By 14 May 2019 0 Comments

அம்மாவா? அம்மம்மாவா? (மருத்துவம்)

ஹரியானாவை சேர்ந்த 72 வயது தல்ஜிந்தர் கவுர் மற்றும் 79 வயது மொஹிந்தர் சிங் தம்பதிக்கு பிறந்த செயற்கை கருத்தரிப்புக் குழந்தை இருண்டிருந்த அவர்கள் வாழ்வில் சந்தோஷத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது! ஆனால்…

‘திருமணமாகி 46 வருடங்களுக்குப் பிறகு, தங்களுக்கு குழந்தை இனி பிறக்காது என்ற நம்பிக்கையை இழந்த இந்த வயதான தம்பதிகளுக்கு, அவர்களுடைய சொந்த புணரிகள் (Male haploid with female germs cell) மூலம் உருவான குழந்தை கடந்த ஏப்ரல் 19ம் தேதி பிறந்துள்ளது’ என அங்குள்ள பத்திரிகைகளில் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது. அதே செய்தி, சில மருத்துவர்களின் எதிர்ப்பையும் பிரதிபலிக்கிறது.

“இந்திய மருத்துவ கவுன்சில் பதிவேட்டின் விதிமுறைகளின்படி, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் தம்பதிகளின் வயது கூட்டுத்தொகை 100க்கு மேல் இருக்கக்கூடாது. கவுர், மொஹிந்தர் தம்பதிகளுடைய வயதின் கூட்டுத்தொகை 150 வருடங்களுக்கு மேல் உள்ளது. இவர்கள் தங்கள் சொந்த புணரிகள் (Male haploid with female germs cell) மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமற்ற ஒன்று.

இந்தக் குழந்தையின் தாய்க்கு 20 வருடங்களுக்கு முன்பே மாதவிலக்கு சுழற்சி நின்றுவிட்ட நிலையில், அவருக்கு கருமுட்டை உற்பத்தி ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. அதே நேரம், 79 வயதில் இருக்கும் தந்தையின் விந்தணுக்களின் தரம் வளமானதாக இருக்கவும் வாய்ப்பில்லை என்கிற போது எப்படி ஒரு முழு ஆரோக்கியமுள்ள குழந்தையை பெற்றெடுக்க முடியும்? இந்தச் செயலானது, யார் வேண்டுமானாலும், எந்த வயதிலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தவறான எண்ணத்தை சமூகத்தில் ஏற்படுத்தும்’’எனக் காட்டமாகப் பேசுகிறார்

பெங்களூருவை சேர்ந்த இனப்பெருக்க மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் மனிஷா. “செயற்கைக் கருத்தரிப்பிற்காக வரும் தம்பதிகளுக்கு, கலந்தாய்வு கொடுப்பது அவசியம் என்று நினைக்கிறேன். மனிதனுக்கு இயல்பாகவே வயதாகும் போது நோய்கள் ஒவ்வொன்றாக வருவது சகஜம். இந்நிலையில், அதிக வயதுடைய பெண்கள் கருவுறும் போது அவர்களுக்குள்ள நோய் வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும் நிலை ஏற்படும். பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வதும் அவசியம்.

அதிலும், 70 வயதுள்ள ஒரு தாய்க்கு இதயம், மூட்டு சம்பந்தமான பிரச்னைகள் கண்டிப்பாக இருக்கும். இந்த நிலையில் உள்ள பெண்ணின் வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கும் அந்த நோயின் தாக்கத்துக்கான வாய்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில், தன் மகளுக்காக 55 வயதான மூதாட்டி தன் வயிற்றில் கருவைச் சுமந்து பெற்றெடுத்த செய்தியை படித்திருப்பீர்கள். குறிப்பிட்ட அந்தச் சம்பவத்தில், மகளுடைய கருமுட்டையை அவளது அம்மாவின் கருப்பையில் செலுத்தி குழந்தையை உருவாக்கியிருந்தார்கள்.

இது சாத்தியம்தான். மருத்துவர்களாகிய நாங்கள் குழந்தைகளின் நலனையும் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். 70 வயது தாண்டிய பெற்றோரால் எப்படி அந்தக் குழந்தையை நல்ல ஆரோக்கிய சூழலில் வளர்க்க முடியும்? அந்தப் பெண்ணால், ஒரு தாயாக தன் குழந்தைக்கு அடிப்படை கடமையைக்கூட செய்ய முடியாது. இப்படி இருக்கும் போது, ‘கடவுள் எங்கள் குழந்தையை பார்த்துக் கொள்வார்’ என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

நாங்கள் இந்த உலகில் மற்றுமொரு அனாதைக் குழந்தையை உருவாக்க விரும்பவில்லை. Indian Society of Assisted Reproduction அமைப்பைச் சார்ந்த எங்கள் மருத்துவக்குழு 72 வயதான ஒரு பெண் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட இந்த நம்பத்தகாத, நியாயமற்ற செயலை வன்மையாக கண்டித்திருக்கிறோம்’’எனக்கடுமையாகவே சாடுகிறார்.Post a Comment

Protected by WP Anti Spam