By 29 March 2019 0 Comments

யேமன் உள்நாட்டுப் போர்: மனிதப் பேரவலத்தின் நான்கு ஆண்டுகள் !! (கட்டுரை)

இன்று, பத்தாண்டுகளுக்குப் பின்னர், உலகின் ஒரு மூலையில், இலங்கையை ஒத்த இன்னொரு மனிதப்பேரவலம் அரங்கேறிக் கொண்டிருப்பதை நாமறிவோமா?

அந்தப் பேரவலம், எவ்வாறு அறியப்படாமல் கடந்து போகிறதோ, அவ்வாறுதான் பத்தாண்டுகளுக்கு முன்னர், எதுவித கவனமும் பெறாமல் எமது அவலமும் கடந்து போனது.

ஊடகங்கள், இணைய வசதிகள், சமூக ஊடகங்கள், நவீன தொடர்பாடல் வசதிகள் என, தொடர்பாடல் வழிகளும் செய்திப் பரிமாற்ற வழிகளும் என்றும் இல்லாதளவு வளர்ச்சி பெற்றிருக்கின்ற காலத்தில், மத்திய கிழக்கில் வறிய நாடான யேமனில், ஒரு மனிதப் பேரவலம், கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்தேறி வருகிறது.

ஜனவரி 2016 தொடக்கம், டிசெம்பர் 2018 வரையான மூன்றாண்டு காலத்தில் மட்டும், போரின் நேரடி விளைவால் 60,000 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதேகாலப் பகுதியில் நோயாலும், ஊட்டச்சத்து இன்மையாலும் 85,000 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள் என, தொண்டு நிறுவனமான Save the Children தெரிவிக்கின்றது. இதேகாலப் பகுதியில், நோய், உணவின்மை போன்ற காரணிகளால் இறந்த ஏனையவர்களின் (குழந்தைகள் அல்லாதோர்) தகவல்கள் தெரியவில்லை.

ஐக்கிய நாடுகளின் தரவுகளின்படி, சராசரியாக வாரமொன்றுக்கு, போரால் நேரடியாக 100 பேர் வரையில் இறக்கிறார்கள். இதில் மூன்றில் ஒருபகுதி குழந்தைகளாகும்.

இந்த அவலம் பற்றிய எதுவித உணர்வுமற்று, நாம் செய்தியோடு செய்தியாக யேமனையும் கடந்து போகிறோம். இது கடந்த நான்காண்டுகளாக நடந்து வருகிறது.

சிரியா மீது இருந்த கவனம் யேமனின் மீது இருக்கவில்லை; சிரியா பற்றி அறியப்பட்ட அளவு யேமன் அறியப்படவில்லை. ஏன்? இந்தக் கேள்வி பிரதானமானது. தமிழ் மக்களின் அவலத்தை, உலகம் ஏன் கவனிக்கவில்லை என்ற வினாவுக்கு, யேமன் பற்றிய கேள்வி பதிலைத் தரக் கூடும்.

யேமன் உள்நாட்டு யுத்தத்தின் கதை

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒட்டோமன், பிரித்தானிய சாம்ராஜ்யங்களின் பிடியில் இருந்த யேமனில் இரண்டாம் உலகப் போரின் முடிவும் அரபுத் தேசியவாதத்தின் எழுச்சியும் முக்கிய செல்வாக்குப் பெற்றன.

வடக்கு யேமனில், சவுதி அரேபிய ஆதரவுடன் ஆட்சியை நிறுவிய மதத்தலைவரின் ஆட்சிக்கும், எகிப்தின் நாசர் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரின் முடிவில், நாசரிய தேசியவாதிகள் வெற்றிபெற்று, ஆட்சியைப் பிடித்து, யேமன் அரபுக் குடியரசை உருவாக்கினார்கள்.

தெற்கு யேமனில், பிரித்தானிய கொலனியாதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலை முன்னணியின் போராட்டம், 1963இல் யேமன் மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவியது.

மார்க்சிய லெனினிச அடிப்படையில் அமைந்த இந்த ஆட்சி, மத்திய கிழக்கில் நிலவிய ஒரேயொரு மார்க்சிய லெனினிச அரசாகும். மத்திய கிழக்கு நாடுகளில், குடியரசு ஆட்சி நிலவிய முற்போக்கான நாடுகளில் யேமன் முக்கியமானது.

1990இல் சோவியத் யூனியனின் சரிவும் கெடுபிடிப்போரின் முடிவும், இரண்டு யேமன்களும் ஒன்றாக்கப்பட்டு, யேமன் குடியரசு உருவாக்கப்பட்டது.

வடக்கு யேமனில், இராணுவச் சதியை அடுத்து, 1978இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற இராணுவ வீரரான அலி அப்துல்லா சலா, 1990இல் ஒருங்கிணைந்த யேமனின் ஆட்சித் தலைவரானார். மேற்குலகின் செல்லப்பிள்ளையாக மாறிய சலா, சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி ஆகியவற்றிடம் கடன்களைப் பெற்று, ‘கட்டமைப்புச் சீர்திருத்தங்களை’ மேற்கொண்டு, ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தி வந்தார்.

அதேவேளை, தனது ஆட்சியைத் தக்கவைக்க, சவூதி அரேபியாவுடனான உறவுகளை அதிகரித்து, சவூதி முன்னெடுக்கும் கடுங்கோட்பாட்டு இஸ்லாத்தை, யேமனில் நடைமுறைப்படுத்தினார்.

இது, தெற்கு யேமனில் மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியது. குறிப்பாகப் பெண்கள், இந்த நவீன பாணி இஸ்லாத்தை எதிர்த்தார்கள். அவர்கள், முன்னைய சோஷலிச யேமன் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் இருந்ததாகவும் தாங்கள் எப்போதுமே ஹிஜாப் அணிந்திருக்கவில்லை என்றும் இப்போது அணியக் கட்டாயப்படுத்தப்படுவதைத் தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.

அதேவேளை, முன்னாள் சோஷலிச யேமனில், சமத்துவமும் வேலைவாய்ப்பும் நல்ல வாழ்க்கைத் தரமும் இருந்ததாகக் குறிப்பிட்டனர். இது குறித்த விரிவான குறிப்புகளை தாரிக் அலி எழுதியுள்ளார்.

2001ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில்’ யேமன் பங்காளியாகுமென சலா உறுதியளித்தார். 2004ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை, ‘ஹெளதியர்’ எனப்படுகின்ற ஷெய்டி-ஷியா பிரிவினரான அன்சார் அல்லாஹ் குழுவினர் முன்னெடுத்தனர்.

யேமனிய முஸ்லிம்களில், 40சதவீதமானோர் ஷெய்டி-ஷியா பிரிவினராவர். இந்தக் கிளர்ச்சியை சவூதி அரேபியாவின் உதவியுடன் சலா எதிர்கொண்டார்.

ஷெய்டி-ஷியா பிரிவினரை ஒழிப்பதை, சவூதி, முக்கிய நோக்காகக் கொண்டது. சவூதி பரப்பும் ‘வகாபிச’ கடுங்கோட்பாட்டுவாத இஸ்லாமுக்கு ஷெய்டி தடையாக உள்ளது என, சவூதி நினைத்தது.

இந்தப் பின்புலத்தில், 2011இல் தொடங்கிய அரபு வசந்தத்தின் பகுதியாக, யேமனில் போராட்டங்கள் வெடித்தன. இதன் விளைவாக 2012இல் சலா, தனது பதவியைத் துறந்து, துணை ஜனாதிபதி ரபு மன்சூர் ஹாதியிடம் கையளித்தார்.

அரபு வசந்தத்தின் விளைவால், ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த துனீசியா, எகிப்து, யேமன், லிபியா ஆகிய நாடுகளில், யேமனிலேயே உறுதியான ஆட்சி நிலவுகிறது என மேற்குலக நாடுகள் போற்றின. ஜனாதிபதி ஹாதியின் ஆட்சியில் ஊழலும் கொள்ளையும் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது.

இதைத் தொடர்ந்து, தமது போராட்டத்தில் முன்னேறிய ஹெளதியர்கள், யேமனியத் தலைநகர் சனாவை நெருங்கினர். அவர்கள், ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்தனர். ஜனாதிபதி ஹாதி, சவூதி அரேபியாவுக்குத் தப்பியோடினார்.

பின்னர், துறைமுக நகரான ஏடனை, நாட்டின் புதிய தலைநகராக அறிவித்து, அங்கிருந்து ஆட்சி செய்யத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, ஏடன் நகரைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்கு, ஹெளதியர்கள் முன்னேறினர்.

சவூதி அரேபியாவின் போரும் ஹெளதியர்களின் எழுச்சியும்

ஏடன் துறைமுகம், யேமனின் முக்கியமான கேந்திர மய்யமாகும். ஏடன் நகர், ஹெளதியர்களின் கைகளுக்குச் செல்வது, சவூதி அரேபியாவின் நலன்களுக்குப் பாதகமானது என்பதை உணர்ந்த சவூதி, யேமனில் தலையிட்டது.

2015 மார்ச் 26ஆம் திகதி, யேமனில் ஹெளதியர்களின் மீது விமானத்தாக்குதலைத் நடத்தி உள்நாட்டுப் போருக்கு, சர்வதேசப் பரிமாணத்தைக் கொடுத்தது. சவூதி அரேபியாவுடன் குவைட், கட்டார், பஹ்ரேன், ஐக்கிய அரபு எமிரேற்றுகள், ஜோர்டான், எகிப்து, மொராக்கோ ஆகிய நாடுகளும் இணைந்தன. அமெரிக்கா இந்தப் போரில், சவூதிக்கு முழுமையாக ஆதரவைத் தெரிவித்தது.

இன்று நான்கு ஆண்டுகளாக, ஹெளதியர்களுக்கு எதிராகச் சவூதி போரிட்டு வருகிறது. தினமும் குண்டுகளை, யேமனில் வீசுகிறது. சவூதிக்கு ஆயுதங்களை, அமெரிக்கா விற்கிறது; புலனாய்வு, தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.

ஆனால், இன்றுவரை ஹெளதியர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. 2015 மார்ச்சில் யேமனின் மீதான சவூதியின் தலையீட்டின் போது, மிகக்குறுகிய காலத்தில் ஹெளதியர்களை அகற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சவூதியின் போர் ஐந்தாவது ஆண்டுக்குள் நுழைகின்றது.

ஓர் இனக்குழுவாக இருந்த ஹெளதியர்கள், சிறிய ஆயுதப் படையாகி, இன்று யேமனின் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை ஆட்சிசெய்யும் வலுவான அதிகாரம்மிக்க நிர்வாக ஆட்சியாளர்களாக உருமாறி இருக்கிறார்கள்.

சவூதிக்கெதிரான, ஹெளதியர்களின் இடைவிடாத, விட்டுக்கொடுக்காத போராட்டம், யேமனியர்கள் மத்தியில், ஹெளதியர்களுக்கான ஆதரவை அதிகரித்துள்ளது. அதேவேளை சவூதி-அமெரிக்கக் கூட்டணியை யேமனின் எதிரியாக மக்கள் பார்க்கிறார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை யேமனில் இருந்து விரட்டியதில், ஹெளதியர்களின் பங்கு முக்கியமானது. இன்று சவூதி அரேபியாவுக்குத் துணையாக, அல்கைடா, ஹெளதியர்களுக்கு எதிராகப் போரிடுகிறது. அமெரிக்க ஆயுதங்களும் இராணுவத் தளபாடங்களும் சவூதி அரேபியாவின் மூலம் அல்கைடாவுக்கு வழங்கப்படுகிறது. இதை அமெரிக்காவின் பிரதான ஊடகங்களில் ஒன்றான CNN செய்திச்சேவையே அண்மையில் ஆதாரங்களுடன் அறிக்கையிட்டது.

ஹெளதியர்களுக்கு எதிராக, அமெரிக்காவும் அல்கைடாவும் ஒரே அணியில் நிற்கின்றன; சிரியாவிலும் ஒரே அணியிலேயே நின்றன. இத்தருணத்தில் அமெரிக்கா தனது பயங்கரவாத்துக்கு எதிரான யுத்தத்தை யாருக்கெதிராக முன்னெடுத்தது என்ற கேள்வி, அந்த முன்னெடுப்பின் உண்மையான நோக்கத்தை விளங்க உதவும்.

அடுத்தது என்ன?

ஹெளதியர்களுக்கான ஈரானிய மற்றும் லெபனானிய ஹிஸ்புல்லாவின் ஆதரவானது, ஷியா – சுன்னி போராக, யேமனியப் போரை மாற்றியுள்ளது. அதேவேளை, தனது வகாபிச கடுங்கோட்பாட்டுவாத இஸ்லாமை, உலகம் முழுவதுக்குமான இஸ்லாமாக அறிவிக்க முனையும் சவூதியின் முனைப்பின், ஒரு களமாகவே யேமனைக் காணவேண்டியுள்ளது.

யேமனிய யுத்தம் இரண்டு முக்கிய காரணங்களுக்காக நிகழ்கிறது. முதலாவது, யேமனின் கேந்திர முக்கியத்துவம். குறிப்பாக, பப்-எல்-மன்டெப் ஜலசந்தியின் கட்டுப்பாடு தொடர்பானது. இந்த ஜலசந்தி, மத்தியதரைக் கடலையும் இந்து சமுத்திரத்தையும் செங்கடல் மற்றும் சுயெஸ் கால்வாய் வழியாக இணைக்கும் முக்கிய புள்ளியாகும். எண்ணெய் வர்த்தகத்தின் மய்யப் புள்ளியே பப்-எல்-மன்டெப் ஜலசந்தியாகும். எனவே, அதைத் தக்கவைக்க அமெரிக்காவும் சவூதியும் முனைகின்றன.

இரண்டாவது காரணம், இதுவரை எடுக்கப்படாத அதேவேளை, யேமனில் நிறைவாக உள்ள எண்ணெய் வளமாகும். 1988ஆம் ஆண்டு எழுதப்பட்ட South Yemen’s Oil Resources: The Chimera of Wealth என்று தலைப்பிடப்பட்ட அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஜ.ஏயின் அறிக்கையானது, இது குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது.

ஒருகாலத்தில், பொருளாதார வலுவுடனும் சமத்துவத்துடனும் முற்போக்கான மத்திய கிழக்கு நாடாக விளங்கிய யேமன், எவ்வாறு நவதாராளவாதத்தினதும் பிராந்திய வல்லாதிக்கத்தினதும் ஆசைக்குப் பலியாகியது என்பதை, விளங்கிக் கொள்ள விரும்புவோர் ஹெலன் லக்னர் எழுதிய Yemen in Crisis: Autocracy, Neo-Liberalism and the. Disintegration of a State நூலை வாசிக்கலாம்.

இலங்கைப் போரின் அவலமும் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதியும் ஏன் ‘சர்வதேசச் சமூகத்தால்’ கண்டுகொள்ளப்படவில்லை என்பதை விளங்க, இப்போது யேமனில் நடந்தேறுவதை விளங்குவது முக்கியமானது.

யேமன் விடயத்தில், தமிழர்கள் யார் பக்கத்தில் நிற்கிறார்கள்? போரை நடத்தும் அமெரிக்காவின் பக்கத்திலா, போரை எதிர்நோக்கும் யேமனியர்களின் பக்கத்திலா? போரையும் மனிதப் பேரவலத்தையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிடம், தமிழர்களுக்கான நீதியை எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்த் தனமானது என்பது, இப்போதாவது எமக்கு விளங்க வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam