By 20 March 2019 0 Comments

மோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை! (உலக செய்தி)

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மிக முக்கிய பொறுப்புகளில் தலைவராக இருப்பவர்களுக்கு பல்வகை திறமைகள் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியை பொருத்தவரை அது போன்ற திறமைகள் அவரிடம் இல்லை.

மக்கள் அவரிடம் மிக அதிகமாக எதிர் பார்த்தார்கள். அவர் குஜராத் மாடலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கூறினார். குஜராத்திலும் அவர் பெரிதாக எதுவும் சாதித்துவிடவில்லை. 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற மாதிரி குஜராத்தில் பொருளாதார அறிவுத்திறனை அவர் உருவாக்கவில்லை.

குஜராத்தை உற்று நோக்கினால் அடிப்படை திறன் உருவாக்காமல் இருந்ததை காண முடியும். அங்கு வர்த்தகத்தில் மட்டும்தான் மேன்மையாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் நான் தொழில் தொடங்குபவரை உருவாக்குகிறேன். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்றவற்றில் முதன்மை இடங்களில் குஜராத்தை சேர்ந்தவர்கள் வருவது இல்லை.

அதே நேரத்தில் ஒன்றுபட்ட ஆந்திராவில், அறிவுத்திறன் மிக்க இடமாக ஐதராபாத்தை மாற்றினேன். இன்று ஐதராபாத், பெங்களூர் போன்ற நகரங்கள் அறிவுத்திறன் மிக்க இடங்களாக உள்ளது.

பலரும் நம்புவதுபோல மோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை. ஒரு தலைவருக்கு ஆளுமை தகுதி இருந்தால் சிறந்த அறிவுத்திறன் கொண்டவரை மேலும் முன்னேற செய்ய வேண்டும். ஆனால் மோடி அவ்வாறு செய்வதில்லை.

அதிகார வர்க்கங்கள், ஊடகங்கள், அரசியல், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமைகளை அழிப்பவராக மோடி செயல்படுகிறார்.

இவ்வாறு தலைமை பண்புகளை அழித்தால் அது நாட்டுக்கே பேரழிவாகி விடும். என்னிடம் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிபர்கள் பலரும் மிகுந்த வேதனையோடு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அவர்கள் இந்த ஆட்சியில் கடுமையான மனஅழுத்தத்துடன் இருக்கிறார்கள். அவர்களை அவமதித்து இருக்கிறார்கள். மிரட்டி இருக்கிறார்கள்.

வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை ஏவி விடுகிறார்கள். இதனால் நாங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இந்த துறைகளை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த யாருமே இவ்வளவு மோசமாக பயன்படுத்தியது இல்லை.

கடந்த காலத்தில் நான் காங்கிரசோடு கடுமையாக மோதல் போக்கில் ஈடுபட்டேன். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் இதுபோன்று எங்கள் மீது நடந்து கொண்டது இல்லை.

எங்கள் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை பல முறை குறி வைத்து சோதனை நடத்தப்பட்டது. நாங்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டதை தவிர என்ன தவறு செய்தோம். இதற்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டுமா? எங்கள் ஆட்கள் எதையும் மறைத்து வைக்கவில்லை.

ஜெகன்மோகன் போன்றவர்கள் ஏராளமாக ஊழல் செய்து சொத்து சேர்த்து உள்ளனர். அவர்களது பாதுகாப்பு நடவடிக்கையில் தான் மத்திய அரசு செய்தது. பல ஆதாரங்களையும் நாங்கள் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

பிரதமர் மோடி தன்னை நாட்டின் காவலன் என்று கூறி கொண்டார் அவரிடம்தான் சாவி இருந்தது. ஆனால் திருடர்களும், ஊழல்வாதிகளும் பணத்தை சுருட்ட அனுமதித்து விட்டார்.

காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற சம்பவங்கள் போன்று அடிக்கடி நடந்துள்ளது. என்னை பொறுத்தவரை இந்த வி‌ஷயத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பயங்கரவாதிகள் ஒவ்வொரு முறை தாக்கும்போதும் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது என்று மோடி குற்றம்சாட்டி வந்தார். இப்போது மோடி ஆட்சியிலும் அது தான் நடந்துள்ளது.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது மைனாரிட்டி ஆட்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுத்து பல்வேறு மாற்றங்களை உருவாக்கினார். அதேபோல வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோரும் மைனாரிட்டி உறுப்பினர்களை கொண்டுதான் ஆட்சியை 5 ஆண்டு நடத்தினார்கள்.

பிரதமர் மோடி தனிப்பெரும் மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். அவர் என்ன வளர்ச்சியை உருவாக்கி இருக்கிறார். ஏன் இதுபோன்ற புள்ளி விவரங்களை மறைக்கிறீர்கள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.Post a Comment

Protected by WP Anti Spam