கண்களைக் கசக்காதீர்கள்!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 21 Second

Eye Care

உணர்வுகளில் பார்வைக்கு மிக முக்கிய இடம் உண்டு. எந்த ஒரு காட்சியையும் பார்த்து உணர்வதைப் போன்ற நிறைவு வேறு எதிலும் கிடைக்காது. பார்வை அவ்வளவு பவர்ஃபுல். பார்வை தொடர்பாக நம்மில் பலரும் செய்கிற அலட்சியங்களையும், தவறுகளையும் பற்றி விளக்குகிறார் விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

* வருடத்துக்கு ஒரு முறை கண் பரிசோதனை

40 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் வருடத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம். பார்வையில் பிரச்னை இருந்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வருடத்துக்கு ஒரு முறை செய்கிற கண் பரிசோதனையில் உங்கள் பார்வைத் திறன் சரிபார்க்கப்படும். கண் அழுத்த நோய், சர்க்கரை நோயாளிகளுக்கான கண் பிரச்னைகள், கண்புரை போன்றவை இருக்கின்றனவா என்று பார்க்கப்படும். எனவே வருடத்துக்கு ஒரு முறை கண் மருத்துவரை சந்திக்கத் தவறாதீர்கள்.

* அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்

கண்களில் அரிப்பு, எரிச்சல் மற்றும் கண்ணீர் வடிதல் இருந்தால் அவை ஏதோ ஒவ்வாமையின் அறிகுறிகளாக இருக்கலாம். இவை தவிர கண்களில் வலி, வெளிச்சத்தைப் பார்த்தால் கூசுவது, கண்களிலிருந்து தொடர்ச்சியாக அழுக்கு வெளியேறுவது போன்றவை இருந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது. அவை சீரியஸான தொற்றின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். உங்களை மட்டுமன்றி மற்றவர்களையும் அது பாதிக்கும் என்பதால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

* காயங்களை கவனியுங்கள்

கண்களில் லேசான காயம் பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. அதிலும், குறிப்பாக பார்வையில் பிரச்னை இருந்தாலும், கண்களைத் திறக்க முடியாவிட்டாலும், கண்களின் வெள்ளைப் பகுதியில் ரத்தம் தென்பட்டாலும், விழிகளை அசைக்க முடியாவிட்டாலும், கண்மணிகளில் ஒன்று பெரிதாகவும் மற்றொன்று சிறிதாகவும் தெரிந்தாலும் உடனடியாக கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

* கண்ணாடி அணிய மறக்காதீர்கள்

வெயிலில் செல்லும்போது சன் ஸ்கிரீன் உபயோகிக்கிறோம். குடை பிடித்துக் கொள்கிறோம். டூ வீலர் ஓட்டும்போது உடல் முழுக்க மூடிக்கொள்கிறோம். ஆனால், கண்களை கவனிக்கிறோமா? சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் கண்களையும் பாதிக்கும். எனவே, வெயிலில் செல்லும்போது அல்ட்ரா வயலட் ஏ மற்றும் பி கதிர்களை தடுக்கும் தரமான குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்வது மிக அவசியம்.

* கண்களைக் கசக்காதீர்கள்

களைப்பாக இருந்தாலோ, தூக்கம் இல்லாத போதோ கண்களைக் கசக்குவது பலரது வழக்கம். இப்படிச் செய்வதன் மூலம் கண்களின் ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். கைகளில் எப்போதும் கிருமிகளின் ஆதிக்கம் இருக்கும் என்பதால் கண்களைக் கசக்குவதன் மூலம் அந்தக் கிருமிகளை கண்களுக்கும் கடத்துவோம். கண்களைத் தொடும்போது கைகள் சுத்தமாக இருக்க வேண்டியது முக்கியம்.

* திரை நேரத்தை குறையுங்கள்

கம்ப்யூட்டர், டேப், ஸ்மார்ட்போன் போன்றவற்றை கண்ணிமைக்காமல் பல மணிநேரம் பார்ப்பது கண் தசைகளை களைப்படையச் செய்யும். நீண்ட நேரம் இந்தத் திரைகளைப் பார்ப்பது தலைவலிக்கும் காரணமாகும்.

* d20-20-20

கண் நலம் காக்கும் பிரபலமான இந்த விதிமுறை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரத்தில் உள்ள ஏதோ ஒன்றை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். அதாவது தொடர்ச்சியாக திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் இருந்து பார்வைக்கு தற்காலிக இடைவெளி கொடுக்கவே பயிற்சி. திரையைப் பார்க்கும்போது கண்களை அவ்வப்போது இமைக்க வேண்டும். அப்போதுதான் கண்கள் வறண்டு போகாமல் இருக்கும். வாய்ப்பு இருந்தால் வேலையிடத்தில் கம்ப்யூட்டரில் ஆன்டி கிளார் பாதுகாப்பு செய்து கொள்வது கண்களைப் பாதுகாக்கும்.

* கான்டாக்ட் லென்சில் கவனம் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவரா?

அவற்றை சாதாரண தண்ணீர் அல்லது எச்சில் போன்றவற்றில் சுத்தப்படுத்தக் கூடாது. அவற்றுக்கான பிரத்யேக திரவத்தில் சுத்தப்படுத்தி பத்திரமாக வைக்க வேண்டும். லென்ஸ் வைக்கும் குமிழ் போன்ற கேஸை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இரவில் லென்சை அகற்றிவிட்டே தூங்க வேண்டும். லென்ஸ் அணிந்தபடி ஷவரில் குளிப்பது கூடாது. அது இன்ஃபெக்‌ஷனை ஏற்படுத்தும்.

* தூங்குவதற்கு முன்…

கண்களை கவனியுங்கள்.எத்தனை மணி நேரம் தாமதமாகத் தூங்கச் சென்றாலும் கண்களில் லென்ஸ், மஸ்காரா, ஐ லைனர், ஐ ஷேடோ போன்றவை அகற்றப்பட்ட பிறகே தூங்க வேண்டும்.

* பாதுகாப்பு கண்ணாடி

வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு குறிப்பிட்ட சில வேலைகளின் போதும், விளையாடும்போதும் கண்களுக்குப் பாதுகாப்பு முக்கியம். மணற்பாங்கான திடல்களில் விளையாடும்போதும், தோட்டவேலை செய்யும்போதும், பயணத்தின் போதும் கண்ணாடி அணிவது பாதுகாப்பானது.

* வரலாறு முக்கியம்

உங்கள் குடும்பத்தாரில் யாருக்கேனும் கண் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் அவற்றைத் தெரிந்துவைத்திருப்பது உங்களுக்கும் நல்லது. சிலவகையான கண் பிரச்னைகள் பரம்பரையாக தொடரக்கூடும். உதாரணத்துக்கு கண் அழுத்த நோய்.பார்வையில் சின்ன பிரச்னை ஏற்படும்போது மருத்துவரைச் சந்தித்து குடும்பப் பின்னணியில் உள்ள பார்வை பிரச்னைகளைச் சொல்வதன் மூலம் அந்தப் பிரச்னைகள் உங்களுக்கும் வருமா என்பதை முன்கூட்டியே கணிக்கவும், சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கவும் ஏதுவாக அமையும்.

* அடிக்கடி கண்ணாடியை மாற்றுங்கள்

ஒருமுறை கண் மருத்துவரை சந்தித்து, பரிசோதனை செய்து கண்ணாடி அணிய ஆரம்பித்து விட்டால் காலம் முழுக்க அதையே அணிந்து கொண்டிருப்பார்கள் பலர். கண்ணாடியின் பவர் அவ்வப்போது மாறும்.எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் மருத்துவரைச் சந்தித்து பவரை சரிபார்த்து அதற்கேற்ப கண்ணாடி அணிவது பார்வை பிரச்னைகளைத் தீவிரமாகாமல் காக்கும்.

* புகை பார்வைக்கும் பகைபுகைப்பழக்கம் உடலின் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாவதைப் போல பார்வை தொடர்பான பிரச்னைகளுக்கும் காரணமாகும். புகைப்பழக்கம் இருந்தால் பார்வை நரம்புகள் பாதிக்கப்படலாம். சீக்கிரமே கண்புரை வரலாம். எனவே, புகைப்பழக்கத்தை தவிர்க்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதம் கொன்ட யாணை பாருங்கள்.!! (வீடியோ)
Next post வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..!! (மகளிர் பக்கம்)