By 14 April 2019 0 Comments

ஹெல்த் காலண்டர்!! (மருத்துவம்)

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம்(International Women’s Day) கடைபிடிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. பெண்கள் அவர்களது சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்படும் இந்த நாளில் அவர்களது ஆரோக்கியத்தையும் கவனிக்கவேண்டியது அவசியம். பெண்களின் நலனை பெரிதும் பாதிக்கும் சில முக்கிய பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வும், மருத்துவ நடவடிக்கையும் அவசியம்.

மார்பகப்புற்று

கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சியால் மார்பகத் திசுக்களில் கட்டி உருவாகி மார்பகப்புற்று உண்டாகிறது. இது சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றே. இருந்தபோதும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறியாவிட்டால், அது உடல் முழுவதும் பரவி உயிருக்கே ஆபத்தானதாக மாறிவிடும்.

மார்பகப் புற்றுநோய் எந்த வயதிலும் ஏற்படக்கூடியது என்றாலும், பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. மார்பகப்புற்று உருவாகும் சராசரி வயது 50 முதல் 70 என்பதிலிருந்து குறிப்பிடத்தக்க விதமாக 30 முதல் 50 வயது என்று மாறியுள்ளது.

மார்பகப்புற்றைத் தடுக்க சில குறிப்புகள்

* மார்பகப்புற்றை ஆரம்பத்தில் கண்டறிய சிறந்த வழி, சுய மார்புச் சோதனையே. 40 முதல் 50 வயதான பெண்கள், ஓர் எளிமையான சோதனையான மார்பகச் சோதனையை செய்வது அவசியம். தங்கள் மார்புகளின் அளவையும் இருப்பையும் பற்றி பெண்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதன் அளவிலோ, வடிவத்திலோ அல்லது தோற்றத்திலோ எந்த ஒரு மாற்றம் இருந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

* உணவில் காய்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முடியும்.

* தொடர் உடற்பயிற்சி மேற்கொள்வதோடு புகை மற்றும் மதுப்பழக்கங்களைத் தவிர்ப்பதும் அவசியம்.

* பெண்கள் பொதுவாக பிரசவத்திற்குப் பின்பு ஒரு ஆண்டு வரை தாய்ப்பால் ஊட்ட வேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகிறது.

எலும்புப்புரை

குறைந்த எலும்பு நிறையால் எலும்புத் திசுக்கள் நலிவடைந்து எலும்புப்புரை ஏற்படுகிறது. எலும்பு பலவீனமும், உடையும் தன்மையும் அடைவதால் முதுகெலும்பு, இடுப்பு, மணிக்கட்டு போன்றவை உடையும் அபாயம் உள்ளது. 50 வயதுக்கு மேல், ஆண்களை விட பெண்களுக்கே எலும்புப்புரை நோய் ஏற்படும் ஆபத்து அதிகம்.

ஏனெனில், பின்மாதவிடாய் காலத்தில் இயக்குநீர் மாற்றத்தால் எலும்பு இழப்பின் வேகம் அதிகரிக்கிறது. 8-ல் 1 ஆணும் 3-ல் 1 பெண்ணும் இந்தியாவில் எலும்புப்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம்.

எலும்பு ஆரோக்கியத்திற்கு சில குறிப்புகள்

* சுண்ணாம்புச் சத்துள்ள உணவுப் பொருட்கள், பால், தயிர், கீரை மற்றும் சூரிய ஒளி போன்ற உயிர்ச்சத்து டி நிறைந்த சமநிலை உணவை உண்ண வேண்டும்.

* எலும்பு இழப்பைத் தடுக்க நடை, ஓட்டம், துள்ளல், படியேறல் போன்ற எடை தாங்கும் உடல் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
* புகை மற்றும் அதிக மதுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

* யோகா, தியானம் போன்ற மனவழுத்தம் நீக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

* உடலில் எடை, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து டி அளவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்களுக்கு ஊட்டச்சத்தின்மை

ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைவால் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் அதிக விகிதத்தில் ஊட்டச்சத்தின்மை உள்ள பெண்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தாய்க்கு ஊட்டச்சத்து இல்லாமை குழந்தையையும் பாதிக்கிறது.

ஊட்டச்சத்துப் பிரச்னைகளைத் தீர்த்தால் அது பெண்ணுக்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும். தாய்மைக்குத் தயாராதல் வெறும் எதிர்பாராத ஒரு நிகழ்வாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு பெண்ணும் அதற்காகத் தன்னைத் தயார் செய்ய வேண்டும். இதனை ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி, விழிப்புணர்வு, ஆலோசனை வழங்குவதன் மூலம் செய்ய முடியும்.

தாய் நலம், ஊட்டச்சத்து பிரச்னைக்கு சில குறிப்புகள்

இரும்புச்சத்து நிறைந்த இறைச்சி, முட்டை, பச்சைப்பட்டாணி, பருப்பு, கீரை போன்றவற்றை சாப்பிட கர்ப்பிணிகளை ஊக்கப்படுத்த வேண்டும். கருவுற்ற நேரத்தில் உண்ணும் உணவுகள் லகுவானதாக, சத்துள்ளதாக, எளிதில் செரிமானம் அடையக் கூடியதாக, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்ததாக இருக்கும்படி கவனம் செலுத்த வேண்டும்.

புகைப்பற்ற தினம் மார்ச் 13

உலகெங்கிலும் உள்ள புகைப்பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை விட்டொழிக்க அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் இரண்டாவது புதன்கிழமை புகைப்பற்ற தினம் (No Smoking Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 13 அன்று இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆனால், நீங்கள் நினைத்தால் ஆண்டின் எந்த நாளிலும் உங்கள் புகைப் பழக்கத்தை விட்டொழிக்க முடியும்.

சிகரெட் மற்றும் பிற வடிவங்கள் மூலம் புகையிலையை உட்கொள்வதால் ஏற்படுகிற உடல்நலத் தீங்குகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம். புகையிலையைப் புகைப்பது அல்லது மென்று சுவைப்பது போன்ற எந்த வடிவத்தில் எடுத்துக் கொண்டாலும் அது உடல்நலனுக்கு உகந்ததல்ல. இதனால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது 12 முதல் 17 வயது வரையுள்ள ஆயிரக்கணக்கான இளம் பிள்ளைகள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர். இவர்களில் சிலர் இதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தினாலும், சிலர் தான் வளர்ந்து விட்டதாகத் தோற்றம் அளிக்க விரும்புவதினாலும் இந்தப் பழக்கத்தைத் தொடங்குகின்றனர்.

புகைப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள்

புகைப்பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு இருமலோடு தொண்டை எரிச்சல் ஏற்படும். தொடர்ந்து வாய் துர்நாற்றம் மற்றும் உடைகளில் துர்நாற்றம் உண்டாகும். தோலில் படை, பல் நிறமாற்றம் போன்றவற்றிற்கு வழிகோலும். நாட்கள் செல்லச் செல்ல நுரையீரல் அழற்சி, நிமோனியா, பக்கவாதம், வாய்ப் புற்றுநோய் போன்ற தீவிரமான உடல்நலப் பிரச்னைகள் உண்டாகிறது.

மரணத்தை ஏற்படுத்தும் காரணங்களில் பெரிய அளவில் தடுக்கப்பட வேண்டிய ஒன்று புகைப் பழக்கம். இதய நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு இப்பழக்கம் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது.

புகைப்பழக்கத்தை விட்டொழிக்க என்ன செய்யலாம்?

புகையிலைப் பொருட்களில் நிக்கோட்டின் என்கிற வேதிப் பொருள் உள்ளது. பல ஆண்டுகளாக புகைப் பிடிப்பவர்கள் அதற்கு அடிமையாகி விடுவதற்கும், அவர்கள் அப்பழக்கத்திலிருந்து மீண்டு வருவதை கடுமையானதாக மாற்றுவதற்கும் இந்த வேதிப் பொருளே முக்கியக் காரணமாக உள்ளது.

நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் அல்லது எவ்வளவு நாட்கள் புகை பிடிப்பவராக இருந்தாலும் அப்பழக்கத்தை விட்டொழித்த உடனேயே உங்கள் ஆரோக்கிய பலன் தொடங்கிவிடுகிறது. இப்பழக்கத்தை விட்டொழிக்க முதலில் நீங்கள் அந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும். தீர்மானம் எடுத்த பின் அடுத்தவர்கள் இச்சை உண்டாக்க அனுமதிக்கக் கூடாது.

அதோடு சரியான அணுகுமுறையைப் பின்பற்றுவதோடு, பொறுமையும் மன உறுதியும் இருந்தால் கண்டிப்பாக உங்களால் இப்பழக்கத்தை விட்டொழிக்க முடியும். இது ஒரே நாளில் முடியாது என்றாலும் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

சர்வதேச சிறுநீரக தினம் – மார்ச் 14

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமையன்று சர்வதேச சிறுநீரக தினம் (World Kidney Day) கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச சிறுநீரக சங்கம் மற்றும் சர்வதேச சிறுநீரக அறக்கட்டளை கூட்டமைப்புகளின் கூட்டு முயற்சியால் இந்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

நமது ஒட்டுமொத்த உடல் நலனில் சிறுநீரகங்கள் ஆற்றும் முக்கியப் பங்கு பற்றியும், சிறுநீரக நோய்களின் பெருக்கம் மற்றும் தாக்கம் பற்றியும், உலக அளவில் இதனோடு தொடர்புடைய ஆரோக்கியப் பிரச்னைகளைக் குறைப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.

சிறுநீரக நோய்களின் அறிகுறிகள்

காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம், படுக்கையில் சிறுநீர் கழித்தல், கண், முகம், கால் மூட்டுகளைச் சுற்றி வீக்கம், ரத்தத்துடன் வயிற்றுப்போக்கு, களைப்பு, பசியின்மை, வயிற்றுவலி போன்றவை சிறுநீரக நோயின் அறிகுறிகள்.

பொதுவாக சிறுநீரக நோய் கடுமையானதாக அல்லது நீடித்ததாக இருக்கும். இந்நோய் திடீரென உருவாகவும் வாய்ப்புள்ளது. இந்நோய் குறுகிய நாட்கள்வரை இருந்து சிகிச்சையினால் குணமடையவோ அல்லது நீண்ட நாட்கள்வரை தொடர்ந்து இறுதியில் மிக மோசமான நிலைக்குச் செல்வதற்கும் வாய்ப்புள்ளது.

சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான சில காரணங்கள்
பிறவிக் குறைபாடுகள், காயம், சிறுநீர் அடைப்பு, தொற்று, மரபியல், மண்டலம் சார் நோய்கள் போன்றவை சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான சில காரணங்கள்.

சிறுநீரக நோய்களைத் தடுக்க என்ன செய்யலாம்?

சிறுநீரக நோய்க்கான காரணங்களைப் பொறுத்தே சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்குரிய மருத்துவரின் ஆலோசனைப்படியே உணவு உட்கொள்ள வேண்டும். இது அவர்கள் உட்கொள்ளும் உணவிலுள்ள பொருட்கள் சிறுநீரக செயல்பாட்டைப் பாதிக்காமல் இருக்க உதவியாக இருக்கும். இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் ஆரம்ப நிலையிலேயே அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இது சிறுநீரக செயலிழப்பைத் தடுக்க உதவியாக இருக்கும்.

சர்வதேச கண்ணழுத்த நோய் வாரம் மார்ச் 10 – 16

கண்ணழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் அதிகரிக்கச் செய்வதோடு, பார்வை இழப்பு அதிகரிப்பைத் தடுப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மார்ச் 10 முதல் 16-ம் நாள் வரை சர்வதேச கண்ணழுத்த நோய் வாரம் (World Glaucoma Week) அனுசரிக்கப்படுகிறது.

கண்ணுக்குள் உள்ள திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதால், கண் நரம்புகளில் ஏற்படும் பிரச்னைகளை கண்ணழுத்த நோய் என்கிறோம். கண்ணின் ஒரு பகுதியில் ஏற்படும் தடங்கலே இந்நோய்க்குக் காரணம். இந்தத் தடையின் காரணமாக கண்ணிலிருந்து திரவம் வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் உள்விழி அழுத்தம் அதிகரிக்கிறது.

பலருக்குப் பல ஆண்டுகளாக கண்ணழுத்தம் இருந்து வந்தாலும் எந்தச் சிதைவும் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு சிலருக்குக் குறைந்த கண் அழுத்தத்திலும் கண் சிதைவு உண்டாக வாய்ப்புள்ளது. இதற்கு உடனடியாக சரியான நேரத்தில் சிகிச்சை செய்யாவிட்டால் கண் நரம்புகளில் சேதம் ஏற்பட்டு நாளடைவில் பார்வையிழப்பு ஏற்படக்கூடும்.

கண்ணழுத்த நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்

* நாள்பட்ட திறந்த-கோண கண்ணழுத்த நோய்

இது மிகவும் பரவலாக காணப்படுகிற ஒரு வகை. இது பாதிக்கப்பட்டவர்களிடம் மெதுவாக அதிகரிப்பதால் காணும்படியான எந்த அறிகுறியும் இருப்பதில்லை. இதில் முதலில் பக்கப்பார்வை பாதிக்கப்படுவதால், தங்கள் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதை அவர்களால் அறிய முடிவதில்லை. இதில் விழியின் புறவட்டத்திலிருந்து மையத்தை நோக்கி மெதுவாகப் பார்வையிழப்பு ஏற்படுகிறது. பொதுவாக பார்வை மாற்றம் வயதோடு தொடர்புடையது என்பதால் உங்கள் கண்களை முறையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* முதன்மை மூடிய-கோண கண்ணழுத்த நோய்

இது மிக அபூர்வமான ஒரு வகை. இது பாதிக்கப்பட்டவர்களிடம் மெதுவாகவும் (நாட்பட்டது), விரைவாகவும் (கடுமையானது), திடீரெனவும் உண்டாகிறது. இதனால் வலியைத் தருகிற கண்ணழுத்தம் உண்டாகிறது. இந்த வகையின் அறிகுறிகள் வேகமாக உருவாகின்றன. கடுமையான வலி, கண் சிவந்துபோதல், தலைவலி, கண் பகுதியில் தோல் மென்மையாதல், ஒளியைச் சுற்றி வானவில் போன்ற வளையம் தென்படுதல், பார்வை மங்குதல், ஒரு கண்ணிலோ அல்லது இரண்டிலுமோ பார்வையிழப்பு வேகமாக அதிகரித்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

* இரண்டாம்நிலை கண்ணழுத்த நோய்

இது கண்ணில் ஏற்படும் காயத்தாலும், விழி நடுபடல அழற்சியாலும் உண்டாகிறது. பொதுவாக கணணழுத்த நோயின் அறிகுறிகளும் பிற கண் நோய் அறிகுறிகளும் ஒன்று போலவே தோன்றும். உதாரணமாக விழி நடுபடல அழற்சியால் கண் மற்றும் தலை வலி உண்டாவதை சொல்லலாம்.

* வளர்ச்சிநிலை அல்லது பிறவி கண்ணழுத்த நோய்

இந்த வகையும் மிக அரிதான ஒன்றே. ஆனால் இது ஆபத்தானது. இது பிறப்பிலேயே இருக்கும் அல்லது பிறந்து சிறிது காலத்தில் உருவாகும். இது விழியின் ஒரு அசாதாரண நிலையால் ஏற்படுகிறது. இளம் வயது காரணமாக இதன் அறிகுறிகளைக் கண்டறிவது கடினம். இருந்தபோதும் கண்ணழுத்தம் காரணமாக கண்கள் பெரிதாதல், ஒளிக்கூச்சம், கண்களில் நீர் வடிதல், கண் துடிப்பு, மாறுகண் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

கண் பரிசோதனையும், சிகிச்சையும்உள்விழி அழுத்தத்தை அழுத்தமானியால் அளக்கலாம். கண்ணின் அளவு, வடிவம் போன்றவற்றை பரிசோதிக்க வேண்டும். முன்விழியறை கோணச் சோதனை மற்றும் விழிநரம்பு ஆய்வு மூலம் கண் சிதைவுகள் பரிசோதனை செய்யப்படுகிறது. கண் சொட்டு மருந்துகள் மூலம் உள்விழி அழுத்தத்தைக் குறைக்கலாம். இந்த கண் அழுத்தத்திற்குக் காரணமாக உள்ள கண் திரவம் உற்பத்தியாவதைக் குறைப்பதற்கும், அளவுக்கு அதிகமாக உள்ள அந்த கண் திரவத்தை வெளியேற்றுவதற்கும் உரிய சிகிச்சைகள் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும்.

கண்ணழுத்த நோய் தீவிரமடைவதால் ஏற்படும் முக்கியப் பிரச்னை பார்வையிழப்பு. எனவே, இதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே கண் மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சைகளைப் பெறுவதன் மூலம் பார்வையிழப்பு பிரச்னையைத் தவிர்க்கலாம்.Post a Comment

Protected by WP Anti Spam