By 25 April 2019 0 Comments

அவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா? (கட்டுரை)

மக்கள் தங்களுக்குள், “சத்திரசிகிச்சை வெற்றி; ஆனால், நோயாளி இறந்து விட்டார்” என நகைச்சுவையாகக் கதைப்பது வழமை. அது போலவே, இம்மாதம் எட்டாம் திகதி, யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் (தமிழரசுக் கட்சித் தலைவர்) மாவை சேனாதிராஜா, ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்ட, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

படை முகாம்கள் அமைப்பதற்கு, மக்களின் காணிகளை அப(சுவீ)கரிப்புச் செய்ய முடியாது என, அங்கு, அவர்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 72 மணித்தியாலங்களுக்கு இடையில் (ஏப்ரல் 11) மண்டைதீவில், பொது மக்களின் காணிகளைச் சுவீகரிப்புச் செய்ய, நில அளவைத் திணைக்கள அணி சென்றுள்ளது. அங்கே, பொது மக்களின் பாரிய எதிர்ப்பால், படை முகாமுக்கான நில அ(பகரிப்பு)ளவீடு தடுக்கப்பட்டது.

அரசாங்கப் பொறிமுறை எடுக்கும் தீர்மானங்களை (மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்) அதே அரசாங்கப் பொறிமுறை (நில அளவைத் திணைக்களம்) மீறுகின்றது. ஏன் இவ்வாறாக நடக்கின்றது, இதனை என்னவென்று கூறுவது?

மாவட்டச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தலைமையில் பலர் கூடி எடுத்த முடிவின் கதி என்ன? இதுவே, வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள பொதுவான சிக்கலாகும்.

இதையே முன்னுக்குப் பின் முரணாக, ‘செய(தொழி)ற்படுதல்’ எனக் கூறுவார்கள். இலங்கையின் அரச இயந்திரம், கடந்த 70 ஆண்டுகளாக, தமிழர்கள் விடயத்தில் கனகச்சிதமாக, இதையே செய்து வருகின்றது. இந்த முரண்பாடான செயற்பாடுகளே, இலங்கையில் காணப்படுகின்ற இனமுரண்பாட்டின் அடிப்படைகளில் ஒன்றாகும்.

இதற்கிடையே, “வடக்கில் தொடர்ந்து இராணுவம் இருக்கும்; அச்சமடையும் மக்களை இடம் மாற்றுவதே தீர்வு” எனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்து உள்ளார். இது வெறுமனே, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கருத்து அல்ல; இதுவே அரசாங்கத்தின் கருத்தும் ஆகும்.

1980களின் ஆரம்ப காலங்களில், இலங்கை இராணுவத்தின் மனிதவலு மிகவும் சிறியது. எப்போதாவது ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்களிலேயே இவர்களது சேவை மிகவும் பெரியது. இதனைவிட பெப்ரவரி நான்காம் திகதி வருகின்ற சுதந்திர தினத்திலேயே வேட்டுகளைச் சரமாரியாகத் தீர்க்கின்ற வேலை வரும்.
இன விடுதலைக்கான, தமிழ் மக்களது ஆயுதம் ஏந்திய போராட்டமே, இலங்கை இராணுவத்தை வீக்கமடையச் செய்தது; பல படைப்பிரிவுகளை உருவாக்க வைத்தது; பல்லாயிரமாகப் பெருக வைத்தது; போர் அனுபவங்களை அள்ளி வழங்கியது. ஆயிரக்கணக்கில் பெரும்பான்மையின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது; தற்போதும் வழங்குகின்றது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் (2009) தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில், தமிழ் மக்களால் ஆயுதப் போராட்டத்தைத் தொட(ர)க் கூடிய ஆசையோ, ஆற்றலோ அறவே இல்லை; அதைத் தமிழ் மக்கள் விரும்பவும் இல்லை. இதை இலங்கை அரசாங்கம் நன்கு அறியும்; அதேபோல சர்வதேசமும் அறியும்.

இவ்வாறான நிலையில், 1980களின் தொடக்கத்தில் இருந்தது போல, படையினர் வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு நிலைகளை வைத்திருக்கலாம் அல்லவா? அவ்வாறு பேணுமாறே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இதையே தமிழ்த் தலைமைகளும் கேட்டு வருகின்றனர்.

ஆனால், வடக்கு, கிழக்கில் மட்டும் ஏன் மேலதிக படைக்குவிப்பு, முற்றுப் புள்ளி இல்லாது தொடருகின்ற படையினருக்கான நில சுவீகரிப்பு ஏன், பெரும்பான்மை இனத்தவருக்கான நில ஆக்கிரமிப்பு ஏன், இதனை விட, தமிழ் மக்கள், இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பது தமக்கு அச்சம் என உணரும் பட்சத்தில், அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்மாற்றுவதே ஒரே தீர்வு என்ற அமைச்சரின் இறுமா(வீரா)ப்பான பேச்சு ஏன்?

நாட்டினது தேசியப் பாதுகாப்பு என்பது பிரதானமானது. இதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், தமிழ் மக்களது வாழ்விடங்கள், வயற்காணிகள், பொதுநோக்கு மண்டபங்கள், பொதுக்கிணறுகள், விளையாட்டுத் திடல்கள், மத வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் பல ஆண்டுகளாகப் படையினரின் பிடியில் சிக்கி உள்ளன.

இந்நிலையில், அந்த மண்ணில் பிறந்து, வாழ்ந்து வருகின்ற பூர்வீகக் குடிகள் அந்தரிக்கின்றனர்; அல்லற்படுகின்றனர்; அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில், தங்களது நிலபுலங்கள் அபகரிக்கப்படுவதைத் தமிழ் மக்கள் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளவில்லை; ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்; ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள அடம் பிடிக்கின்றார்கள்.

தமிழ் மக்களது காணி விடுவிப்பு என்பது, தனியே தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி அல்ல. மாறாக, இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய பல வாக்குறுதிகளில் ஒன்றாகும். காலத்துக்குக் காலம் கொழும்பு அரசாங்க‍ங்களால், தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. அது இந்நாட்டினது வழமையான, சாதாரண நிகழ்வுகள் என ஆகிவிட்டன.

இந்நிலையில் தமக்குக் கிடைத்து வருகின்ற ஏமாற்றங்களே ஐ.நா சபைக்கும் ஏற்பட்டு விடுமோ என்றே, தமிழ் மக்கள் உள்ளுர அச்சம் கொள்கின்றனர்.

நிலைமைகள் இவ்வாறு தலைகீழாக இருக்கையில், நல்லிணக்க விளையாட்டுப் போட்டி, நல்லிணக்கக் கிராமம், நல்லிணக்க உறவுப்பாலம் என நல்லிணக்கம் நசிபடுகின்றது.

உண்மையில் நல்லிணக்கம் என்ற வெற்றுப் பாதையில் விடுவிக்கப்படும் தமிழ் மக்களது காணிகளைக் காட்டிலும், தேசிய பாதுகாப்பு என்ற வெறித்தனமான பாதையில், கூடுதலாக அபகரிக்கப்பட்டு வருகின்றது. விடுவிப்பு பகலில் நடக்க, அபகரிப்பு இரவில் நடப்பது போல காரியங்கள் ஒப்பேறுகின்றன.

அப்போது, தமிழ் மக்களை அடித்து விரட்டி, அவர்களது காணிகளைப் பிடித்து, பெரும்பான்மை இனத்தவருக்கான குடியிருப்புகளை, படை முகாம்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் இப்போது, உதடுகள் நல்லிணக்கம் என்று பேச, கைகள் கைலாகு கொடுக்க, புன்முறுவல் பூத்து காணிகள் பிடிக்கப்படுகின்றன.

தற்போது கூட, அச்சமென உணரும் மக்கள் பாதுகாப்பென உணரும் இடங்களுக்கு இடம் மாறுவதே தீர்வு என, நாட்டின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார். இதன் அர்த்தம், அந்த வாழ்விடங்கள் இனி மீளத் தமிழ் மக்களுக்குக் கிடைக்கப் போவதில்லை; தற்போது கிடைக்காது விட்டால், எப்போதும் கிடைக்காது.

இதனை விட அமைச்சரது கருத்து, சூட்சுமமாக அல்லது மறைமுகமாக பிறிதொரு கருத்தியலையும் முன் வைக்கின்றது. அதாவது, இந்நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு அருகில் இருப்பது, இந்நாட்டின் ஓர் இனத்துக்கு ஒவ்வாமையாக உள்ளது. அதனால் அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்மாற்ற வேண்டும் எனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.

அதாவது, அறவே போர் இல்லாத நிலையில், அற்றுப் போன நிலையில், போருக்கு முன்னர் தாங்கள் குடியிருந்த இடங்களில் தற்போதும் குடியிருக்க ஏதுவான நிலைகள் இன்னமும் நாட்டில் ஏற்படவில்லை. இதற்கே ஏதுவான நிலைகள் இல்லாத சூழலில் இனப்பிணக்குத் தீர்வுக்கான ஏதுநிலைகள் எதுவுமே இல்லை எனக் கூறலாம்.

இலங்கைத் தீவில் இனப்பிணக்கு ஏற்பட்டமைக்கும், அது நீடித்து நிலைப்பதற்கும் இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களோடு உண்மையாக, உளப்பூர்வமாக நெருங்கிப் பழகாமையே ஆகும். தமிழ் மக்களைத் தூர விலத்தி வைத்தமையே காரணம் ஆகும். ஆக, அடாத்தாக அபகரித்து வைத்திருக்கும் தமிழ் மக்களது காணிகளை, முற்றாக விடுவித்தால் இலங்கைத் தீவு இனப்பிணக்கிலிருந்து விடுபடலாம். காணி விடுவிப்பு அதற்கு பிள்ளையார் சுழி இடும்.

மக்களிடம் பெரிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கின்ற விடயங்களை அரசியல் ரீதியாக அதிரடியாக அமுல்படுத்த முடியாது. அது அங்குலம் அங்குலமாகவே மக்களின் மனங்களில் ஏற்படுத்த வேண்டும். கேப்பாப்புலவில் தமிழ் மக்களது காணிகளை விடுவித்தால் அதற்கு எதிராக கெப்பெற்றிக்கொலவில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள்.

ஆனால் பேரினவாத, மதவாத சிந்தனைகள் சற்றும் தணியாது அதிகார மோகத்துடனும் அகங்காரப் போக்குடனும் கொழும்பு தொடர்ந்தும் பயணிக்கின்றது என்பதையே இவ்வாறான கருத்துகள் எடுத்து இயம்புகின்றன.

இவை, இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்ட எம் நாடு, இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியாகவே தொடர்ந்தும் பயனிக்கப் போகின்றதா என்பதையே, மறுபக்கத்தில் கேட்கத் தோன்றுகின்றது.Post a Comment

Protected by WP Anti Spam