By 27 April 2019 0 Comments

சூரிய நமஸ்காரம்! (மகளிர் பக்கம்)

எனர்ஜி தொடர் 4: ஏயெம்

உங்கள் வாழ்வில் முதல் முறையாக உங்களின் உடல் பற்றியும் வாழ்க்கைமுறை பற்றியும் மிக அக்கறை கொண்டு நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பெரும் பாராட்டுகள்! இதை ஒரு நல்ல தொடக்கமாகக் கொள்ளலாம்; இனியும் அடிக்கடி தொடரலாம். சரியான புரிதல், ஏன் யோசிப்பு கூட உடனே பக்குவநிலையை எட்டாது. தொடர்ந்து செய்யச் செய்யத்தான் அதன் பலன்களை கனிகளாக சுவைக்க முடியும்.

ஏதோ ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால், அதைத் தொடர்வதற்கு எப்படியெல்லாம் வேலை செய்கிறோம்; முயற்சி எடுக்கிறோம்; பொய் சொல்கிறோம்; பிறரை ஆதரவுக்கு இழுக்கிறோம்; மேலும் மேலும் வலுவாக அந்த அழுக்கு வேலையை கேள்வியே இல்லாமல் தொடர்கிறோம்! அதில் ஒரு சிறு பகுதியை நமக்காக – நமது உடல்நலனுக்காகத் திருப்பினாலே போதும்… ஆரோக்கியமும் தெளிவும் நம் வாழ்க்கையை உயரிய இடத்திற்குக் கொண்டு போய் விடும். அதனால் நம் குடும்பம் நிம்மதி பெறும்; நம் வாரிசுகள் சுகவாழ்வு பெறுவர். விரயங்கள் தவிர்க்கப்பட்டு பல உயர்வுகள் எளிதாய் சாத்தியப்படும்.

இப்போது வேறு விஷயங்களுக்குள் போகாமல், சூரிய நமஸ்காரத்தின் அமைப்புக்கு வந்து விடுகிறேன்…சூரிய நமஸ்காரப் பயிற்சியில் உடலை சமமான நிலையிலிருந்து சற்று விரித்து, நீட்டி, இழுத்து, பிறகு வயிற்றை அமுக்கி, பிறகு மார்பை விரித்து, பிறகு வயிற்றை மேலும் சுருக்கி, பிறகு மார்பை நன்கு விரித்து, மூச்சை நன்கு இழுத்து சுவாசப்பையில் காற்றை நிரப்பி… என்று வயிறும் மார்பும் மாறி மாறி பலன் அடைகின்றன. இவை இரண்டோடு முதுகெலும்பும் வளைந்து நிமிர்ந்து பலனடைகிறது.

இப்படிச் செய்யும்போது இந்த உறுப்புகளோடு தொடர்புடைய சக்கரங்கள் என்கிற சக்தி மையங்கள் தூண்டப்பட்டு, நன்கு வேலை செய்கின்றன. வயிறு அமுங்கும்போது வெளிமூச்சும், மார்பு விரியும்போது உள்மூச்சும் இயல்பாகவும் படு இயற்கையாகவும் நடக்கிறது. இப்படிச் சொல்வதால், சூரிய நமஸ்காரம் என்பது மார்பையும் வயிற்றையும் மட்டுமே வலுப்படுத்தி இயல்பாக இயங்கச் செய்யும் பயிற்சி என அர்த்தம் இல்லை. இந்தப் பயிற்சியின்போது அனைத்து உறுப்புகளுமே பயன் பெறுகின்றன.இந்த அடிப்படையோடு சூரிய நமஸ்காரப் பயிற்சியில்,

* மூச்சைக் கொண்டு வரலாம்
* ஒலியைக் கொண்டு வரலாம் (‘ஓம்’ மற்றும் மந்திரங்கள்)
* ஒரு நிலையை முடித்த பின் மந்திரம் சொல்லலாம்
* ஒலியெழுப்பி வெளிமூச்சுக்குப் பின் அசைவைத் தொடங்கலாம்
* உள்மூச்சு – வெளிமூச்சுக்குப் பின் தேவைக்கு ஏற்ப மூச்சை நிறுத்தலாம்
* ஒரு நிலையில் குறிப்பிட்ட நேரம்/சில மூச்சுகள் வரை இருந்து குறிப்பிட்ட பலனுக்கு, கூடுதல் பயிற்சி செய்யலாம்
* சில நேரம் முழு நமஸ்காரத்தையும் செய்யாமல் முதல் பாதியை மட்டும் செய்யலாம்
* உள்மூச்சின்போதும், வெளிமூச்சின்போதும் அரிதாக ஒலியைப் பயன்படுத்தும் முறையைச் செய்யலாம்
* மெதுவாகவோ, வேகமாகவோ செய்யலாம்
* வலிமையானவர்கள் இதில் பல சுற்றுகளை இடைவெளி இல்லாமல் தொடர்ந்தும் செய்யலாம்
* இந்த சூரிய நமஸகாரத்தில் வேறு ஆசனங்களை இடையில் புகுத்தியும் செய்யலாம்
* சூரிய நமஸ்காரத்தின் சில நிலைகளில் அசைவைக் கூட்டவோ, மாற்றவோகூட செய்யலாம்
* பாதி வரை மந்திரம், மீதி வெறும் மூச்சு என செய்யலாம்
* மூச்சுக்குப் பின் அசைவை மேற்கொள்ளலாம்
* ஒரு நிலையில் இருந்தபடியே சிறிது நேரம் / சில மூச்சுகளில் மந்திரம்/ஒலி எழுப்பலாம்
– இப்படி சூரிய நமஸ்காரப் பயிற்சியில் பலவற்றைச் சேர்க்கவும், இருக்கும் நிலையை வலுவடையச் செய்யவும் ஏகப்பட்ட இடம் இருக்கிறது. இதுவே பலருக்கு புதுப்புது அனுபவங்களைத் தரும். அது இயல்புதான்.

அதை விடவும் சூரிய நமஸ்காரத்தை ஆழமாய்ப் பார்க்கவும் நிறைய இடம் உண்டு. குறிப்பாக ஒவ்வொரு நிலையிலும் என்ன நடக்கிறது… ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குப் போவதன் சூட்சுமம்… உடலுக்குள் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது… பயிற்சி எப்படி பயன்களைத் தருகிறது… உணர்வில், மனநிலையில் எப்படி மாற்றங்களை ஏற்படுத்துகிறது என பெரிய பட்டியலே உண்டு. இப்படி இதை ஆழமாகவும் அகலமாகவும் பார்க்கும்போது பல தளங்கள், பல நுட்பங்கள் தெரிய வரும்.

பல ஆயிரம் ஆண்டுகளாக பல கோடி மக்கள் பயிற்சி செய்துவரும் சூரிய நமஸ்காரம், பல தலைமுறைகளைக் கடந்தும் காலத்தின் தேவையாக இருக்கிறது. அதில் எத்தனையோ பேர் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள், நுணுக்கங்களைக் கூட்டியிருக்கிறார்கள்!

முதல்முறையாக இதைப் பயிற்சி செய்யும் உங்களில் சிலருக்கு இது முற்றிலும் புதியதாகத் தெரியும். பயிற்சியில் இறங்கி தொடர்ந்து செய்து இனிய அனுபவத்தைப் பெறும் நீங்களும் இதில் பங்களிப்பைச் செய்யலாம். இன்னும் கூடுதல் பலன்களைத் தரும் விதமாக சூரிய நமஸ்காரத்தை மேம்படுத்தலாம். பிறரோடு பகிர்வதில் புதுமையைக் கொண்டு வரலாம். உங்களுக்கு எண்ணற்ற பயிற்சிகளும் பலன்களும் காத்திருக்கின்றன.

யாரிடம் என்ன மாற்றங்களை, தாக்கங்களை இந்த சூரிய நமஸ்காரம் ஏற்படுத்தும் என்று சொல்ல முடியுமா? எத்தனை கோடி வாழ்வுகள் இனி ஆரோக்கியம் பெற உள்ளன என்று கணிக்க முடியுமா?எல்லோரும் இதைப் பயிற்சி செய்தாலும் ஒருவருக்குக் கிடைக்கும் பலன்களும் அனுபவங்களும் போல வேறு ஒருவர் பெற முடியாது;

ஒருவருக்குக் கிடைக்கிற பலனை இன்னொருவர் தடுக்க முடியாது. இந்த முயற்சி உங்களின் ஆரோக்கியத்தைக் கூட்டும்; உங்களுக்குள் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். ஒரு நல்ல விஷயத்தைச் செய்யும்போது செய்பவரும் பெறுபவரும் எப்படி பலனடைகிறார்களோ அப்படி!வயிறும் மார்பும் மாறி மாறி பலன் அடைகின்றன. இவை இரண்டோடு முதுகெலும்பும் வளைந்து நிமிர்ந்து பலனடைகிறதுPost a Comment

Protected by WP Anti Spam