ராஜீவ் கனவு இன்னும் நனவாகவில்லை: இலங்கைத் தமிழர் தலைவர் வேதனை

Read Time:2 Minute, 52 Second

plote.T.sit.jpgஇலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும், மரியாதையாகவும் வாழும் நிலை உருவாக வேண்டும் என்ற ராஜீவ் காந்தியின் கனவு இன்னும் நனவாகவில்லை என்று கவலை வெளியிட்டார் இலங்கை தமிழ் ஈழ மக்கள் விடுதலை முன்னணியின் (பிளாட்) தலைவர் டி. சித்தார்த்தன். தில்லியில் அமைதி மற்றும் முரண்பாடுகள் ஆய்வு மையத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். விவரம்:

இலங்கையில் இந்திய ராணுவ வீரர்கள் 1,500 பேர் உயிர்த் தியாகம் செய்ததும், ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதும் மிகுந்த வருத்தம் தரும் செய்தி. அந்த தியாகத்துக்கு உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை. இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும், மரியாதையுடனும் வாழ வேண்டும் என்று மனதார விரும்பியவர் ராஜீவ் காந்தி. ஆனால் அவரது கனவு இன்று வரை நனவாகவில்லை.

விடுதலைப் புலிகள் என்றும் அமைதி வழியில் தீர்வு காண முன்வர மாட்டார்கள். ஏனென்றால், அமைதித் தீர்வு கண்டால், பிரபாகரன் நிலை என்ன ஆகும்? இப்போது இலங்கை அதிபரைவிட அளவற்ற அதிகாரம் கொண்டிருக்கும் அவரால், கூட்டாட்சி முறையில் கிடைக்கும் அதிகாரத்தால் திருப்தியடைய முடியாது.

இலங்கை அரசின் சமாதானத் திட்டத்தை ஏற்குமாறு புலிகளிடம் கூறலாம். மறுத்தால், அவர்களை ஒதுக்கிவிட வேண்டியதுதான். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவர்களை அடக்குவது அரசுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்க முடியாது. அவர்கள் சமீபகாலமாக பலவீனமாகி இருக்கிறார்கள்.

இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் புலிகளுக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள். அணுசரணையாளரான நார்வே நாடும் கூட ஓரளவு புலிகளுக்குச் சாதகமாகவே செயல்படுகிறது. இந்த நிலையில், இந்தியா மீண்டும் இப்பிரச்சினையில் முழு ஈடுபாடு காட்டி, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்றார் சித்தார்த்தன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘ஒசாமா உயிருடன் உள்ளார்’அரேபிய டிவி
Next post கொடூர எண்ணம் கொண்ட புலிகள் இயக்கத்தை நம்புவது எப்போதும் ஆபத்து -ஈபிஆர்எல்எப் டி.ஸ்ரீதரன்்