கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:21 Minute, 8 Second

பெண்கள் அணிகலன், உடை, ஒப்பனை என தன்னழகை மிளிரச் செய்ய பயன்படுத்துகின்றனர். ஆண் தனது ஆளுமையால், அறிவால், உடல் கட்டழகால், திறமையால் பெண்ணை ஈர்க்க முயல்கின்றான். ஆக எந்த ஆணுக்குள்ளும் எப்போதும் ஒரு ஹீரோயிஸத்துக்கான வேட்கை ஒளிந்துள்ளது. பாலின்ப வேட்கைக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் வயது ஒரு தடையாய் இருப்பதில்லை.

எல்லாக் காலத்திலும் ஹீரோக்களாகவும், கனவு நாயகிகளாகவும் வலம் வரவே விரும்புகின்றனர். திருமணத்துக்குப் பின் ஆயுளுக்குமான அன்பின் பந்தம் இனிதாய்த் தொடர தாம்பத்ய உறவில் எந்த சிக்கலும் இன்றி இருக்க வேண்டியது அவசியம். இதற்கு அன்பு மட்டும் போதுமா?

ஆண், பெண் இருவருக்கும் திருமணத்தைத் தாண்டிய நெருக்கமான உறவில் எப்படி ஈர்ப்பு ஏற்படுகிறது? திருமணத்துக்குப் பின்னர் நாம் காட்டும் சோம்பேறித்தனத்தின் விளைவுதான். திருமணத்துக்கு முன் கண்ணாடியே கதியென்று கிடந்திருப்போம். பார்த்துப் பார்த்து உடுத்தி, இடுப்பில் ரெண்டு இன்ச் சதை கூடியதற்காக தூக்கம் தொலைத்து டயட் சார்ட் தேடிக் கொண்டிருப்போம். இதெல்லாம் எல்லாக் காலத்திலும் தேவை என்பதை மறந்துவிடுகிறோம்.

அதிகபட்ச நம்பிக்கையும், அளவில்லா அன்பும் எண்ணத்தின் கண்களை மறைத்து விடுகிறது. உணவும், உடையும் வாழ்க்கைக்கு அவசியம். அந்த வாழ்வின் எந்தக் கணத்திலும் மகிழ்ச்சி குறைந்திடாமல் இருக்க ஃபிட்னஸும் முக்கியம்’’ என்கிறார். ஃபிட்னஸ் கன்சல்டன்ட் ஜெயக்குமார். தாம்பத்ய வாழ்வின் திகட்டாத இன்பத்துக்கும் தித்திக்கும் அன்புக்குமான ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார்.

ஆண் – பெண் இருவருக்கும் ஃபிட்னஸ் ஏன் அவசியம்?

‘‘முதலில் நம்மை நமக்குப் பிடிக்க வேண்டும். திருமணம் வரை உடல் எடையைப் பராமரிக்கும் அக்கறை திருமணத்துக்குப் பின் காணாமல் போகிறது. நாம் ஏன் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பது பற்றிய அறியாமையால் கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். உடற்பயிற்சியின் நன்மைகள் தெரிந்திருந்தாலும் நேரம் இல்லை என்ற காரணத்தைச் சொல்கின்றனர்.

நமது நேரத்தை எதற்கெல்லாம் செலவிடுகிறோம் என்று திரும்பிப் பார்த்தால் எவ்வளவு நேரத்தை வீணாகச் செலவழிக்கிறோம் என்பது புரியும். இரவு டிவி சீரியல், சாட்டிங் என்று நல்லிரவு வரை நேரம் வீணாகும். இதனால் காலையில் தாமதமாக எழுந்து அவசர வாழ்க்கைக்கும் பழகிக் கொள்கின்றனர். ஆனால், இந்த அவசரமும் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையும் உடலிலும் உள்ளத்திலும் பலவிதப் பிரச்னைகளுக்குக் காரணம் ஆகிறது.

அன்பைத் தக்கவைக்க உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது முதல்படி. இதற்காக தம்பதியர் நேர மேலாண்மையில் அக்கறை செலுத்த வேண்டும். நேரத்தை முறைப்படி திட்டமிட்டு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியும். உடற்பயிற்சியை சிறு வயதில் இருந்தே லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும். எந்த வயதினரும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். ஃபிட்டாக இருக்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். இது தாம்பத்யத்திலும் எதிரொலிக்கும்.’’உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டியது?

‘‘உடற்பயிற்சி செய்ய எண்ணம் வந்த உடன் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வது பணத்தை வீணடித்து உடற்பயிற்சி சாதனங்கள் வாங்கிக் குவிப்பதும் பலரும் செய்வது. ஆர்வம் வந்த உடன் ஆலோசனை பெறுவது முக்கியம். உங்களின் உடல் நலம், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுத் திட்டத்தைப் பின்பற்றலாம் என்பதையும் மருத்துவரின் ஆலோசனைப்படி முடிவு செய்யுங்கள். உங்கள் உடல்நிலைக்குப் பொருந்தாத உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.’’

உடற்பயிற்சியை எப்படி ஆரம்பிக்கலாம்?

‘‘ஆரம்பத்தில் உள்ள ஆர்வத்தில் யூ டியூப் போன்ற காணொலிகளைப் பார்த்து வீட்டிலேயே பயிற்சி செய்தால் பட்ஜெட் குறையும் என யோசிப்பவர்கள் உண்டு. ஆனால், உடற்பயிற்சியைப் பொறுத்தவரை அவர்களது உடல்நிலை அடிப்படையில் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. சான்றிதழ் பெற்ற ஃபிட்னஸ் டிரெயினரிடம் உங்களது மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் தேவையான உடற்பயிற்சியை முடிவு செய்யுங்கள். ஒரு சில மாதங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் வீட்டில் தேவையான உபகரணங்கள் வைத்துப் பயிற்சியைத் தொடரலாம்.’’

உடற்பயிற்சிக்கான நேரத்தை எப்படியெல்லாம் உருவாக்கலாம்?

‘‘வேலை நேரம் தவிர ரிலாக்ஸ் என்ற பெயரில் நாம் வீணடிக்கும் நேரங்களைப் பட்டியலிட வேண்டும். அதில் உடற்பயிற்சிக்கான நேரம் நிச்சயம் கிடைக்கும். வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்யக் கூடாது. இதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். நாம் அதிக நேரம் இருப்பது அலுவலகத்தில்தான். அதில் வேலை நேரம் தவிர டீ டைம், ரிலாக்ஸ் டைம் என்ற பெயரில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் இருக்கலாம் அல்லது முகநூல், வாட்ஸ் அப்பில் நேரம் தொலையும். இதெல்லாம் கவனித்துத் தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களின் உடல் நலன் கருதி அலுவலகத்திலேயே ஜிம் வைத்துள்ளனர். இது போன்ற வாய்ப்புக்களை கட்டாயம் பயன்படுத்தி, மாலை அல்லது வேலை முடிந்த பின்னர் கூட உடற்பயிற்சி செய்யலாம். பெண்களுக்கும் இது போன்ற வாய்ப்புகள் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். வேலையால் மனதில் சேரும் அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். உடலும் மனசும் லேசாகும். ஃபிரஷ்ஷாக வீட்டுக்குத் திரும்பலாம்.’’

திருமணமான தம்பதியர் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம்?

‘‘முதலில் நாம் ஃபிட்டாக இருக்கிறோம் என்ற எண்ணம் அவரவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும். உடலை பராமரிப்பதில் அக்கறை காட்டும்போது ஒருவர் மீது மற்றவருக்கு இருக்கும் கவர்ச்சி குறையாமல் இருக்கும். உடலில் தேவையற்ற கொழுப்பு சேரும்போது உடல் வடிவம் மாறி மனதளவில் ஒரு வித இடைவெளியை உருவாக்கும். திருமணத்துக்குப் பின் தாம்பத்ய வாழ்க்கையை இனிமையாக நடத்த முதல் தேவை உடல் ஆரோக்கியம்.

உடற்பயிற்சி வேறெந்த நோயும் உடலைத் தாக்காமல் பாதுகாக்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும். தவறான உணவுமுறை, வாழ்க்கைமுறை காரணமாக திருமணமான தம்பதியருக்கு குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. இதற்கான காரணத்தில் முதன்மையாக இருப்பது அதிக உடல் எடை.

ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்கள் தாக்கவும் அதிக உடல் எடையே காரணமாக உள்ளது. திருமணமான புதிதில் விருந்து, பயணம் என நிறைய சாப்பிட வாய்ப்புகள் உள்ளன. இதனால் திருமணமானதும் சிலருக்கு உடல் எடை கூடுவதைப் பார்க்கிறோம். உடல் எடையைக் கூட்டாமல் அத்தனை பிரச்னையில் இருந்தும் தப்பிக்க உடற்பயிற்சி உதவுகிறது.

மருத்துவர், ஃபிட்னஸ் டிரெயினரின் ஆலோசனையுடன் உங்களுக்கான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்துச் செய்யுங்கள். வெயிட்டைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வது தேவையற்ற கொழுப்பு மற்றும் தசையை இறுகச் செய்ய உதவும். உடற்பயிற்சி செய்தால் ஆணைப்போல ஆகிடுவோமோ என்று பெண்கள் அச்சப்படத் தேவை இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு ஹார்மோன்கள் சுரக்கிறது. உடற்பயிற்சியால் பெண்ணின் வடிவம் அழகாகி பெண்மை கூடும். ஆணுக்கு தன் மனைவியின் அழகின் மீதான ஈர்ப்பைக் கூட்டவே செய்யும்.’’

உடற்பயிற்சி தாம்பத்யத்துக்கு எவ்விதம் உதவுகிறது?

‘‘உடற்பயிற்சியானது மனித உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, ஹார்மோன் சுரப்பையும் சரி செய்கிறது. மேலும் உடற்பயிற்சி முடித்த பின் மூளையில் எண்டார்பின் சுரக்கிறது. இதனை ஹேப்பி ஹார்மோன் என்று சொல்வார்கள். ஒவ்வொருமுறையும் உடற்பயிற்சியை முடிக்கும் போது அது உங்கள் மன மகிழ்ச்சியைத் தூண்டுகிறது. இந்த மகிழ்ச்சியான மனநிலை நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் பிரதிபலிக்கும்.

தாம்பத்ய நேரங்களில் எந்த மனத்தடைகளும் இன்றி மகிழ்ச்சியாக ஈடுபட முடியும். உடற்பயிற்சியால் ரத்த ஓட்டம், ஹார்மோன் சுரப்பும் சீராக்கப்படுவதால் தாம்பத்ய உறவின்போது பேரின்பத்தின் அத்தனை எல்லைகளையும் உணர முடியும். ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை மற்றும் அது நீடித்திருப்பது, அவசரமாக விந்து வெளியேறாமை என உடற்பயிற்சி பலவிதங்களில் உதவுகிறது. திருமணமான தம்பதியர் இருவருமே சேர்ந்து உடற்பயிற்சி செய்வது அவர்களுக்குள் கெமிஸ்ட்ரியை அதிகரிக்கச் செய்யும். கப்புள் எக்ஸர்ஸைஸ் (Couple exercise) இவர்களுக்குச் சிறந்ததாக அமையும்.’’

கப்புள் எக்ஸர்ஸைஸ் என்ன மாதிரியான பலன்களைத் தருகிறது?

‘‘கப்புள் எக்ஸர்ஸைஸ் தம்பதியருக்குள் மிகப்பெரிய மாயத்தையே நிகழ்த்துகிறது. Australian government institute of studies நடத்திய ஆய்வில் கப்புள் எக்ஸர்ஸைஸ் கணவன் மனைவி உறவை பலப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். கணவனும் மனைவியும் பேசிக்கொள்ளவே நேரம் ஒதுக்க வேண்டிய இந்தக் காலகட்டத்தில் இருவருக்கும் பிரைவஸியான நேரம் இதன் வழியாகக் கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து நேரத்தைத் திட்டமிடும்போது வீட்டுப் பொறுப்புகளைப் பகிரவும், புரிதலுக்கும் வழி வகுக்கிறது.

உடற்பயிற்சியின் போது ஒருவர் சோர்ந்தால் மற்றவர் ஊக்கப்படுத்தலாம். இருவரும் சேர்ந்து செய்யும்போது உணவுத்திட்டம் உட்பட அனைத்தும் வீட்டிலும் முழுமையாகப் பின்பற்றப்படும். நேரம் ஒதுக்குவதில் பெரிய பிரச்னை இருக்காது. உடலில் ஏற்படும் மாற்றங்களை ரசிக்கவும், இருவருக்கும் இடையிலான ஈர்ப்பும் கூடும். உடலைப் பாதுகாப்பதில் செலுத்தும் அக்கறையும், அன்பும் அனைத்திலும் வெளிப்படும். சத்தான உணவு, டென்ஷன் இல்லாத வாழ்க்கை முறைக்கும் பழகுவார்கள். இதற்கென வீட்டிலேயே சிறிய ஜிம் வைத்துக் கொள்ளலாம்.’’

வீட்டில் ஜிம் வைக்க என்ன மாதிரியான உபகரணங்கள் வாங்க வேண்டும்?

‘‘வீட்டுக்குள்ளேயே நடக்க டிரெட்மில் வாங்குவது அதிக செலவு பிடிக்கும். அதற்கு பதிலாக சைக்கிளிங் தேர்வு செய்யலாம். Multipurpose பெஞ்ச் அவசியம் வாங்க வேண்டும். மூன்று நிலைகளுக்கு மாற்றி அதில் பலவிதமான உடற்பயிற்சிகள் செய்ய முடியும். இதை ஒரு நீண்டகால முதலீடாகக் கருதி தரமானதாக வாங்கிக் கொள்ள வேண்டும்.

பலவிதமாகப் பயன்படுத்தும் ரெசிஸ்டெண்ட் பேண்ட் கட்டாயம் இருக்க வேண்டும். டம்பெல் பெண்களுக்கு இரண்டரைக்கிலோ எடையில் இருந்து 5 கிலோ வரையும், ஆண்களுக்கு 10 கிலோ வரையும் வைத்துக் கொள்ளலாம். ஏரோபிக் பால் ஒன்றும் அவசியம். இதற்கான பட்ஜெட் 25 ஆயிரத்தில் முடித்திடலாம். வீட்டிலேயே உடற்பயிற்சியைத் தொடரலாம். உடலையே எடையாகப் பயன்படுத்தும் புஸ் அப்ஸ் பண்ணலாம். முறையான பயிற்சியாளரிடம் கற்றுத் தெளிந்த பின் வீட்டில் பயிற்சி செய்வது பொறுத்தமானதாக இருக்கும். ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சிகளும் உதவும்.’’

என்ன மாதிரியான உணவுகள் எடுக்க வேண்டும்?

‘‘கண்டிப்பாக புரதம் அதிகம் உள்ள உணவுகளாகத் தேடிச் சாப்பிட வேண்டும். புரதம் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடுவதில்லை. முடி முதல் நகம் வரை அனைத்தின் ஆரோக்கியத்துக்கும் புரதம் அவசியம். அசைவ உணவுகள் அனைத்திலும் புரதம் உள்ளது. தினமும் 6 முட்டை வரை சாப்பிடலாம். உடலுக்கு ஒவ்வாத உணவுகள், ரசாயனக் கலப்பு கொண்ட உணவு வகைகளையும் தவிர்ப்பது நல்லது. உங்களது உடல் எடைக்கு ஏற்ற உணவுத்திட்டத்தை உணவு ஆலோசகரிடம் பெற்றுப் பயன்படுத்த வேண்டும்.

தாம்பத்ய உறவுக்கு அடிப்படையே புரிதல்தான். கணவன் மனைவிக்கு இடையில் உடல் மீதான கவர்ச்சி இயல்பாகவே இருக்கக் கூடியது. அதனை உடற்பயிற்சியின் வழியாக எப்போதும் தக்க வைத்துக் கொள்ள முடியும். காதலுக்கும் காமத்துக்குமான இணைப்பை பலப்படுத்தி ஈர்ப்பை தக்கவைத்துக் கொள்ள, நினைத்து நினைத்து ரசிக்க… உங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.’’

* உடற்பயிற்சியால் ஆண், பெண் பிறப்புறுப்புப் பகுதிகளில் சீரான ரத்த ஓட்டம் உற்சாகத்தை அள்ளித்தரும்.

* உடல் சக்தி பெறுவதால் மூட் மாற்றங்கள் இன்றி எந்த எல்லையையும் எட்டித்தொடலாம்.

* எடை தூக்கும் பயிற்சிகளால் ஆணின் தோள், நெஞ்சு, வயிறு மற்றும் பாதங்களை வலிமை அடைகிறது. டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தியை அதிகரித்து காமப் பொழுதில் அன்பின் போர்க்களம் காண்பதற்கான ஆர்வத்தையும், வலிமையையும் வழங்குகிறது.

* பெண்ணுறுப்பை உறுதிப்படுத்தும் கெஜல் பயிற்சிகள் பெல்விக் புளோர் பகுதிக்கு செய்யலாம். உடலுறவுத் தருணத்தில் பெண் விளையாட்டாய் (பெண்ணுறுப்பால் ஆணுறுப்பை கவ்விப்பிடித்து விடுவிப்பது) இது கூட அப்பகுதிக்கான பயிற்சியே. பெண்ணுறுப்பு தளர்ச்சி அடையாமல் ஃபிட்டாக வைத்துக் கொள்ள இது உதவும்.

* உடலுறவும் கூட ஒருவிதமான உடற்பயிற்சியே. உடலின் கலோரிகளை எரித்து சக்தி அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து மகிழ்ச்சி ஹார்மோன்களைத் தூண்டுகிறது. ஆணுக்கு இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைத்து இதயத்துக்கு இதம் அளிக்கிறது.

* உடலுறவில் ஆர்வம் அதிகரிக்க ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி பெருக வேண்டும். மழை வெள்ளம் போல் மனதில் காமத்தின் கரைகளை உடைக்கும் வேலையை டெஸ்டோஸ்டிரோன் செய்கிறது. இதற்கும் உடற்பயிற்சியே உதவுகிறது.

* பெல்லி டான்ஸ் பெண்ணின் வயிற்றுப்பகுதி மற்றும் பின்பக்கத்தில் சேரும் கொழுப்பைக் கரைத்து செக்சியான தோற்றத்தைத் தக்க வைக்க உதவுகிறது.

* இணையுடன் கரம் கோர்த்துச் செல்லும் நடைபயணங்கள் உணர்வுப்பூர்வமாய் இணைத்து வைக்கிறது. ஏரோபிக் பயிற்சிகளும் செக்ஸ் உறுப்புகளுக்கான ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. காமத்தைக் கடிகாரத்துக்குக் கட்டுப்படாமல் கொண்டாட வைக்கிறது.

* தம்பதியர் இணைந்து ஆடும் சல்சா, டாங்கொ, பால்ரூம் டான்ஸ் (Salsa, tango and ballroom dance) அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. இந்த நடனங்களில் உள்ள அங்க அசைவுகள் செக்சுவலாகவும், நீவேறு நான் வேறு அல்ல என்பதை உணரச் செய்கிறது.

* தசைகள் வலிமையுற்று, ரத்த ஓட்டம் உற்சாகம் பெற்று உடல் காற்றுப் போல இயங்கினால் கடலின் கரைகளை நுரையால் நனைக்கும் அலைகளாய்… துவங்கி அலைகடலாய் காமப் பெருங்கடலில் விதம் விதமாய் நீந்தி விளையாடி முத்தெடுக்கும் வேளையில் மூச்சு முட்ட நெற்றியில் முத்தத்தால் முத்திரை பதிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுக்கு ஆபத்தான மீன் வகைகள்!! ( வீடியோ)
Next post சூரிய நமஸ்காரம்!! (மகளிர் பக்கம்)