By 21 March 2019 0 Comments

பெண்களை பாதிக்கும் நோய்கள்!! (மகளிர் பக்கம்)

சினிமா துவங்கி சீரியல் வரை பெண்கள் கேலிப் பொருளாக காரணம் உடற்பருமன்தான். உடற்பருமன் என்பது பெண்களை உடலளவில் மட்டுமில்லாது மனதளவிலும் பெரிய அளவில் பாதிக்கிறது. உடற்பருமன் ஏற்பட காரணங்கள் என்ன? உடற்பருமனால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன என்பதை விளக்குகிறார் டாக்டர் திலோத்தம்மாள்.

“உலகளவில் 18 வயதை தாண்டிய பெண்கள் 300 மில்லியன் பேர் உடற்பருமன் உடையவர்களாக இருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது. நேஷனல் ஃபேமிலி ஹெல்த் என்கிற நிறுவனம் இதுவரை 4 சர்வே எடுத்திருக்கிறார்கள். கடைசியாக அவர்கள் சர்வே எடுத்தது 2015 – 16 ஆண்டு. இதில் இந்தியாவை பொறுத்தமட்டில் நகரத்து ஆண்கள் 26.3 சதவிகிதம் பேரும், நகரத்து பெண்கள் 31.3% பேரும், கிராமத்து ஆண்கள் 14.3% பேரும், கிராமத்து பெண்கள் 15% பேரும் உடற்பருமனோடு இருக்கிறார்கள் என ஆய்வு அறிக்கை சொல்கிறது. கிராமத்தை விட நகரத்தில் ஆண், பெண் இருவருமே அதிகமான உடற்பருமனோடு இருக்கிறார்கள். வீட்டில் வேலைக்கு ஆட்கள் வைத்திருப்பவர்கள் அதிகமாக உடற்பருமனோடு இருக்கிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேவைக்கதிகமான கொழுப்பு உடலில் சேருவது உடற்பருமன் எனப்படுகிறது. உடற்பருமன் பிஎம்ஐ (BMI- Body Mass Index) வைத்து கணக்கிடப்படுகிறது. அதாவது நம் உடலின் எடை மற்றும் உயரம் போன்றவற்றைக் கொண்டு பிஎம்ஐ கணக்கிடப்படுகிறது. பிஎம்ஐ இன் அளவுப்படி 25ஐ தாண்டியவர்கள் கூடுதலான எடையோடு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். பிஎம்ஐ இன் அளவு 30 -35ஐ இருக்கும் போது திட்டமான உடற் பருமனோடு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. உடற்பருமனிலிலே பிஎம்ஐ 35லிருந்து 40க்குள் இருந்தால் அதிகமான உடற்பருமன். பிஎம்ஐ 40க்கு மேல் இருந்தால் மிக அதிகமான உடற்பருமன் என கணக்கிடப்படுகிறது.

பொதுவாக பெண்களுக்கு பியர் வடிவில் (pear) உடல் அமைப்பு இருக்கும். உடலின் மேல்பாதி சிறியதாகவும் கீழ்பாதி (இடுப்புப்பகுதி) பெரிய அளவிலும் இருக்கும். மெனோபாஸ்க்குப் பிறகு பல பெண்களின் உடல் அமைப்பு ஆப்பிள் போன்ற வடிவத்திற்கு மாறிவிடுகிறது. அதற்கு அவர்களுக்கு விழும் தொப்பை ஒரு காரணம். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 73 சதவிகிதம் பெண்கள் தொப்பையோடு இருக்கிறார்கள் என்கிறது சர்வே. மெனோபாசுக்கு முன் நம் உடலில் இருக்கும் கொழுப்பு நம் தோலின் கீழ்ப் பகுதியில் இருக்கும். ஆனால் மெனோபாசுக்கு பின் கொழுப்பு வயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகளின் மேல் படிய ஆரம்பிக்கிறது. அதாவது குடல், இரைப்பை, மண்ணீரல், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளுக்கு மேல் படிகிறது. அதனால் தான் தொப்பை விழுகிறது. அதாவது வயிறு பெரிதாகிறது. பொதுவான உடல்பருமனை விட வயிற்றுப் பகுதி பெருத்துப்போவது இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

உடற்பருமனுக்கான காரணங்கள்

*நம் உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலுக்குத் தேவையான கலோரியின் அளவைவிட அதிகமான உணவை உட்கொள்ளுதல். தொடர்ந்து இப்படி உணவு எடுத்துக்கொள்ளும் போது உடற்பருமன் ஏற்படுகிறது.
*(தேவைக்கு அதிகமாக 3500 கிராம் கலோரி கூடுதலாக சாப்பிடும் போது ஒரு பவுண்டு எடை கூடுகிறது.
*கன்னாபின்னாவென்று உணவு உட்கொள்ளுதல், கண்ட கண்ட உணவுகளை உட்கொள்ளுதல்.
*செயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்ளுதல்.
*சரியான தூக்கமின்மை.
*தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பது.
*21 சதவிகிதம் பரம்பரை ரீதியாக உடற்பருமன் வரலாம்.
*எங்க போனாலும் டூவீலர் அல்லது காரைப் பயன்படுத்துதல்.
*அதாவது நடப்பது மற்றும் சைக்கிள் ஓட்டுவதை தவிர்த்தல்.
*தேவையான உடற்பயிற்சி இன்மை.
*வீட்டு வேலைகள் செய்யாதிருத்தல். அதாவது தேவையான உடல் செயல்பாடில்லாதிருத்தல்.
*ஒரே இடத்தில் அமர்ந்தபடி அளவுக்கு அதிகமான நேரம் தொலைக்காட்சி பார்த்தல்.
*வலிப்பு நோய், மன நோய் போன்ற வேறு சில பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் ஒரு சில மருந்து மாத்திரை களாலும் உடற்பருமன் ஏற்படும்.

உடற்பருமனால் ஏற்படும் பிரச்னைகள்

உடற்பருமன் உடல் ரீதியாக, மன ரீதியாக மட்டுமில்லாமல் சமூகரீதியாகவும் பிரச்னைகளை ஏற்படுத்தும். உடற்பருமன் அதிகமாகும் போது கீழ்க்கண்ட பிரச்னைகள் வரலாம்.

*நீரிழிவு நோய்
*ரத்த அழுத்தம்
*இதய நோய்கள்
*முதுகு வலி
*மூட்டு வலி
*பலவீனமான எலும்புகள்
*மாதவிடாய் கோளாறுகள்
*பிசிஓடி பிரச்னைகள்
*மலட்டுத்தன்மை
*பலவிதமான புற்றுநோய்கள் (கர்ப்பப்பை, சினைப்பை அல்லது மார்பக புற்றுநோய்)
*விட்டமின் டி குறைபாடு
*தூக்கக் கோளாறுகள்
*தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (ஸ்லீப் அப்னியா)
*பித்தப்பையில் கற்கள்
*ஏற்கனவே ஆஸ்துமா இருப்பவர்களுக்கு ஆஸ்துமா மேலும் அதிகரிக்கும் அபாயம்.
*சிறுநீர்க் கசிவு
*சிறுநீர்ப் பாதை தொற்று
*தோல் வியாதிகள்
*அரிதாக சிலருக்கு டிமென்சியாவும் ஏற்படலாம்.
*மல்டிபிள் சிரோசிஸ் (Multible Sclerosis)
*ஆயுட்காலம் குறைவு
*டூவிலர் விபத்துகளை குண்டானவர்கள் அதிகம் ஏற்படுத்துகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*உடலில் சுறுசுறுப்பிருக்காது. வேகமாக நடக்க, ஓட முடியாது.
*ஒரு சிலருக்கு படிப்பில் ஆர்வம் அவ்வளவாக இருக்காது.
*ஆடை அளவில் இருந்து ஆட்டோவில் உட்காருவது வரை எல்லாமுமே சிரமம்தான்.
*கேலி கிண்டலுக்கு ஆளாதல், அதனால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற பல பிரச்னைகளை குண்டாக இருப்பவர்கள் சந்திக்க நேரும்.

கர்ப்பத்தின் போது உடற்பருமன்

கர்ப்பத்தின் போது உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் ஒருசிலர் அளவுக்கு மீறிய உடல் எடையுடன் இருப்பார்கள். கர்ப்பமாக இருப்பதால் நல்லது என்று அளவுக்கு மீறி உணவு உட்கொள்ளுவார்கள். அதனால் உடற்பருமன் ஏற்படலாம். சிலருக்கு புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கும். ஒரு சிலருக்கு வேறு சில காரணங்களால் உடல் எடை கூடும்.

கர்ப்பத்தின் போது ஏற்படும் உடற்பருமனால் உண்டாகும் பிரச்னைகள்

*கர்ப்பத்தின் போது ஏற்படும் உடற்பருமனால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம்.
*கர்ப்பகால நீரிழிவு
*கர்ப்பகால ரத்த அழுத்தம்
*புரதச்சத்தானது சிறுநீரின்
*வழியே வெளியாவது.
*கருக்கலைவு
*குறைகாலத்தில் நிகழும் பிரசவம்.
*குறைபாடுள்ள குழந்தை
*குழந்தை பிறந்தவுடன் இறந்து போதல்
*குண்டானவர்களில் நிறைய பேருக்கு சிசேரியன் செய்ய வேண்டிய தேவை ஏற்படுவது.
*எடை மிக அதிகமான அல்லது மிகக் குறைவான எடையுடன் குழந்தை பிறத்தல்.
*குண்டாக இருப்பவர்களால் சரியாக தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை என ஆய்வுகள் சொல்கின்றன.

உடற்பருமனை தவிர்ப்பது எப்படி?

உடற்பருமனை தவிர்க்க சாப்பாட்டின் அளவைக் குறைக்க வேண்டும். நம் உடலுக்குத் தேவையான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். உணவை வேகமாக சாப்பிடாமல் மெதுவாக சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு முன் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையான அளவு தூங்க வேண்டும். தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இவற்றைத் தவிர்த்து பொதுவாக ஃபாஸ்ட்ஃபுட், காற்றடைக்கப்பட்ட பைகளில் விற்கப்படும் சிப்ஸ் வகைகள், எண்ணெய் பொருட்கள், டயட் கோக், குளிர்பானங்கள், செயற்கை இனிப்புகள், ஐஸ்கிரீம், சாக்லெட்ஸ், சோடா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகமான நேரம் தொலைக்காட்சிப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். உடல் செயல்பாடுகள் அவசியம். நம் வீட்டுவேலைகளை நாமே பார்த்துக்கொள்வது உடலுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். கர்ப்பமாக இருந்தாலும் தேவையான சத்தான உணவை உட்கொள்ள வேண்டுமே தவிர எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்பது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவறு. கர்ப்பமாக இருந்தாலும் உடல் செயல்பாடுகள் அவசியம். வெளிநாடுகளில் சில அலுவலகங்களில் தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தால் அதற்கான கார்டில் குறித்து கொள்வார்கள். வேலை செய்பவர்கள் உடற்பயிற்சிகளின் மூலம் தங்கள் உடல் எடையை குறைத்தால் இன்சூரன்ஸ் பணத்தில் பாதியை அலுவலகமே கட்டிவிடும். அது மாதிரியான விஷயங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கே செயல்படுத்தலாம்.Post a Comment

Protected by WP Anti Spam