வெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்! ( மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 4 Second

உறவுகள் உணர்வுகள்: பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்

நீங்கள் இருவரும் ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் போது, அந்த விஷயம் ஒருவருக்கு பிடிக்காததாகவோ, ஒருவரை பாதிப்பதாகவோ இருந்து, கருத்து வேறுபாடு காரணமாக அதைப் பற்றிய உடன்பாட்டுக்கு வரவில்லை என்றால், அதைத் தீர்ப்பதற்கு மூன்றுவிதமான வழிகளைப் பின்பற்றுவீர்கள்.

1. உங்களுடைய சுய உணர்வை தவிர்த்து, உங்களுடைய துணைவரின் வழியில் அதைச் செய்வீர்கள்.

2. உங்களுடைய துணைவரின் உணர்வை கருத்தில் கொள்ளாமல் உங்கள் வழியில் அதைச் செய்வீர்கள்.

3. அந்தப் பிரச்னையை ஒட்டுமொத்தமாக கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவீர்கள்.

வழிமுறை-1

பேரம் இனிமையாகவும் பாதுகாப்பாகவும் நடப்பதற்காக அடிப்படை விதிகளை உருவாக்குதல்: பேரம் பேசுவது பிடிக்காத ஊருக்குப் போவது போன்றது என பலர் நினைப்பதால், அவர்களின் முயற்சிகள் பலன் தருவதில்லை. எனவேதான் அந்த அனுபவத்திலிருந்து அவர்கள் அந்நியப்பட்டு நிற்கிறார்கள். எதிரே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் எதிர்நோக்கியிருக்கும் போது யார் பேரம் பேச விரும்புவார்கள்?

பேரம் பேச ஆரம்பிக்கும் முன்பு, நீங்கள் விரும்புகிற செயல்களைத் திரும்ப செய்யவும், விரும்பாதவற்றை தவிர்க்கவும், நீங்கள் இருவரும் விரும்பி அனுபவிக்கக்கூடிய வகையில் சில அடிப்படை விதிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கருத்து வேற்றுமை தோன்றும் போதெல்லாம் நீங்கள் பேரம் பேசுவது இனிமையான அனுபவமாக இருந்தால்தான், அது உங்கள் திருமண வாழ்க்கையில் எப்போதும் தொடரும். இத்தகைய இனிமையான, பாதுகாப்பான பேரம் பேசும் சூழல் உருவாவதற்கு மூன்று விதமான விதிகள் உள்ளன. இவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

அடிப்படை விதி-1

பேரம் பேசுவதில் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். நல்ல மனநிலையில் உள்ள போது விவாதத்தை ஆரம்பிப்பது மிக சுலபம். பேரம் அவ்வப்போது சூடு பிடிக்கும் என்பதால், அவ்வப்போது ஏற்படும் உணர்ச்சியின் எதிர்மாறான வெளிப்பாடுகளை சமாளிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் சொல்லுகிற ஏதோ ஒன்று அவருக்கு பிடிக்காததாக இருக்கலாம். ஆகவே, விவாதத்தைத் தொடர விரும்பாமல், இதுவே போதும், இதற்கு மேல் பேச விருப்பமில்லை என அவர் கூறுவதாக வைத்துக் கொள்ளுங்கள், என்ன செய்வீர்கள்?

கோபப்பட கூடாது, மாறாக அதை உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.என்னிடம் ஆலோசனைக்கு வரும் நபர்களிடம் இதைப் பற்றி பேசும் போது, உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தை துணைவர் கூறும்போதும், ‘பேரத்தைத் தொடர வேண்டாம்’ என அவர் தடுக்கும்போதும் ‘எப்போதும் சாதகமாகவும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்’ என்று சொல்லித் தருவேன். இதை எதிர் கொள்ளத் தயாரானால் பிரச்னை பெரிதாகாது.

அடிப்படை விதி-2

‘பேரம் பேசும்போது முதலில் பாதுகாப்புக்கு வழி செய்யுங்கள். நிர்பந்தப்படுத்தாதீர்கள். அவமரியாதை செய்யாதீர்கள். பேரம் பேசும்போது கோபப்படாதீர்கள். உங்கள் துணைவர் நிர்பந்தம் செய்தாலும், அவமரியாதை செய்தாலும், கோபப்பட்டாலும் நீங்கள் அப்படி செய்யாதீர்கள்…’ஒருவருக்கொருவர் பேரம் பேசும்போது எது யாருக்கு இடையூறாக இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும் போதும், அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைச் சொல்லும்போதும், பேரம் மிக முக்கியமான ஆபத்தை நோக்கிச் செல்லுகிறது.

உங்கள் உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால், நீங்கள் பேரத்திலிருந்து பின்வாங்குமாறு பெறுபவர் உங்களுக்குச் சொல்வார். அந்த ஆலோசனையை கட்டுப்படுத்தும் அளவுக்கு புத்திக்கூர்மையைப் பயன்படுத்தாவிட்டால், பேரம் வாக்கு வாதமாக மாறும். ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் கவனத்தில் வைத்துக் கொண்டால், புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி வாதத்தைத் தவிர்த்து, நீங்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம்.

அடிப்படை விதி-3

‘பேரம் பேசும்போது தப்பிக்கவே முடியாது என்ற ரீதியில் முட்டுக்கட்டைத் தோன்றும்போது அல்லது நிர்பந்தம், அவமரியாதை அல்லது கோபப்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் பேரத்தை நிறுத்திவிட்டு, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிடுங்கள்…’குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பிரச்னையைத் தீர்க்க முடியாவிட்டால் எதிர்காலத்திலும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க முடியாது என்று பொருளல்ல. அந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்பைத் தடுப்பதற்கு ஒரு காரணமாக அந்த முட்டுக்கட்டைகளை அனுமதிக்காதீர்கள். ஆறப் போட்டுவிட்டு, அதை சிறப்பாக நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம் என யோசியுங்கள்.

பேரம் பேசுவது உங்களுடைய பெறுபவரின் தூண்டுதலால் நிர்பந்தமாகவோ, நிந்தனையாகவோ, கோபமாகவோ மாறி, பேரம் கசந்துபோய் யாரேனும் ஒருவருக்குப் பிடிக்காமல் போகும்போது பேசுகிற விஷயத்தை நிறுத்தி விட்டு, சந்தோஷமாகப் பேசுகிற வேறு ஏதேனும் பேசுங்கள்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, உங்கள் துணைவர் தனது செயலுக்காக வருந்தி, எது கோபப்படுத்தியதோ அந்த விஷயத்திற்கு வரக்கூடும். அந்த நேரத்தில் பழையதைக் கிளறாமல், தெளிவாகவும் நிதானமாகவும் விஷயத்தை அணுகுங்கள்.கோபமோ, நிந்தனையோ, நிர்பந்தமோ இல்லாமல் எப்படி விஷயத்தை அணுகுவது என்பதைப்பற்றி தெளிவாகப் பேசிக் கொண்டு விஷயத்திற்கு வாருங்கள். இதற்கு மாறாக, உங்கள் பெறுபவரை ஆதிக்கம் செலுத்த விட்டு விட்டால், உங்களுடைய அழிவுப்பூர்வமான உணர்வுகளால் பேரம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.

வழிமுறை-2

‘நீங்கள் இருவரும் உணரக்கூடிய பிரச்னைகளை அடையாளம் காணுங்கள்…’விவாதத்தை உற்சாகமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு செல்லக்கூடிய உத்தரவாதம் தரும் அடிப்படை விதிகளை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, பேரம் பேசுவதற்குத் தயாராக வேண்டும். ஆனால், எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை உங்கள் கோணத்திலிருந்தும், உங்கள் துணைவரின் கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டுப்பாடம் செய்வதைப் போல முதலில் ெசய்து பார்த்துக் கொண்டுதான் திருமண உறவில் பேரத்தை நடத்த வேண்டும். பலர் அவ்வாறு செய்வதில்லை. காரணம், அவர்களுக்கு அந்தப் பிரச்னை புரிவதில்லை அல்லது ஒருவர் அடுத்தவர் கோணத்திலிருந்து பிரச்னையைப் பார்ப்பதில்லை. இத்தகைய நிலைகளில் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைக்கூட அவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை. திருமண ஆலோசகர்களின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று, திருமண உறவில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தெளிவுப்படுத்துவது. இப்படி தெளிவுப்படுத்தி விட்டாலே,

‘ஓ, இதற்குத்தான் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தோமா?’ எனக் கேட்பார்கள். அதைத் தொடர்ந்து பல பிரச்னைகள் தீர்ந்து விடும்.ஒருவருடைய பிரச்னைகளை ஒருவர் புரிந்து கொள்ளும்போது, ஒருவரின் கருத்துகளை ஒருவர் புரிந்து கொள்ளும் போது, அப்பிரச்னைகளைப் பற்றி தாம் நினைத்த அளவுக்குப் பெரிதாக இல்லை என்பதை அறிந்து கொள்வார்கள். ஒரு விஷயம் தெளிவுப்படுத்தப்பட்ட பிறகு, அதற்கான தீர்வு உடனே கிடைத்து விடுவதால், கருத்து வேறுபாடு என்பது முற்றிலும் இல்லாமல் போய் விடும்.

பேரம் பேசுவதில் வெற்றிக்கு வழியாக இருப்பது மரியாதை. நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு, ஒவ்வொருவரும் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளும்போது, யார் யார் என்ன புரிந்து கொண்டிருக்கிறீர்களோ அந்தப் புரிதலுக்கு முக்கியத்துவம் தரவேண்டுமே தவிர, புரிய வைத்து சரிப்படுத்தலாம் என நினைக்கக்கூடாது.

உங்களுடைய நோக்கம் உற்சாகமான ஒப்பந்தமே தவிர, ஒருவரின் புரிந்து கொள்ளுதலை நீங்கள் நிராகரித்து விடுவதில் உற்சாகமாக இருக்க வழிதேடக்கூடாது. நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது மட்டுமல்ல… உங்கள் இருவரின் புரிந்து கொள்வதற்கு ஏற்ப, இருவருக்கும் பொருத்தமான முடிவுக்கு வருவதுதான் உற்சாகமான ஒப்பந்தத்தை அடையும் வழி என்பதை இருவருமே தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் இலக்கு உற்சாகமான ஒப்பந்தம் என்னும்போது பேரம் பேசுவது சுலபமாக இருக்கும், ஒருவர் மற்றவரை கேவலப்படுத்திக் கொள்ளும் அனைத்தையும் அது தவிர்த்து விடும். உற்சாகமான உடன்படிக்கையை மேற்கொண்டிருக்கும் போது நிர்பந்தப்படுத்துவதை மறந்து விடுவீர்கள். இவ்வாறே நிந்தனை செய்வதும், கோபத்தில் பேசுவது இருக்காது. உங்கள் பிரச்னைக்கு உண்மையான தீர்வை நாடுவீர்களேயானால், உற்சாகமான ஒப்பந்தம் எதைப் பற்றியதாக இருந்தாலும் அதற்கு விருப்பத்துடன் சம்மதிப்பீர்கள்.

நிர்பந்தம், நிந்தனை, கோபம் போன்றவை சில தம்பதியரிடம் இருக்கும் போது அவர்களுடைய உணர்வுகள் வெளிப்படையாக இருப்பதை அறியலாம். அவர்கள் நிர்பந்திக்காவிட்டால், அடுத்தவரை குறைகூறாவிட்டால், கோபத்தை வெளிப்படுத்தாவிட்டால் பிரச்னையை எப்படி அணுகுவது என்பது அவர்களுக்குத் தெரியாது.காதலுக்கு எதிரிகளான இந்தப் பழக்கம் இல்லாவிட்டால் அவர்களுக்குப் பிரச்னை தீரும் என்ற நம்பிக்கை வராது. காரணம், அவர்கள் பிரச்னையை ஜெயிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொள்வதுதான்.

ஆனால், அதை எவ்வாறு செய்வது என்பது தெரியாது. திருமணம் நடந்தது முதல் அவர்கள் தங்கள் துணைவருக்குத் தெரிந்த ஒரே வழி நிர்பந்தம், குறை கூறுவது மற்றும் கோபம் ஆகியவைதான்.நீங்கள் ஒருவேளை இப்படிப்பட்ட நிலையில் இருந்தால், ஒவ்வொரு பிரச்னையையும் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணுகுவதை பழக்கமாக்குங்கள். ஒருவர் மற்றவரிடம் கேள்விகளைக் கேட்க கற்றுக் கொள்ளுங்கள். அந்தக் கேள்விகள் உங்கள் இருவரையும் மகிழ்ச்சிப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, ஒருவருக்கு ஒருவர் நெருக்கடியைத் தருவதாக இருக்கக் கூடாது. ஒருவேளை ஜெயிப்பதை மட்டுமே இலக்காக வைத்து தீர்வு காண முயற்சிக்க நினைக்கிறீர்கள் என்றால், அடுத்த வழிமுறையை நாட வேண்டியதுதான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களே…மனம் தளர வேண்டாம்! (அவ்வப்போது கிளாமர்)
Next post காங்கிரசுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியது பேஸ்புக்!! (உலக செய்தி)