மீண்டும் பிரதமராக மோடி? கருத்து கணிப்பில் தகவல்!! (உலக செய்தி)
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக 63 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11ம் திகதி முதல் மே 19ம் திகதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 23ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.
மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது பாரதிய ஜனதாவா? அல்லது காங்கிரசா? என்ற எதிர் பார்ப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. இதுவரை வெளியான 2 முக்கிய கருத்து கணிப்புகள் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் 2ம் திகதி முதல் 22ம் திகதி வரை சுமார் 20 நாட்களுக்கு நாடு முழுவதும் மிக பிரமாண்டமான கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
நேஷனல் டிரஸ்ட் நடத்திய அந்த கருத்துக் கணிப்பில் சுமார் 31 ஆயிரம் பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். அந்த சர்வே முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
அந்த கருத்துக் கணிப்பில் யார் பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு சுமார் 63 சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நேஷனல் டிரஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் மோடி பிரதமராக 52.8 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.