By 28 March 2019 0 Comments

எங்களுக்கு பாதுகாப்பு நாங்களே!! (மகளிர் பக்கம்)

இந்தியாவில் சாதியின் பேரால் இயல்பாகக் கருதப்பட்டு நடந்து வந்த பாலியல் வன்கொடுமை ஆங்கி லேயரின் வருகைக்குப்பின்தான் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது. 1872 ஆம் ஆண்டில் டில்லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி பஞ்சாபின் லெப்டினென்ட் கவர்னராக இருந்த சர் ஹென்றி டேவிஸ் என்பவர் தனது நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார். கோதுமை வயல்வெளியில் 12 வயதுப் பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுஇருந்தார்.

அந்த கிராமம் உயர்சாதி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பயந்து கொண்டு யாரும் புகார் செய்யவில்லை. இந்த நிலையில் கிராமத்தினரே இச்செயலுக்குத் தீர்ப்பு எழுதினர். சுமார் 8 பேர் சேர்ந்து செய்த இச்செயலை நாங்கள் கண்டிக்கிறோம், அதே நேரத்தில் அந்தப்பெண் ஏன் தனியாகச் சென்றாள். அந்தப் பெண்ணைத் தனியாகச் செல்ல அனுமதியளித்த அவரின் அம்மாதான் இதற்கு முக்கியக் காரணம். ஆகவே, இறந்த அந்தப் பெண்ணின் அம்மா ஊருக்குப் பொதுவான கோதுமை வயலுக்கு இரண்டு வண்டி உரம் கொடுக்க வேண்டும்.

குற்றம் செய்தவர்கள் அனைவரும் ஊர் வயலுக்கு எந்தக் கூலியும் வாங்காமல் வேலை செய்ய வேண்டும் என்பது தான் அந்த தீர்ப்பு. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த இந்தக் கொடுமை, இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகு ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இல்லை! இன்று வரை அந்த அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த பின்பும் அதற்கு முன்பும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட பெண்களும், ஆதிவாசி பெண்களுமே. இவர்கள் மீது வன்கொடுமை திணிக்கப்படும் போது யாரும் தட்டிக்கேட்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

இங்கு சட்டம் ஒழுங்கு என்ற பார்வை யில் பார்த்தாலும் அதிகாரத்தில் இருப்ப வர்களால், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தில்லியில் மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியலை எழும்பி புதிய சட்டங்கள் பற்றிய குரல் ஓங்கி ஒலித்தது. ஆனால் அந்த சம்பவம் நடந்த பின்னரும் நாளுக்கு நாள் நாளேடுகளில் எந்த செய்தி இருக்கிறதோ இல்லையோ பாலியல் வன்கொடுமை பற்றி ஓர் செய்தியாவது இடம் பெற்றுவிடுகிறது.

அதையும் படித்துவிட்டு அந்நேரத்தில் உச் கொட்டி கடந்து சென்று கொண்டிருக்கிறோம். இந்த கொடுமையை முழுமையாக ஒழிப்பதற்கு நேரமானாலும், அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முடிவு கட்டும் விதமாகவும் பேரணி நடைபெற்றுள்ளது. இந்த மாபெரும் பேரணி எங்கோ வெளிநாட்டிலோ அல்லது அரசியல் வாதிகளோ, நடிகர் நடிகைகளோ ஒருங்கிணைத்ததில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்று கூடி உருவாக்கியது.

இந்தியாவின் 24 மாநிலங்களில் உள்ள 200 மாவட்டங்களில் சுமார் 10000 கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்ற இப்பேரணியின் பெயர் ‘கிராம யாத்ரா’. இத்தனை நாட்களாக வெறும் புலம்பலாக மட்டும் இருந்த இவர்களது போராட்டம், இனி தங்களை போல் மற்றவர்களுக்கும் நடக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் தங்களது கதைகளை வெளியே சொல்ல முன்வந்துள்ளனர். மீடூ இயக்கத்தின் பெரும் பகுதியை விட்டு வெளியேறிய கதைகள் இவர்களுடையது. இதில் பங்கேற்ற பெண்கள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்கள்.

கடத்தல் மற்றும் ஏலமிடுதல், சாதி அடைப்படையிலான விபச்சாரத்திற்குச் சிறுமிகளை கட்டாயப்படுத்துவது, உயர் சாதி ஆட்களால் வன்கொடுமை செய்யப்பட்டவர்கள், மந்திரவாதிகள் தங்களது பரிகாரங்களுக்காக நிர்வாணமாகப் பெண்களைப் பயன்படுத்துவது போன்ற கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். “ஆரம்பத்தில் இதை பற்றி பேச முடியவில்லை, ஆனால் நாங்கள் தவறு செய்யவில்லை. குற்றவாளிகளும், இந்த சமுதாயமும் தான் தவறானது. மனதை மாற்றுவதற்கான பயணத்தில் நாங்கள் இருக்கிறோம்” என்கிறார்கள் இந்த பெண்கள்.

ராஜஸ்தானின் பாஸ்ஸி கிராமத்தில் வசிக்கும் பன்வாரி தேவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் பிழைத்தவர். அவர், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை சமாளிக்க விசாக கமிஷனில் புகார் அளித்துள்ளார். இதனால் 1992 ஆம் ஆண்டு ஒருவரது மகளின் குழந்தை திருமணத்தை தடுக்க முயன்றதாக உயர் சாதியினரால் கூட்டாக கற்பழிக்கப்பட்டார். இது பற்றி கூறும் பன்வாரி தேவி, “என் சிறிய வழியில் நான் எடுத்த போர் இன்று மீடூ என்ற பெரிய இயக்கத்தின் வடிவத்தைக் கொண்டிருக்கிறது. கிராமத்தில் இருக்கும் என்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதி கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இன்றைய தினத்தில் பல பெண்கள் கல்விக்காகவும், வேலைக்காகவும் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். அதிலும் ஒரு சில பெண்களுக்கே கல்வி கிடைப்பதற்கான சிறப்புரிமை இருந்தது. பெரிய எண்ணிக்கையிலான தெருக்களுக்குள் நாம் செல்லும் போது அரசாங்கம் கவனிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளோம்” என்றார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மம்தா கூறுகையில், “பாலியல் வன்கொடுமைக்கு அதிகமாக ஆளாகுவது கிராமப்புற பெண்களே என்று எல்லோரும் கூறுகிறார்கள். அதற்கான காரணம் கல்வி அறிவு இல்லாமையே என்கிறார்கள்.

ஆனால், படித்த நகரங்களிலும் பாலியல் வன்கொடுமைக்குப் பெண்கள் ஆளாகின்றனர். அதற்கு காரணம் அவர்கள் அணியும் உடை என்கிறார்கள். ஆனால், ஒரு வயது பச்சிளம் குழந்தையும் பாதிக்கப்படுகிறார்களே.. குற்றவாளிகளை பாதுகாப்பதற்கே இது போன்ற சாக்குகள் கூறப்படுகிறது” என்கிறார். ‘‘நான் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை ஏற்றுக் கொள்வதில் அவமானம் இல்லை’’ என்கிறார் மத்தியபிரதேசத்தை சேர்ந்த லலிதா, “நான் மீட்கப்பட்ட பின்னர், என்னை என் குடும்பம் இழந்துவிட்டதாக எப்.ஐ.ஆர் குறிப்பிட வேண்டுமென்று வலியுறுத்தியது.

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, தான் ஒரு குற்றவாளி என்பதை உணரவில்லை” என்றார். சுரு, லகன்வாஸ் கிராம பள்ளி ஆசிரியரால், 12 வயதான மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக் கப்பட்ட பெண் புகார் அளித்தும், குற்றவாளியை விட்டுவிட்ட அந்த பெண் தான் குற்றவாளி என்று வழக்கு திருப்பி போடப்பட்டது. குற்றம் செய்தவரின் சகோதரர் இந்திய வருவாய் அதிகாரி. பாதிக்கப்பட்ட ஏழை பெண்ணால் அழுது புலம்ப முடியுமே தவிர, அதற்கு மேல் வழக்காடுவதற்கு தெம்பில்லை. இந்த சம்பவம் அந்த குழந்தையை மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியபின், அந்த குற்றம் பாதிக்கப்பட்டவர்கள் மீதே திசை திரும்புவது துரதிருஷ்டவசமானது. பாலியல் வன்முறைக்கான தண்டனை குறைந்த விகிதமாக இருப்பதால் மேலும் தப்பினை செய்ய தூண்டுகிறது. இந்த அணிவகுப்பு சமுதாயத்தில் ஒருங்கிணைந்த மனித குலத்துக்கான முறையீடாகும். இதன் மூலம் குற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதோடு குற்றவாளிகள் மத்தியில் ஓர் அச்ச உணர்வை உருவாக்கும். 2016 ஆம் ஆண்டின் சமீபத்திய தேசிய குற்றப் பதிவு அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்தம் 15,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 58.7% குழந்தைகள் வணிகரீதியான பாலியல் சுரண்டலுக்காக கடத்தப்படுகின்றன.

அதில் SC / ST பெண்களின் வழக்குகள் அதிகமாக நிலுவையில் உள்ளன. விசாரணை அதிகாரி 30 நாட்களுக்குள் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று சட்டம் கட்டாயப்படுத்துகிறது. தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதி என்பது நீதியின் தத்துவம். மாறும் நீதிபதிகளாலும், வாய்தாவும் பாதிக்கப்பட்டவர்களை மேன்மேலும் கொடுமையை அனுபவிக்க வைக்கிறது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட, ஆதிவாசி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் என 5,000 க்கும் மேற்பட்டோரால் Rashtriya Garima Abhiyan என்ற அமைப்பு மும்பையில் தொடங்கப்பட்டது.

அதன் நீட்சியாக இந்த பேரணி தில்லி ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி பொதுக் கூட்டத் தோடு முடிவுற்றது. இதே போன்றதொரு நிகழ்வு தமிழகத்திலும் அரங்கேறியது என்பதை யாராலும் மறந்துவிட முடியாது. இந்திய அளவில் மிகப்பெரிய அடக்குமுறையாக அடையாளம் காணப்பட்ட வாச்சாத்தி பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட அந்த கொடுமைதான். 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி வாச்சாத்திக்குள் புகுந்த வனத்துறையினர் ஓவ்வொரு வீடாக சோதனை நடத்தினர்.

சந்தனமரக்கட்டை கடத்தியதாக 90 பெண்கள், 28 சிறுவர்கள், 15 ஆண்கள் என 133 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். பருவமெய்தாத நிலையில் ரத்தம் கொட்ட அவர்கள் அனுபவித்த கொடுமை, வக்கிரத்தின் உச்சம். ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் நீதிதான் அதே போன்ற மற்றொரு குற்றம் நடக்காமல் இருப்பதற்கான பாடம்! பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு, ஓர் இயக்கமாகக் கிளர்ந்தெழும் போதுதான் நீதியை நியாயமாகவும் விரைவாகவும் பெற முடியும்.

அப்படியொரு கிளர்ச்சியைத் தான் இந்த பெண்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். பிறந்த குழந்தையா, பள்ளி படிக்கும் சிறுமியா, வயது வந்த குமரியா, மனைவியா, குழந்தை பெற்ற தாயா, நரை விழுந்த பாட்டியா என்ற எந்த வயது வித்தியாசமில்லாமல், பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரங்களால் பெண்கள் எப்போதும் ‘தான் ஒரு பெண்’ என்கிற எச்சரிக்கை உணர்வோடு பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து, ரயில்… என எங்கு சென்றாலும் பயத்துடனே போய் வருகின்றனர். இந்த அச்சத்தினை இது போன்ற பேரணிகளும், விழிப்புணர்வுகளும் தகர்த்தெறியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.Post a Comment

Protected by WP Anti Spam