பெண்களை பாதிக்கும் நோய்கள் !! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 3 Second

சில பெண்களுக்கு முகம், நகம் எல்லாம் வெளுத்துப்போயிருக்கும். சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வாக இருப்பாங்க. காரணம் ரத்தசோகை. இந்த ரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? ரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார் மருத்துவர் திலோத்தம்மாள்.“ நம் உடலின் அனைத்து திசுக்களுக்கும் தேவையான பிராணவாயுவை எடுத்துச் செல்பவை ரத்த சிவப்பணுக்கள்(RBC). சீரான ரத்த சிவப்பணுக்கள் தேவையான அளவு இல்லாத போது தான் ரத்த சோகை ஏற்படுகிறது.

ரத்த சோகை

ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக காரணமாக இருப்பது இரும்புச்சத்து அதிகமுள்ள புரதமான ஹீமோகுளோபின். நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் மற்ற பாகங்களுக்குக் கொண்டு செல்லவும், மற்ற பாகங்களில் இருந்து கார்பன்-டை ஆக்ஸைடை நுரையீரலுக்கு கொண்டு செல்லவும் ரத்த சிவப்பணுக்களை செயல்படுத்துவது ஹீமோகுளோபின் தான். அந்த ஹீமோகுளோபின் அளவு குறையும் போது ரத்த சோகை ஏற்படுகிறது. எலும்பு மஜ்ஜையில் இருந்து தான் ரத்த சிவப்பணுக்கள் உருவாகின்றன. ஹீமோகுளோபினும் ரத்த சிவப்பணுக்களும் உருவாக நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்து, பி12 வைட்டமின், போலிக் அமிலம் மற்றும் சில வைட்டமின்களும் தேவையாக இருக்கின்றன.

ரத்த சோகையின் வகைகளும் காரணங்களும்

இரும்புச்சத்து குறைபாடினால் ஏற்படும் ரத்தசோகை- தேவையான அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாமல் இரும்புச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் ரத்தசோகை தான் உலகத்தில் அதிகபட்ச ரத்த சோகைக்கான காரணமாக இருக்கிறது. தேவையான அளவு இரும்புச்சத்து இல்லையென்றால் ரத்த சிவப்பணுக்களுக்கான ஹீமோகுளோபினை எலும்பு மஜ்ஜையால் உருவாக்க முடியாது.ஊட்டச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் ரத்தசோகை- ஆரோக்கியமான ஹீமோகுளோபின்கள் உருவாக இரும்புச்சத்தை தவிர ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை தேவை. இந்த சத்துக்கள் உணவில் குறையும் போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைகிறது. குடல் பிரச்னைகள்- ரத்த அணுக்கள் உருவாக தேவையான சத்துக்களை உறிஞ்சும் சக்தியினை தடை செய்யும் குடல் பிரச்னைகள்.

மாதவிடாய் – ரத்த போக்கை ஏற்படுத்தும் மாதவிடாயானது பெண்களுக்கு ஆண்களை விட ரத்த சோகை அதிகம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது.

கர்ப்ப காலம் – கர்ப்ப காலங்களில் இரு உயிருக்கு தேவையான அளவு ஹீமோகுளோபின் கர்ப்பிணி பெண்களுக்கு வேண்டும். அதற்கேற்ற அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாத போது கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் தட்டுப்பாடு ஏற்படுவதால் ரத்தசோகை ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாத போது ரத்தசோகைக்கான ரிஸ்க் அதிகரிக்கிறது.

நாட்பட்ட நோய்களினால் ஏற்படும் ரத்தசோகை – கேன்சர், சிறுநீரகக்கோளாறு, கல்லீரல் கோளாறு போன்ற நாட்பட்ட நோய்களின் காரணமாக ரத்தசோகை ஏற்படுகிறது. நாட்பட்ட நோய்கள் மற்றும் வலி நிவாரண மருந்துகளால் ஹீமோகுளோபின் உருவாவது தடைபடுவதால் ரத்த சோகை ஏற்படுகிறது.

எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் – லுகோமியா மற்றும் மைலோஃபைப்ரோஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களின் காரணமாக ரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் குறையும். தேவையான அளவு ரத்த சிவப்பணுக்கள் உருவாகாதது.

ரத்த சிவப்பணுக்கள் விரைவில் அழிந்து போதல் – ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி வேகத்தை விட அதன் அழிவு விகிதம் அதிகமாக இருக்கும் போது ரத்த சோகை பிரச்னை ஏற்படும். இதனை ஹீமோலிடிக் அனீமியா என்பார்கள். மரபு வழியாக ஏற்படும் சில ரத்த நோய்களினால் இந்தப் பிரச்னை ஏற்படும்.

சிக்கில் செல் அனீமியா

சிவப்பணுக்களில் ஏற்படும் வடிவ மாற்றத்தால் அதன் ஆயுட்காலத்திற்கு முன்பே அந்த ரத்த அணுக்கள் அழிந்து விடும். இதனை சிக்கில் செல் அனீமியா என்கிறோம்.சீரான ரத்த சிவப்பணுக்கள் இல்லையென்றால் சீக்கிரமே அந்த சிவப்பணுக்கள் அழிந்து போகும். அதாவது ரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் காலம் 120 நாட்கள். அதன் வடிவில் மாற்றம் அதாவது உருண்டையான வடிவில் சிவப்பணு இருந்தால் அவை சீக்கிரமே அழிந்து விடும். மரபு ரீதியாக – முன்னோருக்கு இந்த சிக்கில் செல் அனீமியா பிரச்னை இருந்தால் வாரிசுகளுக்கும் இந்தப் பிரச்னை ஏற்பட அதிகம் வாய்ப்புண்டு.

மற்றும் சில காரணங்கள் – தொற்று நோய்கள், குடி, அதீத மருந்து உபயோகம், ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதிகள் போன்ற பல காரணங்களாலும் ரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் குறைந்து ரத்த சோகை ஏற்படலாம். வயது – வயது முதிர்வின் காரணமாகவும் ரத்த சோகை ஏற்படலாம். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 51 சதவிகிதம் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயதில் இருந்து 49 வயது வரை (மாதவிடாய் தொடங்கும் பருவகாலத்தில் இருந்து மெனோபாஸ் கால கட்டம் வரை) இந்தப்பிரச்னை பெண்களை அதிகமாக பாதிக்கிறது.

ரத்த சோகைக்கான அறிகுறிகள்

சோர்வு, தோல் வெளுத்துப்போதல், மூச்சு வாங்குதல், இதய படபடப்பு, மயக்கம், தலைவலி, நெஞ்சு வலி, குளிர்ந்த கைகள் மற்றும் பாதங்கள். இரும்புச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றை சாப்பிடுவார்கள். ரத்த சோகையின் ஆரம்ப அறிகுறிகளை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்த அறிகுறிகள் அதிகமாகும் போது ரத்த சோகைப் பிரச்னையும் அதிகமாகி விடுகிறது.

ரத்த சோகை அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்

அதீத சோர்வு – உங்களின் தினசரி வேலைகளை கூட செய்யமுடியாதபடி ஏற்படும் அளவுக்கு அதிகமான சோர்வு. பிரசவகால பிரச்னைகள் – ரத்த சோகையினால் பிரசவ காலத்தில் நிறைய பிரச்னைகள் ஏற்படும். குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
இதயக் கோளாறுகள் – அதீத அல்லது ஒழுங்கீனமான இதயத் துடிப்பு. ரத்த சோகை இருக்கும் போது உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை அனுப்புவதற்கு இதயம் அதிகமான ரத்தத்தை அழுத்தம் கொடுக்க வேண்டி இருப்பதால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது.
மரணம் – ரத்தசோகை பிரச்னை தீவிரமாகும் போது வாழ்க்கையை அச்சுறுத்துமளவிற்கு அபாயகரமான பிரச்னைகள் ஏற்படும். சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம்.

எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடினால் ஏற்படும் ரத்தசோகையை இரும்புச்சத்துள்ள மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது சரிசெய்து விட முடியும்.

இரும்புச்சத்துள்ள உணவுகள்

கீரைகள், காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், அசைவ உணவுகள், கோதுமை.

ஃபோலேட் அமிலம்

ஃபோலிக் அமிலத்தில் இருந்து கிடைக்கும் ஃபோலிக் வைட்டமின், கீரைகள், காய்கறிகள், வேர்க்கடலை, பச்சைப்பட்டாணி, பழங்கள், பழரசங்கள் மற்றும் அரிசி உணவுகளிலும் கிடைக்கும்.

பி12 வைட்டமின்

பால் பொருட்கள், சோயா, அசைவ உணவுகள், தானியங்கள்.

வைட்டமின் ‘சி’

உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் ‘சி’ சத்து தேவையானது. சிட்ரஸ் அமிலம் உள்ள பழங்கள், மிளகு, பிரக்கோலி, தக்காளி, கிர்ணி மற்றும் தர்பூசணி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் போன்றவற்றில் இருந்து கிடைக்கும்.

பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ‘ஏ’

பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ‘ஏ’வும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு தேவையானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பசலைக்கீரை, சிவப்பு மிளகு, ஆரஞ்சுப்பழம், ஆப்ரிகாட் போன்றவற்றில் இந்த சத்துக்கள் கிடைக்கும். நாம் தேவையான அளவு இரும்புச் சத்துள்ள உணவை உட்கொண்டாலும் அதனை நம் உடல் உறிஞ்சும் தன்மை இருக்க வேண்டும். சைவ உணவுகளை விட அசைவ உணவுகளில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் எளிதாக உறிஞ்சிக்கொள்ளும்.

முளைகட்டிய பயறுகளில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் எளிதாக உறிஞ்சிக் கொள்ளும். கால்சியம் சத்து மாத்திரைகள் நம் உடம்பு இரும்புச் சத்து உறிஞ்சும் தன்மையை தடுக்கும் தன்மை உடையவை. இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது கால்சியம் சத்து மாத்திரைகளும் சாப்பிட வேண்டி இருந்தால் தனித்தனியாக சாப்பிடுவது நல்லது. அதாவது கால்சியம் மாத்திரையை காலையில் சாப்பிட்டால் இரும்புச்சத்து மாத்திரையை இரவில் என வேளை மாற்றி சாப்பிடுவது நல்லது.

உணவோடு டீ, காபி போன்றவற்றை எடுத்துக்கொண்டால் உணவில் இரும்புச் சத்து சேருவது தடுக்கப்படும். இரு வேளை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடலாம். ரத்தசோகையை தீர்க்கும் தேவையான அளவு ஊட்டச்சத்தினை உணவில் இருந்து பெற முடியாத போது மருத்துவரிடம் சென்று இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வதந்தி பரப்பினால் நீதிமன்றத்திற்கு செல்வேன் !! (சினிமா செய்தி)
Next post பெண்களை பாதிக்கும் நோய்கள்!! (மகளிர் பக்கம்)