன். புரிதலை உண்டு பண்ணினேன். நான் அவர் வாழ்க்கையிலும் அவர் என் வாழ்க்கையிலும் இருந்தால் எந்த மாதிரியான மாற்றம் வரும் என்பதை அவருக்கு உணர்த்தினேன். மெல்லப் புரிந்து கொண்டார். திருமணத்தை பற்றி யோசித்தோம். கூடவே என் வீட்டில் நிறைய எதிர்ப்பும் வந்தது. அப்போதே நான் எதை நோக்கி நகர வேண்டும், என் குறிக்கோள் என்ன என்கிற தெளிவு எனக்குள் இருந்தது. ஆனால் என் குடும்பத்தினர் அதை ஒரு சதவிகிதம்கூடப் புரிந்துகொள்ளவில்லை. அடிப்படையில் நாங்கள் கிறிஸ்தவர்கள். அவரோ தெலுங்கு. மதமும் வேறு. மொழியும் வேறு. என் வீட்டில் சுத்தமாக ஒத்துக்கொள்ளவே இல்லை.

என் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள சவேரியார் பட்டி என்கிற கிராமம். எங்கள் குடும்பம் கிறிஸ்தவ கோவிலுக்கு பரம்பரையாக ஊழியம் செய்பவர்கள். +2வரை தஞ்சையில் படித்தேன். தொடர்ந்து திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பரதநாட்டியத்தில் மாஸ்டர் டிகிரி முடித்தேன். கல்லூரியில் சேர்வதற்கு முன்பு வரை வெளி உலகம் தெரியாது. நான்கு சுவற்றுக்குள் இருந்தேன். என்னைச் சுற்றி அம்மா, அப்பா, அத்தை, மாமா என வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் சின்ன வயதில் இருந்தே எனக்கு நடனம் மற்றும் நடிப்பில் ஆர்வம் இருந்தது. எங்கள் ஊர் மிகச் சிறியது. அங்கு பெண்களை பத்தாவது படிக்க வைப்பதே பெரிய விசயம். என்னோடு படித்த பள்ளி மாணவிகள் பத்தாவது முடித்ததும் அடுத்த ஆண்டு கிராமத்து திருவிழாவில் அவர்களைப் பார்க்கும்போது, கையில் குழந்தையோடு, தங்களின் குழந்தை தன்மையை இழந்து பெரியவர்கள் அமர்ந்திருக்கும் வரிசையில் இருப்பார்கள்.

பள்ளியில் என் பக்கத்து இருக்கையில் இருந்த தோழி அடுத்த ஆண்டே தலையில் முக்காடு போட்டு குழந்தையோடு நிற்பாள். பெரும்பாலும் அவர்கள் விரும்பாமலே அந்த வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு இருப்பார்கள். எனக்கும் அதே நிலைதான் இருந்தது. என்னை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க எனக்குப் பிடிக்கலை. எனக்கே குழந்தைத் தன்மை போகவில்லை. நான் எப்படி ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும். நான் கிராமத்தைவிட்டு வெளியூரில், அதாவது ஜெயங்கொண்டானில் படித்தேன். +2வரை பிரச்சனை இல்லை. நடனம் நன்றாக வந்ததால் அது தொடர்பாக மேலே படிக்க, வீட்டில் போராடி, பட்டினி கிடந்து திருச்சி கல்லூரியில் நுழைந்தேன். விடுமுறையில் வீட்டுக்குப் போனாலே எப்போது என் படிப்பு முடியும் திருமணம் செய்யலாம் என்பதே பேச்சாக இருந்தது. என் திருமணத்தை தவிர்க்க வீட்டுக்குப் போவதை நிறுத்தினேன்.

திருச்சி கல்லூரியில் படித்தபோது ஆக்டிங் ஒர்க் ஷாப் ஒன்றில் தம்பி சோழனை சந்திக்க நேர்ந்தது. எழுத்தாளர் இமயம் எழுதிய ‘பெத்தவன்’ என்கிற கதையை டெலி ஃபிலிமாக அவர் இயக்கினார். அதில் நான் ரொம்பவே தைரியமாக நடித்தேன். ஒருசில நடமுறை சிக்கல்களால் அந்தப் படம் வெளிவரவில்லை. அங்கு தான் நான் தம்பிச் சோழனிடம் பழகும் வாய்ப்பு நிறைய அமைந்தது. என் காதலை வெளிப்படுத்தினேன். ஒரு பெண் பையனோடு பேசுவதை ஏற்காத உலகம் இது. எனக்கு ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் எனச் சொன்னால் விடுமா? எனது வீட்டாருக்கு இதெல்லாம் தாங்கிக்கொள்ளவே முடியாத விசயம். வீட்டில் எதிர்ப்பு வலுத்தது. என்னை வீட்டில் எவ்வளவு திட்டினாலும் பருத்திவீரன் படம் ப்ரியாமணி மாதிரி சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன்(சிரிக்கிறார்). நீங்கள் என்னைப் பெற்றாலும் இது என் வாழ்க்கை. நான் தான் இதை டிசைன் செய்வேன் என்ற தெளிவோடே இருந்தேன்.

வெளிநாடுகளில் எல்லாம் பிள்ளைகள், 14 வயதில் பெற்றோரை விட்டு தனித்து வாழ பழக்கப் படுத்தப்படுகிறார்கள். இதனால் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வு, தன்னம்பிக்கை, எப்படி வாழவேண்டும் என்கிற நெளிவு சுளிவு எல்லாம் அவர்களுக்குப் புரியும். ஆனால் நம் நாட்டில் பிள்ளைகளை பயமுறுத்தியே வளர்க்கிறார்கள். அதுவும் என் வீட்டில் ஏழு மணிக்கே கதவை சாத்திவிடுவார்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கையை பருவமடைவதற்கு முன் பின் எனப் பிரித்துப் பார்த்தால், அவளால் தன் முந்தைய காலகட்டத்தை தொடர்ந்து எடுத்துவர முடியாது. ஆனால் ஆண்களுக்கும் பெண்களைப் போன்ற எல்லா மாற்றங்களும் உண்டு. அவர்களை சமூகம் கேள்விக்கு உட்படுத்துவதே இல்லை. பெண்ணுக்கு மட்டும் எக்கச்சக்க கட்டுப்பாடு, சட்ட திட்டம். இதில் பெண்களின் சுயம் அழிந்து போகிறது.

எங்கெல்லாம் என் சுயம் அழிக்கப் படுகிறதோ அங்கெல்லாம், ஏன்? எதற்கு? என்கிற கேள்வியினை தொடர்ந்து எழுப்பும் கான்டவெர்ஸி பெண்ணாகவே நான் இருந்திருக்கிறேன். பெண்ணும் பெண்ணும் பழகினால் எவ்வளவு நல்ல விசயங்கள் அவர்களுக்குள் கிடைக்குமோ, அதே போலத்தான் ஆண் நண்பர்களிடம் பழகினாலும் நிறைய நல்ல விசயங்கள் கிடைக்கும். நான் தம்பிச்சோழனை சந்திக்காமல் இருந்திருந்தால் இந்த நிலைக்கு வந்திருப்பேனா என்பது கேள்விக்குறியே..? வெறும் நடனத்தைப் படித்த பெண்ணாக மட்டுமே இருந்திருப்பேன். என் வட்டம் மிகக் குறுகியதாய் மாறி இருக்கும். வீட்டார் சொன்ன யாராவது ஒரு பீட்டர் அல்லது அந்தோணிசாமிக்கு திருமணமாகி, அடுத்த ஆண்டே கையில குழந்தையோடு அடுப்பை ஊதிக்கொண்டு இருந்திருப்பேன்.

எல்லாவற்றையும் கடந்து, எனது குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாமலே திருமணம் செய்து கொண்டோம். நடனம், விடுதி, நான்கு சுவர், நான்கு மனிதர்கள் இப்படியே வாழ்ந்தேன். இந்த உலகம் எப்படி இருக்கும்..எப்படி சாலையை கடக்க வேண்டும்.. என்பது தெரியாத வேற்று கிரகவாசிபோல் வாழ்க்கை நகர்ந்தது. திருமணத்திற்கு பிறகே என் வாழ்க்கையில் மாற்றங்களும் நான் எதை நோக்கி போக வேண்டும் என்கிற தெளிவும் வந்தது. இதெல்லாம் அவர் வாழ்க்கையில் வந்த பிறகே நடந்தது. ஆனால் இந்த நிலையை அடைய நிறையவே போராடியிருக்கிறேன். எங்களுக்குள் நல்ல புரிதல் உண்டு.. நல்ல விவாதம் உண்டு. நல்ல படங்களை அவர் என்னைப் பார்க்க வைப்பார். ஒருவர் வளர்ச்சிக்கு ஒருவர் நம்பிக்கை கொடுக்கிறோம். இதில் அர்த்தப்படுத்திக்கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லை. அவர் திரைத்துறை சார்ந்து இயங்குவதால் எனக்கு எல்லாமே சுலபமாக இருந்தது.

எனக்கு நடிப்பு வருகிறது எனத் தெரிந்து அதற்குள் என்னை பக்குவப்படுத்தினார். தியேட்டர், நடிப்பு பயிற்சி எல்லாவற்றிலும் கலந்துகொள்ள வைத்தார். அவர் மூலமாகத்தான் புத்தகங்கள் அறிமுகமானது. நிறைய எழுத்தாளர்களை வாசிக்கத் துவங்கினேன். திரைத் துறைக்குள் உள்ள பிரச்சனைகளை உணர்ந்தேன். டூலெட் படத்தின் வாய்ப்பும் அவர் மூலமாகத் தான் வந்தது. தம்பிச்சோழனை நான் வாழ்க்கைத் துணையாக அடையவில்லை என்றால் சினிமாத் துறைக்குள் பயணப் பட்டிருப்பேனா என்பது சந்தேகம். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் ஆசை, அதை அனுபவிக்கும் எண்ணம் எல்லோருக்கும் உண்டு. அதற்குத் தடை வரும்போது பெண்கள் சிதைந்து போகிறார்கள். எல்லாப் பெண்கள் மனதிலும் சிதைந்த அந்த கனவுகள் உண்டு. அவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையிலேயே அந்த ஏக்கமும்.. அதை நம்மிடம் வெளிப்படுத்தும் பிரமிப்பும் புரியும்.

என்னோடு படித்த அத்தனை பெண்களின் இறக்கையாகவே நான் பறக்கிறேன். டி.வி.யில் என்னை, என் இன்டர்வியூவை பார்க்கும்போது நான் புதைத்து வைத்த ஆசை எல்லாம் நீ சுமந்துகிட்டு பறக்கிற…எனக்கு மகிழ்ச்சியா இருக்குடீ என என் கிராமத்து தோழி சொல்லும்போது நான் எவ்வளவு சுதந்திரத்தை அனுபவிக்கிறேன் என்பது எனக்குப் புரியும். அதை நான் எப்போதும் உணர்கிறேன். என் தோழிகள் வாழ நினைத்த வாழ்வை சுதந்திரமாய் நான் வாழ்கிறேன். வாழ்க்கையில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. நாம் எந்த பாதையை தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் தான் வெற்றி உள்ளது. என் வாழ்க்கைய நான் தெளிவாய் வாழ்கிறேன். எனது ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்தே எடுத்து வைக்கிறேன். திருமணத்தில் துவங்கி குழந்தை பெற்றுக்கொள்வதுவரை நானே முடிவு செய்கிறேன். காதல் தவறில்லை. ஆனால் மெச்சூரிட்டி வந்த பிறகே காதலிக்கனும். காதலும் கல்யாணமும் ஒரு நம்பிக்கை. அதில் ஆழமாக உள்ளே போகும் போதுதான் திருமணம் வெற்றி அடையும்.’’Post a Comment

Protected by WP Anti Spam