By 8 May 2019 0 Comments

குழந்தைகளின் அமிர்தம் தாய்ப்பால்!! (மருத்துவம்)

பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாத உணவு தாய்ப்பால். இது போதிய அளவு கிடைக்காவிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல்வேறு பிரச்னைகளை சந்திக்கக்கூடும். அனைத்து சத்துக்களும் கொண்ட தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு அமிர்தம். தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, தாதுப்பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. பச்சிளங்குழந்தைக்கு கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது அவசியம். தாய்ப் பாலானது பிறந்த குழந்தையின் செரிமான உறுப்புக்களை பாதுகாக்கவும் குறைகளைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது.

இந்த தாதுப் பொருள் குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்கு சுரக்கின்ற சீம்பாலில் அதிக அளவில் இருக்கிறது. இது குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் குழந்தை இனிமேல் சாப்பிடப்போகும் உணவுகளை ஏற்றுக் கொள்ளும் விதமாக பக்குவப்படுத்துகிறது. தாய்ப்பால் மற்ற உணவுகளைப் போல் அல்லாமல் முழுவதும் ஜீரணம் ஆகிவிடும். இதில் உள்ள கால்சியம் சத்து, பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இதில் உள்ள அன்சேசுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.

அழகு கெட்டுவிடும் என்றும், இன்னும் பிற காரணங்களாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். இது முற்றிலும் தவறானது. ஆனாலும் இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. ஆபத்தான மருந்துகள் உட்கொள்ளும் தாய், எய்ட்ஸ் நோயுள்ள தாய், காசநோய் உள்ள தாய் போன்றோர் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டாமல் தவிர்ப்பது நல்லது.

சுத்தம் அவசியம்

தாய்ப்பால் ஊட்டும் முதல் சில மாதங்களுக்கு இரவு, பகல் என இரண்டு வேளைகளிலும் நல்ல உள்ளாடையை அணிய வேண்டும். காற்று முழுமையாகச் சென்றுவர, நைலானைவிட பருத்தியாலான உள்ளாடையே சிறந்தது.

பால் புகட்டுதல்

குழந்தைக்கு எந்த நிலையிலிருந்து பால் கொடுக்க வசதியாக இருக்கிறது என்பதை பரிசோதித்து உறுதி செய்துகொள்ளவும். குழந்தையை மடியில் படுக்க வைத்து பாலூட்டுவதை வசதியாகக் கருதினால், குழந்தையின் தலை உயரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் உட்புற காதுகளுக்கும் தொண்டைக்கும் இடையே மிகக் குறைந்த இடைவெளியே இருப்பதால், குழந்தையின் காதுக்குள் கிருமிகள் நுழையக்கூடும். சிலசமயம் தீவிரமான காது தொற்று நோய் ஏற்பட இது வழிவகுக்கும்.

அழுகை ஏன்?

குழந்தை எப்போதெல்லாம் உணவருந்த விரும்புகிறதோ, அப்போதெல்லாம் பால் புகட்டுவது நல்லது. குழந்தை அழுதால், பசிக்குத்தான் அழுகிறது என்று நினைக்கக்கூடாது. வயிற்று வலி, சிறுநீர்-மலம் வெளியேறிய உள்ளாடை ஆகியவற்றாலும்கூட அழலாம். எதற்காக அழுகிறது என்பதைத் தாய்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

எத்தனை முறை?

எத்தனை நேரம் பாலூட்ட வேண்டும் என்பதைக் தாயே தீர்மானிக்க வேண்டும். குழந்தை போதுமான அளவு பால் அருந்துகிறது என்பதை உறுதிப்படுத்தும் வழி, அதன் எடை அதிகரிப்பதுதான். குழந்தையை மருத்துவரிடம் கூட்டிச் செல்லும்போது, ஒவ்வொரு முறையும் எடை பார்க்கவும். ஒரு குழந்தைக்கு பாலூட்டுவதற்கான நல்ல அட்டவணை, 24 மணி நேரத்தில் 6 முறை மட்டும்தான். அதற்கு குறைவாக இருந்தால் குழந்தைக்கு பசியின்மை இருக்கிறது என்று அர்த்தம்.

தாய்க்கும் நன்மை உண்டு

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள் இருப்பதைப் போல தாய்க்கும் நன்மைகள் இருக்கின்றன. தாய் கருத்தரிப்பதை இயற்கையாகவே தள்ளி வைக்கிறது. மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தவிர்க்க முடியும். கர்ப்பகாலங்களில் அதிகமாக சாப்பிட்ட தாயின் உடல் பருமனை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. கர்ப்பபையை சுருங்கச் செய்து மீண்டும் இயல்பான நிலைமைக்கு கொண்டு வருகிறது.

தாய்ப்பால் அதிகமாக சுரக்க

பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட், ரஸ்க் போன்ற உணவுகளை சாப்பிட்டால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர் அருந்திவிட்டு கொடுக்க வேண்டும்.இந்த உணவு பொருட்களை கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது. அப்படி இல்லாவிட்டால் பிரசவித்த பிறகு கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதால் பால் நிறைய சுரக்கும். மேலும் தாய் தினமும் பசும்பால் உட்கொண்டால் தாய்ப்பால் பற்றாக் குறையே இருக்காது. அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு,பேரீச்சை, திராட்சை, வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை

அதிக வாயு தொல்லை தரும் உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிபிளவர், கோஸ் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. குடைமிளகாய் மற்றும் இதுபோன்று காரமான உணவுப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.பீன்ஸ் எத்தனை நன்மைகள் நிறைந்திருந்தாலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது குழந்தைக்கு உப்புசத்தை ஏற்படுத்தி, அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும்.

தெரிந்து கொள்ளுங்கள்

தாய் அதிகமாக எடைபோடக்கூடாது.
மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்ளக்கூடாது.
குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பதால் கண் பார்வைக்குத் தேவையான வைட்டமின் “ஏ’ சத்துகள் அதிகமாக இருக்கின்றன.
முதல் சிலநாட்களில் குழந்தையின் பசிக்கேற்ப கால நேரமின்றி பால் கொடுக்கலாம்.
ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை அல்லது குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்கலாம்.Post a Comment

Protected by WP Anti Spam