ஹெல்த் காலண்டர்!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 29 Second

தட்டம்மை நோயின் தன்மைகள், பாதிப்புகள் மற்றும் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 16-ம் நாள் தட்டம்மைத் தடுப்பூசி தினம் (Measles Immunization Day) அனுசரிக்கப்படுகிறது.

நோய்த்தொற்று ஏற்பட்டு 10 முதல் 12 நாட்களில் உண்டாகும் கடுமையான காய்ச்சலே இந்த நோயின் முதல் அறிகுறி. இதனோடு இருமல், குளிர், கண் சிவந்துவிடுதல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுவது போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாக உள்ளது. இருமல், தும்மல் மற்றும் மூக்கு அல்லது தொண்டை சுரப்புகள் மூலம் இந்நோய் பரவுகிறது.

தட்டம்மை ஒரு தீவிரமான தொற்றுநோய். இது பெரும்பாலும் சிறுவர்களையே பாதிக்கிறது. இளம் சிறுவர்களின் இறப்பு மற்றும் உடல் உறுப்புகளின் செயல்திறன் இழப்புக்கான (ஊனம்) முக்கியக் காரணிகளில் இந்நோயும் ஒன்றாக உள்ளது. இந்த நோயைக் குணமாக்க மருந்து ஏதுமில்லை. ஆனால், இதைத் தடுக்க ஒரு பாதுகாப்பான, மலிவான தடுப்பூசி உள்ளது. இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படவும், நோயின் தீவிரத்தால் மரணம் உட்பட்ட பிற பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் அனைத்து குழந்தைகளுக்கும் 2 வேளை தட்டம்மை தடுப்பூசியைப் பரிந்துரைக்கிறது. இதைத் தனியாக தட்டம்மை ரூபெல்லா அல்லது தட்டம்மை-அம்மைக்கட்டு-ரூபெல்லா தடுப்பு மருந்துகளுடன் இணைத்தோ கொடுக்கலாம். இந்தியாவில் உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இது அளிக்கப்படுகிறது. முதல் வேளை குழந்தை பிறந்த 9 முதல் 12 மாதங்களிலும், இரண்டாம் வேளை 16 முதல் 24 மாதங்களிலும் கொடுக்கப்படுகிறது.

சர்வதேச வாய் சுகாதார தினம் மார்ச் 20

பற்கள் மற்றும் வாயில் ஏற்படும் நோய்கள் மற்றும் அவற்றை சுகாதாரமாக பேணுவதன் அவசியம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு உண்டாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ம் தேதி சர்வதேச வாய் சுகாதாரதினம் (World Oral Health Day) அனுசரிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான வாய், ஆரோக்கியமான உடல் வாய் வழியாக உட்கொள்ளும் உணவிலிருந்து நமது உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. எனவே, வாய் ஆரோக்கியமாக இல்லை என்றால் எவ்வளவு ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டாலும், அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு உதவாது. பொதுவான உடல்நலத்தைப் போன்றே வாய் ஆரோக்கியமும் அவசியமானது. வாய், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் நமது முகத்தோற்றம் மேம்படுகிறது.

வாய் ஆரோக்கியக் குறைவினால் வாய் நோய்கள்

மட்டுமின்றி இதய நோய்கள், நீரிழிவு, பக்கவாதம், சுவாச மண்டலப் பிரச்னைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்குக் குறைப் பிரசவமும் உண்டாகின்றன. சர்க்கரை உணவின் அளவு மற்றும் உட்கொள்ளும் வேளைகளைக் குறைத்தல், சர்க்கரை உணவு அல்லது பானங்களை உட்கொண்ட பின் வாய் கொப்பளித்தல், புகை பிடிப்பதைத் தவிர்த்தல், டீ, காஃபி வடிவத்தில் அதிகளவு கஃபைன் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தல் போன்ற பழக்கங்களைப் பின்பற்றுவது மூலம் பல் சொத்தையைக் குறைக்கலாம். அதிக நாட்கள் பல்வலி, ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு மற்றும் பற்களில் அடிபட்டு பல் விழுந்துவிடுவது போன்ற நேரங்களில் பல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை உடனடியாக பெற வேண்டும்.

சர்வதேச காசநோய் தினம் மார்ச் 24

சர்வதேச அளவில் காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, காசநோய் ஒழிப்பை தீவிரப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24-ம் தேதி சர்வதேச காசநோய் தினம் (World TB Day) அனுசரிக்கப்படுகிறது. Mycobacterium tuberculosis என்கிற பாக்டீரியாவால் காசநோய் உண்டாகிறது. பொதுவாக காசநோய் நுரையீரலைத் தாக்கிப் பரவுகிறது. இருந்தபோதும் இந்நோயின் பாதிப்புகள் உடலின் மற்ற பாகங்களிலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நோய் ஒரு நபரின் நிணநீர்ச்சுரப்பிகள் (நிணநீர்ச் சுரப்பிகள் காசநோய்), எலும்புகள் மற்றும் மூட்டுகள் (எலும்புக் காசநோய்), செரிமான மண்டலம் (இரைப்பைக்குடல் காசநோய்), நரம்பு மண்டலம் (நடுநரம்பு மண்டலக் காசநோய்) போன்ற உடலின் பிற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் கிருமிகள் காற்றில் பரவுவதோடு, அவர்களுடைய சளி, எச்சில் மூலமும் இந்நோய்த் தொற்று ஏற்படுகிறது.

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் சளியுடன் இருமல், மெதுவாக தொடங்கிப் படிப்படியாக அதிகமாகும் மூச்சடைப்பு, பசியின்மை மற்றும் எடை இழப்பு, 38ºC (100.4ºF) க்கு அதிகமான காய்ச்சல், அதிகக் களைப்பு மற்றும் சோர்வு, மூன்று வாரங்களுக்கு மேலாக அடையாளம் காண முடியாத வலி போன்றவை இந்நோயின் அறிகுறிகள்.

இந்தியாவில் நடைபெற்ற 35 ஆண்டு கால காசநோய் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதே நேரடிக் கண்காணிப்பு குறுகிய கால சிகிச்சைமுறை(DOTS- Directly Observed Treatment, Short-Course). பல காச நோயாளிகளுக்குப் பன்மருந்து எதிர்ப்புக் காசநோய் (MDRTB- Multidrug-resistant tuberculosis) உருவாகிறது. அதாவது Isoniazid, Rifampicin போன்ற காசநோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகளை எதிர்த்து தன்னை தக்க வைத்துக்கொள்கிற சக்தியை இந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியா பெற்றுவிடுகிறது.

காசநோயின் இந்த நிலையை ஒரு சிறந்த ஆய்வகத்தில் மட்டுமே கண்டறிய முடியும். இந்த நிலையிலுள்ள நோயாளிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் 24 மாதங்கள் வரை காசநோய் சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த மருந்துகள் அதிக விலை மற்றும் அதிக நச்சுத்தன்மை உடையதாகவும் இருக்கிறது. இந்த வகை காசநோயைத் தடுப்பதில் DOTS சிகிச்சைமுறை சிறந்த பலன் அளிக்கிறது. இந்த சிகிச்சைமுறை 180-க்கும் மேற்பட்ட நாடு
களில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான எமி ஜாக்சன் !! (சினிமா செய்தி)
Next post வீட்டுக்கு மேக்கப்! (மகளிர் பக்கம்)