சருமமே கண்ணாயிரு…. !! (மருத்துவம்)

Read Time:12 Minute, 16 Second

அழகே… என் ஆரோக்கியமே…

சருமம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனாலும், ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மையும் மாறுபடும் என்பதும், அதற்கேற்ப பராமரிப்பு முறைகள் மாறும் என்பதும் நீங்கள் அறிந்ததுதான். அந்த வகையில் வயதுக்கேற்ற சருமப் பராமரிப்பு பற்றி இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்ப்போம்… குழந்தைகளுக்கு ஏற்ற சருமப் பராமரிப்பு குழந்தை பிறந்தவுடன், ஒரு மணி நேரம் தாயின் உடலோடு ஒட்டியிருக்கும்படி வைப்பது நல்லது. பிறந்து 2 வாரங்கள் வரை தோலை பாதுகாக்கும் அமில கவசம்(Acid mantle) முழுமையாக உருவாகாது.

அதனால் பிறந்த முதல் 2 வாரங்களில் நாம் உபயோகப்படுத்தும் சோப்பு மிதமானதாகவும், அமிலத்தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும். குளிப்பாட்டியவுடன் மாய்ச்சரைஸரை உடனே தடவ வேண்டும். குளிப்பாட்டும் நேரம் 5 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும். நீண்ட நேரம் குளிப்பாட்டுவதையும், பெரியவர்களின் சோப்பை குழந்தைகளுக்கு உபயோகப்படுத்துவதையும் தவிர்க்கவும். விளையாடும் வயதுள்ள குழந்தைகள், மண்ணில் விளையாடி வந்தவுடன் குளிக்க வைக்க வேண்டும்.

அதைச் செய்ய முடியாவிடில் கை, கால்களை கண்டிப்பாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். கிருமி நாசினி சோப்பை தினசரி பயன்பாட்டில் அதிகம் உபயோகப்படுத்தக் கூடாது. நம் சருமத்தில் கெட்ட கிருமிகளை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு நல்ல கிருமிகள் அவசியம் தேவை. சுத்தமாக இருக்கிறேன் என்று கிருமி நாசினி சோப்பை போட்டு அடிக்கடி குளிப்பது அல்லது அடிக்கடி பயன்படுத்தி கை கழுவுவதும் சரியல்ல. மலம் கழித்த பின்பும், உணவு உண்பதற்கு முன்பும் கிருமிநாசினி சோப் பயன்படுத்தலாம்.

வளர் இளம் பருவ வயதினர் எப்படி சருமத்தை பராமரிக்கலாம்?

குழந்தை பருவத்திலிருந்து, வளர் இளம் பருவத்தை அடையும்போது பருக்கள் வர ஆரம்பிக்கும். முகத்தில் எண்ணெய் சுரப்பு அதிகமாகும். இவர்கள் அடிக்கடி முகத்தை கழுவுவது அவசியம். Salicylic Acid அல்லது Glycolic Acid face wash-ஐ முகம் கழுவ உபயோகிக்கலாம். இந்த வயதில் பருக்கள் வருவது இயல்பானதுதான். இதற்கெல்லாம் வைத்தியம் வேண்டாம் என்ற கருத்து பல பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது.

ஆனால், தற்போதைய சூழலில், நாம் உட்கொள்ளும் உணவு, பால் போன்ற பொருட்களில் என்னென்ன கலப்படம் செய்கிறார்கள் என்பதைப்பற்றி நமக்குத் தெரியாது. எனவே, ஆரம்பத்திலேயே பருவிற்கு சிகிச்சை செய்ய வேண்டும். பரு தழும்புகள்/கரும்புள்ளிகள் இல்லாமல் சரி செய்யப்படும். A Stitch in time saves nine என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. ஆரம்ப நிலை சிகிச்சை பல பிரச்னைகளையும், செலவுகளையும், மன உளைச்சலையும் தவிர்க்கும்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் சருமத்தில் என்ன வித்தியாசம்?

பெண்களைவிட, ஆண்களுக்கு எண்ணெய் (சீபம்) சுரப்பு, தோலின் தட்ப வெப்ப நிலை, சருமத்தின் வழியே ஆவியாகிச் செல்லும் தண்ணீரின் அளவு போன்றவை அதிகமாகவும், குறைந்த அளவு pH-ம் இருக்கும்.ஆண்களுக்கு அதிக எண்ணெய் சுரப்பு இருப்பதால், அவர்கள் உபயோகப்படுத்தும் க்ரீம்கள் Gel base-ல் இருக்க வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால், ஏற்கெனவே பிசுபிசுப்பு உள்ள ஆண்களின் சருமம், இன்னும் பிசுபிசுப்பாகி விடும். ஆகையால், அவர்கள் Salicylic Acid கொண்ட Face wash உபயோகப்படுத்தினால் நல்லது. ஆண்களுக்கு உடம்பில் வியர்வையினால் துர்நாற்றமும் அதிகமாக இருக்கும். இரண்டு வேளை குளிக்க வேண்டியது அவசியம். தேவைப்பட்டால் Benzoyl peroxide கொண்ட பாடி வாஷ்களை உபயோகப்படுத்தலாம்.

ஆண்கள் அடிக்கடி ஷேவ் செய்ய வேண்டியிருப்பதால், ஷேவிங் க்ரீம்களில் நல்ல மாய்சரைசர்ஸ் இருக்க வேண்டியது அவசியம். முடியின் வளர்ச்சிக்கு எதிரான திசையில் ஷேவ் செய்தால், சிலருக்கு முடி வெளியில் வந்து திரும்பவும் உள்ளே சென்று வளரும் தன்மையை அடைந்துவிடும். இதை Pseudofolliculitis Barbae என்று அழைப்போம்.

சாதாரண சிகிச்சையில் இது சரியாகாவிடில் சிலருக்கு லேசர் செய்து அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி வேகத்தை குறைக்க வேண்டியிருக்கும். ஷேவிங் முடிந்தவுடன் உபயோகப்படுத்தும் After shave lotion காரணமாக ஆண்களின் தோல் எரிச்சல் அடையக்கூடும். சின்ன காயங்கள்கூட சில ஆண்களுக்கு கரும்புள்ளியை உருவாக்கிவிடக்கூடும். அதனால் ஷேவ் செய்யும்போது கொஞ்சம் கவனமாகச் செய்ய வேண்டும்.

கர்ப்ப காலத்தில் எவ்வாறு சருமத்தைப் பராமரிக்க வேண்டும்?

கர்ப்ப காலத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகள் சுமார் 10 வகையான சருமப் பிரச்னையை சந்திக்கக் கூடும். இவற்றில் கர்ப்பப்பை விரிவடைவதால் தோலில் ஏற்படும் தழும்புகளை மிகவும் அதிகமாக வரக்கூடிய பிரச்னை என்று சொல்லலாம். இதை Striae Gravidarum என்றழைப்போம். சிலருக்கு இதனால் வயிற்றில் அரிப்பும் ஏற்படும். வைட்டமின் E நிறைந்த மாய்ச்சரைசர்களை குளித்தவுடன் உபயோகப்படுத்தினால் இந்த தழும்புகளின் வளர்ச்சி விகிதத்தையும், அரிப்பையும் குறைக்கலாம். அடுத்தது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் மங்கு(Melasma). இதை தவிர்ப்பதற்கு Sunscreen உபயோகிக்க வேண்டும்.

வயதானவர்கள் என்னவெல்லாம் செய்து சருமத்தை பாதுகாக்கலாம்?

வயதாகும்போது எண்ணெய் சுரப்பியின் செயல்பாடுகள் குறையும் என்பதால் வயதானவர்களுக்கு எளிதில் சருமம் வறண்டுவிடும். ஆகையால், இவர்களும் மிதமான சோப்பையே உபயோகப்படுத்த வேண்டும். அதிக நேரம் குளிக்கக் கூடாது. குளித்தவுடன் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளக் கூடிய மாய்சரைசர்ஸ் உபயோகிக்க வேண்டும். முடிந்தால் கைகள் கழுவும் வாஷ் பேசின் அருகிலேயே ஒரு மாய்சரைசர்ஸ் டப்பாவை வைத்து, கை கழுவியபின் அதை தடவ வேண்டும்.

Sunscreen கிரீம்கள் மாய்சரைசர்ஸோடு சேர்ந்த வகையை இவர்கள் உபயோகிப்பது நலம் தரும். வயதாகும் வரை காத்திருக்காமல் 30-40 வயது முதலே இரவில் Retinoic Acid, Vitamin C போன்றவற்றைக் கொண்ட Anti-aging க்ரீம்களை உபயோகித்து வந்தால் முகத்தில் உருவாகும் சுருக்கங்களை தள்ளிப்போடலாம். பெண்களுக்கு மாதவிடாய் நின்றபிறகு, தோல் சுருக்கங்கள் அதிகம் ஏற்படும். ஆகையால், அவர்கள் கண்டிப்பாக மேற்கூறிய Night Cream-களை உபயோகிக்க வேண்டும்.

சரும நலனைக் கெடுக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது?

புகைப்பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு சீக்கிரமாக தோல்பகுதி சுருங்க ஆரம்பித்து விடும். மேலும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு காயம் ஏற்பட்டால் புண்கள் ஆறுவதற்கும் அதிக நாளாகும்.மது அருந்துபவர்களுக்கு சொரியாஸிஸ், கரப்பான் போன்ற பிரச்னைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம்.

இதேபோல் காலாவதியான அழகு சாதன க்ரீம்களை உபயோகப்படுத்தக்கூடாது. உபயோகப்படுத்தக்கூடிய தேதி முடிந்துவிட்ட பிறகு அந்த க்ரீம்களில் கிருமித்தொற்று ஏற்படும். காலாவதியான க்ரீம்களை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் Staphylococcus Aureus மற்றும் Pseudomonas Aeruginosa போன்ற கிருமிகள் வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியாவானது, எந்தக் கீறலும், சாயமும் இல்லாத தோலைக்கூட ஊடுருவி நோய்களை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது.

இப்போதெல்லாம் மேக்கப் என்பது பொதுவான விஷயமாகிவிட்டது. அனைவருமே மேக்கப் போடுகிறோம். அனைத்து நாட்களிலும் மேக்கப் போடுகிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் சிரத்தையோடு, தூங்கும் முன் அதை ஒழுங்காக மேக்கப்பை அகற்றும் வகையில்
கழுவுகிறோம் என்று கேள்வி எழுப்பினால் சரியான பதில் கிடைக்காது. மேக்கப்பை நீக்காமல் தூங்கக்கூடாது. அதேபோல் தரமற்ற மேக்கப் சாதனங்களை உபயோகப்படுத்தக்கூடாது.

கடைகளில் விற்கப்படும் OTC cream-களில் நிறைய மணமூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். அவை அலர்ஜியை ஏற்படுத்தலாம். அதனால் அதிக மணமில்லாத, அலர்ஜியை ஏற்படுத்தாத க்ரீம்களையே தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.நாம் பிரபலமான கடைகளில் வாங்கி உபயோகப்படுத்தும் க்ரீம்களில் பருக்கள் ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் எவையெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். Avocado oil, Cocoa Butter, Coconut oil, Lanolin, Evening Primrose oil, Isopropyl Myristate, Isopropyl Palmitate போன்ற பொருட்கள் அவற்றில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் எப்படி டாக்டர் நினைவில் வைத்துக் கொள்வது என்று கேட்கிறீர்களா? ஓர் எளிய வழிமுறையைச் சொல்கிறேன். Non Comedogenic என்று எழுதியிருந்தால் அதை நீங்கள் கவலையின்றி வாங்கி உபயோகிக்கலாம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்? (அவ்வப்போது கிளாமர்)
Next post 💚❤️ எப்படி எல்லாம் பேசுதுங்க கலக்கல் டப்ஸ்மாஸ்!! (வீடியோ)