By 2 May 2019 0 Comments

90ml ஆண்களுக்கான டிரீட்… : இயக்குநர் அனிதா உதீப்!!! (மகளிர் பக்கம்)

‘அழகிய அசுரா, அழகிய அசுரா…..’ இந்தப் பாடல் இன்றும் தமிழ் சினிமாவின் ரொமான்டிக் பாடல்கள் வரிசையில் தவிர்க்க முடியாத பாடல். இந்த ஒரே பாடலுடன் இயக்குநர் சீட்டில் அமர்ந்தவர்தான் அனிதா உதீப். ‘குளிர் 100 டிகிரி’ மூலம் முதல் இயக்கத்தை தொடர்ந்தவர் ‘கல்லிவர்ஸ் டிராவல்’ என்ற ஆங்கில அனிமேஷன் படத்தை இயக்கினார். பிறகு ‘நாக் நாக் ஐயம் லுக்கிங் டூ மேரி’ தற்போது மீண்டும் தமிழில் ‘90ML’… இந்த படத்தின் ஒரே டிரெய்லர் படு சென்சேஷனை உருவாக்கியுள்ளது. சோஷியல் மீடியா எங்கும் 90ML பற்றி பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்க, படத்தின் ரிலீசில் பிசியாக இருந்த அனிதா 90ML பற்றி பேச ஆரம்பித்தார்.

அழகிய குரல் அசுரி எங்கே போயிட்டீங்க…

‘‘எங்கேயும் போகலை… ஃபிலிம் மேக்கிங் படிக்க வெளிநாடு போயிட்டேன். இசை எனக்கு இன்னொரு உலகம். வாய்ப்பு அமைஞ்சது. அதன்பிறகு ஏன் வெறும் பாட்டு மட்டும்னு சின்ன உலகமா இருக்கணும்னுதான் இயக்குநர் சீட்ல உட்கார நினைச்சேன். ‘90ML’ படத்துல ஒரு பாட்டு பாடி இருக்கேன்!”.

‘90ML’ எங்கே எப்படி ஆரம்பிச்சது?

“சுத்தியிருக்கற நண்பர்கள், பெண்களுடைய புலம்பல்கள் சேர்ந்தது தான் இந்தக் கதை. பெண்கள் தங்கள் வாழ்க்கையை தியாகி மாதிரி கணவன், குடும்பம், குழந்தைகள்னு வாழ்கிறோம். என்னைக்கு நமக்கான வாழ்க்கையை வாழ்றது. அறுபது வயசுல, எனக்கு இதெல்லாம் ஆசை இருந்துச்சுனு பெருமூச்சு விடுறது. இதுக்கான பதில்தான் ‘90ML’.’’

அப்போ படம் பெண்ணியம் பேசுமா?

“ஒரு வெங்காயமும் இல்லை. கொடுத்த காசுக்கு ஜாலியா என்ஜாய் பண்ணி படம் பாருங்க. அஞ்சு பொண்ணுங்க அவங்களின் ஜாலி யூத் வாழ்க்கை. மொத்த பெண்களுக்குமான ஆசைகளை ‘90ML’ பேசும். அவ்வளவுதான். ஆண்களை திட்றதோ, கருத்து சொல்றதோ, பெண்ணியம் பேசுறதோ கிடையாது. ஒரு பாலினம் இல்லாமல் இன்னொரு பாலினம் இல்லை. அதனாலேயே பெண் சார்ந்த படங்கள் சாயல் எதுவும் இருக்க கூடாதுங்கறதுல தெளிவா இருந்தேன். எங்க வாழ்க்கையில ஆண்கள் இல்லாம சந்தோஷம் இல்லைங்கறதும் ‘90ML’ பேசும்!”

ஆபாச வசனங்கள், செக்ஸ் குறித்து பெண்கள் பேசுவது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை சந்திச்சிருக்கே?

“அதே டிரெய்லருக்குக் கீழ ஓவியா, என்னை… படத்தின் மொத்த யூனிட்டையும் கீழ்த்தரமா, தரக்குறைவா கமென்ட் போட்டிருக்காங்களே! இதுதான் இவங்க பெண்களை மதிக்கிற குணமா? இவங்க பயன்படுத்தியிருக்கற வார்த்தைகளை ஒப்பிட்டா டிரெய்லர்ல நாங்க 5% கூட காட்டலை. ஒரு வருஷத்துக்கு முன்னாடி கொண்டாடின அதே பொண்ண எப்படி இவ்வளவு மோசமா பேச முடியும்? என்ன மாதிரி சமூகம் இது. மேலும் பெண்கள் செக்ஸ் பத்தி பேசக்கூடாதுனு யார் ரூல்ஸ் போட்டது. பெண்கள் இப்படித்தான் இருக்கணும்னு இவங்களாவே கட்டுப்பாடுகளை போட்டுக்கிட்டு அதன்படி நம்மையெல்லாம் வாழ சொல்றாங்க. அதே பெண்கள் இல்லாம இவங்களுக்கு செக்ஸ் கிடைக்குமா?!”

ஆண் -பெண் உறவு உங்க பார்வையில என்ன?

“அவன் அவனா இருக்கணும், அவள் அவளா இருக்கணும். அதை ரெண்டு பேரும் கடைசி வரை ஏத்துக்கணும். எந்த இடத்திலேயும் மாற சொல்லியோ அல்லது மாறியோ வாழ்றது உண்மையான உறவு இல்லை. என்னைக்கு நீங்க கட்டுப்படுத்தி அல்லது கட்டுப்பட்டு வாழ்றீங்களோ அன்னைக்கு அந்த உறவு பொய்யாகிடும். விட்டுக்கொடுக்கணும் அது ரொம்ப முக்கியம்!”

இயக்குநர், தயாரிப்பாளர், பாடகி இதையெல்லாம் கடந்து அனிதா உதீப் யார்?

“சாதாரண எல்லா ஆசைகளும் கொண்ட பெண். என் வாழ்க்கைய நான் முழுமையா வாழணும்னு நினைச்சு அதை அப்படியே செய்கிற பெண். எந்த ஆதரவையும் எதிர்பார்த்து வாழ்றவ கிடையாது. எனக்கு முட்ட பரோட்டா பிடிக்கும். உங்களுக்கு இட்லியும் சட்னியும் தான் வேணும்னா நீங்க அந்த பக்கம் போங்கன்னு சொல்ற கேரக்டர். ஒண்ணும் இல்லை வீட்டு விசேஷத்துக்கு ஆண்கள் வரலை வேலை இருக்குன்னு சொல்லிட்டா போதும். அதுவே நாம வரலைன்னா அப்படியென்ன வேலை.. திமிர் பிடிச்சவன்னு பேச்சு நிச்சயம் வரும். ஏன் பொண்ணு பிஸியா இருக்கவே கூடாதா! இது எனக்கு மட்டும் இல்லை மாவட்ட கலெக்டருக்கே இருக்கும். பெண்கள்னாலே இந்த சமூகம் எதிர்பார்க்கும் இடத்தில் நம்ம பிரசென்ஸ் இருக்கணும். அதே சமயம் வரக்கூடாதுன்னு சொல்லும் இடத்திற்கு போகக்கூடாது. இது காலம் காலமா இருந்து வரும் பழக்கம்.’’

சினிமா உலகில் பெண் இயக்குநர்கள் நிலை?

‘‘ஆண்கள் டாமினேஷன் அதிகமா இருக்கும். உடல் ரீதியா இருக்கற பிரச்னைகள் வேற. மன ரீதியாவும் பிரச்னைகளை சமாளிக்கணும். ஹீரோக்களின் நாலு படம் நல்லா ஓடினாலே கோடியில் சம்பளம் கேட்கறாங்க. இங்க லேடி சூப்பர் ஸ்டாருக்கே அதே சம்பளம் தான் தறோம். இந்த நிலை மாறனும். என் படம் இதுக்கெல்லாம் ஒரு அடித்தளமா இருக்கும்னு நம்புறேன். எதுல நாம குறைஞ்சிட்டோம். ஹீரோக்களுக்கு நிகரா ஹீரோயின்களுக்கும் மார்க்கெட், ஓபனிங் இருக்கணும். இதுதான் என் ஆசை!”

சிம்பு என்ட்ரி…

“ஓபனிங் புரமோஷன் பாடல் மட்டும்தான் கேட்டிருந்தோம். பொறுமையா கதை கேட்டவர் என்ன நினைச்சாருன்னு தெரியலை மொத்தப் படத்துக்கும் மியூசிக் செய்றேன்னு சொல்லிட்டார். எங்களுக்கு செம ஹேப்பி. நாங்க எதிர்பார்த்த நேரத்தை விட சீக்கிரமாவே முடிச்சுக் கொடுத்தார்.’’

காலை ஐந்து மணிக் காட்சி இருக்காமே?

“அதுதான் என்னுடைய முதல் வெற்றி. ஓவியாவுக்கு இருக்கற ரசிகர்கள் ஆதரவும், இந்தப் படத்துக்குமான எதிர்பார்ப்பு நிறைய பேர் நேரடியாவே 5 மணி ஷோ வேணும்னு கேட்டாங்க!”

உங்க அடுத்த படங்கள் எப்படி இருக்கும்?

“எதுவுமே யோசிக்கலை, இன்னைக்கான லைஃபை பார்க்குற ஆள் நான். நிச்சயம் அடுத்தக் கதை இன்னும் வித்தியாசமா இருக்கும்!

‘90ML’ பார்ட் 2 வருமா?

‘‘எனக்கு ‘90ML’ திரும்ப அடிக்கணும் ங்கிற ஃபீல் வந்தா நிச்சயம் அப்போ பார்ட் டூ வரும். அதில் இன்னும் நிறைய பெண்கள் பிரச்னைகளைப் பேசும். ஆண்களுக்கு எந்த சமயத்துலேயும் அட்வைஸ் பண்ணாது. அவங்களை கெட்டவங்களாவும் காட்டாது. முழுமையா சொல்லணும்னா இந்த ‘90ML’ ஐ பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் ரசிப்பாங்க!”Post a Comment

Protected by WP Anti Spam