உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா? (கட்டுரை)

Read Time:23 Minute, 58 Second

உடைவுகளையும் பிளவுகளையும் அநேகமான அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சந்தித்திருக்கின்றன.
தலைவர்கள் மீது, தளபதிகளும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் கொள்ளும் அதிருப்திகள் கரையுடைக்கும் போது, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிளவடைகின்றமையை, வரலாறு நெடுகிலும் கண்டு வந்திருக்கின்றோம்

அட்டாளைச்சேனையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீடத்திலும் உள்ளூர் கிளைகளிலும் முக்கிய பதவிகளை வகித்த நூற்றுக்கணக்கானோர், அந்தக் கட்சியிலிருந்து கூட்டாக ‘இராஜிநாமா செய்கிறோம்’ என்று, அந்த நிகழ்வில் அறிவித்தனர். அட்டாளைச்சேனை, மூதூர், பொத்துவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு இராஜிநாமாச் செய்தனர்.

உதுமா லெப்பையின் விலகல்

தேசிய காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் இரண்டாம் நிலை செயற்பாட்டுத் தலைவருமான கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் இராஜிநாமாச் செய்தார். இதையடுத்தே, உதுமாலெப்பை முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் நடந்த நிகழ்வில் வைத்து, நூற்றுக்கணக்கானோர் தேசிய காங்கிரஸிருந்து விலகுவதாக அறிவித்ததோடு, தமது விலகல் கடிதங்களைக் கட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு கோரி, உதுமாலெப்பையிடம் ஒப்படைத்தனர்.

அரசியல் கட்சியொன்றிலிருந்து இராஜிநாமா செய்வதற்காக, ஒரு நிகழ்வையே ஏற்பாடு செய்து, அதில் நூற்றுக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாக மேடையேறி, ஊடகவியலாளர்கள் முன்பாகத் தமது இராஜிநாமா குறித்து அறிவித்தமையானது, அரசியலில் புதியதொரு விடயமாகும். இதனால், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது, மிக மோசமானதொரு வீழ்ச்சியைச் சந்திக்கும் நிலைவரமொன்றும் உருவாகியுள்ளது.

தேசிய காங்கிரஸின் வரலாறு

இலங்கையின் செயற்பாட்டு அரசியலில் மூன்று முஸ்லிம் கட்சிகள் உள்ளன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியவையே அந்தக் கட்சிகளாகும்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்ட உடைவுகளின் போது உருவானவையாகும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து ரவூப் ஹக்கீமை அகற்றுவதற்காக, தனது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் வெற்றியளிக்காத நிலையில், அந்தக் கட்சியிலிருந்து விலகி, 2003ஆம் ஆண்டு, இப்போதுள்ள தேசிய காங்கிரஸை, ‘அஷ்ரப் காங்கிரஸ்’ எனும் பெயரில் அதாவுல்லா ஆரம்பித்தார். பின்னர், ‘தேசிய முஸ்லிம் காங்கிரஸ்’ என்று கட்சிக்கு பெயர் மாற்றப்பட்டு, அதன் பிறகு ‘தேசிய காங்கிரஸ்’ ஆனது.

மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அரசியல் செய்தவர் அதாவுல்லா. ரவூப் ஹக்கீமுக்கு முன்பாகவே முஸ்லிம் காங்கிரஸுக்குள் அதாவுல்லா வந்து விட்டார். ரவூப் ஹக்கீமும் பேரியல் அஷ்ரப்பும் முஸ்லிம் காங்கிரஸுக்குள் இணைத் தலைவர்களாக இருந்த போது, ஹக்கீமைத் தனித் தலைவராக்கியவர் அதாவுல்லாதான். ஆயினும், அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர், முஸ்லிம் காங்கிரஸில் அவரால் தொடர்ந்தும் பயணிக்க முடியவில்லை.

குதிரைச் சின்னத்தைக் கொண்ட தேசிய காங்கிரஸை, அதாவுல்லா உருவாக்கி வளர்த்தெடுத்தமை என்பது, மிகப்பெரும் சாதனை என்பதில் இரண்டுபட்ட கருத்துகள் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில், அதுவும் அம்பாறை மாவட்டத்தில் அந்தக் கட்சிக்கு எதிராக மாற்றுக் கட்சியொன்றை உருவாக்கி வளர்த்தெடுத்தமை என்பது, சாமானியமான விடயமில்லை.

தேசிய காங்கிரஸை அதாவுல்லா ஆரம்பித்த காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸானது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமையால், அந்தக் கூட்டுக்கு எதிரான முகாமுடன் அதாவுல்லா கைகோர்க்க வேண்டியேற்பட்டது. அதனால், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவுடனும் பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் அதாவுல்லா கூட்டு வைத்துக் கொண்டார்.

அதன் காரணமாக, சுமார் 15 வருடங்கள் தொடர்ச்சியாகப் பலம் பொருந்தியதோர் அமைச்சராகப் பதவி வகித்தார்.

அதாவுல்லா, உதுமாலெப்பை கூட்டு

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எனும் பதவியையும் பின்னர் பிரதித் தலைவர் பதவியையும் வகித்த உதுமாலெப்பை அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். அக்கரைப்பற்றும் அட்டாளைச்சேனையும் அருகருகே உள்ள ஊர்களாகும்.

இதனால், அதாவுல்லாவும் உதுமாலெப்பையும் இணைந்து, தேசிய காங்கிரஸை வளர்ப்பதற்கு முடிந்தது. அதாவுல்லாவுக்கு, அவரின் சொந்த ஊரான அக்கரைப்பற்று, கிட்டத்தட்ட 90 சதவீதமான ஆதரவை வழங்கியது. அதனால், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றை அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸால் கைப்பற்ற முடிந்தது.

அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை எனக் கூறப்படும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியிலும் உதுமாலெப்பை தலைமையில், தேசிய காங்கிரஸ் ஐயாயிரத்துக்குக் குறையாத வாக்குகளைப் பெற்று வந்தது. இதனால், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் தேசிய காங்கிரஸுக்குப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

தேசிய காங்கிரஸ் சார்பாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அதாவுல்லா பதவி வகித்த போது, அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டில், இரண்டு உள்ளூராட்சி சபைகள் இருந்தன. கிழக்கு மாகாண சபையில், தேசிய காங்கிரஸுக்கு அப்போது நான்கு உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களில் உதுமாலெப்பை அமைச்சராகப் பதவி வகித்தார். குறிப்பாக, மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலமானது, தேசிய காங்கிரஸுக்குப் பொற்காலமாக இருந்தது.

ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா தோல்வியடைந்தார். அது மிக மோசமானதொரு படுதோல்வியாகும்.

கெட்ட காலம்

ஐக்கிய மக்கள் சுதரந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, 36,643 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த அதாவுல்லா, கடந்த பொதுத் தேர்தலில் வெறும் 16,711 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதற்குப் பின்னர்தான், அவருக்கும் அவரின் கட்சிக்கும் ‘கெட்ட காலம் ‘ ஆரம்பமானது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக, தனது மூத்த புதல்வரை ஆக்கியதன் மூலம், வாரிசு அரசியலை அதாவுல்லா சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார். இதன் காரணமாக, அவரின் கட்சிக்குள் அதிருப்திகள் ஏற்பட்ட போதும், அவர் அமைச்சராக, அதிகாரத்தில் இருந்தமை காரணமாக, அந்த அதிருப்திகள் பாரிய எதிர்ப்புகளாக வெளிக்கிளம்பவில்லை.

இந்தநிலையில், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், தனது மூத்த புதல்வருடன் சேர்த்து, இளைய புதல்வரையும் அதாவுல்லா களமிறக்கினார். இதனால், கட்சிக்குள் கடுமையான கசப்புகள் ஏற்பட்டன. அதுவே, அவரின் கட்சிக்குள் பிளவு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் ஆனது.

அதாவுல்லாவின் மூத்த புதல்வர் அரசியலுக்குள் இறக்கப்பட்ட போது மௌமான இருந்த, அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் உதுமாலெப்பைக்கு, அதாவுல்லாவின் இரண்டாவது மகன் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டமையில் உடன்பாடுகள் இருக்கவில்லை.

காரணம், தேசிய காங்கிரஸின் கொள்கை, சட்ட விவகாரங்களுக்கான செயலாளராகப் பதவி வகித்த சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் போன்ற, கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமலாக்கப்பட்டு, அதையே தனது இரண்டாவது புதல்வருக்கு அதாவுல்லா வழங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது.

உதுமாலெப்பையுடன் உரசல்

இது தொடர்பில், உதுமாலெப்பை, தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, தேசிய காங்கிரஸில் அதாவுல்லாவுக்கு நெருக்கமான சில ‘ஜுனியர்கள்’, உதுமாலெப்பையைக் குறிவைத்து, சமூக ஊடகங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.

தேசிய காங்கிரஸுக்குள் ‘நேற்று’ வந்தவர்ளெல்லாம், அதாவுல்லாவுக்கு நெருக்கமானவர்கள் என்கிற தகுதியை வைத்துக்கொண்டு, தன்னை விமர்சிப்பது குறித்து ஆத்திரமடைந்த உதுமாலெப்பை, ஒரு கட்டத்தில் அதுபற்றி அதாவுல்லாவிடம் முறையிட்டார்.

தன்னைப் பற்றி, ‘இன்னார்தான்’ சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை வைத்துக்கொண்டு விமர்சிக்கின்றார் என, அதாவுல்லாவிடம் உதுமாலெப்பை புகார் செய்த போதும், அது குறித்து அதாவுல்லா அலட்டிக் கொள்ளவில்லை. அதுமட்டுமன்றி, யார்மீது உதுமாலெப்பை குற்றம்சாட்டினாரோ, அந்த நபருக்கு கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவியை அதாவுல்லா வழங்கினார். இதனால், வெறுப்படைந்த உதுமாலெப்பை, கட்சியில் தான் வகித்த பதவிகளையெல்லாம் ஒரு கட்டத்தில் இராஜிநாமாச் செய்தார். அப்போதும், உதுமாலெப்பையின் குற்றச்சாட்டை, அதாவுல்லா கணக்கில் எடுக்கவில்லை. இதுதான் தேசிய காங்கிரஸை விட்டு விலகும் தீர்மானத்தை, உதுமாலெப்பை எடுப்பதற்குக் காரணமானது.

உதுமாலெப்பை விலகியமையை அடுத்து, அந்தக் கட்சியின் கொள்கை, சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் பஹீஜும் இராஜிநாமாச் செய்தார். அதன் தொடர்ச்சியாகவே, நேற்று முன்தினம் நூற்றுக் கணக்கானோர் கூட்டாக ஒரே தடவையில் ராஜிநாமா செய்துள்ளனர்.

அதாவுல்லாவின் குணம்

தேசிய காங்கிரஸிருந்து உதுமாலெப்பையின் வெளியேற்றத்தை அதாவுல்லா நினைத்திருந்தால் மிக இலகுவாகத் தடுத்திருக்கலாம். தனக்கு எதிராகப் பரப்புரை செய்கிறார் என்று, உதுமாலெப்பை குற்றம் சாட்டிய நபர் தொடர்பில், அதாவுல்லா நடவடிக்கை எடுத்திருப்பாராயின், உதுமாலெப்பையின் வெளியேற்றம் நிகழ்ந்திருக்காது என்பதே பலரினதும் நம்பிக்கையாகும். ஆனால், அதை அதாவுல்லா செய்யவில்லை.

அதாவுல்லாவிடம் சிறப்பான பல குணங்கள் உள்ளமை போன்று, அவரிடமுள்ள சில குணங்கள் அரசியலுக்கு ஒவ்வாதவை என்றும் விமர்சிக்கப்படுவதுண்டு. மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதில்லை; தனது முடிவிலிருந்து இறங்கி வருவதில்லை என்று, அதாவுல்லா பற்றி, அவரின் கட்சிக்குள்ளேயே பேச்சுகள் உள்ளன.

உதுமாலெப்பை விடயத்தில் அதாவுல்லா கொஞ்சம் இறங்கி வந்திருந்தால், அவரின் கட்சிக்குள் நடந்துள்ள இந்தப் பிளவு தவிர்க்கப்பட்டிருக்கும்.

கள நிலைவரம்

செயற்பாட்டு அரசியலில், தேசிய காங்கிரஸை இந்தளவு களத்தில் இறங்கி ‘கட்டியிழுந்து’ வளர்த்தவர் உதுமாலெப்பைதான். அதனால், தேசிய காங்கிரஸின் அடிமட்ட ஆதரவாளர்களிடம் கூட அதாவுல்லாவை விடவும், உதுமாலெப்பைக்கு அமோக ஆதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால், உதுமாலெப்பையுடன் அடிமட்ட ஆதரவாளர்களில் கணிசமானோர் தேசிய காங்கிரஸை விட்டும் பிரிந்து செல்வதற்கான சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.

உதுமாலெப்பையும் அதாவுல்லாவும் ஒருவரையொருவர் அரசியலில் வெற்றிபெற வைத்ததன் மூலம், இருவரும் வென்றார்கள். அதாவுல்லாவின் அக்கரைப்பற்று வாக்குகள்தான், உதுமாலெப்பை மாகாண அமைச்சராவதற்கு முக்கியமாக அமைந்தன. அதேபோலதான், உதுமாலெப்பையின் அட்டாளைச்சேனை வாக்குகள் சேர்ந்ததால்தான் அதாவுல்லா நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இப்போது இவர்களின் பிரிவும் பிளவும் இருவருக்கும் பாதகத்தையே ஏற்படுத்தும்.

ஆயினும், வேறொரு கட்சியில் இணைந்து கொள்வதன் மூலம், தனக்கான சரிவை உதுமாலெப்பை சரி செய்து கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால், உதுமாலெப்பையின் மூலம் ஏற்பட்டுள்ள இழப்பை அதாவுல்லா எவ்வாறு ஈடுகட்டப் போகிறார் என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும்.

இந்த நிலையில், அதாவுல்லாவைச் சுற்றியுள்ள ஒரு கூட்டம், உதுமாலெப்பையின் பிரிவு என்பது, தேசிய காங்கிரஸுக்கு ஓர் இழப்பே அல்ல என்கிற தொனியில், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கருத்துகளைத் தெரிவித்து வருகிறது.

இவ்வாறானவர்கள் இருக்கும் வரை, அதாவுல்லாவை அரசியலில் தோற்கடிப்பதற்கு, வெளியிலிருந்து யாரும் வரத் தேவையில்லை என்பதுதான் நமது கணிப்பாகும்.

‘காற்றுப் போன’ பஸ்ஸில் பயணிக்க முடியாது

“தேசிய காங்கிரஸ் என்பது மிகவும் அழகானதும் சொகுசானதுமான ஒரு பஸ். அதில் ‘ஏசி’ இருக்கிறது; நல்ல இருக்கைகள் இருக்கின்றன. அந்த பஸ்ஸுக்கு நல்ல பாண்டித்தியம் பெற்ற ‘தலைவர் ‘ எனும் சாரதி இருக்கிறார். அவரால் மிகவும் நன்றாக பஸ் வண்டியை ஓட்ட முடியும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. அந்த வண்டிக்கு எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கிறது. ஆனாலும் வண்டி ஓடுவதில்லை. காரணம் என்னவென்றால், அந்த பஸ் வண்டியின் நான்கு டயர்களும், காற்றுப்போய் விட்டன. எனவே, காற்றுப் போயுள்ள டயர்களை மாற்றுங்கள், வண்டியை ஓட்டுவோம் என்று சொன்னால், அந்த பஸ் வண்டியின் உரிமையாளரான சாரதி கேட்கிறாரில்லை. ‘இது என்னுடைய வண்டி; நான் விரும்பிய போதுதான் ஓட்ட முடியும்’ என்று சொல்கிறார்.

எனவேதான், பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள், இனியும் அந்த பஸ் வண்டியில் ஏறி அமர்ந்து காத்திருக்க முடியாது என்பதால், அந்த பஸ்ஸை விட்டும் நாம் இறங்கி விட்டோம்”. தேசிய காங்கிரஸிருந்து, அதன் முக்கியஸ்தர்கள் இராஜிநாமா செய்யும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (17) அட்டாளைச்சேனையில் நடைபெற்றபோது, அங்கு உரையாற்றிய சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் கூறிய உதாரணம்தான் மேலே உள்ளது.

தேசிய காங்கிரஸின் கொள்கை, சட்ட விவகாரங்களுக்கான செயலாளராகப் பதவி வகித்த பஹீஜ், இப்போது தேசிய காங்கிரஸிலிருந்து இராஜிநாமா செய்து விட்டார்.

‘தேசிய காங்கிரஸ் தற்போதுள்ள நிலையில், நமது கட்சி தனித்து செயற்பட முடியாது. எங்களின் கொள்கைகளை நிறுவன மயப்படுத்துவதற்காக, துணைச் சக்திகளோடு கூட்டாக நாம் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் ஆலோசனை கூறினோம். அதற்கு, ‘கூட்டுக்காகப் பேசுகின்றவர்கள், பதவிக்காகவும் பணத்துக்காகவுமே அவ்வாறு பேசுகின்றனர்’ என்று, கட்சியின் பேராளர் மாநாட்டில், தலைவர் அதாவுல்லா பகிரங்கமாகச் சொல்லி விட்டார். இதற்குப் பிறகும், எங்களுக்கு அங்கு என்ன வேலை இருக்க முடியும் என்பதுதான் எங்களுடைய கேள்வியாகும்”. என்று, தேசிய காங்கிரஸிலிருந்து தாம் விலகியமைக்கான காரணம் குறித்து, சட்டத்தரணி பஹீஜ் விளக்கமளித்தார்.

சந்தேகப்பட்டமையால் விலக நேர்ந்தது

மேற்படி நிகழ்வில் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை உரை நிகழ்த்துகையில்,
“தேசிய காங்கிரஸில் தியாகத்துடனும் எதிர்பார்ப்புகள் இன்றியும் செயற்பட்ட எங்களை, அந்தக் கட்சியும் தலைமையும் சந்தேகத்தோடு பார்க்க முற்பட்டது. அதன் காரணமாக அந்தக் கட்சியில் தொடர்ந்தும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது.தேசிய காங்கிரஸில் நான் இருந்திருந்தால், 2020ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகிக்கும் வாய்ப்பு எனக்கு இருந்திருக்கும். ஆனால் என்னை சிலர் வழிகெடுத்தவிட்டனர் எனவும் அவர்கள் இப்போது கூறுகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஜனாதிபதி பதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவதனை விடவும்,

தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியமை எனக்கு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. தேசிய காங்கிரஸில் அதாவுல்லா சொன்னால், அனைத்தையும் செய்தோம். காரணம் விசுவாசமாகும். தலைவர் எப்போதும் நல்லதைச் செய்வார்; நல்லதைச் சிந்திப்பார் என்று நம்பினோம். என்னைப்போல் விசுவாசம் மிக்கவர்களை இனி அந்தக்கட்சிக்குள் அரிதாகவே காண முடியும். தேசிய காங்கிரஸுக்கும் அதன் தலைவருக்கும் உச்சமான விசுவாசத்தோடு இருந்தோம். குறிப்பாக வாக்களித்த முழு கிழக்கு மாகாண மக்களுக்கும் பணி புரிந்திருக்கின்றோம். பணம், பதவி பட்டம் என்பவற்றுக்காக கட்சி மாறாதவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை! (உலக செய்தி)
Next post எல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்!! (வீடியோ)