By 21 May 2019 0 Comments

போர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி!! (மருத்துவம்)

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளிவந்த உங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராகும் நிறுவனங்கள், உலகமே நம் காலடியில் என்பது போல ராஜவாழ்க்கை போன்றவை காத்திருக்கும் நேரத்தில் சமூக சேவை பற்றியெல்லாம் நினைக்க ஏது நேரம்? ராகுல் பணிக்கரோ அப்படிச் செய்யவில்லை. நம் இந்திய ஏழைத் தாய்மார்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னையைக் கையில் எடுத்தார்!

குறைமாதக் குழந்தைகளை ஈன்றெடுத்து அவர்களைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் உள்ள ஏழைத் தாய்களின் குழந்தைகளுக்கு ஒரு தாயின் கருவறை வெப்பத்தை அளிக்கக்கூடிய குறைந்தவிலை இன்குபேட்டரை கண்டுபிடித்துள்ளார் ராகுல். பயன்படுத்துவதற்கு எளிதான, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய இந்த அரவணைப்புக் கருவிக்கு மின் இணைப்பு தேவையில்லை.

ஆம்புலன்ஸ், மருத்துவமனை, சிகிச்சை வார்டுகள் போன்றவை இல்லாத சூழலிலும்… ஏன் பயணங்களின் போதும்… தாயின் உடல் சூட்டை அளிக்கக் கூடியது இக்கருவி. இதைக் கண்டுபிடித்தவர்கள் ராகுல் பணிக்கர், ஜானே சென், லினஸ் லியாங், நாகனந்த் மூர்த்தி ஆகிய இளைஞர்கள். இதில், ராகுல் பணிக்கர் சென்னை ஐஐடியில் 2002ல் மின் பொறியியல் பட்டம் பெற்றவர். ஸ்டாம்ஃபோர்டில் மேற்படிப்பைத் தொடர்ந்தபோது நண்பர்களுடன் இணைந்து நடத்திய ஆய்வில் இப்புதிய கண்டுபிடிப்பு உருவானது.

“நான் ஸ்டாம்ஃபோர்டில் மேற்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும்போதே ‘மிகக்குறைந்த செலவில் தொழில்முனைவு மாதிரி’ என்ற பாடத்திட்டத்தைப் பற்றி தெரியவந்தது. எனக்கு படிப்பைத் தாண்டி தொழில்முனைவிலும் ஈடுபாடு அதிகம் இருந்ததால், பகுதிநேரமாக ஆய்வை மேற்கொண்டேன். அப்போது நேபாளத்தைச் சேர்ந்த `மெடிசன் மோண்டியல்’ எனும் தொண்டு நிறுவனம், வெப்பமூட்டிச் சாதனம் தயாரிக்கும் சோதனை முயற்சியில் இருந்தது.

இப்போது மருத்துவமனைகளில் உள்ள இன்குபேட்டர் சாதனம் கண்ணாடியில் இருக்கிறது. மாறாக அதே வெப்பத்தை அளிக்கக்கூடிய, விலை மலிவான சாதனம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அந்த தொண்டு நிறுவத்தினர் கேட்டுக் கொண்டனர். எங்களுடைய ஆய்வுக்கட்டுரைக்கான கருப்பொருளும், சமுதாயத்துக்கான கண்டுபிடிப்பாகவும் இருந்ததால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

குறைப்பிரசவக் குழந்தைகளின் மரணத்துக்கு முக்கிய காரணமாக இருப்பது நியோனேட்டல் ஹைபோதோரியா எனும் நோய். தாயின் கருவறை வெப்பத்தை குறைப் பிரசவக் குழந்தைக்கு அளிக்கும்போது இந்த நோய் தாக்காமல் ஆரோக்கியமான எடை வளர்ச்சியை அடைய முடியும். இப்போது வழக்கத்தில் உள்ள வெப்பமூட்டி இன்குபேட்டர்கள் சாமானியர் நெருங்க முடியாத விலையிலும், தொடர்ந்து மின்சாரம் தேவைப்படும் ஒன்றாகவும் உள்ளது.

அதிலும், நம் கிராமப் பகுதிகளில் வசிக்கக்கூடிய ஆயிரம் ரூபாய் வருமானம் பெறும் ஒரு தாயால் நாள்தோறும் நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்று அதனை பயன்படுத்துவது இயலாத காரியம். அதற்கும் மேலாக அது பழுதடைந்து விட்டால் கிராமப்புற மருத்துவமனையில் சீர் செய்யும் வசதியும் இல்லை. இந்நிலையைப் போக்குவதே எங்கள் லட்சியமாக எடுத்துக் கொண்டோம்.

புதிய மருத்துவ சாதனத்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்புதலைப் பெறுவதும், அதனை விற்பனைப்படுத்துவதும், அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. 2012ல் நாங்கள் கண்டுபிடித்த இந்த உபகரணத்தை அறிமுகம் செய்ய 3 ஆண்டுகள் ஆனது. ஆரம்ப காலத்தில் பத்தில் ஒருவர் மட்டுமே நாங்கள் பேசுவதைக் கேட்கத் தயாராக இருந்தனர்.

நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளை அணுகிய பின்னரே அரசு கவனிக்கத் தொடங்கியது. அதிகாரிகளும் இந்தக் கண்டுபிடிப்பு பயனுள்ளது என்பதை உணரத் தொடங்கினர். முதலில் கேரளாவில் 5 ஆக ஆரம்பித்து, பின்னர் ராஜஸ்தான் அரசு மருத்துவமனைகளில் 500 இன்குபேட்டர்கள் நிறுவப்பட்டன. இன்று உலகம் முழுவதும் உள்ள 2 லட்சம் குழந்தைகள் இந்த இன்குபேட்டரின் அரவணைப்பை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது போராட்டங்களின் வலிகள் மறந்து விட்டன’’ என்று நெகிழ்வாகச் சொல்லும் ராகுல், இந்தக் கருவியின் எதிர்காலப் பரிணாமம் பற்றியும் விளக்கினார்.

“அமெரிக்காவில் தலைமை அலுவலகமாக செயல்படும் ‘எம்ப்ரேஸ்’ (embrace) என்ற எங்களது நிறுவனத்தின் நோக்கம் புதிய மருத்துவ சாதனத்தை விற்பது மட்டுமே அல்ல… இந்த அரவணைப்புக் கருவியில் நோயறியும் அம்சங்களைப் பொருத்துவது குறித்தும் யோசித்து வருகிறோம். அலைபேசியுடன் பொருத்தி நிமோனியா, செப்சிஸ் போன்ற நோய்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிவதற்கான சென்சார்களை இணைக்க முயற்சித்து வருகிறோம்.

கர்நாடகாவில் ASHA (Accredited Social Health Activists) ஊழியர்கள் மத்தியில் இந்த முன்னோட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். வெற்றிக்கான காலம் வெகு அருகிலேயே இருக்கிறது. நமது மருத்துவக் கொள்கை, நடைமுறை மற்றும் நமது மருத்துவ பயில்முறையில் சில மாற்றங்களைக் காண்பதே எங்களது முதல் இலக்கு. அடுத்ததாக பொது சுகாதாரத் துறையிலும் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறோம்” என்கிறார் ராகுல். இவர்களைப் போன்ற இளைஞர்களால்தான் இந்தியாவை நோயற்ற, வாழத்தகுதியுள்ள நாடாக மாற்றமுடியும் என்பது உறுதி!Post a Comment

Protected by WP Anti Spam