By 5 April 2019 0 Comments

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

அழகான பங்களாக்கள், அடுக்கு மாடிக் கட்டடங்கள், இடையிடையே சிறு தனி வீடுகள் இவை அனைத்தையும் அப்படியே வெறும் கட்டடங்களாக கற்பனை செய்து பாருங்கள். கொளுத்தும் வெயிலில் அந்த இடம் எப்படியிருக்கும்? மாறாக சுற்றிலும் மரங்கள், இடையிடையே தோட்டம் இவற்றுடன் கற்பனை செய்து பாருங்கள்! பசுமையுடன் கூடிய அந்த அழகான காட்சிகள் கண்களுக்கு எவ்வளவு விருந்தாக இருக்கும்? கற்பனையே இப்படி என்றால், உண்மையில்?

இப்படி ஒரு சூழ்நிலை உருவாக வேண்டுமானால் நாம் அனைவரும் மரஞ்செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். என்னடா, இருக்கும் தண்ணீர் கஷ்டத்தில் ‘செடிகளுக்கு நீர் ஊற்ற முடியுமா’ என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. எப்படிப்பட்ட தண்ணீராக இருந்தாலும் அதில் வளரக்கூடிய செடிகள் உண்டு. தண்ணீரே இல்லாமல் கூட வளரக்கூடிய செடிகள் உண்டு. இதை கருத்தில் கொண்டு செடிகளை தேர்ந்தெடுப்போம்.

அடுக்குமாடிக் கட்டடங்களில் மரஞ்செடிகள் வைக்க முடியாது என்பதெல்லாம் கிடையாது. இருக்கவே இருக்கு ‘போன்சாய்’ முறை. இப்பொழுது சமீப காலமாக, நிறைய திருமணங்களில் தாம்பூலப் பையுடன் ஏதேனும் செடிகள் சேர்த்துத் தருகிறார்கள். அதுவரை செடிகளே வளர்க்காதவர்கள் கூட ஒரு தொட்டி வாங்கி, பரிசாக வாங்கி வந்த செடியை நட்டு விடுவார்கள். அது வளர வளர நம் ஆசையும் செடிகளின் மீது அதிகரிக்கும். மேலும் செடிகள் வளர்க்கும் ஆசை வரும்.

நமக்குப் பிடித்த வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை போன்றவற்றை வளர்ப்பது போன்று, செடிகளையும் ஒரு உறுப்பினர் போன்று மனதளவில் நினைக்கும்போது அதன் பலன் அதிகம். மரஞ்செடிகள் நம் இருப்பிடத்தை அழகாக்கி, குளுமையாக்கி இயற்கைக் காற்றையும் தரும். குறிப்பிட்ட ஒரு இடத்தை அலங்கரிக்க எந்தவிதப் பொருளும் இல்லை என்றால், கவலைப்படாமல் முழுக்க முழுக்க செடிகளை கொண்டே அலங்கரிக்க முடியும்.

அதனால்தான் இன்டீரியர் டெகரேஷனைப் பொறுத்தமட்டில் செடிகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. செடிகள் எப்போதும் அறையின் மற்றப் பொருட்களோடு சேர்ந்து நல்ல ஒரு கலர் காம்பினேஷன் தரும். உண்மையான அழகைத் தரும் செடிகளை வைத்து வீட்டை பலவிதமாக அலங்கரிக்கலாம். ஓர் இடத்தை இரண்டாகப் பிரிக்கவும் ரூம் டிவைடர் போல செடிகளை பயன்படுத்தலாம்.

இவை குறைந்த செலவில் நிறைந்த அழகைத் தரும். உதாரணமாக, கேட் அல்லது காம்பவுண்டு சுவர் அருகே செடிகள் வைக்கும்பொழுது, வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பது போல் இருக்கும். நடை முழுவதும் வைக்கும்பொழுது ஒரு வழிகாட்டி போல இருக்கும். பந்தல் போன்று படர விடும்பொழுது திரைச்சீலை போல, ஜன்னல்களில், சுவர்களில் ஏற்றி விடும் பொழுது பந்தல் போல அமைந்து நமக்கு நிழலைத் தரும்.

வெற்றிடங்கள் அல்லது வராண்டாக்கள் போன்ற இடங்களில் செடிகள் வைக்கும்பொழுது, அந்த இடம் கலை ரசனையுடன் இருக்கும். டிராயிங் ரூமில் அழகான பாம் (palm) வகை செடிகள் வைக்கலாம். சோஃபா செட்டின் இருபுறமும், ஒரே மாதிரியான செடிகள் இரண்டு வைக்கலாம். சோஃபா மீது அதன் இலைகள் விழாதவாறு வைக்க வேண்டும். பார்ப்பதற்கு செடிகள் அடர்த்தியாகவும், இலைகள் பளிச்செனவும் இருத்தல் அவசியம். சில சமயங்களில் இலைகள் மீது மண் படிந்திருக்கும்.

அப்படியில்லாமல், அவ்வப்பொழுது ஈரத்துணியால் துடைத்து விடலாம். உயரமான, இலைகளற்ற, குச்சி போன்று நிற்கும் செடிகளை விட, அடர்த்தியான குட்டைச் செடிகளாக இருந்தாலும் பரவாயில்லை. சரியான அடிப்பாகம் அமைத்து விட்டால் போதும். ஒரே மாதிரி இரண்டு ‘ஸ்டூல்’கள் அல்லது குட்டை ‘டீபாய்’கள் மேல் கூட வைக்கலாம்.

பெரிய பிளாஸ்டிக் தொட்டிகள் இப்பொழுது நிறைய கிடைக்கின்றன. அதற்குள் மண் தொட்டியை வைத்து, ஸ்டூல் மேல் வைக்கும்பொழுது மண் வெளியில் வர வாய்ப்பிருக்காது. பார்க்கவும் அழகாக இருக்கும். மூங்கில் ஸ்டாண்டு, பிரம்பு ஸ்டூல், கூடை போன்ற அமைப்பு, பித்தளைத் தொட்டிகள் போன்றவை அலங்காரத்திற்காக செடிகள் வைக்க பயன்படுத்தப்படுகின்றன.

பெரிய ஹால் அல்லது மாடிப்படி அடிப்பாகம் வெற்றிடமாக இருந்தால் நல்ல பெரிய அடர்த்தியான செடிகள் வைத்து அலங்கரிக்கலாம். நாம் நட்சத்திர ஹோட்டல்களில், பளபளக்கும் பித்தளை அண்டாக்களுக்குள், பூந்தொட்டிகள் வைத்திருப்பதை பார்க்க முடியும். அதே போல், வீட்டில் பழைய பித்தளைப் பாத்திரங்கள் பயன்படாமல் இருந்தால் அவற்றை பாலிஷ் செய்து, அதற்குள் தொட்டிகளை வைத்து அலங்கரிக்கலாம்.

இவை சாத்தியம் இல்லாவிடில், இப்பொழுது கிடைக்கும் பெயின்ட் தொட்டிகளையே அடியில் ஒரு தட்டு வைத்து பயன்படுத்தினால், இடம் எப்பொழுதும் சுத்தமாக காணப்படும். அறையின் மூலைகள் வெற்றிடமாகயிருந்தால், அழகான தொட்டிகளை வைத்து அறையை அழகாக்கலாம். வீட்டின் உட்புறம் தொட்டிகள் வைக்கும் பொழுது, சூரிய வெளிச்சம் பட வாய்ப்பில்லாமல் போகலாம். எனவே ஒவ்வொன்றிலும் இரண்டு செட்கள் வைத்துக் கொண்டு, ஒன்றை உள்ளே வைக்கும் பொழுது, மற்றொன்றை சூரிய வெளிச்சத்தில் வைக்கலாம்.

இது போல் மாற்றி வைத்து பயன்படுத்தும்பொழுது செடிகள் பல நாட்கள், ஆண்டுகளுக்கு செழிப்பாக இருக்கும். தனி வீடாக இருப்பின், தோட்டம் அமைப்பதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது. வீட்டைச் சுற்றி பாத்தி போல அமைக்கலாம். உதாரணமாக வெளியிலிருந்து தெரியும்படி அழகான குரோட்டன்ஸ் வகைகளை முகப்பில் வைக்கலாம். பூச்செடிகளை சூரிய வெளிச்சம் படும் இடங்களில் நட்டு வைக்கலாம்.

மரங்கள் வைப்பதானால், போதிய இடைவெளி வேண்டுமென்பதால், வீட்டின் இருபக்கங்களிலும் இடைவெளி விட்டு பயிரிடலாம். முன்பக்கம் நிறைய இடம் இருந்தால் பசுமை புல்வெளி வளர்க்கலாம். புல்வெளியின் ஓரங்களில் பார்டர் போன்று, சிவப்பு பெயின்ட் அடித்த தொட்டிகளை வரிசைப்படுத்தி வைக்கலாம். நடுவில் சிறிய நீரூற்று வைக்கலாம். சிமென்ட் மேடை கூட அமைத்து சிலைகள் வைக்கலாம்.

பெரிய பங்களாக்களில் மட்டுமல்ல சிறிய வீடுகளில் கூட இத்தகைய அமைப்பை தந்தால் அதுவும் அழகாக காட்சி தரும். செடிகளை பாத்ரூமில் கூட வைக்கலாம். மேலே ஜன்னல்களில் படர விடலாம். ரப்பர் பிளான்ட் மிகவும் உறுதியானது. முதலில் சிறிய கட்டிங் வைத்தால் போதும். நாளடைவில் அது மரமாகி விடும். அதிலிருந்து நிறைய செடிகள் உருவாக்கிக் கொள்ளலாம்.

மணி பிளான்ட் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். நீரில் வைத்து அழகாக வளர்க்கலாம். தொட்டிகளில் ஷேப் வைத்து அல்லது வேண்டிய இடத்தில் கயிறு கட்டி படர விடலாம். மொட்டை மாடிகளில் அங்கங்கே தொங்க விட்டாலும் அழகுதான். அதே போல் ஆயிரக்கணக்கான பாம் வகைகள் உள்ளன. ஓர் இடத்தில் வைத்து நன்கு அடர்த்தியாக வளர்த்து விட்டால், அதிலிருந்து நாமே நிறைய செடிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

குறைந்த செலவில் நிறைய செடிகளை வளர்க்க முடியும். அதே போல், தண்ணீர் கஷ்டம் இருந்தால்கூட, காக்டஸ் (cactus) வெரைட்டி நிறைய இருப்பதால், அழகான இலைகள் கொண்டவற்றை வளர்க்கலாம். மாதக் கணக்கில் வெளியூர் சென்று திரும்பினால் கூட அவை நமக்கு ‘வெல்கம் டச்’ தரும். தண்ணீரும் தேவையில்லை. செடிகள் வளர்ப்பதில் சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள நர்சரியில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது வாழை மரங்கள் கூட அழகிய தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன.

வீட்டில் விசேஷம் என்றால் முன்பெல்லாம் வாழை மரம் கட்டுவோம். ஆனால் இப்பொழுது நம் நுழைவாயிலின் இருபுறமும் இந்த தொட்டிகளை வைத்து அலங்கரிக்கலாம். ஆஸ்பராகஸ் என்ற புல் வகையை ஒரு தொட்டி நிறைய வளர்த்தால் போதும். தினம் தினம் அவற்றின் இலைக் கொத்துக்களுடன் பூக்களை இணைத்து அழகிய பூ அலங்காரம் செய்து மேஜை மேல் வைக்கலாம். அந்த இலை கொத்துக்கள் சீக்கிரம் கெடாது. வாடவும் வாடாது.

அடுக்குமாடிக் கட்டடங்களிலும், ஒவ்வொரு வீட்டிற்கும் மொட்டை மாடி அல்லது வராண்டாவில் சிறிது இடம் ஒதுக்கியிருப்பர். ஓரளவு பெரிய இடமாக இருந்தால், ஓரங்களில், சுமார் இரண்டு அடி உயரத்திற்கு பாத்தி போன்று அமைத்து, ஒரு பக்கம் குரோட்டன்ஸ், ஒரு பக்கம் பூச்செடிகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை பயிரிடலாம். மொட்டை மாடிகளில் கார்டன் அமைப்பது என்பது நிறைய இடங்களில் பிரபலமடைந்து விட்டது.

அதுமட்டுமல்ல வீட்டு மாடியில் அல்லது வராண்டாவில் எளிய முறையில் அலங்கரித்து, விழாக்களைக்கூட கொண்டாட முடியும். சிறிய பிளாஸ்டிக் தட்டுடன் அல்லது டப்பாவுடன் அடங்கும் தெர்மாகோல் அல்லது ஸ்பாஞ்ச் ஒரே சைஸில் நிறைய வாங்கி வைத்துக் கொள்ளலாம். அவற்றை காம்பவுண்ட் சுவர் மேல் இடைவெளி விட்டு வைக்கலாம். பின் அதிலிருந்து, கொத்துக் கொத்தாக பரவலாக தொங்கும் கொடி வகைகளை தொங்க விடலாம். இவை இயற்கைக் கொடிகளாக இருந்தால் அழகாக இருக்கும்.

சிறிய சாமந்திப் பூக்கள் போன்று பூக்களோடு கூடியவற்றை சொருகி வைக்கலாம். இடையிடையே காம்புடன் கூடிய மலர்களை சொருகலாம். இது போல் சுவர் மேல் முழுவதும், அலங்கரித்த பின் சீரியல் ைலட் போடலாம். செலவு செய்ய இயலாதவர்கள் செயற்கைக் கொடிகள் மலர்களுடன் கூடியவை வாங்கி வைத்துக் கொள்ளலாம். பின் தரையில் ஒரு லான் கார்ப்பெட் விரித்து சுற்றிலும் ெபயின்ட் செய்த ெதாட்டிகள் வைக்கலாம்.

நடுவில் ஒரு செயற்கை அருவி வைக்கலாம். அங்கங்கே நான்கு அல்லது ஐந்து நாற்காலிகளை வட்ட வடிவில் போட்டு வைக்கலாம். இப்பொழுது ஒரு பார்ட்டிக்கு தேவையான அலங்காரம் ரெடி. சாப்பாடுக்காக ஏதாவது ஒரு கேட்டரிங் நிறுவனத்திடம் ஆர்டர் தந்துவிட்டால் போதும். எத்தனை நேரம் வேண்டுமானாலும் குடும்பத்துடன் மகிழலாம். வெயில் காலங்களில் ரூஃப் கார்டன்தான் அழகு. மழைக்காலமாக இருந்தால், இது போன்று உட்புறம் மட்டும் அலங்கரித்து ஷாமியானா போட்டு விடலாம். இனி எல்லாரும் கட்டாயம் இரண்டு செடிகளாவது வீட்டில் வைக்காமல் இருப்பீர்களா என்ன?Post a Comment

Protected by WP Anti Spam