நல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி?! (மருத்துவம்)

Read Time:16 Minute, 55 Second

குழந்தை வளர்ப்பில் என்னவெல்லாம் கடைப்பிடிக்கிறீர்கள் என்று பெற்றோர்களிடம் கேட்டால், ‘எனக்கு டிசிப்ளின்தான் ஃபர்ஸ்ட்’ என்பதுதான் பெரும்பாலானோருடைய பதிலாக இருக்கும். அப்படி கட்டுப்பாடாக இருந்தும், இன்றைய பிள்ளைகள் ஏன் வழிதவறிப் போகிறார்கள்?இதுதான் இன்று எல்லார் முன்பு நிற்கும் கேள்வி.

குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்கு அடித்தளம் அமைத்துத்தருவது பெற்றோர்களின் கடமை என்பதில் நிச்சயம் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளைத் திட்டுவது, அடிப்பது, தண்டனைகள் தருவது, அதனால் மனதளவில் தானும் காயமடைந்து, பிள்ளைகளையும் காயப்படுத்தி, பின் வருத்தப்படுவது என பழைய பாரம்பரியமான ஒழுக்கமுறையே கடைபிடிக்கிறார்கள். இவர்களெல்லாம் எதிர்மறை ஒழுக்கமுறைக்கு உதாரணம் என்று சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.

இதற்கு மாறாக, ‘நேர்மறை ஒழுக்கத்தை(Positive Discipline) குழந்தைகளிடம் வளர்ப்பது தற்போதைய அவசியமாக இருக்கிறது’ என்பதை வலியுறுத்தி, சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தின் உளவியல் கல்வியாளரான டாக்டர் ஜேன் நெல்சன் எழுதிய Positive Discipline புத்தகத்தில் விளக்கியுள்ளார். அதில் பெற்றோரின் நேர்மறை ஒழுக்க வளர்ப்பிற்கான 5 முக்கிய கொள்கைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

* கனிவும், உறுதியும் ஒருசேர இருப்பது.
* சார்புத்தன்மையையும், முக்கியத்துவத்தையும் குழந்தை உணர்வது
* நீண்டகாலத்திற்கு பயனுள்ளதாக இருப்பது
* மதிப்புமிக்க சமுதாய மற்றும் வாழ்க்கைத் திறன்களை கற்பிப்பதன் மூலம் நல்ல குணத்தை வளர்ப்பது
* பிள்ளைகள், தான் எவ்வளவு திறமையானவர்கள் என்பதைக் கண்டறியவும், தங்கள் சொந்த அதிகாரத்தை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருப்பது.

ஊக்கமளித்தல், அதிகாரமளித்தல் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், அமைக்கப்பட்ட ஒரு குழந்தை வளர்ப்பிற்கான தத்துவமாகச் சொல்லும் நெல்சன், தண்டனை அளிப்பதற்குப் பதில், தன் குழந்தை தவறான நடத்தைக்கு செல்லாமல் தடுக்கும் தீர்வாக இந்தக் கொள்கைகள் இருக்கும் என்று நம்புகிறார்.

Positive Discipline கொள்கைகள் நம் நாட்டு குழந்தைகளிடம் எப்படி நடைமுறைப்படுத்துவது?

உளவியல் மருத்துவர் கவிதாவிடம் இதுபற்றி பேசினோம்…
‘‘பாசிட்டிவ் டிசிப்ளின் என்பது நல்ல விஷயம்தான். நம் நாட்டிற்கு ஒத்துவருமா என்று பார்க்க வேண்டும். அவர்களது கலாச்சாரத்தில் குறிப்பிட்ட வயதுக்குமேல் குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்து வாழ்வதில்லை. குழந்தையிலிருந்தே தற்சார்புடன் வாழக் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை, ஒரு சில குழந்தைகளிடம் இந்த அணுகுமுறை செல்லுபடியாகும். எல்லா குழந்தைகளிடமும் செல்லாது. இன்னிக்கு பார்த்தால், நிறைய குழந்தைகள் சுயநலமாக இருக்கிறார்கள்.

நாம் சுயநலமாக இருக்கிறோம் என்பதை உணர்வதும் இல்லை. ‘என்னைத் தாண்டிதான் மற்றவை எல்லாம்’ என்று நினைக்கிறார்கள். அதற்கு தனிக்குடித்தன முறையா அல்லது சமூக மாற்றமா என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளிடம் எப்போதுமே கனிவாக நடந்து கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. கண்டிப்பு ஒன்றுதான் மருந்தாக இருக்கிறது.இருந்தாலும் அதன் அடிப்படையில் சில விஷயங்களை கடைபிடிக்கலாம்…

நீண்ட நாள் கடைபிடிக்க வேண்டிய ஒரு பழக்கத்தை குழந்தையிடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம் என்றால், அதை நாம் பக்கத்திலிருந்து மெதுவாக புரியும்படி சொல்லித் தரவேண்டும். அந்த ஒழுக்கத்தை கடைபிடிப்பதால் அந்தக் குழந்தைக்கு ஏற்படும் நன்மை, அதனால் மற்றவர்களுக்கு என்ன நன்மை, அதை செய்யாமலிருந்தால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அதைச் சரியாக செய்துவிட்டால், சின்னதாக பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.

ஒரு பொருளை கேட்கும்போது எடுத்தவுடன் ‘நோ’ சொன்னால் கண்டிப்பாக அப்செட் ஆகிவிடுவார்கள். ஒரு 10 வயது பையன் லேப்டாப் கேட்கிறான் என்றால், அது அவனுக்குத் தேவையா? தேவையில்லையா என உணர வைக்க முயற்சி செய்யலாம். எடுத்தவுடன் வாங்கிக் கொடுத்துவிட்டாலும், அதன் மதிப்பை அவன் உணரமாட்டான்.

முதலில் நான்கைந்து கடைகளில் லேப்டாப்பின் விலையை கேட்டு வரச் சொல்ல வேண்டும். இப்போது இது அத்தியாவசியமாக உனக்குத் தேவையா? அவசரமாக வாங்க வேண்டுமா? உன் படிப்புக்கு இது உதவுமா? என்று அவனையே கேள்விகளை கேட்க வைக்க வேண்டும்.

அவனுக்கு கொடுக்கும் பாக்கெட் மணியைச் சேமித்து வைத்து, வாங்கப் பழக்கலாம். அந்தப் பொருளை வாங்க எவ்வளவுநாள் சேமித்து வைக்க வேண்டியிருக்கிறது. அப்பா, அம்மா ஒவ்வொன்றையும் வாங்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? என்றுபொருளாதார மதிப்பு பற்றி அந்தக் குழந்தைக்கு அப்போது தெரிய வரும்.

மளிகைப் பொருட்கள், காய்கறிகளை குழந்தைகளையே வாங்கி வர பழக்கலாம். நம்முடைய ஏ.டி.எம். கார்டுகளை கொடுத்து உபயோகிக்க பழக்கலாம். அவர்களே பொருட்களை வாங்கும் போது ஒரு பொருள் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகிறது? என அதன் மதிப்பு தெரியும். எல்லாவற்றையும் நாமே செய்து கொடுத்துவிட்டு, அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று கடிந்து கொள்வதில் பயனில்லை. இது தவறான நடத்தை, இது சரியான நடத்தை என்பதை ஆணித்தரமாக குழந்தைகள் மனதில் புரியும்படி ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிவிட வேண்டும்.

பெற்றோரைத்தான் குழந்தைகள் உதாரணமாகப் பார்க்கிறார்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயம் உங்கள் குழந்தை செய்யக்கூடாது என்று நினைத்தால், அதை நீங்கள் செய்யக்கூடாது. நல்ல நடத்தைகளை வளர்க்க, குழந்தை செய்யும் நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்த தொடங்குங்கள்.

தன்னுடைய பொருட்களை ஒழுங்காக அடுக்கி, நீட்டாக வைத்துக் கொள்ளும் குழந்தைகளை மற்றவர்கள் எதிரில் பாராட்டத் தவறக்கூடாது. அந்தக்குழந்தை நாம் நல்ல விஷயம் செய்திருக்கிறோம், அதனால் பாராட்டுகிறார்கள் என்று தெரிய வரும். மேலும் ஊக்கப்படுத்துவதாய் அமையும். குறிப்பிட்ட நேரத்தில், சரியாக செய்யும் வேலைகளுக்கு சின்னச்சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.

சமூக ஊடக அடிமைத்தனத்திலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவது இப்போது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதற்கு, பெற்றோர்கள் வீட்டிற்கு வந்தால் செல்போன் உபயோகப்படுத்த மாட்டேன் என்ற கட்டாய விதிமுறையை பின்பற்ற வேண்டும்.

இப்போது 2 வயது குழந்தைக்குக்கூட அழுகையை நிறுத்த மொபைல் போனை கொடுக்கிறார்கள். மொபைலில் ரைம்ஸ், கார்ட்டூன், கேம்ஸ் போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். தன்னுடைய வேலையை தொந்தரவு செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுக்கக்கூடாது. கதை, ரைம்ஸ் போட்ட கலர்ஃபுல்லான புத்தகங்களை வாங்கிக் கொடுத்து படிக்கச் செய்யலாம்.

குழந்தைகளுக்குத் தனியாக ரூம், அனைத்து வசதிகள் செய்து கொடுப்பது, மாதம் ஒருமுறை பள்ளிகளில் நடத்தப்படும் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்கில் அவனுடைய மார்க்குகள் பற்றி தெரிந்து கொள்வது என இதை செய்தாலே போதும் என்ற மனநிலையில் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்தக் குழந்தைகளும், என்னோடு அப்பா, அம்மா நேரம் செலவிடுவதில்லை, எனக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்துவிட்டு, என்னைத் தனியே தூங்கச் சொல்கிறார்கள் என்று வருத்தத்தில்தான் இருக்கிறார்கள்.

தினமும் அரை மணி நேரமாவது குழந்தையோடு பேச நேரம் ஒதுக்குங்கள். இதைச் சொன்னால் அம்மா அடிப்பார்கள், என்ற பயம் இல்லாமல், எதைப்பற்றியும் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

அப்போதுதான் வெளியில் அவர்களுக்கு நடக்கும் கெட்ட விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். அறிவுரை என்பவை நல்ல விஷயமாகவே இருந்தாலும் சொற்பொழிவுபோல் பேசினால் குழந்தைகளுக்குப் போரடிக்கத்தான் செய்யும்.அவர்களைப் பேசவிட்டு, அவர்கள் செய்ததில் எது தவறு? எது சரி என்பதை அவர்களாகவே உணரச் செய்வது நேர்மறை ஒழுக்கத்திற்கு வழி வகுக்கும்.

4, 5 வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு என்ன பிரச்னைகள் வரப்போகிறது என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால், 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ‘எனக்கு பாய் ஃப்ரண்ட் இல்லை’ என்னோட படிக்கும் மற்ற மாணவிகளுக்கெல்லாம் பாய் ஃப்ரண்ட் இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.

என் ஃப்ரண்டுக்கு ஒரு பையன் லவ் லெட்டர் கொடுத்துட்டான் என்று உங்கள் குழந்தை சொல்கிறாள் என்றால், உடனே ‘வாயை மூடு…பெரியமனுஷி மாதிரி பேசாதே’ என்று அடக்காதீர்கள்.

உண்மையாக என்ன நடந்தது என்று காது கொடுத்து கேளுங்கள். இதுபற்றி உனக்கு என்ன தோன்றுகிறது, 4-வது படிக்கும்போதே அந்தப்பையனுக்கு இதுதேவையா என்று விவாதியுங்கள். அப்போதுதான் பிரச்னைகள் ஏற்படும்போது நம்மிடம் தைரியமாக வந்து சொல்வார்கள். அதனை அவர்களாகவே எதிர்கொள்ளும் தைரியத்தையும் கற்றுக் கொள்வார்கள்.

செக்ஸ்பற்றி பேசுவதே தவறு என்று மூடி மூடி மறைப்பதைக் காட்டிலும் அப்பா, அம்மா என்றால் சின்னச் சின்ன கட்டிப்பிடி, முத்தம் கொடுத்துக் கொள்வதெல்லாம் தப்பில்லை என்று புரிய வையுங்கள். அப்போதுதான் அம்மா, அப்பாவிடம் இப்படி செய்வார்கள். மற்றவர்களிடம் செய்ய மாட்டார்கள் என்பது தெரிய வரும்.

சாதாரணமாக, ஓர் ஆண், பெண்ணிடம் கைகுலுக்கினாலே அதை செக்ஸுடன் சேர்த்து குழம்பிக் கொள்ளும் குழந்தைகள் அதிகம். எது சரி, எது தவறு என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் செக்ஸ் கல்வியை எடுத்துச் சொல்ல வேண்டும். பருவ மாற்றம் வரும்போது, உடலில் ஏற்படும் மாற்றங்களை அது பையனோ, பெண்ணோ இரு பாலருக்கும் அடிப்படை புரிதல்களை சொல்லித் தர வேண்டும்.

பெண், ஆண் இரண்டு குழந்தைகளுமே இருக்கும் வீட்டில் இருபாலரும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை கொடுக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். அவன் பையன், வீட்டு வேலையெல்லாம் செய்ய மாட்டான். கடைக்குப் போவது, வெளிவேலைகள் செய்வது மட்டும்தான் செய்வான்.

நீதான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்று சொல்லி வளர்க்காமல், இருவரும் சரிசமமாக இரண்டுவிதமான வேலைகளையும் செய்யச் சொல்லி வளர்க்க வேண்டும். பாக்கெட் மணியிலிருந்து டிரஸ் வாங்கிக் கொடுப்பது வரை எல்லாமே சரிசமமாக நடத்த வேண்டும். முக்கியமாக பெண்குழந்தைகளை மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

தான் ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்? எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்ற நினைப்பை குழந்தைப் பருவத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். வெளியில் செல்லும்போது மற்ற பெண்களை மதிக்க கற்றுக் கொள்வான்.

எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் குழந்தை ஒரு தவறு செய்துவிட்டால் உடனே கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்பதில்லை. அப்படி செய்தால், அடுத்த முறை தான் செய்த தவறை உங்களிடமிருந்து மறைக்கப் பார்ப்பார்கள்.

அதற்குப் பதில், அந்த தவறைச் செய்வதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்லுங்கள். அப்போதுதான் அடுத்த முறை அந்த தவறை செய்ய தயங்குவான். வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்பிலும் குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனது ரசிகர்களே என் பக்கபலம் !! (சினிமா செய்தி)
Next post சேது பத்தாசனம்!! (மகளிர் பக்கம்)