அழகு சிகிச்சைகள்!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 28 Second

சருமப் பராமரிப்பில் சாதாரண சிகிச்சைகள் தவிர பலவிதமான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகளான சருமத்தில் ஏற்படும் கட்டிகள் நீக்குதல், மச்சங்களை நீக்குதல், தழும்புகளை சீரமைத்தல், காதில் உள்ள பெரிய ஓட்டையை சீரமைத்தல், தவறான திசையில் வளரும் நகங்களை நீக்குதல், வெண் புள்ளி போக்கும் அறுவை சிகிச்சைகள் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை வரை சருமத்தில் பல்வேறு வகையான அறுவை சிகிச்சைகள் உண்டு.

சிறிய அளவிலான கட்டிகள்

சருமத்தில் வயதாக வயதாக Skin Tags எனப்படும் தோல் முடிச்சுகள் தோன்ற ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு இது தோலின்மேல் இடைவெளியே இல்லாமல் நிறைய இருக்கும். இதனுடைய மருத்துவ சொல் Acrochordons. ஒரு சிலருக்கு இது மிகவும் பெரிதாக உண்டாகலாம். அதனை Giant Acrochordons என்று அழைப்போம். சிறியதாக உள்ள Skin Tags-ஐ வலி தெரியாமல் 30-45 நிமிடங்கள் தோலை மரத்துப் போகச் செய்யும் களிம்பைத் தடவி Electrocautery (or) Radiofrequency மூலம் நீக்கி விடலாம். பெரிதாக இருக்கும் Skin tags-க்கு இன்ஜெக்‌ஷன் முறையில் தோலை மறத்து போகச்செய்து பின்பு நீக்கலாம்.

Sebaceous Cyst

செபேஷியஸ் சுரப்பியின் பாதையை அடைப்பதால் பருக்கள் உருவாகிறது. சிலருக்கு செபேசியஸ் சுரப்பிலேயே கட்டிகள் ஏற்படும். இதனை Sebaceous cyst என்று அழைப்போம். இது உருவானால் அறுவை சிகிச்சைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக அதனை உடைக்காமல் பொறுமையாக முழுமையாக நீக்கிவிட்டு பின்பு தையல் போடலாம். இல்லையென்றால் ஒரு சிறு துளையிட்டு பின் அதனுள்ளே உள்ள பேஸ்ட் போன்ற பொருளை நீக்கி பின்பு அந்த சிஸ்ட்டின் சுவர் போன்ற உறையை நீக்கலாம்.

எந்த வகையில் செய்தாலும் அந்த கட்டியின் உறையை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். சில நேரங்களில் எவ்வளவு கவனமாகச் செய்தாலும், அந்த உறையின் ஒரு சிறு பகுதி நீக்கப்படாமல் போகலாம். அவ்வாறு நடக்குமாயின் திரும்பவும் அவ்விடத்தில் கட்டி தோன்றும். இந்த கட்டி உருவாகியிருந்த இடம் முக்கியமான ரத்தக்குழாயின் அருகே இருந்தால் அறுவை சிகிச்சை செய்யும்போது ரொம்ப ஆழமாக செல்ல முடியாது அல்லது அறுவை சிகிச்சை செய்து அதன் உறையை நீக்க முயற்சிக்கும்போது ஒரு சிறு பகுதி தோலினுள் ஒட்டிக் கொள்ளலாம். அப்படி ஒரு பகுதி விடுபட்டாலும் கட்டி திரும்பவும் ஏற்படலாம்.

Lipoma

ஒரு சிலருக்கு Lipoma என்ற கொழுப்பு கட்டி ஏற்படலாம். இதன் ஆழத்தைப் பொறுத்து பலவகை உள்ளது. மேல் சருமத்தில் இருந்தால் தோல் நோய் நிபுணரே இதை நீக்கி விடுவார். ஒரு வேளை இது தசைகளுக்கு அடியிலிருந்தால் பொது அறுவை சிகிச்சை நிபுணர் இதை சிறந்த முறையில் நீக்குவார்.

மச்சங்கள்

தட்டையாக இல்லாமல் ஒரு சிலருக்கு கட்டி போன்ற மச்சங்கள் இருப்பது உண்டு. இதை Intradermal Nevi / Compound Nevi என்று அழைப்போம். இவ்வாறு உள்ள மச்சங்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கலாம். சிலருக்கு மூக்கின் மேலே அல்லது கண்களுக்கு மிக அருகே இது இருந்தால் இதை முழுவதும் நீக்குவது கடினம். அந்த சமயத்தில் வலி மரத்துப்போகும் ஊசியை போட்ட பின் Electrocautery அல்லது Radiofrequency Surgery முறையில் இதை முற்றிலும் நீக்காவிடிலும் சின்னதாக்கலாம். தழும்புகளை சீரமைக்கும் அறுவை சிகிச்சைகள்தழும்புகள் பல வகைப்படும். சிலருக்கு அடிபட்டு தழும்பு வரும், சிலருக்கு சின்ன தீக்காயம் பட்டும் வரும். சிலர் தன் கைகளை தானே கீறியிருப்பார்கள்.

அவர்களுக்கு கோடு கோடாக தழும்பு இருக்கும், பருக்கள் வந்த மறைந்த பிறகு சிலருக்கு தழும்பு ஏற்படும். விபத்து ஏற்படுவதால் வரும் தழும்பு சிறியதாக நேர் கோடாக இருப்பின், அதை நீக்கிவிட்டு தையல் போட்டு அந்த தழும்பின் அகலத்தை குறைக்கலாம். தழும்பு பெரியதாக இருப்பின் லேசர் சிகிச்சை செய்தும் தழும்பின் மேடு பள்ளங்களை குறைக்கலாம். பருவினால் வந்த தழும்பாக இருப்பின், தழும்பின் தன்மையை அறிந்து, Punch excision & Suturing, Punch elevation, Subcision போன்ற முறைகளையும் அல்லது லேசர் சிகிச்சையில் Fractional CO2 Laser/ Erbium yag Laser சிகிச்சைகளும் செய்யலாம்.

சிலருக்கு சின்ன காயங்களுக்கே பெரிய தழும்பு ஏற்படும். இதை Hypertrophic Scar என்று அழைப்போம். இவ்வகை தழும்புகள் அடிபட்ட இடத்தை தாண்டி வளராது. ஆனால், சிலருக்கு தழும்புகள் மிக பெரிதாக இருப்பதோடு மட்டுமின்றி அடிபட்ட இடத்தை தாண்டியும் வளரும். இவ்வகை தழும்புகளை Keloid என்று அழைப்போம். இந்த Hypertrophic Scar அல்லது Keloid தழும்புகளை லேசர் சிகிச்சை, தழும்பின் உள்ளேயே ஊசியை செலுத்தும் Intralesional Injections அல்லது தற்போது Botulinum Toxin Injection-களை கூட தழும்பில் செலுத்தி தழும்பின் அகல நீளம் மற்றும் அழுத்தத்தை நீக்கலாம்.

Ear Lobe Repair

ஒரு சிலருக்கு மிகவும் வெயிட்டான தோடுகளை போட்டு காதின் ஓட்டை பெரிதாகி விடும். ஒரு சிலருக்கு காதின் ஓட்டை பிய்ந்து போய் விடும். இதை Torn Earlobe என்றழைப்போம். இதனை அறுவை சிகிச்சை முறையில் சீரமைக்கலாம். ஓட்டையில் உள்ள மேல் தோலை பிளேடின் உதவியோடு நீக்கி பின்பு இரு பக்கமும் (காதின் முன்புறம் மற்றும் பின்புறம்) மெல்லிய மயிரிழை போன்ற ஒரு Suture Material -ஐ உபயோகித்து தையல் போடுவோம். ஒரு வாரம் கழித்து தையலை பிரித்தாலும், மூன்று மாதமாவது தோடு அணிவதை தவிர்த்து அதன் பின் பழைய ஓட்டையின் அருகே புது ஓட்டையே போட்டு கொள்வது நல்லது. ஆனால், அறுவை சிகிச்சை செய்த பின்பும் திரும்பவும் கனமான தோடுகளை அணிந்தால் திரும்பவும் ஓட்டை பெரிதாகி விடும்.

தவறான திசையில் வளரும் நகங்களை நீக்குதல்

இதனை Nail Avulsion என்று கூறுவோம். நகங்களை வெட்டும்போது கொஞ்சம் வெளியில் நகம் இருப்பது போன்று வெட்ட வேண்டும். மிகவும் ஒட்டி வெட்டிக்கொண்டே வந்தால் நகத்தின் இரு பக்கமும் கொஞ்சம் சுருண்டு வளர ஆரம்பிக்கும். அப்படி வளர்ந்தால் நகத்தின் பக்கங்களே நகத்தின் அடியில் உள்ள சதையை அழுத்தி கொண்டு வளர ஆரம்பிக்கும். இதனை Ingrown toenail என்றழைப்போம். நகத்தின் பக்கவாட்டில் நகத்தின் வளர்ச்சியின் காரணமாக வீக்கம் ஏற்பட்டு வலி உண்டாகலாம்.

இதை சரி செய்ய நகத்தை நீக்கிவிட்டு நகத்தின் பக்கவாட்டில் உள்ள இடத்தை ஆசிட் வைத்து கொஞ்சம் காயத்தை உண்டாக்கினால் புதிதாக வளரும் நகம் தொல்லை பண்ணாது. ஆனால் சிலருக்கு நகத்தின் வேரான நகக் கண்ணிலேேய சுருண்டு வளர ஆரம்பித்தால் புதிதாக வளரும் நகமும் திரும்பவும் குத்தும், வலியை உண்டாக்கும். நகம் என்பது மிகவும் சென்சிடிவான இடம் என்பதால் இதை கவனமாக செய்ய வேண்டும்.

வெண் புள்ளிகளுக்கான அறுவை சிகிச்சை

மருந்து மாத்திரைகளில் குணமாகாத வெண்புள்ளி நோய்க்கு அறுவை சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். ஒரு சிலருக்கு நோய் பரவாமல் இருந்தாலும் சிகிச்சைக்கு கொஞ்சமும் அசைந்து கொடுக்காது. அவ்வாறு இருப்பின், தொடை பகுதியிலிருந்து தோலை சின்ன சின்ன பகுதிகளாக எடுத்து Miniature punch Grafting முறையிலும் அல்லது தோலை அப்படியே மேலாக எடுத்து Split Skin Graft முறையிலும் பாதிக்கப்பட்ட வெள்ளை நிற தோலை நீக்கி விட்டு இதை வைக்கலாம்.

மிக நவீன முறைகளாக Melanocyte suspension method அல்லது Non-Cultured Epidermal Suspension Techniques போன்ற முறைகளில் நமக்கு நிறத்தை கொடுக்கும் செல்களான Melanocytes- ஐ தனியாக பிரித்து எடுத்தோ அல்லது மேல் சருமத்தில் உள்ள Epidermal செல்களோடு கலந்து எடுத்தோ பாதிக்கப்பட்ட வெள்ளை தோலை Dermabrasion முறையில் நீக்கி இந்த செல்கள் நிறைந்த சாறை அதில் பூசி புண்ணை ஆற வைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக நிறம் வர ஆரம்பிக்கும். ஆனால், இவ்வகை அறுவை சிகிச்சைகள் அனைத்துமே ஓரளவுக்கு சிறிய அல்லது சில பகுதிகள் மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் செய்ய முடியும். உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட Vitiligo vulgaris-க்கு இந்த முறை உதவாது. Localized Vitiligo, Focal Vitiligo, Segmental Vitiligo, Lip Vitiligo போன்ற வகைகளில் இதைச் செய்யலாம்.

முடி மாற்று அறுவை சிகிச்சை Hair Transplantation

இள வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்ய ஆரம்பிக்கும்போது, அது மிகவும் பரவாமலும் இருக்கும், முடி விழாமலும் பாதுகாக்கலாம். ஆனால், சிலருக்கு வழுக்கை மருந்துகளுக்கும் லோஷன்களுக்கும் அசைந்து கொடுக்காது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு Hair Transplantation என்பது ஒரு வரப்பிரசாதம்.

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆண்களுக்கு முன்னந்தலையில் உள்ள முடிகளும் பின்னந்தலையில் உள்ள முடிகளும் வெவ்வேறு விதமாக இயங்கக் கூடியவை. முன்னந்தலையில் உள்ள முடிகள் Dihydrotestosterone ஹார்மோனுக்கு மிகவும் சென்சிடிவாக இருக்கும். அதனால் அதன் வளர்ச்சி பருவங்கள் ஒழுங்கான முறையில் இயங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அங்குள்ள முடிகள் Terminal Hair- ஆக உருவாகாமல் Vellus Hair- ஆக மாறி விடும். அதனால் வழுக்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட வசமாக பின்னந்தலையில் உள்ள முடிகள் இதற்கு எல்லாம் அசராமல் ஒழுங்காக வளரும். அதனால் Strip Excision Harvesting அல்லது Follicular Unit Extraction போன்ற முறைகளில் முடிகளை வேரோடு எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் நட வேண்டும். இது ஒரு நுணுக்கமான அறுவை சிகிச்சை. இதை செய்த பின் நட்டு வைத்த முடிகள் முதலில் வளர்ந்து 2-3 மாதங்களில் விழுந்து பின்பு 9-12 மாதங்களில் வளர ஆரம்பிக்கும். அறுவை சிகிச்சைக்கு பின்பும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹெல்த் காலண்டர்!! (மருத்துவம்)
Next post பார்சுவ கோணாசனம்!! (மகளிர் பக்கம்)