கருக்குழாய் அடைப்பும் நவீன சிகிச்சைகளும்!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 24 Second

கருக்குழாய் அடைப்பு இருப்பதால் கருத்தரிக்க முடியாமல் போனதையும், அதற்கான சிகிச்சைகளில் மனம் வெறுத்துப்போன அனுபவங்களையும் குறிப்பிட்டு, தீர்வு கேட்டிருந்தார் ஐ.டி. பெண் நந்தினி. அவருக்கான ஆலோசனைகளைச் சொல்லி, கருக்குழாய் அமைப்பு பற்றிப் பாடமே எடுத்திருந்தார் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் சாமுண்டி சங்கரி.

கருக்குழாயின் அமைப்பு, அது இயங்கும் விதம், அதில் ஏற்படக்கூடிய பிரச்னைகள், குழந்தையின்மைக்குக் காரணமாவது எப்படி என எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறிய அவர், கருக்குழாய் அடைப்புக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் பற்றித் தொடர்ந்து பேசுகிறார். “பெண்களுக்கு முதன் முறையாக ஏற்படும் இடுப்புக்கூட்டுப் பகுதி நோய் 13 சதவிகிதம், கருக்குழலின் அடைப்பையும், இரண்டாம் முறையாக ஏற்படும் இடுப்புக்கூட்டுப் பகுதி நோய் 35 சதவிகிதம் கருக்குழலின் அடைப்பையும், மூன்றாம் முறையாக வரக்கூடியது பெண்களுக்கு 75 சதவிகிதம் கருக்குழலின் அடைப்பையும் ஏற்படுத்தும்.

காசநோயும் இந்தப் பகுதியை தாக்கக்கூடும். கருத்தரிப்பதில் சிக்கலை சந்திக்கிற பெண்கள் இதைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். நம் நாட்டில் 20 சதவிகித பெண்களுக்கு காசநோயே கருத்தரிக்காமைக்கு முக்கிய காரணம். இந்நோய் 90 சதவிகிதம் வரை கருக்குழாயை பாதிக்கிறது. காசநோய் பெரும்பாலும் உடலில் மற்ற பகுதியிலிருந்து முக்கியமாக நுரையீரல் பாதிப்பில்இருந்து, நிணநீர் வழியாகவோ அல்லது ரத்த நாளங்கள் வழியாகவோ கருப்பையை அடைகிறது. இப்படி அடையும் இந்நோய் கருக்குழலையே முதலில் பாதிக்கிறது. இந்நோயின் அறிகுறிகள் ஆரம்ப காலத்திலேயே தெரிவதில்லை.

கருத்தரிக்காததற்கான பரிசோதனைகளை செய்யும் போதே தெரியவருகிறது. இந்நோயின் பாதிப்பு இருந்தால் 6098 சதவிகிதம் வரை பெண்கள் கருவுறாமல் அவதிப்படுகிறார்கள். 44 சதவிகிதம் பெண்களுக்கு இந்நோய் இரண்டு கருக்குழலையும் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து பிறகு கருத்தரிப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். இப்பெண்களுக்கு கருக்குழாயில் கருவுறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன சோதனைகள்?

இடுப்புக்கூட்டுப் பகுதியில் ஏற்படும் நோய்களை முதலில் கண்டறிய வேண்டும். மிக முக்கியமானதும் முதலாவதாக செய்ய வேண்டியதுமான ஆய்வு கருப்பை குழாய் கணிப்பு ஊடுகதிர் படம் (Hysterosalpingogram). கருத்தரிக்காத ஒவ்வொரு பெண்ணும் இதைச் செய்து கொள்ள வேண்டும். இது கருப்பை குழியில் உள்ள வேறுபாடுகளையும் கருக்குழலின் துவாரத்தின் தன்மையையும் காட்டும்.

கருக்குழாயில் அடைப்புகள் இருந்தாலும் நீர்க்கட்டிகள் இருந்தாலும் மற்ற நோய் பாதிப்புகள் இருந்தாலும் இதில் தெரிந்துவிடும். இந்த ஆய்வை மாதவிலக்கு வந்த முதல் 10 நாட்களுக்குள் செய்ய வேண்டும். பொதுவாக இம்முறையில் நீரில் கரையும் ஊடுகதிர் நிறமியை (Water Soluble Radio Contrast Dye) கருப்பைக்குள் செலுத்தி பிறகு எக்ஸ்ரே படங்கள் எடுக்கப்படுகின்றன. இப்படங்களின் மூலம் கருப்பை மற்றும் கருக்குழாயின் தன்மைகளை அறிந்துகொள்ளலாம்.

அல்ட்ரா சவுண்ட்

இந்தச் சோதனையின் மூலம் உள்ளிருக்கும் உறுப்புகளை ஆய்வு செய்ய முடியும். இம்முறையில் 2 செ.மீ. மேல் உள்ள கருப்பை கட்டி, கருப்பை நோய் அல்லது வேறு சில பிறவி வேறுபாடுகளையும் கண்டறிய முடியும். ஹிஸ்ட்ரோஸ்கோப்பி (Hysteroscopy) இம்முறையில் கருப்பைக்குழியின் தன்மையையும் கருப்பை உள்ளிருக்கும் கருக்குழலின் முதல் பகுதியையும் (Intra mural Segment of Fallopian tube) விரிவாகக் கண்டறிய முடியும். கருப்பைக்குழியின் மாதவிலக்கின் முடிவில் ஏற்படும் மாற்றங்களையும் ஹார்மோன் பாதிப்புகள் உள்ளதா என்பதையும் கருக்குழியில் பாதிப்புகள் உள்ளனவா என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

லேப்ராஸ்கோப்பி

நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களால் மட்டுமே இது செய்யப்பட வேண்டும். இம்முறையில் வயிற்றில் ஒரு சிறு துவாரத்தின் வழியாகக் கருப்பை, கருக்குழல், கருப்பையைச் சுற்றியுள்ள வயிற்று உள்ளுறை, அண்டக்குழி, இடுப்புப் பகுதியில் இருக்கும் மற்ற உறுப்புகளையும் நேரிடையாகப் பார்த்து அதன் இயக்கங்களையும், நோய் பாதிப்புகளையும் எளிதாகக் கண்டறிய முடியும். கருப்பையின் வெளித்தோற்றம், வெளிப்பகுதியில் உள்ள கட்டிகள், கருப்பையின் பிறவிக் கோளாறுகள், எண்டோமெட்ரியாசிஸ் மற்றும் கருக்குழலுடன் ஒட்டுதல் போன்றவற்றை எளிதாகக் கண்டறிய முடியும்.

கருக்குழலின் இயல்பையும், அதன் துவாரங்கள் அடைப்புகள் இன்றி உள்ளனவா என்பதையும், ஒட்டுதல்கள் ஏதேனும் உள்ளனவா என்பதையும், முக்கியமாக காச நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் கண்டறிவது அவசியம். காச நோய் பாதிப்பு இருப்பின் மேற்கூறியபடி கருக்குழாய் பெரிதும் சேதமடைந்து அதன் துவாரம் அடைப்பு
கள் உள்ளதாக காணப்படும்.

என்னென்ன சிகிச்சைகள்?

சிகிச்சை முறைகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று லேப்ராஸ்கோப்பி மூலம் செய்யப்படும் சிகிச்சை.
மற்றொன்று அறுவை சிகிச்சை முறை.இரண்டுமே அனுபவமும் திறமையும் உள்ள மருத்துவர்களால்
செய்யப்பட வேண்டியவை. டியூபோபிளாஸ்டி என்கிற சிகிச்சை மைக்ரோஸ்கோப்பிக் மேக்னிஃபிகேஷன் முறையில், மைக்ரோ கருவிகளைக் கொண்டு மிக மிக கவனத்துடன், தேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே செய்யப்படும்போது வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சினைக்குழாய் சம்பந்தப்பட்ட நவீன சிகிச்சைககளுக்கு டியூபோபிளாஸ்டி எனப் பெயர். இப்போது ஃபாலோபோஸ்கோப்பி என்று குழாய்க்குள் செலுத்திச் செய்யப்படுகிற எண்டோஸ்கோப்பி முறை மூலம் சினைக்குழாயின் உண்மையான செயல்திறனையும், அதன் உள்பாகத்தில் உள்ள நுண்ணிய மயிரிழைகளான சிலியாவின் இயக்கத்தையும் கண்டறியலாம்.

ஆரம்ப காலத்தில் கிருமியால் உண்டாகும் மிகக் குறைந்த அடைப்பு மற்றும் சினைக்குழாய் புண்களை கிருமிகளுக்கு உண்டான மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

ஹைட்ரோசால்பிங்ஸ் எனப்படும் பழுதடைந்த சினைக்குழாய்கள் மருந்து மூலமும், Salphingostomy எனப் படுகிற லேசர் மைக்ரோ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையிலும் குணப்படுத்தி, இயற்கையாகக் கருத்தரிக்கச் செய்யலாம்.

கார்னுவல் பிளாக் (Cornual block) எனப்படும் கருப்பையின் ஆரம்ப இடத்திலுள்ள சினைக்குழாய் அடைப்பை நவீன ஹிஸ்டெரோஸ்கோப்பி (hysteroscopy) எனப்படும் எண்டோஸ்கோப்பி வழியாக கருப்பையின் உள்ளே செலுத்தி சரியாக்கலாம்.

சிகிச்சை எதுவும் பலனளிக்காமல், பல ஆண்டுகளாகியும், குழந்தையில்லாத நிலையில், சோதனைக் குழாய் சிகிச்சை முறையில் குழந்தை உண்டாக்கலாம். ஆரம்ப காலத்திலேயே தக்க பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சைகள் மேற்கொண்டால், பெரும்பாலும் சினைக்குழாய் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்த்து, குழந்தைச் செல்வம் பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவ முகாம்களை படம்பிடித்த 2 பேர் கைது!! (உலக செய்தி)
Next post கருணாநிதி நாற்காலியில் அமர்ந்த படி மு.க ஸ்டாலின் கண்ணிர் விட்டு கதறல் ! (வீடியோ)