வாட்ஸ்அப் ஆலோசனை…யு டியூப் சிகிச்சை…!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 30 Second

‘‘இணையம் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. ஆனால், அதனை முறையாகப் பயன்படுத்தாமல் கண்டபடி பயன்படுத்துவோமானால் அது நம் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடக்கூடும். இதற்கு சில மோசமான உதாரணங்களையும் நம் கண்கூடாக பார்க்கிறோம். சமீபகாலமாக மக்களிடையே அதிலும் குறிப்பாக வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் பெருகிவரும் புதுப்பழக்கம் இணையத்திலும், யு டியூப் வீடியோக்களையும் பார்த்து சுய வைத்தியம் செய்துகொள்வது. இது மிகவும் தவறானது’’ என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன்.

‘‘இணையம், இந்த மில்லினியத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு. இணையம் மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அதில் இருக்கிற எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பயனளிக்குமா என்றால் பயனளிக்காது. சில விஷயம் சில துறையில் உள்ளவர்களுக்கு பயன்படும். வேறு சில விஷயங்கள் வேறு துறை சார்ந்தவங்களுக்கு பயன்படும்.

அறிவியலில் பல பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஆனால், சமூக வளர்ச்சிக்குப் பயன்படும் அதே அறிவியலை, அழிவுக்கும் பயன்படுத்த முடியும். அணுப்பிளவை வைத்து பலப்பல நல்ல ஆராய்ச்சிகளும் நடக்கிறது. அதே அணுப்பிளவை வைத்து குண்டு தயாரிக்கும் விஷயமும் நடக்கிறது. இதில் அறிவியலின் உச்சத்தை அளவோடு கற்றுக்கொள்ள வேண்டிய வித்தைதான் இன்று நமக்கு அடிப்படைத் தேவையான விஷயம்.

அதேபோல இணையத்தில் கொட்டிக்கிடக்கும் விஷயங்கள் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும். அழிவும் தரக்கூடியதாக இருக்கும். மக்கள் இதில் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான். அதாவது செய்திகள் எல்லாம் அறிவு இல்லை. ஆனால், நாம் என்ன நினைக்கிறோம் என்றால் இணையத்தில் உள்ள தகவல்களை எல்லாம் அறிவாக நினைக்கிறோம். ஒரு தகவலைப் பார்த்தால் அது பயனுள்ளதா? பயனற்றதா? யாருக்கு பயனுடையது? எந்த அளவில் அது பயனுடையது? எந்த சூழலில் பயனுடையது? என்றெல்லாம் சிந்தித்துப் பார்ப்பது இல்லை. ஆனால், ஒரு தகவலைப் பார்க்கும் போது அந்த தகவல் சரியானதா? பிழையானதா என்பதை அந்த துறை சார்ந்த நிபுணரால்தான் புரிந்துகொள்ள முடியும்.

உதாரணத்திற்கு ஒரு தாவரத்தைப் பற்றிய தகவலாக இருந்தால் தாவரவியலை படித்தவர், அந்த துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றுபவர்களுக்கு அந்த தகவல் சரியானதா என துல்லியமாக கணிக்க முடியும்.மருத்துவத்துறை என்பது தனி மனித உடலமைப்பை(Bio individuality) சார்ந்தது. என்றைக்கும் பொதுமைப்படுத்த முடியாது. இதனால்தான் அதனை Personalized என்போம். அதில் முக்கியமான புரிதல் என்னவெனில் What type of illness he has என்பதை விடவும் What type of person having the illness என்பது முக்கியம்.

இரண்டு பேருக்கு ஆஸ்துமா இருந்தால் இருவருக்கும் 60 கிலோ எடை இருந்தால் ஆங்கில மருத்துவத்தில் இருவருக்கும் ஒரே மாதிரி மருந்தையே அவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், பரம்பரை மருத்துவமோ அல்லது பாரம்பரிய புரிதலோ இருவருடைய ஆஸ்துமாவின் பின்னணிகளையும் வேறுபடுத்தி பார்த்து இருவருக்கும் வேறு வேறு மாதிரியான மருந்து கொடுப்பார்கள். ஒரே நோய் இருவருக்கு வந்திருந்தாலும் ஒரே மருந்தை பரிந்துரைக்க மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் இவருக்கு எதனால் இந்த நோய் வந்தது? அவருக்கு எதனால் இந்த நோய் வந்தது என்று பார்த்து அதன் அடிப்படை தெரிந்த பின்னரே மருந்து கொடுப்பார்கள். அந்த காரணங்களுக்கு ஏற்ப மருந்தும் வேறுபடும்.

நம்முடைய உடலமைப்பு, சுற்றுச்சூழல், வாழ்வியல், உணவுப் பழக்கவழக்கம், தட்பவெப்பம், மனம் என எத்தனையோ விஷயம் இதில் இருக்கிறது. இவை எதையும் புரிந்துகொள்ளாமல் தட்டையான ஒரு செய்தியை வாட்ஸ்-அப் அல்லது யூடியூப்பில் பார்த்துவிட்டு, அந்த தகவலை நம் உடலோடு பொருத்திக் கொண்டு அதில் சொல்லப்பட்டிருக்கும் வைத்தியம் நம் உடலுக்குச் சரியாக இருக்கும் என நினைத்து சுய வைத்தியம் செய்து பார்ப்பது மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும்.

ஒரு தாவரத்தை எடுத்துக்கொண்டாலே அது விளையக்கூடிய நிலம், பூக்கக்கூடிய பருவம், வளரக்கூடிய நாடு போன்றவற்றை பொறுத்து ஒரே தாவரத்தின் சத்து மதிப்பு மாறுபடும். இதனை நவீன அறிவியலின்படி Geographical variation, Seasonal variation, Cultivational practical variation என்போம். இப்படி பல வேறுபாடுகள் இருக்கும். அதனால் நம் இஷ்டத்துக்கு இணையத்தைப் பார்த்து சுய வைத்தியம் செய்து கொள்வது தவறு. அதற்காக இண்டர்நெட்டில் இருக்கும் தகவல்களை படிக்கவே கூடாது என்று சொல்ல மாட்டேன். செய்தியைப் படித்துக் கொள்ளுங்கள். ஆனால், அது குறித்து சரியான நபரிடம் பேசி, அந்த செய்தியை சீர்தூக்கிப் பார்க்கும் பழக்கத்தையும் பின்பற்றுங்கள்.

இன்று வாட்ஸ்-அப் என்பது உள்ளே போனவுடனே வாந்தி எடுக்கும் வாந்தி பேதி நோயாகவே இருக்கிறது. ஏதேனும் ஒரு செய்தியை ஃபார்வேர்ட் பண்ணுவது அல்லது தானே அதை உட்கொண்டுவிட்டு பேதி ஆகிக்கொள்வது… இதுதான் இன்று நடக்கிறது. ‘மூலத்துக்கு இந்த கஷாயம் நல்லது’ என்று அது சார்ந்த ஒரு வீடியோ வருகிறது என்றால் அதை ஒருவர் குறைந்த பட்சம் 40 பேருக்கு அனுப்பி வைக்கிறார். அதில் மூலத்தினால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு ‘எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் இருக்கும் ஒருவர் கட்டாயம் அதனை பரீட்சித்துப் பார்ப்பார்.

ஒரு வேளை அந்த தகவல் தவறாக இருக்கும் பட்சத்தில் அது அவருக்கு முன்பு இருந்ததை விடவும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். உங்களுடைய சாதாரண ஃபார்வர்ட் மெசேஜ் அடுத்தவரை மோசமாக பாதித்துவிடும். செய்திகளை அனுப்புபவரின் உறவைச் சார்ந்த வலிமையைப் பொறுத்தும், ஃபார்வர்ட் செய்திகளின் மேல் நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இதனால் நம் நட்புக்கோ, உறவுக்கோ கூட பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்து செய்திகளை யோசித்து அனுப்புங்கள்.

இதேபோல், யூ டியூப் விஷயமும் ஆபத்தாக இருக்கிறது. யூ டியூப் சேனலைப் பார்த்து ஒரு கஷாயத்தையோ, மருந்தையோ ஒருவர் முயற்சித்துப் பார்க்கும்போது நாம் ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மருந்துக்கும் இந்த மருந்துக்கும் முரண் இருக்கா என்பதைத் தெரிந்து பயன்படுத்த வேண்டும். ‘இயற்கை மூலிகைதானே’ என அலட்சியமாக நினைக்கக் கூடாது. உணவு என்பது வேறு; உணவு சார்ந்த மூலிகைகள் வேறு. கடுகு, தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்றவை உணவுப்பொருட்கள்.

கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, ஆவாரம் பூ ஆகியவை மூலிகைகள். அதாவது இவை உணவு சார்ந்த மருந்து பொருட்கள். உணவு சார்ந்த பொருட்கள்தானே என மூலிகைப் பொருட்களை ஏன் நாம் உணவில் சேர்ப்பதில்லை. ஒவ்வொரு மூலிகைக்கும், மருந்துக்கும் வேறு வேறு நிலைப்பாடு இருக்கிறது. அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவற்றிற்கு பின்னால் பெரிய தத்துவார்த்த புரிதல் இருக்கிறது.

சில மூலிகைகள் உடலுக்குச் சூட்டைக் கொடுக்கும். சில குளிர்ச்சியைக் கொடுக்கும். சில மூலிகைகள் நோய் சார்ந்து வேறு வேறு பணிகள் புரியும். அவற்றின் அறுசுவை, பஞ்சபூதத் தன்மை, ஒருவருடைய உடல்வாகு இவற்றைப் பொறுத்து, ஒரு மூலிகையை எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? எந்த அளவு சாப்பிட வேண்டும்? எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? சாறாக குடிக்க வேண்டுமா? கஷாயமாக சாப்பிட வேண்டுமா? கஷாயமாக இருந்தால் எவ்வளவு நேரம் காய்ச்ச வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? எவ்வளவு நேர இடைவெளியில் மறுபடி சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் பார்த்துத்தான் பயன்படுத்த முடியும்.

மூலிகைச்சுத்தின்னு என ஒன்று இருக்கிறது. எனவே, அந்த மூலிகை சுத்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த அடிப்படையை எல்லாம் புரிந்துகொள்ளாமல் கண்டபடி மூலிகையைப் பயன்படுத்துவது தவறு!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு பொண்ண இப்படியா அழ வைப்பீங்க !! (வீடியோ)
Next post வெறித்தனம்.. சங்க கடிச்சு வச்சிருவான்!! (வீடியோ)