By 25 March 2019 0 Comments

புற்றுநோயை குணப்படுத்தும் நித்ய கல்யாணி!! (மருத்துவம்)

நித்ய கல்யாணி தாவரத்திற்கு தற்போது திடீரென புகழ் கூடியுள்ளது. இத்தாவரத்தின் வேரில் உள்ள குறிப்பிட்ட மருந்துப்பொருள் புற்றுநோய் மருத்துவத்தில் கீமோ தெரபி சிகிச்சைக்கு பயன்படுவதாக அமெரிக்கா கண்டறிந்துள்ளது. இதனால், இந்தியாவிலிருந்து உலக நாடுகள் முழுவதும் தற்போது அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் தாவரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது நித்ய கல்யாணி. ‘நித்ய கல்யாணி’ தாவரத்தில் உள்ள புற்றுநோய்க்கான அம்சம் மற்றும் அதன் பிற மருத்துவ குணங்களைப் பற்றி ஆயுர்வேத மருத்துவர் சிவகுமாரிடம் பேசினோம்…

‘‘ஸதாபுஷ்பம்’ என்பது சமஸ்க்ருதத்தில் நித்ய கல்யாணி அழைக்கப்படுகிறது. Catharanthus roseus என்பது இதன் தாவரவியல் பெயர். எந்தப்பருவத்திலும் பூக்கும் என்ற ஒரே அர்த்தம் காரணமாக நித்ய கல்யாணி என்று தமிழில் பெயர் வந்தது. பெரும்பாலானவர்கள் ஓர் அழகுச்செடியாக இதனை வளர்த்தாலும் இலைகள், பூக்கள், தண்டு மற்றும் வேர்கள் என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மருத்துவ பயன்கள் கொண்டவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் கொண்டாடி வந்த இதன் மகத்துவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது வெளிர் ஊதா(Purple) நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். சாதாரணமாக வறண்ட காட்டுப்பகுதிகளிலும் விளையும் என்பதால், சுடுகாட்டுப் பூ, கல்லறைப்பூ என்றும் அழைக்கின்றனர். இதில் நூற்றுக்கணக்கான ஆல்கலாய்டுகள் இருந்தாலும், Vinblastine, Vincristine எனும் இரு முக்கிய உயிர் வேதிப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த இரு ஆல்கலாய்டுகளும் புற்றுநோயை கட்டுப்படுத்த மற்றும் முற்றிலும் குணப்படுத்தப் பயன்படுகின்றன. சில வகை மார்பகப் புற்றுநோய்கள், தோல் புற்றுநோய்கள், நெறிகட்டியால் வரும் புற்றுநோய்கள் மற்றும் லுக்கேமியா, லும்போமா எனப்படும் ரத்த புற்றுநோய்கள் மற்றும் மூளைப்புற்றுநோய்க்கும் மருந்தாகப் பயன்படும் என்பதை நவீன ஆய்வின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு ரசாயன மருந்தாக மருத்துவமனையில் ஊசி மூலம் செலுத்தப்படும்போது, ‘சூப்பர் மருந்து’ என்று அதைப் புகழும் நம் மக்கள், நம்நாட்டு மருத்துவர்கள் அதையே நித்யகல்யாணி இலைகளின் சாறை காலை மாலை இருவேளையும் எடுத்துக்கொள்ளச் சொன்னால் அதன் அருமையை மதிப்பதில்லை.

தற்போது புற்றுநோய்க்காக மட்டுமல்லாமல் நித்யகல்யாணியின் வேரில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் உலக அளவில் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. நீரிழிவு சிகிச்சைக்காக இதன் வேரை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறோம். 400 அல்லது 500 மிலி கிராம் அளவு வேரின் சாறை கஷாயமாக இரண்டு வேளையும் சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நல்ல கட்டுக்குள் வரும் அல்லது வேரை காய வைத்து பொடி செய்தும் சாப்பிடலாம்.

Serpentine, Reserpine, ஆல்கலாய்ட்ஸ் நித்யகல்யாணியில் இருப்பதால் ரத்த அழுத்த நோய்க்கும் எடுத்துக் கொள்ளலாம். மாதவிடாய் சுழற்சி சரிவர வராதபோதும், மாதவிடாய் காலங்களில் குருதிவெளியேற்றம் குறைவான வெளிப்பாடு அல்லது அதிகம் வெளிப்பாடு இருப்பவர்கள் நித்யகல்யாணி இலையை கஷாயம் வைத்து அருந்தி வரலாம். சில கொடிய விஷம் கொண்ட பூச்சிக்கடிக்கு மேற்பூச்சாக இதன் இலைச்சாறை உபயோகிப்பதால் விஷத்தன்மையை முறிக்கலாம். நித்யகல்யாணிப்பூவில் உள்ள ஒரு ஆல்கலாய்டு மனநோய்க்கும் மருந்தாகிறது.

முதன் முதலில் 1960-ல் இதன் மருத்துவ குணத்தை அறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துவங்கினோம். உலகிலேயே அதிகம் ஏற்றுமதி செய்வது நம் நாடுதான். காரணம் இத்தாவரம் வளர்வதற்கேற்ற தட்பவெப்பநிலை ஆசியாவில், அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிகமாக நித்யகல்யாணி தாவரம் வளர்கிறது என்பதே. மேலும் இதற்கென தனிப்பட்ட பராமரிப்பு எதுவும் தேவைப்படுவதில்லை என்பதும் இதன் சிறப்பு.

அதிகரித்துவரும் தேவையினால் வின்பிளாஸ்டின், வின்கிரிஸ்ட்டின் ஆல்கலாய்டுகளை சில மருந்துக் கம்பனிகள் சோதனைக் கூடங்களிலேயே தயாரிக்கத் தொடங்கிவிட்டன. தற்போது உலகம் முழுவதும் ஹெர்பல் பொருட்களின் மீதான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீண்டும் நித்யகல்யாணி தாவரத்திற்கு மதிப்பு கூடியுள்ளது. மேலும், ஒரு சின்னஞ்சிறிய பாட்டில் இன்ஜக்‌ஷன் மருந்தின் மதிப்பு ஆயிரக்கணக்கில் விற்கப்பட்டதும் இத்தாவரத்திற்கான மதிப்பு அதிகரித்திருப்பதை காரணமாக சொல்லலாம்.

இப்போது மரபணு மாற்ற முறையில் எல்லா நிறங்களிலும் நித்யகல்யாணியை விளைவிக்கிறார்கள். மரபணு மாற்ற முறையில் விளைவித்த தாவரத்தில் எந்தவிதமான மருத்துவ குணமும் இருக்காது. வெள்ளை, வெளிர் ஊதா நிறத்தில் இருக்கும் இரண்டு நித்ய கல்யாணி தாவரம் மட்டுமே இயற்கையானது. முழுமையான மருத்துவப் பலனை அடைவதற்கு இந்த இரண்டு வகையை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

உலகிலேயே நம் இந்தியாவில் மட்டுமே நித்யகல்யாணி தாவரத்தை விளைவிக்க முடிவதை நாம் பெருமையாக கருதவேண்டும். தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. நம் நாட்டில் இயற்கையாக கிடைக்கும் நித்யகல்யாணி தாவரத்தை நாம் முழுமையாக பயன்படுத்தி பலனை அடைய வேண்டும்!Post a Comment

Protected by WP Anti Spam