By 23 March 2019 0 Comments

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்!! (கட்டுரை)

சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கொண்டே, ஒரு நாட்டின் நாகரிகம் மதிப்பிடப்படுகிறது. நாட்டிலுள்ள அனைவரும், சட்டத்துக்கு உட்பட்டவர்களே தவிர, அதற்கு அப்பாற்பட்டவர்களென எவரும் இல்லை. சட்டம், அனைவருக்கும் பொதுவாக இருக்கும் வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும் வரையிலும், நாடு தொடர்ந்தும் முன்னேறிக்கொண்டே இருக்கும்.

இருப்பினும், எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆங்காங்கே காட்டுச் சட்டங்களே அதிகாரம் செய்கின்றன. இதனால் தான், யுத்தம், பாதால உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகள், போதைப்பொருள் வியாபாரங்கள் எனப் பல பிரச்சினைகளை, இலங்கை சந்தித்தது, இன்னும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இதனால், மனித உயிர்களுக்கு மதிப்பின்றிப் போயுள்ளது. இது, நாட்டுக்கு உகந்ததன்று.

யுத்த காலத்தின் போது, கடற்படையின் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம், ஒரு சில தினங்களுக்கு முன்னர், இரகசியப் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த விசாரணை, இரண்டு தினங்கள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்டு, உயர்க் கல்விக்குத் தயாராகவிருந்த 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு, கப்பம் கோரப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருந்த விவகாரம் தொடர்பிலேயே, இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

கடற்படையின் கீழ் செயற்பட்ட விசேட பிரிவு ஒன்றினூடாகவே, இந்த இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த விவகாரத்தில், முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டீ.கே.பி.தசநாயக்க, நேவி சம்பத் என்றழைக்கப்படும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி, சம்பத் முனசிங்க ஆகிய மூவரும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும், அட்மிரல் கரன்னாகொடவுக்குக் கீழ் பணிபுரிந்தவர்களாவர்.

2008, 2009ஆம் ஆண்டுகளிலேயே, மேற்படி இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டனர் என்று, அவர்களது பெற்றோர் தெரிவிக்கின்றனர். எவ்விர காரணமுமின்றி, இந்த 11 இளைஞர்களும் கடத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர்களை விடுவிப்பதற்காக, பெற்றோரிடம் கப்பம் கோரப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான தகவல்களும் சாட்சியங்களும், பெற்றோரால் வழங்கப்பட்டிருந்தன. இது தொடர்பான தொலைபேசி இலக்கங்களைப் பரிசோதித்துப் பார்த்த போது, கப்பம் கோரி வந்த அழைப்புகள் அனைத்தும், திருகோணமலை கடற்படை முகாமிலிருந்தே வந்துள்ளதாகவும் அந்த இலக்கங்கள், சில கடற்படை அதிகாரிகளுடையவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில், 2009 மே 28ஆம் திகதியன்று, அட்மிரல் கரன்னாகொடவினால், கொழும்புக் குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்த விசாரணைகளின் போது, நேவி சம்பத் மற்றும் சம்பம் முனசிங்க ஆகியோரது 8ஆம் இலக்க அறையிலிருந்து, கடத்தப்பட்ட இளைஞர்களின் அடையாள அட்டைகள், பணம், கடவுச்சீட்டு என்பன கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சம்பத் முனசிங்கவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பிருப்பதாகத் தான் சந்தேகிப்பதாக, கரன்னாகொடவினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதேவேளை, கடத்தப்பட்ட இளைஞர்கள், திருகோணமலையிலுள்ள டென்ஜன் சுரங்க முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான சாட்சியங்களும், கரன்னாகொடவுக்கு கிடைத்திருந்தன. அத்துடன், அவ்விளைஞர்கள் படுகொலை செய்தமைக்கான சாட்சிய​ங்களை, ரணசிங்க, வீரசிங்க, பெர்ணான்டோ ஆகிய உயரதிகாரிகள் முன்னிலையில், பண்டார என்பவரால், கரன்னாகொடவிடம் உறுதிப்படுத்தப்பட்டன.

இதனால், கரன்னாகொடவின் நெருங்கிய சகாவான சம்பத் முனசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு செய்வது, அப்போதிருந்த கடற்படை அதிகாரிகளுக்குப் பிரச்சினையாக இருந்தது. இந்த விவகாரத்தில், அப்போது பல தகவல்கள் கூறப்பட்டாலும், அதன் உண்மைத் தன்மையை, கரன்னாகொடவும் முனசிங்கவுமே அறிவர். இருப்பினும், தன்னுடைய அதிகாரம் தொடர்பில் அகங்காரம் கொண்டிருந்த முனசிங்கவுக்கு ஏற்பட்ட கதி தொடர்பில், அப்போதிருந்த உயரதிகாரிகள் பலரும் மகிழ்ச்சி கொண்டிருந்தனர். இவ்வாறிருக்க, கரன்னாகொடவினால், இது தாடர்பில், பாதுகாப்பு உயர் தரப்பிடம் முறையிடப்பட்டிருந்தது. இதனால், கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து, இது தொடர்பான விசாரணைக​ளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், 11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் குறித்து, எதிர்பாராதொரு சந்தர்ப்பத்தில், சம்பத் முனசிங்கவால், மிகப்பெரிய வாக்குமூலமொன்று அளிக்கப்பட்டது. அதில், அவ்விளைஞர்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் அடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இறுதியில், சம்பத் முனசிங்க கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர்களில், ரஜீவ் என்ற பெயரில், ஒரு தமிழ் இளைஞர் இருந்தார். இவர், முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் உறவினரொருவரின் மகனாவார். இவர் கடத்தப்பட்ட நாளுக்கு அடுத்த நாள், மருத்துவக் கல்வியை மேற்கொள்வதற்காக, இங்கிலாந்துக்குச் செல்லத் தயாராக இருந்துள்ளார். இவ்விளைஞன், கடற்படை வீரர்களின் அலைபேசிகளைப் பெற்று, ​அவருடைய பெற்றோருக்கு, பலமுறை அழைப்புகளை மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. தன்னைக் காப்பாற்றுமாறும் தன்னை விடுவிப்பதற்காக, கடற்படை அதிகாரிகள் கோரும் பணத்தை, தயங்காமல் வழங்குமாறும், தன்னுடைய தாயிடம், அவ்விளைஞன் கோரியிருந்துள்ளார். அத்துடன், பீலிக்ஸ் பெரேராவுக்கும் அழைப்பை ஏற்படுத்தி, “அங்கள், என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்றும் மன்றாடியுள்ளார். இதன்போது பீலிக்ஸ் பெரேரா, தன்னுடைய முழுச் சொத்துகளையேனும் விற்றாவது, அவரைக் காப்பாற்றுவதாகக் கோரியுள்ளார். அத்துடன் நின்றுவிடாது, தன்னால் போகமுடிந்த எல்லா இடங்களுக்கும் சென்று, தங்க​ளுடைய பிள்ளைகளைக் காப்பாற்றுமாறும், பெரேரா கோரியுள்ளார். இருப்பினும் அது சாத்தியப்படவில்லை.

கடற்படை வீரர்களின் அலைபேசிக​ளூடாகத் தங்களுடைய பெற்றோருக்கு அழைப்புகளை மேற்கொண்டதற்காக, அந்த அலைபேசி இலக்கங்களுக்கு பணம் மீள் நிரப்புமாறும் (ரீலோட்), அவ்விளைஞர்கள் கோரியிருந்துள்ளனர். அதற்கமை, 500, 1000 ரூபாயென, அவ்விலக்கங்களுக்கு பணம் மீள் நிரப்பப்பட்டிருந்தன. இறுதியாக ரஜீவ், 2009 ஜூன் 21ஆம் திகதியன்றே, தனது தாய்க்கு இறுதி அழை​ப்பை மேற்கொண்டிருந்துள்ளார். அன்று அவர் தனது தாயிடம் கூறியிருந்த வார்த்தைகளைக் கேட்டால், எந்தவொரு தாயினதும் கண்களில் கண்ணீர் நிரம்புவது மாத்திரமன்றி, நெஞ்சே வெடிக்கும் போலாகும்.

“அம்மா…! எங்களைக் கடத்திவந்த விடயத்தால், கொழும்பில் உயரதிகாரிகளுக்கு இடையில் பிரச்சினையாம். எங்களுக்கு இதுபற்றித் தெரியவந்தது. சிலவேளை, நான் உங்களோடு பேசும் இறுதிச் சந்தர்ப்பமாகக் கூட இது இருக்கலாம். உங்களோடு இனி பேசவில்லை என்றால் பயப்படாதீர்கள். உண்மையில், அம்மா எனக்கு கூறிய விடயங்களைக் கேட்டிருந்தால், இன்று எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இந்த இறுதிச் சந்தர்ப்பத்திலும், நான் ஒரேயொரு விடயம் பற்றித் தான் சிந்திக்கிறேன். அடுத்த ஜென்மத்திலாவது, உங்கள் வயிற்றிலேயே நான் மகனாகப் பிறக்கவேண்டும்” என்று இறுதியாகக் கூறியுள்ளார். அதன் பின்னர், ரஜீவுக்கு என்ன நடந்ததென்று, இன்றுவரை தெரியாது.

எவ்வாறாயினும், திருகோணமலைக்கு ஒருமுறை சென்றிருந்த கரன்னாகொட, அவ்விளைஞர்கள் பற்றி அங்கு தேடிப்பார்த்த போதிலும், அவர்களைக் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரெவிஸ் சின்னையாவிடமிருந்தும் சாட்சியம் பெறப்பட்டிருந்ததாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞர்கள் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டதாகவே தனதுக்குத் தகவல் கிடைத்ததாக, அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெறும் போது, தான் இந்தியா​விலேயே இருந்ததாகவும் மீண்டும் நாடு திரும்பியவுடன், இதுபற்றித் தேடியறிந்த போதே, இந்தத் தகவல் தனக்குக் கிடைத்ததாகவும் விசேடமாக, தான் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பாகச் சேவையாற்றிய போதிலும், டென்ஜன் முகாமானது, தன்னால் நிர்வகிக்கப்படவில்லை என்றும், அதை, டீ.கே.பி.தசநாயக்கவும் கரன்னாகொடவுமே நிர்வகித்தனர் என்றும், சின்னையா கூறியிருந்தார். அத்துடன், குறித்த முகாமுக்கும் செல்லும் வாகனங்களின் இலக்கங்கள் கூடப் பதியப்படுவதில்லை என்றும் கூறியிருந்த சின்னையா, அந்த சாட்சியமளிப்பின் பின்னர், சேவையில் நீடிக்காத நிலையில் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த இளைஞர்கள், தங்களுடைய பெற்றோருடன் பேசுவதற்கான அலைபேசிகளை வழங்கக் காரணம், அவர்கள், எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடாமையும் அவர்கள் அப்பாவிகள் என்பதாலுமே என்று, இளைஞர்களுக்கு அலைபேசிகளை வழங்கிய கடற்படை வீரர்கள் சாட்சியமளித்துள்ளனர். அது மாத்திரமன்றி, ​தமது பெற்றோருடன் அலைபேசியில் உரையாற்றியுள்ள இளைஞர்கள், தங்களைப் பார்க்க வந்த கடற்படை அதிகாரிகள் யாரென்றும் அவர்களைக் கடத்திவந்த வாகனங்களின் இலக்கங்கள் பற்றியும், பெற்றோருக்குத் தெரிவித்திருந்துள்ளனர். அந்தத் தகவல்கள் அனைத்தும், அந்தப் பெற்றோர், அவர்களுடைய நாள்குறிப்புகளில் குறித்து வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளிக்கச் சென்றிருந்த கரன்னாகொட, இளைஞர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பான பல தகவல்களை மறந்திருந்தார் என்றே கூறப்படுகிறது. யுத்தத்தின் இறுதிக்கட்டம் என்பதால், தனக்கு அந்த விடயங்கள் குறித்து தெட்டத் தௌவாக நினைவில் இல்லையென, அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில், தானே முதன் முதலில் முறைப்பாடு செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த இளைஞர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பில், கரன்னாகொடவினால், இருமுறை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி, மேலும் நூற்றுக்கும் அதிகமானோரிடமிருந்தும் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து விடயங்களையும் கூறும் அதிகாரம், ஊடகங்களுக்கு இல்லை. காரணம், இது வழக்கொன்று நடைபெற்றுவரும் விவகாரமாகும். இந்த விடயத்தில், நீதிமன்றமே தீர்ப்பளிக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், தாமதமின்றி சமர்ப்பிக்க வேண்டும். சட்டம் மீது நம்பிக்கை கொள்வோம்.Post a Comment

Protected by WP Anti Spam