By 21 April 2019 0 Comments

இலங்கைப் பொருளாதாரம் தடுமாறுகிறது !! (கட்டுரை)

யார் நம்மை ஆளுகிறார்கள் என்ற குழப்பகரமான நிலையை, இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கைப் பொருளாதாரமும் அதனுடன் சேர்ந்து தள்ளாடத் தொடங்கியுள்ளது.

சுமார், பத்து நாள்களுக்கு மேலாக, இலங்கையில் நிலவிவரும் குழப்பகரமான அரசியல் நிலைமையில், நாடாளுமன்றக் கலைப்பும் கூட்டுசேர, அதில் அரசியல்வாதிகள் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நிலையான பொருளாதாரக் கொள்கைகள் இல்லாத நிலையில், இலங்கை மக்களுடைய எதிர்காலப் பொருளாதார நலன்கள் கேள்விக் குறிகளாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, இலங்கையின் பிரதமரை, முறையற்ற வகையில் நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக நியமித்திருந்தார்.

தற்போது நாடாளுமன்றத்தையும் அரசியல் சட்டங்களுக்குப் புறம்பாகக் கலைத்துள்ளார். அப்போது, அறிவிக்கப்பட்ட அமைச்சரவையில், நிதியமைச்சர் பதவியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கினார் என்றோ அல்லது மஹிந்தவே தன்னிடத்தில் தக்கவைத்துக் கொண்டார் என்றோ எடுத்துக்கொள்ள வேண்டியதாகவுள்ளது.

மஹிந்தவின் பிரதமர் என்ற பதவியே சிக்கலுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர் நிதியமைச்சராக எடுக்கும் சில முடிவுகள், இலங்கையின் பொருளாதாரத்தையும் அதைச் சார்ந்த நீண்டகால நலன்களையும், இடியாப்பச் சிக்கலாக்கியிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

நல்லாட்சி அரசாங்கம், இவ்வாண்டு, படிப்படியாக மக்களது வாழ்க்கை சார்ந்த செலவீனங்களை அதிகரித்து வந்தது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, இவ்வாண்டின் ஆரம்பம் முதல், எரிபொருளுக்கான விலை, படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியதுடன், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி அதிகப்படுத்தல், வரிசார் நெறிமுறைகளிலான மாற்றம், அதிகரிப்பு என, பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இது, நல்லாட்சி அரசாங்கத்தின் மீது, திறைசேரி ஊழலால் உருவாகியிருந்த வெறுப்பை, மேலும் அதிகப்படுத்தியிருந்தது.

உண்மையில், இந்த விலை அதிகரிப்புகளும் வரிச் சுமைகளும் ஏன் என்பது தொடர்பில், சாமானிய மக்களுக்கு போதுமான அளவில் எடுத்துரைக்கப்படவில்லை. இதன் காரணமாக, நல்லாட்சி அரசாங்கம், தான் சம்பாதித்துக் கொண்ட மக்களின் வெறுப்பை, மேலும் அதிகப்படுத்திக் கொண்டே போனது என்றும் கூறலாம்.

இலங்கையில், படித்த அல்லது இலங்கையைப் பிரதிநிதித்துவபடுத்தும் ஒருசாரார் கூறுவது போல, சாமானிய இலங்கையர் ஒருவரின் குறுங்கால எதிர்பார்ப்பாக, மூன்றுவேளை உணவு, விலைக்குறைப்பு, வரிச்சுமை குறைவு ஆகியன இருக்கலாம்.

அதே சமயத்தில், அதே சாமானியர்களுக்கு, குறுங்காலத்தில் தாம் அனுபவிக்கும் இந்தச் சுமைகள் அனைத்தும், எதிர்கால நலனுக்காக எனும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமாயின், அவர்கள் குறித்த நீண்டகால நலனுக்காக, இந்தக் குறுகியகால நலன்களை தியாகம் செய்யத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைக் கருத்தாகக் கூறும் அதே சாராரும் புரிந்துகொள்ளாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது.

இலங்கையில், தற்போது பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவும் மக்களின் இந்த மனநிலைப் போக்கைக் குறிவைத்தே, நிதியமைச்சராக இருந்து. தனது திட்டங்களைச் செயற்படுத்துபவராக உள்ளார்.

மஹிந்த, பிரதமர் மற்றும் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், மக்களுக்கு தேவையானவற்றை வழங்கி, அவர்களைத் தன்பக்க ஆதரவாளர்களாக மாற்றும் மனநிலையில் உள்ளாரே தவிர, இலங்கையின் பொருளாதாரம், இதன் காரணமாக என்னவாகும் என்பதை பற்றி சிந்திப்பவராக இல்லை.

குறிப்பாக, மஹிந்த, நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், மிகவிரைவாக எரிபொருள் விலையைக் குறைத்ததுடன், கூடவே இலங்கையின் Withholding Tax முறைமையில் மாற்றத்தையும் கொண்டு வந்திருந்தார்.

இலங்கையின் எரிபொருள் விலையுயர்வு நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களின் வாழ்வாதாரச் செலவீனங்களை அதிகரித்து, அவர்களை விசனத்துக்குள்ளாக்கியிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த விலையுயர்வு அனைத்துக்குமே, மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி நேரடியான காரணமாக அமைந்துள்ளது என்பதுடன், நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதும் அள்ளி வழங்கிய சலுகைகளும் மறைமுக காரணமாகவுள்ளது.

இந்த நிலையில், இந்த விலைக்குறைப்பு, வரிக்குறைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம், சாமானியர்களாகிய நமக்கும், நமது பொருளாதாரத்துக்கு எதிர்காலத்தில் என்ன நிகழக்கூடும் எனச் சிந்தித்து இருக்கிறீர்களா?

இவை அனைத்துமே, இலங்கை அரசாங்கம் தங்கியிருக்கும், அதன் அரச வருமானத்தை, மிகச்சடுதியாகக் குறைவடையச் செய்யும். இதன் விளைவாக, இலங்கையின் பாதீட்டு கடன் நிலையானது, படிப்படியாக அதிகரிக்கும். இந்த நிலை, இலங்கை அரசாங்கத்தின் வேறெந்த வருமான மூலங்களும் இல்லாத நிலையில், மேலும் கடன்பெறுகின்ற நிலைக்குக் கொண்டு செல்லும். இந்த நிலை ஏற்படும்போது, நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும். இதன்போது, தற்போது மக்கள் அனுபவிக்கும் விலைக்குறைப்பை விட, மிக அதிகமான விலை அதிகரிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

நாட்டின் நாணயபெறுமதி மேலும் வீழ்ச்சி அடைவதுடன், அவற்றைத் தவிர்க்க, மேலதிக நாணயத்தை அச்சிடவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். இவை அனைத்துமே, நீண்டகாலத்தில் இலங்கை எதிர்கொள்ளப்போகும் நிலையாகும். ஆனால், இந்த நிலையை நாம் இப்போதே மறைமுகமாக எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர், நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபின்பு கொண்டுவந்த வரிக்குறைப்பு, விலைக்குறைப்பின் மூலமாக, இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்ட வருமான இழப்பானது, அண்ணளவாக 119 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும். இந்த நிதியிழப்பை ஈடுசெய்ய, மத்திய வங்கி, புதிதாக இலங்கை நாணயங்களை அச்சிட வேண்டியநிலை ஏற்பட்டிருந்தது. இந்தப் புதிய பண அச்சிடலானது, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுமிடத்து சுமார் 253% அதிகமாகும்.

அத்துடன், இலங்கையில் தற்போது நிலவிவரும் நெருக்கடி மிக்க நிச்சயமற்ற அரசியல், பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக, இலங்கையின் பங்குச்சந்தையில் நம்மை அறியாமலே பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக, இலங்கை பங்குச்சந்தையில், உள்நாட்டு நிதிவளங்களின் அதீத பயன்பாட்டின் விளைவாக, பங்குச்சந்தைப் பெறுபேறுகள் முன்னேற்றகரமானதாகத் தெரிந்தாலும் உண்மை அதுவல்ல. இந்த நிச்சயமற்ற அரசியல்நிலை ஆரம்பித்தது முதல், 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணமானது, வெளிநாட்டு முதலீட்டாளர்களால், பங்குச்சந்தையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் வெளிப்பாச்சல் அதிகரித்திருந்ததுடன், ஒருநிலையில், இலங்கைக்கான அமெரிக்க டொலரானது, 179 ரூபாயைத் தொட்டிருந்தது. இந்த நிலையைக் குறைக்க, மஹிந்த ராஜபக்‌ஷ, சுமார் 50 மில்லியன் வெளிநாட்டு நாணய இருப்பைச் செலவிட்டு, இலங்கை நாணயப் பெறுமதியை அமெரிக்க டொலருக்கு எதிராக, 172-174 ரூபாய்க்குக் குறைக்க வேண்டியதாகவிருந்தது.

இதற்காக, மஹிந்த செலவிட்ட வெளிநாட்டு நாணயவிருப்பானது, இலங்கை அடுத்துவரும் ஆண்டில் மீளச்செலுத்தவேண்டிய கடனுக்கான ஒதுக்கமாகும். எனவே, இந்தக் கடனை மீளச்செலுத்த, மீண்டும் பணத்தை அச்சிட வேண்டியோ அல்லது வேறு கடனைப் பெறவேண்டிய நிலையோ ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்போதைய விலைக்குறைப்பாலும் வரிச்சுமைக் குறைப்பாலும், தற்போதைய அரசாங்கத்தைப் புகழ்ந்துகொண்டும் இதை, நல்லாட்சி அரசாங்கம் செய்திருக்க முடியாதா எனவும் விமர்சிக்கும் ஒருவராக நீங்கள் இருப்பீர்களானால், நீங்கள் நிச்சயமாக, நீண்டகாலத்துக்கு, தற்போதைய நிலையை எண்ணி வருந்தவே கூடும்.

உண்மையில், தற்போதைய நிலையற்ற அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த மாய விலைக்குறைப்புகளும் வரிக்குறைப்புகளும், இலங்கை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய நிஜநிலையை தடுக்கின்றது. ஆனால், இந்த நிஜநிலையை எதிர்கொள்ளாமல், எந்தவொரு நாடும், அபிவிருத்திப் பாதையை நோக்கி நகர முடியாது.

நல்லாட்சி ஆட்சியிலும், இந்தத் தவறைத்தான், ஆட்சிக்கு வந்ததுமே, ரணில்-மைத்திரி கூட்டணி செய்திருந்தது. இதன் காரணமாகதான், நல்லாட்சியின் இறுதிக்காலத்தில், மக்கள் ஆட்சியை வெறுக்குமளவுக்கு, விலை ரீதியாகவும் வரி ரீதியாகவும் மாற்றங்களைச் செய்யவேண்டி ஏற்பட்டிருந்தது. மேலதிகமாக, நல்லாட்சி ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற ஊழல்களும் இதற்குக் காரணம் என்று கூறினாலும் அது மிகையாகாது.

ஆனால், இன்றைய மைத்திரி – மஹிந்த கூட்டணியானது, மக்களை இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதாக என்று கூறி, கபடநாடகமாடிக்கொண்டு, தனது அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள, நாட்டின் பொருளாதாரத்தை ஈடுவைக்கத் தயாராகி இருக்கிறது.

மக்களது வாக்குகளைக் கைப்பற்றி ஆட்சி பீடமேறியதும், “பழைய குருடி கதவை திறடி” என, ஆட்சி நடத்தத் தொடங்க, நாம் வாழ்க்கைச் செலவீன நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு, விமர்சனங்களுக்கு மத்தியிலேயே, நமது வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam