டாப் 10 இயற்கை உணவுகள்!! (மருத்துவம்)
இயற்கையாக கிடைக்கும் உணவை சாப்பிடும்போது, புரத சத்துடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடுகிறது. இவை, உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும். ஆனால், செயற்கை உணவை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் முழுமையாக கிடைக்காது. செயற்கை உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானமாக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். நமது உடலில், தசைகளுக்கு வலிமை சேர்க்க கீழ்க்கண்ட 10 இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வது நலம். அதன் விவரம்:
முட்டை
நாம் சாப்பிடும் ஒவ்வொரு முட்டையிலிருந்தும் 6-ல் இருந்து 8 கிராம் வரையிலான புரத சத்து (புரோட்டின்) கிடைக்கிறது. 9-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் முட்டையில் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம், துத்தநாகம் போன்ற தாது சத்துகளும் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் உடல் வலுப்பெற உதவுகிறது.
இறைச்சி
100 கிராம் கோழி இறைச்சியில் (கோழியின் நெஞ்சுப்பகுதி) 30 கிராம் புரதச்சத்து உள்ளது. இவை செல்களின் தேய்மானத்தை குறைத்து புதுப்பிக்க உதவுவதோடு, இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது.
தண்ணீர்
நம் உடலில் 70% தண்ணீர் உள்ளது. அதேபோல, தசை திசுக்கள் 75% தண்ணீரால் ஆனதாகும். எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது தசையின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இல்லையேல், நீர்வறட்சி ஏற்படும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பால் தசை வலிமை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தசையின் வலிமைக்கு உதவும்.
மீன் எண்ணெய்
மீன் எண்ணெயில் தசை வளர்ச்சிக்கு தேவையான ஆன்டி-இன்ப்ளாமிட்டரி (anti-inflammatory) அதிக அளவில் உள்ளது. இவை உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) ஊக்குவிக்கும். இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்பு குறைவதோடு, வலிமையான தசைகள் உருவாக உதவும்.
ஓட்ஸ்
இதில், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடற்பயிற்சி செய்ததும் எடுத்துக்கொள்ள வேண்டிய சிறந்த உணவாகும் இது.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் உள்ள பைட்டோசிடை ஸ்டீராய்டு (Phytoecdysteroids) என்ற வேதிப்பொருள் 20 சதவிகித தசை வளர்ச்சிக்கு உதவுவதாக, அமெரிக்காவில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் (Pineapple) ப்ரோமெலைன் (Bromelein) என்னும் என்சைம் உள்ளது. இது, தசைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன், தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சிக்கு பிறகு இதை சாப்பிடுவது நல்லது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் (Bromelein) ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும். உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமானால், அது தசை வளர்ச்சிக்கு உதவும்.
புரோக்கோலி
புரோக்கோலியுடன் தக்காளி, மக்காச்சோளம், மிளகு சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின்-சி, தசை திசுக்களின் ஆயுளை கூட்டும். நார்ச்சத்து, தாது சத்துகளும் இதில் அதிகம் உள்ளது. இவை, தசை வளர்ச்சிக்கு உதவும்.
பாதாம்
பாதாம் பருப்பில் கொழுப்பு சத்து, புரதம், வைட்டமின்-இ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைவாக உள்ளன. இவை, தசை வளர்ச்சிக்கு ஊட்டமளிப்பதோடு, வலிமை பெறவும் உதவுகிறது.