ஜனாதிபதி பதவிக்கான மஹிந்த – மைத்திரி பனிப்போர் !! (கட்டுரை)

Read Time:17 Minute, 54 Second

அரசியல் என்பது ஒரு வகையில் விசித்திரமானது. தமக்கு உடல் வலிமை இருக்கும் வரை, ஜனாதிபதியாக இருந்து, அதன் பின்னர், தமது மகனுக்கு அப்பதவியைக் கைமாற்ற நினைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்து, அவரது கனவுகளைச் சிதறடிக்கச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது அதே மஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மீண்டும் ஜனாதிபதியாக நினைப்பதாக இருந்தால், அந்த அரசியல், எவ்வளவு விசித்திரமானது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

ஜனாதிபதி மைத்திரிபாலவின் அந்தக் கனவு, நனவாகப் போவதில்லைப் போல் தான் தெரிகிறது. ஆனால் அவர், அவ்வாறு நினைக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறி வந்தன என்பது உண்மை. அந்த நிலை, தாமாக உருவாகி வந்தது என்பதை விட, ஜனாதிபதி அவ்வாறானதொரு நிலைமையை, மிகச் சாதுரியமாக உருவாக்கினார் என்றும் கூறலாம்.

ஆரம்பத்தில் அவருக்கு, அவ்வாறானதொரு திட்டம் இருக்கவில்லை. ஆனால் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்களின் கை ஓங்கவே, குறிப்பாக, கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, ஜனாதிபதி படிப்படியாகத் தமது நிலைமையை மாற்றி, மஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மீண்டும் பதவிக்கு வர இப்போது நினைக்கிறார்.

மஹிந்த ஆதரவளித்து, புதிதாக உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினதோ அல்லது ஜனாதிபதி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய கட்சியினதோ பலத்தைப் பற்றி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர், நாட்டில் எவருக்கும் ஒரு மதிப்பீடு இருக்கவில்லை. குறிப்பாகத் தாம், அந்தத் தேர்தலில் முதலிடத்துக்கு வருவோம் என, மஹிந்தவும் அறிந்திருக்கவில்லை.

நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில், 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது. அந்த 340 சபைகளில், 230 சபைகளுக்கு மேற்பட்டவற்றை பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது.

2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் படுதோல்வியடைந்த மஹிந்த அணியினர், இவ்வளவு விரைவாக, மீண்டும் பலம் பெற்று வருவார்கள் என எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பொதுஜன பெரமுனவின் இந்த வெற்றியை அடுத்து, மஹிந்த நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார் என்பது தெளிவாகியது.

அந்தத் தேர்தல்களின் போது, ஜனாதிபதி தலைமை தாங்கிய ஸ்ரீ ல.சு.க வெறும் 15 இலட்சம் வாக்குகளை மட்டும் பெற்று, மூன்றாம் இடத்துக்கு வந்தது. ஐ.தே.க மூன்றாண்டுகளில், 15 இலட்சம் வாக்குகளை இழந்தமை தெளிவாகியது. இதையடுத்துத்தான் ஜனாதிபதி மைத்திரி, அதுவரை தமது பரம எதிரியாகக் கருதிய மஹிந்தவுடன், எவ்வாறாயினும் இணைந்து கொள்ள வேண்டும் என நினைத்திருக்கலாம்.

தாம், ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வகிப்பேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரும், பலமுறை கூறியிருந்தார். ஆனால், மஹிந்த மீண்டும் அரசியல் ரீதியாகத் தலைதூக்க எடுக்கும் முயற்சியைக் கண்ட அவர், அதைத் தமது பாதுகாப்புக்கு ஆபத்தாகக் கருதியதாலோ என்னவோ, பின்னர் பதவியில் தொடர வேண்டும் என நினைத்தார்.

அதன்படி அவர், கடந்த வருடம் ஜனவரி மாதம், தமது பதவிக் காலம் ஐந்தாண்டுகளா, ஆறு ஆண்டுகளா என, உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.

ஜனாதிபதியின் பதவிக் காலம், ஆறாண்டுகளில் இருந்து ஐந்தாண்டுகளாகக் குறைத்த 19 ஆவது அரசமைப்புத் திருத்தம், மைத்திரிபாலவின் அங்கிகாரத்துடனேயே கொண்டுவரப்பட்டது. தமது பதவிக் காலத்தைக் குறைக்க சட்டம் கொண்டு வந்தவர், எனது பதவிக் காலம் ஐந்தாண்டுகளா ஆறாண்டுகளா என்று கேட்பது விசித்திரமானதாகவே தெரிந்தது.

அதன் பின்னர், “நாட்டில் ஊழலை ஒழித்துவிட்டே, பதவியைத் துறப்பேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால பல இடங்களில் கூறியிருந்தார். “ஒரு முறை தான் பதவியில் இருப்பேன்” என்பவருக்கு, பதவியில் தொடர ஆசையோ, தேவையோ ஏற்பட்டு இருப்பது தெளிவாகியது.

இந்த நிலையிலேயே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தல் முடிவுகள், மைத்திரிபாலவை மேலும் அச்சம் கொள்ளச் செய்தன. எனவே அவர், தமது பதவியில் தொடரும் கனவை மறைத்துக் கொண்டு, மஹிந்தவுடன் கூட்டுச் சேர்வதற்கு முயற்சி செய்யும் வகையில், தமது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டார்.

ஏற்கெனவே அவருக்கும், ஐ.தே.கவுக்கும் இடையில் முறுகல் நிலை ஆரம்பித்திருந்தது. அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேடைகளிலும் மத்திய வங்கிப் பிணைமுறி விவகாரம் தொடர்பாக, ஐ.தே.கவைச் சாடிப் பேசினார்.

அது, மஹிந்தவுடன் கூட்டுச் சேர, அவருக்கு சாதகமாகியது. மஹிந்தவுடன் கூட்டுச் சேர்வதற்கு, மஹிந்தவை ஏதோ ஒரு வகையில், நன்றாகத் திருப்திப் படுத்த வேண்டும் என்பதை, மைத்திரி உணர்ந்தார். அதன்படிதான், கடந்த ஒக்டோபர் மாதம் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மஹிந்தவை அப்பதவியில் மைத்திரி அமர்த்தினார். இதனால், மஹிந்த மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஏனெனில், குறுகிய காலத்துக்கேனும் அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொள்வதால், தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் சகாக்களுக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் வழக்குகளைக் குழப்பியடிக்கலாம்.

அதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலைத் தமது தலைமையிலான காபந்து அரசாங்கமொன்றின் கீழ் நடத்தலாம்.

அத்துடன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, எந்தக் கட்சிக்கும் முதல் சுற்றிலேயே சட்டப் படி தேவையான 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டால், மைத்திரியுடனான கூட்டு, மஹிந்த அணியினருக்கு அந்த விடயத்தில் உதவலாம்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்துக்கு, ராஜபக்‌ஷ குடும்பத்தில் பனிப் போரொன்று ஆரம்பமாகியுள்ளதாக, அண்மையில் ஒரு வதந்தி பரவியது. அதன்படி தான், மஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மீண்டும் பதவிக்கு வரும் யோசனை, ஜனாதிபதியின் மனத்துக்குள் புகுந்தது போலும்!
ஆனால், தம்மைப் பதவி துறக்கச் செய்த மைத்திரி, மீண்டும் ஜனாதிபதியாவதற்கு மஹிந்த ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. எனினும் அவர், அதைக் காட்டிக் கொள்ளவும் இல்லை. இந்த நிலையிலேயே, பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீ ல.சு.கவுக்கும் இடையே, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.
மஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மைத்திரியை மீண்டும் ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்துவதே, இப்பேச்சுவார்த்தைகளின் போது ஸ்ரீ ல.சு.கவின் நோக்கமாகும். ஸ்ரீ ல.சு.கவின் வாக்கு வங்கியைப் பாவித்து, தம்மில் ஒருவரை ஜனாதிபதியாக்குவதே ராஜபக்‌ஷக்களின் நோக்கமாகும்.

இதற்கிடையே, மஹிந்த தமது சகோதரரான கோட்டாபய ராஜபக்‌ஷவைத் தமது அணியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்திருப்பதாக, அண்மையில் செய்திகள் பரவின. அதை அடுத்து, ஜனாதிபதி மைத்திரியும் மஹிந்த அணிக்கு மிரட்டல் செய்திகளை அனுப்பிக் கொண்டு இருக்கிறார். அதன்படிதான், அவர் ஐ.தே.கவுடனான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

கொள்கையோ, நம்பகத் தன்மையோ இந்தப் பனிப்போரில் முக்கியத்துவம் பெறவில்லை. தனி நபர்களின் பதவிப் போட்டியே இங்கு நடைபெறுகின்றன. ஆனால், சாதாரண மக்களும் கொள்கையையோ நம்பகத் தன்மையையோ எதிர்ப்பார்க்காது, தாமும் இந்தப் பனிப்போரில் ஏதோ ஒரு பக்கத்தைச் சார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

சிறுபான்மையினர் பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்டனரா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாவதற்கு மக்களிடம் ஆணையை கோர முற்படாவிட்டால், இந்த வருடம் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். அதற்காகப் பிரதான மூன்று அணிகள், ஏற்கெனவே ஆயத்தமாகி வருகின்றன.

மஹிந்த ராஜபக்‌ஷ உத்தியோகப்பற்றற்ற முறையில் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தமது ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷவை போட்டியில் நிறுத்த, முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் போட்டியில் நிறுத்தப் போவதாகப் பல இடங்களில் கூறி வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே தமது ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறி வருகிறது.

கடந்த வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் வரை, ஐ.தே.கவுக்கே கூடுதலான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டது. அதற்குக் காரணம், ஐ.தே.கவுக்கு சிறுபான்மையினரின் ஆதரவு கிடைப்பது உறுதியாகி இருந்தமையும் மஹிந்த அணியினருக்கு சிறுபான்மையினரின் ஆதரவு கிடைக்காது என்ற நம்பிக்கையுமே ஆகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், இந்த நம்பிக்கைகளை ஓரளவுக்குச் சிதறடிக்கச் செய்தன எனலாம். கடந்த பொதுத் தேர்தலின் போது, 47 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த மஹிந்த அணியினர் (பொதுஜன பெரமுன) உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது 49 இலட்சமாகத் தமது வாக்கு வங்கியை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

பொதுத் தேர்தலின் போது, சுமார் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த சிறுபான்மையினர் உள்ளிட்ட ஐ.தே.க தலைமையிலான அணி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, 36 இலட்சம் வாக்குகளையே பெற்றது. மைத்திரி அணி வெறும் 15 இலட்சம் வாக்குகளையே பெற்றது.

இதேநிலைமை இன்னமும் இருக்கிறது என்று ஊகித்தால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த அணியினருக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. ரணில், மைத்திரி ஆகிய இரண்டு அணிகளினது வாக்குகளை ஒன்று சேர்த்தால், அது மஹிந்த அணியினரின் வாக்குகளை விட, மிகச் சிறிதளவு தான் அதிகமாக இருக்கிறது. அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளையும் சேர்த்தால் ஐ.தே.கவின் வெற்றி உறுதியாகும்.

ஆனால் இப்போது ரணில், மைத்திரி அணிகள் பிரிந்துள்ளன. அதனால் சிறுபான்மையினர் உள்ளிட்ட ஐ.தே.க தலைமையிலான அணிக்கு ஏற்படும் பாதிப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஈடுசெய்ய முடியாது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

அதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து, மஹிந்த அணி மீண்டும் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில், முஸ்லிம்கள் சிலர், ஐ.தே.க தலைமையிலான அணியிலிருந்து, மஹிந்த அணியின் பக்கம் தாவி இருப்பதாகவும் தெரிகிறது.

அவ்வாறில்லாது, சகல சிறுபான்மையினரும் ஐ.தே.க அணியை ஆதரிப்பதாகக் கருதினாலும், மஹிந்த அணிக்கு இருக்கும் வெற்றி வாய்ப்புகள் குறையப் போவதில்லை. அதாவது, சிறுபான்மையினர் 2010ஆம் ஆண்டில் போல், தமது பேரம் பேசும் பலத்தை இழந்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலை புலிகள் போரில் தோல்வியடைந்தது மட்டுமல்லாது, அவ்வமைப்பின் தலைவர்கள் ஏறத்தாழ அனைவருமே கொல்லப்பட்டனர். இதனால் தென்பகுதியல் ஏற்பட்ட மஹிந்த அலை எவ்வகையானது என்றால், புலிகளை அழித்த போருக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிடம் தோல்வியடைந்தார்.

தேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்யும் போது, சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமலே இருந்தாலும், மஹிந்த வெற்றி பெற்றிருப்பார் என்பது தெளிவாகத் தெரியவந்தது. எனவே சிறுபான்மையினரின் வாக்குகள் இனித் தேவையில்லை என, சம்பிக்க ரணவக்க போன்ற சிங்களத் தலைவர்கள் பிரசாரம் செய்து வந்தனர்.

ஆனால், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அந்த நிலைமையை மாற்றியது. மஹிந்த அந்தத் தேர்தலில் தோல்வியடைய முஸ்லிம் வாக்குகளே முக்கிய காரணமாகியது. ஆயினும், இப்போது மீண்டும் சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமலே, மஹிந்த அணி பதவிக்கு வரும் நிலைமை உருவாகியிருக்கிறது.

ஐ.தே.க கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்தமையே அதற்குக் காரணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்மையும், கடின உழைப்பும் தான் நிலைத்து இருக்கும் ! (மகளிர் பக்கம்)
Next post ஓ இதுதா அழகுல மயக்குறதோ…! (வீடியோ)