முஸ்லிம்களுக்கு நட்டஈடு எப்போது? (கட்டுரை)

Read Time:15 Minute, 54 Second

ஒரு துன்பகரமான சம்பவம் நடந்த பின், நாம், ஒருவருக்கு கூறுகின்ற ஆறுதல் என்பது, அதிலிருந்து முழுமையான மீட்சியை அவருக்கு கொடுக்கமாட்டாது. ஆனால், அவரது மனக்காயங்களுக்கு மருந்து தடவுவதாக அது இருக்கலாம்.

அதுபோலவே, ஏற்பட்ட அழிவொன்றுக்கு நட்டஈடு வழங்குவது என்பது, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அந்த நபர், சமூகம் இழந்தவற்றை எல்லாம், மீளக்கொடுக்கப் போவதில்லை.

நிதி அடிப்படையிலான இழப்பீட்டுத் தொகையால், இழப்புகள் நூறு சதவீதம் ஈடுசெய்யப்பட்டு, அவர்களது வாழ்வு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்று சொல்வதற்கும் முடியாது. ஆயினும், சில இழப்புகளைப் பொறுத்தமட்டில், நிதிசார் இழப்பீட்டையே, வழங்கமுடியும் என்பதுடன், பௌதீக அடிப்படையில், அவர்களை மீட்சி நிலைக்குக் கொண்டு வருவதற்கான, ஒரு முயற்சியாகவே இது அமைகின்றது.

அந்த அடிப்படையில் பார்த்தால், நாட்டில் பெரும் இனமுரண்பாட்டையும் பிரளயத்தையும் உண்டு பண்ணக் காரணமாக அமைந்த திகண, அளுத்கம, அம்பாறைக் கலவரங்களுக்கான இழப்பீடுகள், இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்பது, இழப்பை விரைவாக ஈடுசெய்ய வேண்டும் என்ற விடயத்தில், அரசாங்கம் மெத்தனமாகச் செயற்படுவதையே எடுத்துக் காட்டுகின்றது.

இவ்விடயத்தில், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், ‘மாற்றாந்தாய் மனப்பாங்கு’டன், இரண்டாம் பட்சமானவையாக நோக்கப்படுகின்றனவா என்ற ஐயப்பாடுகள் ஏற்படவும் இது வழிவகுத்திருக்கின்றது.

அளுத்கம, அம்பாறை, திகண கலவரங்கள், இயல்பாக இடம்பெற்றவை போன்று தோன்றினாலும் அவை, நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டன என்பதை, இனிமேலும் யாரும் மறுத்துரைக்க முடியாது. 90சதவீதம் முஸ்லிம்களையும் அவர்களது உடமைகளையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற, கும்பல் தாக்குதல்கள், வன்முறைகள், கலவரங்கள்…. எதுவானாலும் அது, அந்தச் சமூகத்துக்கு எதிரான, குறிப்பிட்ட சக்திகளால் வகுக்கப்பட்ட பெரிய, சிறிய நிகழ்ச்சித் திட்டங்களின் வழிவந்தவை என்பதை, விவரித்துச் சொல்ல வேண்டியதில்லை.

இவ்வாறான கலவரத்துக்கு நல்ல உதாரணம், தமிழர்களின் உயிரையும் உடமையையும் இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஜுலைக் கலவரமாகும்.

பேருவளை, தர்காநகர், அளுத்கம மற்றும் இவற்றை அண்டிய பிரதேசங்களை உள்ளடக்கியதான கலவரம், 2014 ஜுன் மாதத்தில் இடம்பெற்றது.

அளுத்கம பகுதியை ஊடறுத்து, தேரர் ஒருவர் பயணித்த வாகனத்துக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பில் முடிவடைந்தது. ஒரு சிறிய விடயம், பெரிதாக ஊதிப் பெருப்பிக்கப்பட்டு, அதில் இனவாதத் தீ மூட்டப்பட்டது. முஸ்லிம்கள் மீது, வாள் வெட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன; பெண்கள், பிள்ளைகள் விரட்டப்பட்டனர்; முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறைகளின் விளைவாக மூன்று உயிர்களை, முஸ்லிம்கள் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதை, மறந்து விட முடியாது.

இதன்பின்னர், 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காலி, ஜின்தோட்டைப் பிரதேசத்தில், இன்னுமொரு வன்முறைச் சூழல் ஏற்பட்டது. ஜின்தோட்டையில் இடம்பெற்ற விபத்தொன்றும், அச்சமயத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் நடந்து கொண்ட பொறுப்பற்ற விதமும், இதற்குக் காரணமாகின. இதையடுத்து, உள்ளூர், வெளியூர் சிங்கள இளைஞர்கள், ஜின்தோட்டையின் உள்வீதிகளுக்குள் புகுந்து, முஸ்லிம்களின் உடமைகள் மீது, தாக்குதல் நடத்தினர். நாட்டில், பிணைமுறி விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், இதுவெல்லாம் அரங்கேறியது.

இதன்பின்னர், கிழக்கு மாகாணத்தில் வன்முறையொன்று இடம்பெற்றது. 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில், அம்பாறை நகரில் அமைந்திருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான உணவகமொன்றில் ஏற்பட்ட பிரச்சினை, பூதாகரமாக வெடித்தது.

முன்னமே, “முஸ்லிம் கடைகளில் விற்கின்ற உணவுப் பொருட்களில் கருத்தடை மாத்திரையைக் கலந்தும், உள்ளாடைகளில் கருத்தடை மருந்தேற்றியும் சிங்கள மக்களுக்கு விற்பனை செய்கின்றார்கள்” என்ற கட்டுக்கதைகள் பரப்பப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, அம்பாறை நகரில் அமைந்திருந்த மேற்படி கடையில், சிங்களவர் ஒருவருக்கு வழங்கிய கொத்துரொட்டியில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டிருந்ததாக ஒரு பீதியைக் கிளப்பிவிட்டு, கடும்போக்குச் சிங்கள இளைஞர்கள் தூண்டப்பட்டு, முஸ்லிம்களை நோக்கித் திருப்பப்பட்டனர். திட்டமிட்ட சம்பவத்தை விடவும் கனகச்சிதமாக ஒருசில மணித்தியாலங்களுக்குள் எல்லாமே நடந்தேறின.

உணவகமொன்றில் ஏற்பட்ட கருத்தடை மாத்திரை பற்றிய வாக்குவாதம், அங்கேயே முடிவடைந்திருக்க வேண்டும்; பொலிஸிலோ சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்திலோ முறையிடப்பட்டிருக்கலாம். ஆனால், அவ்விவகாரம், பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வேறு பல வர்த்தக நிலையங்கள் மீதும் திருப்பப்பட்டது என்பது, சாதாரணமாக நடந்த ஒரு நிகழ்வல்ல.

மாத்தறைச் சாப்பாட்டுக் கடையில், ‘ஹலால்’ கறிகள் பரிமாறப்படவில்லை என்று சொல்லி, முஸ்லிம்கள் திரண்டு சென்று, விகாரை ஒன்றை உடைப்பது, எந்தளவுக்கு முட்டாள்தனமும் இனக்குரோதமுமாக அமையுமோ, அந்தளவுக்கு இந்தச் சம்பவமும் இன ரீதியான நெருக்குவாரம், இனவாதத்தின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தியது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்களில் சிலவற்றை, ‘இனவன்முறைகள்’ என்ற வகுதிக்குள், அடக்க முடியும் என்று எடுத்துக் கொண்டாலும், அளுத்கம சம்பவத்தை ஒரு கலவரமாகவே அடையாளப்படுத்த வேண்டும். ஆனால், இவற்றையெல்லாம் விட, இனவாத சக்திகளின் உச்சக்கட்டக் காட்டுமிராண்டித் தனத்தை வெளிப்படுத்திய, மிகப் பெரிய இனக் கலவரமாகவே கண்டி, திகண கலவரத்தைக் குறிப்பிட முடியும்.

திகணக் கலவரத்தின் அடிப்படைக் காரணத்துக்கான தூண்டுதலை ஏற்படுத்தியவர்கள், பொறுப்பற்ற முஸ்லிம் இளைஞர்கள் சிலரே என்பதை மறுக்கமுடியாது. ஆனால், இரு தரப்பினருக்கும் இடையிலான கைகலப்பு என்பது, ஓர் இனத்தைத் தாக்கி அழிக்கும் இனச் சம்ஹாரமாக, எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதையும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், சொத்துகள் எவ்விதம் சேதப்படுத்தப்பட்டன என்பதையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்கின்றபோது, இது நன்கு திட்டமிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது புலனாகின்றது.

சிங்களவர் ஒருவர் செலுத்தி வந்த வாகனம், முஸ்லிம் பெயர் பொறிக்கப்பட்ட ஓட்டோவின் கண்ணாடியைச் சேதப்படுத்தியதை அடுத்து, ஓட்டோவில் பயணித்த இளைஞர்கள், சிங்களச் சாரதியை முட்டாள் தனமாகத் தாக்கியதால், அவர் பிறகு உயிரிழந்தார். இது, மிகவும் மோசமான ஒருசெயல் என்பது, எல்லோரும் உடன்படுகின்ற விடயமாகும்.

ஆனாலும், அவரது மரணத்துக்கும் திகணக் கலவரத்துக்கும் நேரடித் தொடர்புகள் கிடையாது என்பதே விசாரணைகள் வெளிப்படுத்துகின்ற சங்கதியாகும்.

அதாவது, இவ்வாறான சந்தர்ப்பமொன்றுக்காகக் காத்திருந்த சிங்களக் கடும்போக்குச் சக்திகள், சிங்களவரான மேற்படி சாரதியின் மரணத்தை நன்றாகப் பயன்படுத்தி, அவ்விடயத்தைப் பெரிதுபடுத்தி, மிகப் பெரிய, ஓர் இனக் கலவரத்தையே திட்டமிட்டன என்ற விடயம், பின்னர் தெரியவந்தது. அவரது மரணத்துக்குப் பிறகு, பஸ்களில் பொல்லுகள், ஆயுதங்களுடன் வந்திறங்கிய குழுவினருடன் உள்ளூர்க்காரர்களும் சேர்ந்து, முஸ்லிம்களின் சொத்துகளைத் தாக்கினர்.

கிட்டத்தட்ட ஜுலைக் கலவரப் பாணியில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டன. எரியூட்டப்படுவதற்கு முன்னதாக, அங்கிருந்த பணம், பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டதை, சீ.சீ.ரி.வி காட்சிகளில் காணமுடிந்தது.

சமகாலத்தில், திகணவில் இருந்து கண்டியின் புறநகர்ப் பகுதிவரை, 25இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. ஒருசில சந்தர்ப்பங்களில் படையினரும் தாக்குதல் நடத்தியதாகவும் ஆதரவளித்ததாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வன்முறையால், முதலில் முஸ்லிம் இளைஞரும் பின்னர், ‘சதக்கத்துல்லாஹ்’ மௌலவியும் உயிரிழந்ததுடன், பலகோடிக்கணக்கான சொத்துகள் இழப்பையும் மத்திய மாகாண முஸ்லிம்கள் எதிர்கொண்டனர்.

இலங்கையில் முஸ்லிம்கள், கட்டமைக்கப்பட்ட இனக்கலரவரம் ஒன்றை, நூறு வருடங்களுக்கு முன்னரே சந்தித்த இனக் குழுமத்தினர் ஆவார்கள். அன்றிருந்து இன்று வரை, இனவாத அடிப்படையில், பல்வேறு நெருக்குவாரங்களுக்கும் கலவரங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இதற்குச் சமாந்திரமாக, தமிழ் ஆயுதக் குழுக்கள், ஏனைய ஆயுதம் தரித்தோரால் அனுபவித்த கொடுமைகளும் முகம் கொடுத்த இழப்புகளும் சொல்லி மாளாதவை.

அவை எல்லாவற்றையும் ஒருபுறம் வைத்தாலும், கடந்த பலவருடங்களுக்குள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள், முழுமையாகவும் திருப்திகரமாகவும் வழங்கப்பட வேண்டும்.

ஒரு சில இடங்களில், முஸ்லிம்கள் பக்கத்தில் தவறுகள் நடந்திருந்தாலும் கூட, இனவாதிகளின் வன்முறைத் தாக்குதல்கள், முஸ்லிம்களுக்குப் பாரதூரமான இழப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதும், மூலகாரணமான விபத்துடனோ, கைகலப்புடனோ சம்பந்தப்படாத பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் கடுமையாகச் சீரழித்திருக்கின்றது என்பதும் மிகமுக்கியமானவை.

இழப்பீடுகளைப் பொறுத்தமட்டில், திகணக் கலவரம் பிரதானமானது. அத்துடன், அளுத்கம, அம்பாறைக் கலவரங்களுக்கும் நட்டஈடு வழங்கலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அந்தவகையில், அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட கணிசமானோருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஆனாலும், கொடுபட வேண்டியவை இன்னும் மீதமிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

அம்பாறைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, அரசாங்கம் நட்டஈடு வழங்கியதாக ஞாபகமில்லை.
இதேவேளை, திகணக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிலருக்கு, நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இலட்சக்கணக்கான ரூபாய் தொடக்கம், கோடிக்கணக்கான ரூபாய் நட்டமடைந்தோர் வரை, இன்னும் கணிசமானோருக்கு இழப்பீடுகள் வழங்கப்படவில்லை.

இதில் கடுமையான தாமதம் நிலவுகின்றது. புனர்வாழ்வு அதிகார சபைக்குத் தலைவர் நியமிக்கப்படவில்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.

முஸ்லிம் மக்களின் பேராதரவால் தெரிவுசெய்யப்பட்டு, மீண்டும் முஸ்லிம் கட்சிகள், முட்டுக் கொடுத்தமையால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற இன்றைய அரசாங்கம், இவ்விடயத்தை இனியும் இழுத்தடிக்க முடியாது.

கலவர காலத்தில், ‘இதோ நட்டஈடு வழங்குகின்றோம்’ என்று அறிக்கை விட்டதுபோல, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்குக் கண்டிப்பான உத்தரவையும் பிறப்பிக்க வேண்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அலைபேசியில் அலையும் குரல்! (அவ்வப்போது கிளாமர்)
Next post குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உட்பட 15 பேர் பலி!! (உலக செய்தி)